இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1147



ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1147)

பொழிப்பு (மு வரதராசன்): இந்தக் காமநோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.



மணக்குடவர் உரை: ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக இந்நோய் வளராநின்றது.
இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.

பரிமேலழகர் உரை: (வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இந்நோய் - இக்காம நோயாகிய பயிர்; ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் - இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக, வளராநின்றது.
('ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது. ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம். வரைவானாதல் பயன்.)

இரா சாரங்கபாணி உரை: இக்காம நோயாகிய பயிர், இவ்வூர் மகளிர் கூறும் அலர்மொழி எருவாக, அம்மொழி கேட்டு அன்னை சினந்துரைக்கும் கடுஞ்சொல் நீராக, ஏற்று வளரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இந்நோய் ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல் நீராக நீளும்.

பதவுரை: ஊரவர்-ஊரிலுள்ளவர்கள்; கௌவை-அலர் தூற்றுதல்; எருவாக-உரமாக; அன்னைசொல்-தாய்சொல்; நீராக-தண்ணீராக; நீளும்-வளரும்; இந்நோய் -இந்தப் பிணி.


ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல் நீராக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக;
பரிப்பெருமாள்: ஊரார் எடுத்த அலர் எருவாக அன்னை சொல்லும் சொல் தண்ணீராக;
பரிதியார்: ஊரவர் ஏசுஞ்சொல் எருவாகவும் அன்னை வசைமொழி நீராகவும்;
காலிங்கர்: நெஞ்சே! நம்மைத் தான் எய்தப்பெறாமையாலுள்ளவாறு அருமை அவள் தனக்கும் ஒக்கும் அன்றே. அதனால் ஊரவர் உரைக்கும் கவ்வைதானே எருவாகத் தாய் சொல்லும் செறுத்துரையே நீராகக் கொண்டு;
பரிமேலழகர்: (வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தலைமகன் சிறைப்புறத்தானாதல் அறிந்த தோழி, ஊரவர் அலரும் அன்னை சொல்லும் நோக்கி ஆற்றல் வேண்டும் எனச் சொல்லெடுப்பியவழி அவள் சொல்லியது.) இவ்வூரின் மகளிர் எடுக்கின்ற அலர் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகின்ற வெஞ்சொல் நீராக; [சொல்லெடுப்பிய வழி - சொல் எழுப்பியவிடத்து; அது கேட்டு-அவ்வுரைக் கேட்டு]
பரிமேலழகர் குறிப்புரை: 'ஊரவர்' என்பது தொழிலான் ஆணொழித்து நின்றது.

'ஊரார் உரைக்கும் அலர் எருவாக அன்னை சொல்லும் சொற்கள் நீராக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊர்ப்பேச்சு உரம்; தாயின் கடுஞ்சொல் நீர்', 'ஊரார் பேசுகின்ற ஏளனப் பேச்சு எருவாகவும், என் தாய் அதற்காக என்னை இடித்துக் கூறும் சொற்கள் நீராகவும்', 'ஊராருடைய அலர் எருவாகவும் அதுகேட்டுத் தாய் சொல்லும் வெம்மொழி நீராகவும்', 'நோய் இவ்வூரார் பேசும் பேச்சு எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டுரைக்கும் சொல் நீராக' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஊர்ப்பேச்சை உரமாகக் கொண்டும் தாயின் சொல்லை நீராக ஏற்றும் என்பது இப்பகுதியின் பொருள்.

நீளும் இந்நோய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நோய் வளராநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அலரின் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவானாதல் பயன்.
பரிப்பெருமாள்: இந்நோய் வளராநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அலரினான் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. இவையிரண்டிற்கும் வரைவுகடாவுதல் பயன்.
பரிதியார்: நீளும் இந்நோய் என்றவாறு.
காலிங்கர்: நெடிது வளரும் போலும் இந்நோயானது இவள் திறத்தும் என்றவாறு.
பரிமேலழகர்: இக்காம நோயாகிய பயிர் வளராநின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: ஏக தேச உருவகம். சுருங்குதற்கு ஏதுவாவன தாமே விரிதற்கு ஏதுவாக நின்றன என்பதாம் வரைவானாதல் பயன்.

'இந்நோய் வளர்கின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்படியாக வளரும் இக்காதற் பயிர்', '(என் மனத்தில் முளைத்துவிட்ட) காமப்பயிர் வளர்ச்சி அடைகிறது', 'இக்காமநோயாகிய பயிர் பெற்று வளர்கின்றது', 'இக்காதல் வளர்க்கின்ரது' என்றபடி பொருள் உரைத்தனர்.

வளரும் இந்தக் காதல் நோய் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
ஊரார் எடுத்த கௌவையை உரமாகக் கொண்டும் அன்னைசொல்லை நீராக ஏற்றும் வளரும் இந்தக் காதல் நோய் என்பது பாடலின் பொருள்.
'கௌவை' எப்படிக் காதல்நோயை வளரச் செய்யும்?

வாரி இறைக்கப்படும் சேறும் சந்தனமாக மாறுகின்றதே!

காமநோயானது ஊர்க்காரர்கள் காதலர்பற்றிச் சொல்லும் ஏளனச் சொற்களை எருவாகவும், தாய் சொல்லும் சுடுசொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது.
காட்சிப் பின்புலம்:
பிறர் அறியாமல் தலைவனும் தலைவியும் பழகுவதை ஊரார் அறிகின்றார்கள். ஊர் மக்கள் காதல் கொண்டவர்களிடையேயுள்ள உறவு குறித்து அலர் பரப்புகின்றனர். அலர் அல்லது கௌவை என்பது ஊர் வம்புப்பேச்சு குறித்தது. இது பொதுவாக இளம் காதலரது களவு ஒழுக்கம் பற்றி ஊர் மகளிர் கூடியிருந்து உரக்கப் பேசுவதைக் குறிக்கும்.
அலரினால் உயிர் நிலைத்து நிற்கின்றது என்கிறான் காதலன்; என் காதலியின் அருமை அறியாது எங்கள் உறவு பற்றித் தவறாகப் பேசுகிறார்களே எனவும் அவன் வருந்துகிறான்; இன்னொரு புறம் அலரால் அவளை அடைந்தே விட்டதான ஓர் உணர்வு ஏற்படுகிறது என்றும் சொல்கிறான்; அலர் அவனிடம் கிளர்ச்சியையும் சிலிர்ப்பையும் உண்டாக்குகிறது; தங்கள் காதல் செய்தி மேலும் மேலும் பரவட்டும் என்றுகூட சொல்கிறான்; அலரே தங்கள் காதலை இணைக்கப் போவது என்று காதலர் உள்ளூர மகிழவும் செய்கிறார்கள்.
அவர்களது காமம் பற்றிய அலர் பெரிதாகப் பேசப்பட்டு விரைவாகப் பரவுகிறது.

இக்காட்சி:
தங்களது மறைவொழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை காதலர் அறியவருகிறார்கள். இச்செய்தி காதலியின் தாய்க்கும் தெரிய வர அவளும் மகளைச் சினந்து பேசுகின்றாள். ஊரார் அலர் கூறுவதனால் தங்கள் காதலை அடக்கிவிட முடியாது என்று கருதும் தலைவி ஊராரின் இழிவுப் பேச்சையும் அன்னையின் கடுஞ்சொல்லையும் பொறுத்துக் கொள்கிறாள். அலரால் அவளுடைய காதலின் ஆற்றலும் வலுப்பெற்று காமப்பயிர் மேலும் வளர்கின்றது என்கிறாள் அவள்.
கௌவையை எருவென்றும், அன்னைசொல்லை நீர் என்றும் உருவகப்படுத்தியதனால் காதல் நோய் பயிராகக் கூறப்பட்டது. எருவும் நீரும் பயிர் செழித்து வளர்வதற்கு உதவும் இன்றியமையாப் பொருட்கள். அவைபோல ஊர்ப்பேச்சும் அன்னையின் உரையும் காதல் பயிர் முன்னைவிடப் பன்மடங்கு வளரச்செய்கிறதாம். ஊரார் பழியை எரு என்றது ஏளன மொழியின் தன்மை குறித்து.

தாய் எனப் பொருள் தரும் 'அன்னை' எனும் சொல்லாட்சி இப்பாட்டு ஒன்றில் மட்டும் குறளில் அமைந்துள்ளது.
ஊரார் வம்புப்பேச்சைத் தொடர்ந்து 'அன்னை சொல்நீராக' என்று குறள் சொல்வதால், தலைவியின் தாயும் அவள் தலைவனுடன் கொண்ட தொடர்பை விரும்பாது தடுக்க முயன்றாள் என்பதைத் தெரிவிப்பதாக உள்ளது. அன்னையின் சொல் நீர் என்ற மென்சொல்லால் குறிக்கப்பட்டதால் சில உரையாளர்கள் அன்னையின் நல்லுரை அல்லது அறிவுரை என்று பொருளுரைத்தனர். ஆனால் அன்னையின் வெஞ்சொல் என்று கொள்வதே பொருத்தம்.

அலரின் தோன்றும் காமத்து மிகுதி (பொருள் :அலர் காரணமாகத் தலைவன் தலைவியரிடத்துக் காதற்காம உணர்வு மிக்கு விளங்கும்.) என்ற தொல்காப்பியப் பொருளாதிகார நூற்பாவிற்கு (21) இளம்பூரணரும் நச்சினார்க்கினியாரும் இக்குறளை மேற்கோள் காட்டுவர்.
இக்குறள் தொடர்களை நம்மாழ்வார் தம் பாசுரங்களில் எடுத்தாண்டிருக்கிறார்:
அலரின் தோன்றும் காமத்து மிகுதி
ஊரவர் கவ்வை எருஇட்டு அன்னை சொல்நீர்படுத்து
ஈரநெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ்செய்யுள்
பேர்அமர் காதல் கடல் புரைய விளைவித்த
கார் அமர் மேனி நம் கண்ணன் தோழீ கடியனே
(திருவாய்மொழி. 5.3.4)
கண்ணனைத் தலைவனாகக் கொண்டு இக்குறளின் அடியொற்றி நெஞ்சத்தை வயலாகவும் காதலை நெல்லாகவும் ஆழ்வார் உருவகம் செய்தார்.

''கௌவை' எப்படிக் காதல்நோயை வளரச் செய்யும்?

கௌவை, அம்பல், அலர் என்பன ஒத்த பொருட்கள் தருவன. இவை ஊரார் காதலரின் களவு ஒழுக்கம் பற்றிப் பேசுவதைக் குறிப்பன.

ஒருவர் நோய் உற்றால் உறவும் ஊரிலுள்ளோரும் அது விரைவில் தணிய வேண்டும் என்றே விழைவர். நோய் தீர மருந்து தருவது ஒரு தாயின் இயல்பான குணம். ஆனால் இங்கு ஊரவர் ஏளனப்பேச்சுகளும் அன்னை சொல்லும் காம நோய் தணிவதற்கு மாறாக அது விரிதற்குக் காரணங்களாகி நின்றன எனப்படுகிறது. அது எப்படி?
இக்குறள் களவொழுக்கத்தில் நின்ற தலைவியின் மனநிலையைக் கூறி அவளது உள்ளநெகிழ்ச்சி வெளிப்பாட்டைக் கூறுவது. அலரால் காதலர்க்கு உள உறுதியும் காதல்பால் நம்பிக்கையும் மிகுவதை இப்பாடல் காட்டுகிறது.
அலர் ஒரு வகையில் காதலர்களுக்கு உவகை தருவதாக அமைகிறது. குற்றம் செய்யும் திருடர், கொலைகாரர் முதலானவர்கள் பொதுவாக ஊரார் பழிச்சொல்லுக்கு அஞ்சி மேலும் தவறு செய்யத் தயங்குவர். ஆனால் காதலர்கள் குற்றவாளிகள் அல்லர் என்பதால் ஊராரது இழிவுப் பேச்சு அவர்களிடம் எந்தவித எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.
ஆயினும் முதலில் தாங்கள் கூடிய செயல் சமூகத்தின் பார்வையில் குற்றம் என்று உணரும்பொழுது ஊரார் பழிச்சொல் அவர்களது உள்ளத்தில் தாக்குதலை உண்டாக்கும். ஆனால் நாளடைவில் அந்த குற்ற உணர்ச்சியும் மெல்லக் குறைந்து பின் அடியோடு மறைந்து விடும். தங்கள் காதல் உயிர்வாழ்க்கை தொடர்பானதால் அதன்மேல் மேலும் மேலும் பற்று ஏற்பட்டு உறுதியாகிறது. இந்த நம்பிக்கையுடன் அவர்கள் ஊராரின் பழிதூற்றலை எதிர்கொள்ள ஆயத்தமாகின்றனர். அது போலவே காதலி தன் தாயின் வெம்மையான சொற்களையும் புறந்தள்ளத் துணிகிறாள். இந்தச் சூழலில் ஊரார் பழிச்சொல்லும் அன்னையின் கடுஞ்சொல்லும் காதல் உணர்வை அழிப்பதற்குப் பதிலாக அது கூடுவதற்குத் துனை செய்கின்றன.

ஊர்ப்பேச்சை உரமாகக் கொண்டும் தாயின் கடுஞ்சொல்லை நீராக ஏற்றும் வளரும் இந்தக் காதல் நோய் என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

அலர்அறிவுறுத்தலுக்குப்பின் காமநோய் தணிக்கும் முயற்சிகள் அது நீடித்துவளரவே துணை செய்கின்றன.

பொழிப்பு

ஊர்ப்பேச்சு உரமாகவும் தாயின் சொல் நீராகவும் பயன்பட்டு இக்காம நோயாகிய பயிர் வளர்கின்றது.