இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1146

நிலவுமறைவு


கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1146)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரைக் கண்டது ஒருநாள்தான்; அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்டசெய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

மணக்குடவர் உரை: யான் கண்ணுற்றது ஒருநாள்; அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.

பரிமேலழகர் உரை: (இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது.
(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: யான் என் காதலியைக் கண்டது ஒரு நாளே. ஆனால் அதனால் எழுந்த அலர் அவ்வரையில் அடங்காமல் மதியைப் பாம்பு கொண்ட அலர்போல ஊரெங்கும் பரவிவிட்டது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்பு கொண்டற்று.

பதவுரை: கண்டது-(இன்பம்) கண்டது, கண்ணுற்றது; மன்னும்-(அசைநிலை); ஒருநாள்-ஒரு நாள்; அலர்-ஊர்ப்பேச்சு, வம்புப்பேச்சு; மன்னும்-(அசைநிலை); திங்களை-நிலவை; பாம்பு-பாம்பு; கொண்டற்று-கைக்கொண்டது போலும்.


கண்டது மன்னும் ஒருநாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் கண்ணுற்றது ஒருநாள்;
பரிப்பெருமாள்: யான் கண்ணுற்றது ஒருநாள்;
பரிதி: ஒருநாள் நாயகரிடத்தில் இன்பங் கண்டது;
காலிங்கர்: யாம் எங்காதலியைக் கண்டு இன்புற்றதும் ஒருநாளே;
பரிமேலழகர்: (இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; [எய்தப் பெறாத-அடையாத; சிறைப்புறம்-வேலிக்கு வெளிப்பக்கம்; அலர் அறிவுறீஇ-அலர் அறியச் செய்து]

'யான் கண்ணுற்றது ஒருநாள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். கண்டது என்பதற்குப் பரிதி இன்பங்கண்டது என்றும் காலிங்கர் கண்டு இன்புற்றதும் என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரைக் கண்டது ஒருநாள்தான்', 'என் காதலரோடு கலந்து நான் இன்பங் கண்டது என்னவோ ஒருநாள்தான்', 'யான் காதலரைக் கண்டது ஒருநாளே', 'யான் காதலரைக் கண்டது ஒரு நாளே' என்ற பொருளில் உரை தந்தனர்.

யாம் கண்டு இன்புற்றதோ ஒருநாள்தான் என்பது இப்பகுதியின் பொருள்.

அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.
பரிப்பெருமாள்: அக்காட்சி திங்களைப் பாம்பு கொண்டாற்போல, எல்லாரானும் அறியப்பட்டு அலராகா நின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: காப்புக் கைம்மிகப்பட்ட தலைமகள் வேறுபாடு கண்டு செவிலி முதலாயினார் உற்று நோக்கிய குறிப்பைத் தலைமகள் கொண்டு ஒருநாளைக் காட்சியே அலராகா நின்றதென்று தோழிக்குக் கூறியது.
பரிதி: அது சந்திரனை இராகு தீண்டினதற்கு ஒக்கும்.
காலிங்கர்: அதுகொண்டு மற்று எம்மைப் பிறர் உரைக்கின்ற அலரின் மிகுதியது எங்ஙனம் எனின் திங்களைப் பாம்பு கொண்டாற் போலப் பலரும் எடுத்துரைக்கின்ற அத் தன்மைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம். [வரைந்து கோடல்-திருமணம் செய்து கொள்ளுதல்]

'அதனாலான அலர் அவ்வளவில் இல்லாமல் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊர்ப்பேச்சோ திங்களைப் பாம்பு பிடித்தது போலப் பரவியது', 'ஆனால் அதைப் பற்றிய பரிகாசப் பேச்சு என்னவோ சந்திரனைப் பாம்பு பிடித்துக் கிரகணம் உண்டானதைப் போல் எல்லாருக்கும் தெரிந்து விட்டது', 'அதனால் உண்டாகிய அலரோ மதியைப் பாம்பு கொண்ட செய்திபோல உலகெங்கும் பரந்தது', 'அதனால் உண்டான அலர் திங்களை (சந்திரனை)ப் பாம்பு கொண்ட நிகழ்ச்சி போன்று உலகமெங்கும் பரந்தது' என்றபடி பொருள் உரைத்தனர்.

அலரோ நிலவைப் பாம்பு விழுங்கியது போலப் பரவியது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
யாம் கண்டதோ ஒருநாள்தான்; அலரோ திங்களைப் பாம்பு கொண்டற்று என்பது பாடலின் பொருள்.
'திங்களைப் பாம்பு கொண்டற்று' என்றால் என்ன?

ஊர் இவ்விதம் பரபரப்பதற்கு அப்படி நான் என்ன பண்ணிவிட்டேன்? எனக் கேட்கிறாள் தலைவி.

'நான் அவரைக் கண்டு இன்புற்றது எல்லாம் ஒரு நாள் தான்; ஆனால் 'திங்களைப் பாம்பு கொண்டது' போல, அலர் ஊரெங்கும் பரவிவிட்டதே' என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தலைமக்கள் கொண்ட களவுக்காதலை ஊர் மக்கள் தெரிந்துகொண்டனர். அவர்களது உறவு குறித்துப் பழித்துப் பேசுகிறார்கள். அவர்களது காதலுக்கு எதிராகப் பேசப்படுபவை இவர்கள் உறவை மேலும் வலுப்படவே உதவுகிறது. ஊர்ப்பேச்சே தங்களை இணைக்கப் போவது என்று காதலர் உள்ளூர மகிழவும் செய்கிறார்கள். அலர் நன்மை செய்ய வந்தது என்றெண்ணினர். அலரினால் தன் உயிர் நிலைத்து நிற்கின்றது என்றும் தன் காதலியின் அருமை அறியாது அவர்கள் உறவு பற்றித் தவறாகப் பேசுகிறார்களே என்றும் ஊரெங்கும் அலர் பரவியது தன் நற்பேறுதான் என்றும் அது அவனிடம் கிளர்ச்சியையும் சிலிர்ப்பையும் உண்டாக்குகிறது என்றும் அது மேலும் பரவட்டும் என்றும் தலைவன் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
தலைவனும் தலைவியும் கொண்ட காதல் உறவு பற்றிய அலர் பெரிதாகப் பேசப்பட்டு விரைவாகப் பரவியது. 'நானும் என் காதலரும் ஒருமுறை கூடினோம். அது ஒருநாள்தான். ஆனால் அந்நிகழ்வைத் தெரிந்த கொண்ட மக்கள் 'நிலவைப் பாம்பு விழுங்கி'க் கொள்ளும் கிரகணச் செய்தியைப்போல மளமள வென்று ஊர் முழுக்கப் பரவச் செய்யத் தொடங்கிவிட்டனர்' என்று காதலி கூறுகிறாள். ஏதோ ஒருநாள் நான் தலைவனைக் கண்டு அளவளாவியது குற்றமா? என்பதுபோலக் கேட்கிறாள்.
அவளுக்கு அது ஒரு சிறு நிகழ்வாகத் தோன்றுகிறது; ஆனால் ஊராருக்கோ இழிவானதும் பழிப்பிற்குரியதுமாக உள்ளது. இக்குறளில் உள்ள 'கண்டது' என்ற சொல்லுக்கு நேர் பொருள் 'பார்த்தது' ஆகும். இதற்குப் பலர் 'கண்ணுற்றது' என்று பொருள் கொண்டனர். சிலர் 'இன்பங் கண்டது' என்று உரை செய்தனர். களவியல் அதிகாரங்களின் போக்கை நோக்கும்போது தலைவியும் தலைவனும் ஒருநாள் மெய்யுறுபுணர்ச்சி கொண்டு இன்பம் கண்டனர் என்பது புலப்படும். அது 'புணர்ச்சி மகிழ்தல்' அதிகாரப்பாடல்களிலும் வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்புணர்ச்சி பற்றிய செய்தியையே தலைவி இங்கு பேசுகிறாள் எனத் தெரிகிறது.
தலைவனும் தலைவியும் சந்தித்தது அலராகி ஊருக்கெல்லாம் தெரிந்து விட்டதைத் தலைவனிடம் கூறச் சொல்லி, விரைவில் மணவினைக்கு ஏற்பாடு செய்ய வேண்டுகிறாள் என்பது கருத்து.
அலர் என்பது 'சொல் நிகழ்தல்' என்றும் 'இன்னானோடு, இன்னாளிடை இது போலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது' என்றும் உரையாசிரியர்கள் விளக்குவர். இதை ஊர்ப்பேச்சு அல்லது வம்புப்பேச்சு எனலாம்; அலர் என்பது பொதுவாக இழித்தும் பழித்தும் பேசப்படுவது.

இப்பாடலில் தலைவி கூறும் 'ஒருநாள் இன்பம்' என்ற கருத்துடன் ஒட்டிய சங்கப் பாடல் ஒன்றும் காதலி கூறுவதாக உள்ளது. அது:
உற்றது மன்னு மொருநாண் மற்றது
தவப்பன் னாடோண் மயங்கி
வௌவும் பண்பினோயா கின்றே.
(குறுந்தொகை 271 கருத்து: நடந்தது ஒரு நாளே ஆகும்; ஆனால் அது பல நாளும் எனக்குத் துன்பம் தருவதாயிற்று.)

இப்பாடலில் 'மன்னும்' என்னும் சொல் இரண்டிடங்களில் வந்துள்ளது. மன்+உம் என விரியும் இச்சொற்கள் இரண்டுமே அசைநிலைகள் என்பர் உரைகாரர்கள். முந்தைய இடத்தில் (கண்டது மன்னும்) அருமைப்பாட்டையும் பிந்தைய இடத்தில் (அலர் மன்னும்) பெருமைப்பாட்டையும் ஆற்றலுடன் உணர்த்துகின்றன என்பார் சி இலக்குவனார்.

'திங்களைப் பாம்பு கொண்டற்று' என்றால் என்ன?

'திங்களைப் பாம்பு கொண்டற்று' என்ற தொடர்க்கு 'நிலவைப் பாம்பு விழுங்கியது போல' என்பது பொருள்.
முழுநிலவு நாள் ஒன்றில் மதி சிறுது சிறுதாகக் குறைந்து முழுவதும் மறைந்து போய்விடுகிறது. மதி மறைந்ததால் ஊரெல்லாம் இருளும் படர்ந்தது. இதைக் கண்ட மக்கள் 'நிலவைப் பாம்பு கவ்விக் கொண்டு செல்கிறது' என்பதாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். இதைக் கேள்வியுறும் மற்றவர்களும் இச்செய்தியைப் பிறர்க்குத் தெரிவிக்கின்றனர். இச்செய்தி ஊர் முழுக்க நொடிப்பொழுதில் பரவி மக்கள் அனைவரும் வியப்புடன் வந்து வானை உற்று நோக்குகின்றனர். பின் அதைப்பற்றியே பேசிக்கொள்கின்றனர்.

அவர்கள் கண்டது சந்திரகிரகணம் (Lunar Eclipse) அதாவது நிலவுமறைவு ஆகும். ஞாயிறு, பூமி, திங்கள் ஆகியன ஒரு நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. ஞாயிற்றின் ஒளி, புவியின் மறைப்புக்காரணமாக திங்கள் மீது விழாது தடுக்கப்படுகிறது. அப்பொழுது புவியின் நிழல் திங்கள் மீது படிந்துபின் படிப்படியாகவே மறைந்துவிடும்.
இயற்கையின் இந்நிகழ்ச்சி அவ்வப்பொழுது உண்டாவது என்று தெரிந்தும், அதற்கு அறிவியல் விளக்கம் வேறானது என்று அறிந்தும், இச்செய்தியை விரைந்து மற்றவர்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்ற பேரார்வத்தில் 'திங்களைப் பாம்பு விழுங்கிற்று' என்று ஊரார் கூக்குரல் எழுப்புவர். செய்திக்கு ஒரு பரபரப்பு உண்டாக்குவதற்காக, அதை விரைவுடன், பரந்த எல்லைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு 'நிலவைப் பாம்பு கொத்திக்கொண்டு போகிறது' எனச் சொல்வர்.
ஞாயிற்றின் மறைவை (Solar Eclipse) கேது என்னும் செம்பாம்பு கவ்வுவதாகவும் திங்கள் மறைவை இராகு என்னும் கரும்பாம்பு கவ்வுவதாகவும் வழக்கு வந்தது எனக் குறிக்கிறார் தேவநேயப் பாவாணர்.

திங்களைப் பாம்பு விழுங்குவது ஊரெங்கும் பரவுதல் உவமையாகக் கூறப்பட்டது. வானில் திங்களைப் பாம்பு தீண்டுவதை உலகெலாம் அறிவதுபோல், தலைவன் தலைவியிடையே உள்ள காதலொழுக்கமும் ஊர் முழுவதும் தெரிவதாகிவிட்டது; அது ஊருக்குள் விரைவாகப் பரவுகிறது; அதன் பரவும் தன்மை காதலர்களை வியக்க வைக்க வேண்டும் என்பன உவமை தரும் செய்திகள்.
யாரோ ஒருவன் மதிபோன்ற மங்கையைக் கவர்ந்து சென்றுவிட்டான் என்ற குறிப்பும் உள்ளது எனவும் விளக்கினர்.

யாம் கண்டதோ ஒருநாள்தான்; அலரோ நிலவைப் பாம்பு விழுங்கியது போலப் பரவியது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

'ஒருநாள் இன்பம்' உண்டாக்கிய அலர் அறிவுறுத்தல்.

பொழிப்பு

யாம் கண்டு இன்புற்றதோ ஒருநாள்தான்; அலரோ நிலவைப் பாம்பு கௌவியது போலப் பரவியது.