இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1143



உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1143)

பொழிப்பு (மு வரதராசன்): ஊரார் எல்லாரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ? (பொருந்தும்). அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றாற்போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.

மணக்குடவர் உரை: ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ? அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும்.
இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஊர் அறிந்த கௌவை உறாஅதோ - எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ; அதனைப் பெறாது பெற்றன்ன நீர்த்து - அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான்.
(பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: ஊர்ப்பேச்சு எனக்கு வாராதோ? அதனைப் பெறாமலே பெற்றது போல் என் மனம் மகிழும். .


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊரறிந்த கௌவை உறாஅதோ அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

பதவுரை: உறாஅதோ-பொருந்தாதோ, நடவாதோ; ஊர்-ஊர் மக்கள்; அறிந்த-தெரிந்த; கௌவை-அலர் (தூற்றுதல்); அதனைப்-அதைப்; பெறாஅது-அடையாமல்; பெற்றன்ன-அடைந்தது போன்ற; நீர்த்து-தன்மையுடையது. .


உறாஅதோ ஊரறிந்த கௌவை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊரறிந்த அலர் வருவதொன்றன்றோ?;
பரிப்பெருமாள்: ஊரறிந்த அலர் உறுவது ஒன்றே;
பரிதி: ஊரெங்கும் அறிந்த கவ்வை உண்டாகில்;
காலிங்கர்: நெஞ்சே! நமக்குச் சால உறுவதுஒன்று அன்றோ; ஊர் அறிந்து உரைத்த கவ்வையானது;
பரிமேலழகர்:(இதுவும் அது.) எங்கட்குக் கூட்டம் உண்மை இவ்வூர் அறிதலான் விளைந்த அலர் எனக்கு உறுவதொன்றன்றோ;

'ஊரறிந்த அலர் உறுவது ஒன்றே'.என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊர்ப்பெச்சு எனக்கு வாராதோ?', 'ஊரறிந்த அலர் எனக்கு வாராதோ?', 'எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் உள்ள தொடர்பை ஊரிலுள்ள எல்லாரும் அறியும்படி செய்துவிட்ட இந்த ஏளனப் பேச்சு நல்லதுதான்', 'ஊரார்கள் அறிந்துள்ள அலர்ச் செய்தி எனக்கு உண்டாகாதோ?' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஊரறிந்த அலர்ச் செய்தி எங்களுக்கு நேராதோ என்பது இப்பகுதியின் பொருள்.

அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமராவார் உடன்படுவரென்று தலைமகன் கூறியது.
பரிப்பெருமாள்: அவ்வலரைத் தீதாகக் கொள்ளாது, பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளப்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அலரறிவுறுத்த தோழிக்கு அவ்வலரினான் என்றும் தமர் வரைவு உடன்படுவரென்று தலைமகன் கூறியது. இதுவும் ஒரு கூற்று; மேலதனோடு இயைபு இன்று.
பரிதி: காம இன்பத்தைப் பெறாமல் பெற்றதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: அதனை அவர் அறியாது நம்மை நிறையழித்ததற்கு முன்னம் பெறாதது ஓர் உபாயம் பெற்றாலொத்த நீர்மையை உடைத்து இவ்வூர் என்றவாறு.
பரிமேலழகர்: அது கேட்ட என் மனம் அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும் நீர்மையுடைத்து ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: பெற்றன்ன நீர்மை: பெற்றவழி உளதாம் இன்பம் போலும் இன்பமுடைமை. 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது. [நீர்மை-தன்மை; 'நீர்த்து' என்பதற்கு ஏற்ற 'மனம்' என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது-நீர்த்து என்னும் பயனிலைக்கு ஏற்ற மனம் என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.]

'பெறாததொன்றைப் பெற்றாலொத்த நீர்மைத்தாகக் கொள்ளல் வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் மாறுபாடான உரை செய்துள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனைப் பெறாமலே பெற்றது போல் என் மனம் மகிழும்', 'அத்தகைய அலர் எனக்குக் கிடைக்காவிட்டாலும் கிடைத்தாற் போன்ற இன்பந் தரும் தன்மையுடையது', 'ஏனென்றால் எனக்குக் கிடைக்குமோ என்று நான் ஏங்கியிருந்த அவளுடைய இன்பம் கிடைக்கும் என்பது இதனால் நிச்சயமாகிறது', 'அது கேட்ட என் மனம் அக் கூட்டததைப் பெறாதிருந்தே பெற்றால் போலும் நீர்மையுடைதது ஆதலான்.' என்றபடி பொருள் உரைத்தனர்.

அது கிடைக்காமலே கிடைத்தாற்போன்ற தன்மையுடையது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஊரறிந்த கௌவை எங்களுக்கு நேராதோ? அந்த அலரைப் பெறாஅது பெற்றன்ன தன்மையுடையது என்பது பாடலின் பொருள்.
'பெறாஅது பெற்றன்ன' குறிப்பது என்ன?

அலர் எங்கள் இருவரையும் இணைத்துப் பேசுகிறது. அவ்வளவுதானே. நாங்கள் சேரத்தானே போகிறோம். அலர் நல்லது.

ஊர் அனைத்தும் எங்கள் இருவரையும் இணைத்துப் பழித்துப் பேசுகிறார்கள்; இச்செய்தியை இன்னும் அடையமுடியாத அவளை அடைந்தாற் போல் உணர்கிறேன் என்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
காதலர் சந்திப்பதில் இடையூறு உண்டாவதால் வேறுவழி யாதும் புலனாகாமல் தலைவன் மடலேறத் துணிகிறான். மடலேறும் செய்தி ஊரார்க்கு தெரியவர காதலர் களவொழுக்கத்தில் பழகியதையும் மெய்யுறு புணர்ச்சி கொண்டதையும் பற்றி அவர்கள் இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள். அவ்விதம் ஊர் பேசுவது காதலர்க்கு அறிவுறுத்தப்படுகிறது. ஊரார் அலர் கூறினாலும் அது ஒருவகையில் நன்மை செய்கிறது என்கிறான் காதலன். அலர் உண்டானதால் தலைவியுடன் மணவினையில் இணைவதற்கான் சாத்தியக் கூறுகள் மிகுந்து விட்டது என்பதால் தன் உயிர் நிலைநிறுத்தப்படுகிறது என நினைக்கிறான் தலைவன்; அலர் உரையில் மனம் போன போக்கில் காதலர் உறவு பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறி வருகின்றனர் ஊரார். 'மலர் போன்ற கண்களை உடைய தன் காதலியின் அருங்குணங்களை அறியாமல் இவ்விதம் தூற்றுகிறார்களே எனத் தலைவன் வருந்திக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
ஊரில் ஒருவர் வாழ்க்கையைச் செயல்களை மற்றவர் அறிந்தும் அதைக்குறித்து ஒருவரோடொருவர் உரையாடியும் வருவது இயல்பு. இங்கு காமக் கூட்டம் கண்ட களவுக்காதல் பற்றி ஊர் பேசுவதால் இழிவான செய்தியாகவே பரவுகிறது. அதனைக் கௌவை அதாவது பழிச்சொல் என்று இக்குறள் குறிக்கிறது. பழித்துக் கூறப்படும் அலர் கேள்வியுற்ற தலைவன் அதை எவ்விதம் எதிர்கொள்கிறான்? 'அவளும் நானும் கூடி ஒழுகியதைப் பற்றி ஊர் தூற்றிப் பேசுகிறது. அவ்வாறு பேசிக் கொள்வதும் நன்மையே செய்கின்றது. அவர்கள் எழுப்பும் அலரானது, தாங்கள் மணவினையில் இன்னும் இணையாமலேயே இணைந்ததற்கொப்பான மகிழ்ச்சியைத் தருகின்றது' என்று தலைவன் சொல்கிறான்.

அலர் என்பது தலைவன்-தலைவியின் களவொழுக்கத்தை பலரறிய வெளிப்படுத்துதல் ஆகும். இது களவு வாழ்வைக் கற்பாக மாறுவதற்கு வழி வகுப்பது என்றும் தலைவன் விரைவாக மணந்து கொள்ளத் துணிவு கொள்ளவும் உதவுவதாகக் கூறுவர். காமப்புணர்ச்சி, கூட்டம், சேர்க்கை என்ற சொற்கள் மூலம் உரையாளர்கள் அலர்ச் செய்தி என்ன என்று விளக்கினர். காதலர் புணர்ச்சியில் ஈடுபட்டது பற்றியே ஊரார் இழிவாகப் பேசினர் என்றனர் இவர்கள்.
'அலர் இழிவு உண்டாக்கினாலும் அதனுள் ஒரு நன்மையும் இருக்கத்தான் செய்கிறது அலர் எங்களைச் சேர்த்துவைத்தே பேசுகிறது. இது போதும் எனக்கு; அலரால் அவளை அடைந்தே விட்டேன் என்ற உணர்வு ஏற்படுகிறது' என்கிறான் காதலன். .
காதலரை இணைத்துப் பழிதூற்றிப் பேசப்பேச, அவர்கள் இருவரும் பிரிக்க முடியாதபடி இணைந்தது போன்ற மனநிலை உண்டாகிவிடுகிறது. அதனால் அவர்களுக்கு அவர்கள் விரும்பிய மணவாழ்வைப் பெறாமலே பெற்றதுபோன்ற நிலையை உண்டாக்கிவிடுகிறது என்கிறான் அவன்.

'பெறாஅது பெற்றன்ன' குறிப்பது என்ன?

'பெறாஅது பெற்றன்ன' என்ற தொடர்க்குப் பெறாததொன்றைப் பெற்றாலொத்த, காம இன்பத்தைப் பெறாமல் பெற்றதற்கு, முன்னம் பெறாதது ஓர் உபாயம் பெற்றாலொத்த, அக்கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றாற்போலும், பெற நினைத்த அவளுடனாய எனது உறவைப் பெறாமலே பெற்றாலொத்த, பெறாமலே பெற்றது போல், கிடைக்காவிட்டாலும் கிடைத்தாற் போன்ற, கிடைக்காமலிருக்கிற (அவளுடைய இன்பம்) அதனைக் கிடைக்கப் பெற்றுவிட்டது போன்று, பெறாத போதும் பெற்றடைந்தது போன்ற, சேர்க்கையைப் பெறாமலிருக்கும்போது பெற்றாற் போன்ற, கூட்டத்தைப் பெறாதிருந்தே பெற்றால் போலும், பெறமுடியாதவளைப் பெற்றதுபோல், கூட்டத்தை இன்று பெறாதிருந்தும், பெற்றாற்போல, அவளை அடையாதபோதும் அவளை அடைந்தது போன்ற, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'பெறாஅது பெற்றன்ன' என்பதற்குக் கிடைக்காதது கிடைத்தாற் போன்ற என்பது பொருள்.
இங்கு காதல் கைகூடிய இருவருக்கும் மணம் நிகழவில்லை; காதலர் சந்திப்பிற்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால் காதலனுக்கு அவளை அடையமுடியுமா என்பதில் ஐயம் எழுந்தது. இதனிடையில் ஊரார் காதலரது காமக் கூட்டுறவைப்பற்றி அலர் எழுப்புகின்றனர். ஊருக்கே தங்கள் காதல் வெளிப்படையானதால் மணவினையில் முடியுமோ என ஐயுற்ற நிலையில் காதலியை இன்னும் அடையாவிட்டாலும் அவளை அடைந்தது போல உணர்கின்றான். அதாவது திருமண உறவைப் பெறுவதற்கு அலர் ஏதுவாக அமையப்போகிறது என்று நம்புகிறான். ஆனாலும், அலர்ப் பேச்சு இருவரையும் இணைத்தே எழுந்ததாலே அது வரைவு நிகழ்ந்து விட்டது போலத் தலைவனை எண்ணச்செய்கிறது. ஊரார் பேசும் கௌவை காதலர்க்கு மணவாழ்வில் முடிவதற்கு உதவப்போகிறது என்ற நம்பிக்கையில், இதனைத் தான் பெற நினைத்த அவளுடனாய உறவைப் பெறாமலே பெற்றாலொத்த தன்மை என்று கூறுகிறான்.

'பெறாஅது பெற்றன்ன' என்ற தொடர் இங்கு பெறநினைக்கின்ற ஒன்றைப் பெற்றதொத்த எனப் பொருள்படும்.

ஊரறிந்த அலர்ச் செய்தி எங்களுக்கு நேராதோ? அது கிடைக்காமலே கிடைத்தாற்போன்ற இன்பந் தரும் தன்மையுடையது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அலர் அறிவுறுத்தல் பெற்ற தலைவன் கிடைக்காதோ என்றிருந்த காதலி தனக்குக் கிடைத்துவிட்டது போன்று உவகை கொள்கிறான்.

பொழிப்பு

ஊரறிந்த அலர் எனக்கு உண்டாகாதோ? அது கிடைக்காமலே கிடைத்தாற்போன்ற இன்பந் தரும் தன்மையுடையது