இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1149



அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1149)

பொழிப்பு (மு வரதராசன்): அஞ்ச வேண்டா என்று அன்று உறுதிகூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ?.

மணக்குடவர் உரை: அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து.
பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.

பரிமேலழகர் உரை: (வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது.
('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா உரை: அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நீத்தக் கடை அஞ்சல்ஓம்பு என்றார் பலர்நாண; அலர்நாண ஒல்வதோ?.

பதவுரை: அலர்-ஊர்ப்பேச்சு; நாண-நாணுதல், வெட்கப்பட; ஒல்வதோ-கூடுமோ,இயலுமோ: அஞ்சல்-அஞ்சாதே; ஓம்பு;காத்துக்கொள்; என்றார்-என்று சொன்னவர்; பலர்-பலர்; நாண-வெட்கப்பட; நீத்தக்கடை- நீங்கியபொழுது, பிரிந்தபொழுது, .


அலர்நாண ஒல்வதோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('அலர் நாணல்' பாடம்): அலராகுமென்று நாணுதல் இயல்வதோ?;
பரிப்பெருமாள்: அலராகுமென்று நாணுதல் இயல்வதோ?;
பரிதி: அலர் ஏசும் நாணத்திற்கு நோவதோ;
காலிங்கர்: நெஞ்சே! இனிப் பிறர் கூறும் அலர் உரைக்கு நாணத்தகுவது ஒன்றோ?;
பரிமேலழகர்: (வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது; [ஏதிலார்-அயலார்]

'அலராகுமென்று நாணுதல் கூடுமோ? கூடாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊர்ப்பேச்சுக்கு அஞ்சி இருக்க முடியுமா?', 'அயலார் கூறும் அலருக்கு நாண முடியுமா?', 'பலபேர் பரிகாசம் பண்ணுவதற்காக நான் பயந்துவிடலாமா?', 'அயலார் கூறும் அலருக்கு நாம் நாணக்கூடுமோ? கூடாது' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஊரார் பேசுவர் என்பதற்காக நாண முடியுமா? என்பது இப்பகுதியின் பொருள்.

அஞ்சல்ஓம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து.
மணக்குடவர் குறிப்புரை: பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.
பரிப்பெருமாள்: அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீக்கினவிடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை. தலைமகனைக் காணும் பொழுதில் காணாப் பொழுது பெரிது ஆதலால்தான் ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி நினது ஆற்றாமை அலராகின்றது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நெஞ்சே அஞ்சாதே இரட்சிகிறோம் என்ற நாயகர் துறந்தவிடத்து என்றவாறு.
காலிங்கர்: யாம் தம்மோடு கலந்த ஞான்று நீ அஞ்ச வேண்டா, யாம் கடிதாக வரைவோம் என்று சொல்லக் கேட்டவர் தாமே அத்துணையும் உடம்பட்டொழுகப் பெறாராய் பலரும் நாணும்படி நம்மைக் கைவிட்டவிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின். [தம்மை-தலைமகனை; அஞ்சல் ஓம்பு என்றவர்-அஞ்ச வேண்டா கைவிடோம் என்று கூறியவர்]
பரிமேலழகர் குறிப்புரை: 'நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம். [யாண்டையது-எவ்விடத்து]

'அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஞ்சாதே என்றவர் பலரறியப் பிரிந்தபோது', 'முதலில் கண்டபோது 'உன்னைப் பிரியேன்; அஞ்ச வேண்டா' என்று கூறியவர், இப்பொழுது கண்டார் பலரும் நாணும்வகை நம்மைப் பிரிந்தவிடத்து', 'யார் என்ன சொன்னாலும் நான் இருக்கிறேன் நீ பயத்தை விடு' என்று சொன்ன என் காதலர் இப்போது என்னைப் பிரிந்திருக்கிறார் என்பதால்', 'நடுங்குதல் யொழிக, உன்னைவிட்டுப் பிரியேன் என்ற காதலர் பலரும் நாணும்படி நம்மை விட்டகன்ற பின்னர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

என்னை நீங்கியபோது, பலரும் வெட்கப்படும்படி 'அஞ்சாதே' என்றார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பலர் நாண நீத்தக்கடை 'அஞ்சாதே' என்றார்; ஊரார் பேசுவர் என்பதற்காக நாண முடியுமா? என்பது பாடலின் பொருள்.
'பலர் நாண நீத்தக்கடை' குறிப்பது என்ன?

அலர்ப் பேச்சு என்னை ஒன்றும் செய்யாது என்கிறாள் தலைமகள்.

‘அஞ்சாதே! என்று சொன்னவர் பலரும் நாண நம்மை நீங்கிப் போனபோது, ஊரார் பேசுவர் என்பதற்காக நாணுதல் இயலுமா?
காட்சிப் பின்புலம்:
தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் பழகுவது ஊரார்க்கு தெரியவர அவர்கள் இவர்களது மறைவொழுக்கம் குறித்து இழிவாகப் பேசத்தொடங்குகின்றனர். அவ்விதம் ஊர் பேசுவது காதலர்க்குச் சொல்லப்படுகிறது அதாவது அலரறிவுறுத்தப்பட்டது. இவர்கள் உறவு மேலும் வலுப்படவே அலர்ப்பேச்சு உதவுகிறது; அலரினால்தான் தன் உயிர் நிலைத்து நிற்கின்றது என்கிறான் தலைவன்; ஆயினும் தன் காதலியின் அருமை அறியாது அவர்கள் உறவு பற்றித் தவறாகப் பேசுகிறார்களே என்று வருத்தமுமுறுகிறான்; ஊரெங்கும் அலர் பரவியதல் தன்காதல் மிகுதலையுடைத்தாயிற்று, இல்லாவிடில் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போகும் என்கிறான்; கள்ளுண்பவர் களிக்கும்தோறும் கள்ளை விரும்புவதுபோல தங்கள் காதல் அலராகும்போது அது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது என்றும் தலைவன் கூறுகிறான்.
அவர்களது காதல் பற்றிய செய்தி பெரிதாகப் பேசப்பட்டு விரைவாகப் பரவுகிறது; ஊரார் பேச்சுப் பற்றிக் காதலி என்ன நினைக்கிறாள்? தலைமகள் 'ஊரார் பேச்சு எருவாகவும், அதுகேட்டு சினந்து தாய் சுடுசொல் மொழிய எம் காதல் நீண்டு வளர்கிறது' என்று கூறுகிறாள்; தங்கள் காதலை ஒழித்துக் கட்டவே அலர் எழுப்பப்படுகிறது என்றால் 'இப்படி அலர் பரப்புவது காதல் நெருப்புக்கு நெய் ஊற்றுவது போல' அதாவது அலர் காமத்தீயை அணைப்பதற்குப் பதில் அதை மேன் மேலும் எரியச் செய்யும் தன்மையது' என்று காதலின் வன்மை புலப்பட குமுறிக் கொண்டிருக்கிறாள் அவள்.

இக்காட்சி:
பணி காரணமாகத் தலைவன் காதலியைப் பிரிய வேண்டியிருக்கிறது. காதலரைப் பற்றிய இழிவான ஊரவர் பேச்சு விரிந்து பெருகுகிறது. அப்படிப்பட்ட பேச்சைக் கேட்டாவது அவர்கள் தங்கள் காதலை விலக்கிக் கொள்வார்கள் என எண்ணினர் போலும். ஆனால் அலர் உரை கேட்ட காதலி, அவளை நீங்கியபொழுது, 'பயப்படவேண்டாம்; நானிருக்கிறேன்' என்று பலர் முன்னிலையில் தலைவர் சொல்லிச் சென்றிருக்கும்போது இந்த வம்புப் பேச்சுக்களுக்காக நான் ஏன் வெட்கப்படவேண்டும்? அவர் எனக்குப் பலமான துணையாக நிற்பார்' என்கிறாள். தன் காதலன் அளித்த உறுதிமொழியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால்தான் தலைவி 'அலருக்கு நான் ஏன் நாண வேண்டும்' என்கிறாள். அடுத்துவரும் பாடலும் தலைவி நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவே கூறுகிறது என்பது அறியத்தக்கது.

பெரும்பான்மை உரையாளர்கள் இக்குறளுக்கு 'உன்னைப் பிரிய மாட்டேன் அஞ்சாதே என்று கூறிய தலைவரே பலர்நாண நம்மைவிட்டு நீங்கிவிட்டார். அவ்வாறிருக்க நாம் ஏன் அலருக்கு நாணப்பட வேண்டும்?' என்ற வகையில் பொருளுரைத்தனர். அதாவது தலைவன் இவளைக் கைவிட்டுச் சென்றுவிட்டான் என்றனர்.
இக்குறள் குறித்து வேறுபட்ட கருத்துக்களுடன் கூடிய சிலரது விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
வ சுப மாணிக்கம்: அஞ்சாதே என்றவர் பலரறியப் பிரிந்தபோது ஊர்ப்பேச்சுக்கு அஞ்சி இருக்க முடியுமா?
சி இலக்குவனார் 'பலர் அறியத் துறந்து செல்வாரேல் அவரால் உண்டான பழிச்சொல் கேட்டு வெட்கப்பட வேண்டியது அன்று. குற்றம் அவர்மீது தான். நம்மீது அன்று. உறுதிமொழி கூறியவாறு நம்மை மணந்து கொள்ள வேண்டிய கடன் அவருடையதே' என்று தலைவி கூறுகின்றாள்'.
நாமக்கல் இராமலிங்கம்: (யார் என்ன சொன்னாலும் நானிருக்கிறேன்) 'நீ பயத்தை விடு' என்று சொன்ன என் காதலர் (இப்போது) பலபேர் என்னைப் பரிகாசம் பண்ணும்படியாக விட்டுப் பிரிந்திருக்கிறார் என்பதற்காக இந்தப் பரிகாச பேச்சுகளுக்குப் பயந்துவிடுவது தகுமா? (தகாது); நான் பயப்படமாட்டேன்.
சாலமன் பாப்பையா: அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா?
இச்செய்யுள்ளை 'நீத்தக் கடை அஞ்சல்ஓம்பு என்றார் பலர்நாண; அலர்நாண ஒல்வதோ?' என மாற்றி அமைத்து வாசித்தால் பொருள்தெளிவு பெறலாம்.

'பலர் நாண நீத்தக்கடை' குறிப்பது என்ன?

'பலர் நாண நீத்தக்கடை' என்ற பகுதிக்குப் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து, நாயகர் துறந்தவிடத்து, தாமே அத்துணையும் உடம்பட்டொழுகப் பெறாராய் பலரும் நாணும்படி நம்மைக் கைவிட்டவிடத்து, தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின், இன்று பலரும் நாணும்படியாக நம்மைவிட்டுப் பிரிந்தால், இன்று நம்மைக் கண்டார் பலரும் நாணும்படி நம்மைப் பிரிந்தபின்பு, பலரறியப் பிரிந்தபோது, இப்பொழுது கண்டார் பலரும் நாணும்வகை நம்மைப் பிரிந்தவிடத்து, பலபேர் என்னைப் பரிகாசம் பண்ணும்படியாக விட்டுப் பிரிந்திருக்கிறார் என்பதற்காக, பலரும் நாணுமாறு நம்மை விட்டுப் பிரிந்தால், பலரும் நாணும்படி நம்மை விட்டகன்ற பின்னர், பலரிடையே நாம் நாணுமாறு நீத்தபோது, கண்டவர் பலரும் நாணுமாறு பிரிந்து போய்விட்டார், இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்தபின், இன்று என்னைப் பிரிந்திருப்பதால் என்றபடி உரையாசிரியர்கள் விளக்கம் செய்தனர்.

பலர் என்பதற்கு மணக்குடவர் 'தோழியும் செவிலியும் முதலாயினாரை' என்று தலைவியைச் சுற்றியிருப்பவர்களை மட்டும் குறிப்பிட்டார். மற்றவர்கள் எல்லாரும் 'ஊர்மக்கள் பலர்' என்று எழுதினர். ஊர்மக்கள் பலர் என்பது சரியானாலும் எந்தச் சூழ்நிலையில் பலர் நாணினர் என்பதை விளக்குவதில் உரையாசிரியர்களிடைத் தெளிவில்லை.
நீத்தக்கடை என்ற தொடர்க்கு நீங்கினவிடத்து, துறந்தபின், கைவிட்டவிடத்து, பிரிந்தவிடத்து, பிரிந்தபொழுது என்று பொருள் கண்டனர்.
இவற்றுள் துறந்தவிடத்து, கைவிட்டவிடத்து என்று கொண்ட உரையாளர்கள் 'இன்று என்னைப் பிரிந்திருப்பதால் பலரும் கண்டு எள்ளி நகையாடுகிறார்கள். நான் வெட்கப்பட்டு என்ன பயன்?' என்றும் 'பயப்படாதே என்று சொல்லிவிட்டுப் பலரும் நாணும்படி என்னைக் கைவிட்டுவிட்டார். இப்போது வதந்திக்கு வெட்கப்படமுடியுமா?' என்றும் இக்குறளுக்குப் பொருளுரைத்தனர். இவ்வுரைகள் பொருத்தமாகப் படவில்லை.
நீத்தக்கடை என்றதற்குக் காதலர்கள் இறுதியாகச் சந்தித்துப் 'பிரிந்த பொழுது' என்று கொள்வதே இக்குறட்கருத்தை விளக்க உதவும். எனவே இத்தொடர்க்கு என்னைப் பிரிந்தவேளை, ஊர்மக்கள் பலர் நாணும்படியாகக் காதலர் 'அஞ்சாதே' எனத் தேறுதல் கூறிச் சென்றார் என்று கொள்வது பொருத்தமாக அமையலாம். அவன் அவளைச் சந்தித்துக் கடமையாற்ற நீங்கும்வேளையில் 'அஞ்சவேண்டாம்; உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்' என்று சொன்னதே அலர் கூறியவர் பலரும் நாணும்படி ஆயிற்று.
பலரும் நாணும்படி 'அஞ்சாதே! உன்னைப் பிரியமாட்டேன்' என்று சொன்னதை நினைவு கொண்டு அலரை எதிர்கொள்ள ஆயத்தமாகிறாள் தலைவி என்பது கருத்து.

'பலர் நாண நீத்தக்கடை' என்றதற்கு நம்மை நீங்கினபொழுது பலரும் நாணுமாறு என்பது பொருள்.

என்னை நீங்கியபோது, பலரும் வெட்கப்படும்படி 'அஞ்சாதே' என்றார்; ஊரார் பேசுவர் என்பதற்காக நாணுதல் இயலுமா? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அலர்அறிவுறுத்தல் கேட்ட தலைவி என் காதலர் உரைத்த காப்பு மொழியிருக்க வம்புப்பேச்சுக்கு நான் ஏன் நாணவேண்டும் என்கிறாள்.

பொழிப்பு

ஊரார் பேச்சுக்கு வெட்கப்படக் கூடுமா? பலர் நாணும்படி 'அஞ்சாதே, காத்துக்கொள்' என்று சொல்லிப் பிரிந்துள்ளாரே!