இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1141அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால்

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1141)

பொழிப்பு (மு வரதராசன்): (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அரிய உயிர் போகாமல் நிற்கின்றது; எம் நல்வினைப் பயனால் அதைப் பலரும் அறியாமலிருக்கின்றனர்.

மணக்குடவர் உரை: நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும். அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்:
அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார் இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.

பரிமேலழகர் உரை: (அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) அலர் எழ ஆர் உயிர் நிற்கும்-மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்; அதனைப் பாக்கியத்தால் பலர்அறியார் - அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார்.
(அல்ல குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.

சி இலக்குவனார் உரை: அலர் உண்டாதலால் எனது அரிய உயிர் போகாது நிற்கும். அந்நிலையை என் நற்பேற்றால் பலர் அறியமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அலர்எழ ஆருயிர் நிற்கும்; பாக்கியத்தால் அதனைப் பலர்அறியார் .

பதவுரை: அலர்-வம்புப்பேச்சு; எழ-உண்டாக; ஆர்-அருமையான, அரிய; உயிர்-உயிர்; நிற்கும் -நிலைத்திருக்கும்; அதனைப்-அதைப்; பலர்-பலர்; அறியார்-தெரிய மாட்டார்; பாக்கியத்தால்-நற்பேற்றால்.


அலர்எழ ஆருயிர் நிற்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நமது புணர்ச்சியால் வந்த அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும்;
பரிப்பெருமாள்: நமது புணர்ச்சியால் வந்து அலர் எழுதலினானே அவளது ஆருயிர் நிற்கும்;
பரிதி: அலர் எழ ஆருயிர் நிற்கும்;
காலிங்கர்: இவ்வகை அலர் தோன்றவே என் ஆருயிர் நிற்கும்;
பரிமேலழகர்: (அல்ல குறிப்பட்ட பிற்றைஞான்று வந்த தலைமகனைத் தோழி அலர் கூறி வரைவு கடாயவழி அவன் சொல்லியது.) மடந்தையொடு எம்மிடை நட்பு ஊரின்கண் அலராயெழுதலான் அவளைப் பெறாது வருந்தும் என் அரிய உயிர் பெற்றதுபோன்று நிலைபெறும்;

தொல்லாசிரியர்கள் அனைவரும் அலர் எழுதலினாலே உயிர் நிற்கும் என்றனர். மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் இக்குறளைத் தலைவன் கூற்றாகக் கொள்கின்றனர். ஆனால் அலரெழ ஆருயிர் நிற்றலைத் தலைவி மேலதாக மணக்குடவர்/பரிப்பெருமாள் இருவரும் தலைவன் மேலதாகப் பரிமேலழகரும் கொண்டு உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊர் தூற்றுவதால் என் உயிர் வாழ்கின்றது', 'எங்களது தொடர்பு ஊரில் அலராய் எழுவதால் அரிய உயிர் நிலைத்து நிற்கின்றது', 'அலர் ஏற்பட்ட பிற்பாடு என்னுடைய அரிய உயிர் அவளைப் பெற்றார்போல நிலைத்தது', 'ஊரில் பேச்சு எழுந்து விட்டதால், இனி என் அருமையான உயிர் நிலைக்கும், அவள் என்னைக் காதலிக்க வில்லை என்று கருதி, நான் உயிரை விட்டுவிட எண்ணியிருந்தேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.

அலர் உண்டாதனால் அரிய உயிர் நிலைத்து நிற்கின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்:
மணக்குடவர் குறிப்புரை: அறிவாராயின் எமக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார் இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார்.
பரிப்பெருமாள்: அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலரறியா ராயினார்:
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவாராயின் எனக்கு ஏதிலராய் அலர்தூற்றுவார் இவள் இறந்துபட வேண்டுமென்று தூற்றார். 'நொதுமலர் வரைய வந்துழி இறந்துபடுவாளாயினள்; ஆயிடை இவ்வலர் எழுதலினாலே இனிப் பிறர்க்குக் கொடார் என்று அவள் உயிர் நீங்காதாயிற்று' என நொதுமலர் வரைய வந்தமை தோழி தலைமகற்குக் கூறியது. இத்துணையும் களவு.
பரிதி: தயவாகிய இந்தப் பாக்கியத்தை ஒருவரும் அறியார்கள் என்றவாறு.
காலிங்கர்: அங்ஙனம் ஆதலைப் பலரும் அறியாதே அலரினைக் கூறுகின்றனர் என் பாக்கியத்தால் என்றவாறு.
பரிமேலழகர்: அந்நிலை பேற்றைத் தெய்வத்தால் யானே அறிவதல்லது கூறுகின்ற பலரும் அறியார்.
பரிமேலழகர் குறிப்புரை: அல்ல குறிப்பட்டுத் தலைமகளை எய்தப்பெறாத வருத்தமெல்லாம் தோன்ற, 'அரிய உயிர்' என்றும்,அங்ஙனம் அரியாளை எளியளாக்கி எடுக்கின்றமையின், அஃது அவ்வாருயிர்க்குப் பற்றுக்கோடாக நின்றது என்பான், 'அலர் எழ ஆருயிர் நிற்கும்' என்றும், 'பற்றுக்கோடாதலை அவ்வேதிலார் அறியின் தூற்றாது ஒழிவர்; ஒழியவே, ஆருயிர் போம், ஆகலான், அவரறியா தொழிகின்றது தெய்வத்தான்,' என்றும் கூறினான். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. [அஃது-அடைதற்கு அரியவளை எளியவள் ஆக்கி ஊரார் எடுத்துக் கூறுதல்; அவ்வாருயிர்க்கு-வருந்துகின்ற என் அரிய உயிர்க்கு; பற்றுக் கோடாதலை-ஆதாரமாக இருத்தலை].

அவ்வாறு உயிர்நிற்றலை எங்கள் புண்ணியத்தாலே பலர் அறியார் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல காலமாக அது பலருக்குத் தெரியாது', 'நிலைத்து நிற்கும் அச்செய்தியை எங்களது நல்வினைப் பயனால் ஊரில் பலரும் அறியவில்லை', 'இதனை நல்வினைப் பயனால் நானே அறிவன் அல்லது தூற்றுகின்ற பலரும் அறியார்', 'என் பாக்கிய வசத்தால் அது பிறருக்குத் தெரியாது' என்றபடி பொருள் உரைத்தனர்.

நல்லவேளை இது பலருக்குத் தெரியாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அலர் உண்டாதனால் அரிய உயிர் நிலைத்து நிற்கின்றது; பாக்கியத்தால் இதைப் பலர் அறியார் என்பது பாடலின் பொருள்.
'பாக்கியத்தால்' என்ற சொல் குறிப்பது என்ன?

வம்புப்பேச்சில் நல்லதும் இருக்கிறது.

'ஊரிலே அலர் எழுந்த பின்னும் என் உயிர் இன்னும் போகாது நிலைக்கின்றது; என் நற்பேற்றால் இதைப் பலர் அறியவில்லை' என்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
தலைமக்கள் காதலுக்கு இடர் உண்டாயிற்று. வேறு வழி ஏதும் தோன்றாதலால் காதலன் நாண்துறந்து மடலேறத் துணிந்தான்; இதனால் அவர்களது காதல்செய்தி தெருவெங்கும் சுழன்று திரிந்தது. 'தாம் பட்ட துயர் அவர்கள் படவில்லையாதலால் தன் கண்பார்க்க எதிரே நின்று அறிவில்லாத ஊரார் நகுகின்றனரே' என்று தலைவன் வருந்திக் கூறுகிறான் முந்தைய (நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்).
காதல் கொண்ட தலைவனும் தலைவியும் மறைவொழுக்கத்தில் பழகுவதையும் மெய்யுறு புணர்ச்சி கொண்டதையும் ஊரார் அறிய வந்ததால் அவர்களை இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள். அவ்விதம் ஊர் பேசுவது காதலர்க்குத் தெரியப்படுத்தப்படுகிறது அதாவது அலரறிவுறுத்தப்படுகிறது.

இக்காட்சி:
தலைவன் தலைவி இடையே உள்ள களவுக்காதல் பற்றியும் அவர்கள் காதலுக்கு ஏற்பட்ட தடைகள் பற்றியும் ஊரார் இப்பொழுது அறிந்து கொண்டார்கள். இச்செய்தி அலராக ஊரெங்கும் பரவிவிட்டது. ஊர்மக்கள் அவர்களை இழிவாகப் பேசுகிறார்கள்; எனினும் உயிர் நீங்காதிருக்கிறது; ஒருவகையில் இவ்வலர் நன்மை செய்கிறது என்கிறான் காதலன். என்ன நன்மை அது?
தலைவி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதால் காதலர் கூட இயலாமல் போனது; அவளைச் சந்திக்க முடியவில்லையே என்ற துயரத்தால் அவனது உயிர் துன்புற்று நீங்கும் நிலைக்குச் சென்றது; இப்பொழுது அலர் எழுந்ததால் களவுக்காதல் ஊரார்க்குத் தெரிந்துவிட்டது. அதனால் காதலரது மணவினைக்கு, காதலியின் பெற்றோர், தங்கள் குடி மானம் கருதி, விரைவில் ஏற்பாடு செய்வார்கள் என்ற நம்பிக்கை பிறந்ததால் உயிர் நிலை நின்றது; வெளியுலகிற்குத் தெரியாத இச்செய்தியைப் பலர் அறியார்கள். அதை அலர்கூறுவார் அறிந்தால் அலர்கூறுவதை நிறுத்தி விடுவர்; எமது உயிரும் நிலைபெறாது போகும் என்கிறான் தலைவன். அலர், உயிர் காத்து, திருமணத்தை விரைவுபடுத்தும் நன்மை செய்வதைப் பாக்கியம் என்று சொல்கிறான் அவன்.

'நொதுமலர் (அயலவர் அதாவது புதியவர்) தலைவியைப் பெண் கேட்டு வந்துழி அவள் இறந்துபடுவாளாயினள்; இவ்வலர் எழுதலினாலே இனிப் பிறர்க்குக் கொடார் என்று அவள் உயிர் நீங்காதாயிற்று என நொதுமலர் மணமுடிக்க வந்தமையை தோழி தலைமகற்குக் கூறியது' என்று இப்பாடலுக்கு விளக்கம் கூறுவார் பரிப்பெருமாள்.
இக்குறளுக்கு ஒப்புமையாக சங்கப்பாடல் ஒன்றைக் காட்டுவர். அது:
. . . . . பெருவரை அடுக்கத்துக் கிழவன் என்றும்
அன்றை அன்ன நட்பினன்
புதுவோர்த்து அம்மஇவ் அழுங்கல் ஊரே.
(குறுந்தொகை. 385) (பொருள்: பெரிய மலைப்பக்கத்தையுடைய தலைவன், எப்பொழுதும் அன்றிருந்ததைப் போன்று மாறுபாடின்றி இருக்கும் நட்பையுடையான், அங்ஙனம் இருப்பவும், ஆரவாரத்தையுடைய ஊரில், புதியவர்கள் (நொதுமலர்) என்னைப் பெண் பார்க்க வரலாமா?) என்று தலைவி கூறுவதாக அமைந்த இப்பாடலில் அலர் கேள்விப்பட்டால் நொதுமலர் விலகிச் செல்வர் என்ற குறிப்பு உணர்த்தப்படுகிறது.

'பாக்கியத்தால்' என்ற சொல் குறிப்பது என்ன?

'பாக்கியத்தால்' என்ற சொல்லுக்கு எங்கள் புண்ணியத்தாலே, தெய்வத்தால், எம் நல்வினைப் பயனால், நல்வினைப் பயனால், நல்ல காலமாக, எங்களது நல்வினைப் பயனால், பாக்கியவசத்தால், என் நற்பேற்றால், நல்ல வேளை, என் நற்பேற்றினால், நான் செய்த நல்வினைப் பயனால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒருவரை ஒருவர் காண்பதற்குத் தடைகள் இருந்த காரணத்தினால், உயிர் நீக்கத் துணிந்தனர் காதலர், ஆனால். அலர் எழுந்த காரணத்தால், இப்பொழுது தங்கள் மணத்திற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று நினைக்கின்றனர். அலர்தூற்றுவோர்கள் அவர்கள் மணம் நிகழக்கூடாது என்று எண்ணியே பெரிதும் செயல்படுவர். ஊரார் பேசும் அலர்மொழி, காதலர்க்கு வருத்தம் உண்டாக்கினாலும், காதலரின் களவு வாழ்க்கையை உலகுக்கு அறியச் செய்து களவு கற்பாக மாறுவதற்கும் வழி வகுக்கவும் செய்யும் நன்மையும் உண்டு. ஊரார் அறிந்துகொண்டனர் என்பதை உணர்ந்த பின்னர் இறுக்கமான சூழலில் இருந்து அவர்கள் சிறிது மீள்கின்றனர். எனவே அதை நற்பேறு என அழைக்கின்றனர். அலரால் காதலர்க்கு நன்மையே ஏற்படுகிறது என்று தெரிந்தால் அவர்கள் அவ்வாறு தூற்றுவதைக் கைவிடுவார்கள். நம்முடைய நற்பேற்றால் அதனைப் பலர் அறிந்திலர் என்று சொல்கின்றனர்.
'காதல் இத்தன்மையானது என்பதையும், அலருக்கு அஞ்சாத வகையில் மனத்தில் மாறுதல் ஏற்படுவதையும் இது புலப்படுத்துகிறது. இந்த உண்மை தெரிந்தால் ஊரார் அலர் தூற்றாமல் விட்டு விடுவார்களாம். பிரிவுத் துன்பத்தை மறப்பதற்கு உதவியாக-- உயிர் நிற்பதற்கு உதவியாக--உள்ள அலர் இருப்பது தன் 'பாக்கியம்' என்று எண்ணுகிறான் காதலன். ஊராரின் அறியாமை அவனுடைய பாக்கியமாம்' என்பது மு வரதராசன் விளக்கவுரை. அலர் அவளைப் பெறுதற்குத் துணையாக நின்றமையின், 'அலரெழ வாருயிர் நிற்கும்' என்றும்; அதை அலர்கூறுவார் அறிந்திருப்பின் அது கூறாராதலானும், அதனால் உயிர் போமாதலானும், அங்ஙனம் போகாது தடுக்கின்ற அவரறியாமை தனக்கு நற்பேறாக (Blessing in disguise) வாய்த்ததென்றும் கூறினான்' என்று பாக்கியத்தால் என்பதை விளக்கினார் தேவநேயப்பாவாணர்.

'பாக்கியம் என்ற சொல் வடமொழியிலும் பாலியிலும் பாக்யா (Bhagya) அதே பொருளில் உள்ளது. ஆனால் பிற திராவிட மொழிகளில் பதிவு செய்யப்படவில்லை; இலக்கியத்தில் இச்சொல்லை முதன் முதலில் பதிவு செய்தவர் வள்ளுவர்; இச்சொல் இப்பாடலுக்கு ஒலி அழுத்தம் கொடுத்துள்ளது' என்பார் செ வை சண்முகம்.

'பாக்கியத்தால்' என்ற சொல் நற்பேற்றால் என்ற பொருள் தரும்.

அலர் உண்டாதனால் அரிய உயிர் நிலைத்து நிற்கின்றது; நல்ல வேளை இதைப் பலர் அறியார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அலர் அறிவுறுத்தல் பெற்றபின் தம் காதலை ஊர் பழித்தல் நன்மை செய்தது என்கின்றனர் காதலர்.

பொழிப்பு

வம்புப் பேச்சு எழுந்ததால் உயிர் வாழ்கின்றது. நல்லவேளை, அது பலருக்குத் தெரியாது