இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1130உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1130)

பொழிப்பு (மு வரதராசன்): காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார்; ஆனால் அதை அறியாமல் 'பிரிந்து வாழ்கின்றார்', `அன்பில்லாதவர்' என்று இந்த ஊரார் அவரைப் பழிப்பர்.

மணக்குடவர் உரை: அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்; அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர்.
தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) என்றும் உள்ளத்துள் உவந்து உறைவர் - காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்; இகழ்ந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர் - அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
('உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள். 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: காதலர் எப்பொழுதும் என் மனத்தினுள் மகிழ்ந்து உறைவர். அதனை அறியாது 'காதலியைப் பிரிந்து உறைவர் அன்பிலார்' என்று கூறுவர் இவ்வூர் மக்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளத்துள் என்றும் உவந்துறைவர். இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர். .

பதவுரை: உவந்து-மகிழ்ந்து; உறைவர்-தங்கியிருப்பர்; உள்ளத்துள்-நெஞ்சில்; என்றும்-எப்போதும்; இகந்து-பிரிந்து; உறைவர்- வாழ்வர், தங்கியிருப்பர்; ஏதிலர்-அன்பிலர், அயலார்; என்னும்-என்று சொல்லும்; இவ்வூர்-இந்த ஊர், இந்த ஊர் மக்கள்.


உவந்துறைவர் உள்ளத்துள் என்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்;
பரிப்பெருமாள்: அவர் எனது நெஞ்சத்தே என்றும் மகிழ்ந்து உறையாநிற்பர்;
பரிதி: மனத்திலே நாயகர் அறியாமல் இருக்கையிலே;
காலிங்கர்: இங்ஙனம் எப்பொழுதும் அவர் தாம் எம்மினும் எம்முடன் உறைதலை மிகவும் விரும்பி எமது உள்ளத்துள்ளே உறைவார். அஃது யாம் அறிகுவம்.
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதலர் எஞ்ஞான்றும் என் உள்ளத்துள்ளே உவந்து உறையா நிற்பர்;
பரிமேலழகர் குறிப்புரை: 'உவந்து உறைவர்' என்றதனால் அன்புடைமை கூறினாள்.

'காதலர் என்றும் என் உள்ளத்துள்ளே மகிழ்ந்து உறைவார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சிலே என்றும் மகிழ்ந்து இருக்கின்றார்', 'என் காதலர் எப்பொழுதும் என்னுள்ளத்திலே மகிழ்ந்து தங்குவர்', 'எப்போதும் என் மனத்தில் மகிழ்ச்சியோடு தங்கியிருக்கும் காதலரை', 'என் காதலர் எப்பொழுதும் என் உள்ளத்து உள்ளே அன்போடு தங்கி இருக்கின்றார்' என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலர் என் உள்ளத்துள்ளே என்றும் மகிழ்ந்து உறைகிறார் என்பது இப்பகுதியின் பொருள்.

இகந்துறைவர் ஏதிலர் என்னுமிவ் வூர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர்.
மணக்குடவர் குறிப்புரை: தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று நெஞ்சின்மேல் வைத்துக் கூறியது.
பரிப்பெருமாள்: அவரை ஏதிலராய் நீங்கி யுறைவர் என்றே சொல்லா நின்றது இவ்வூர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகள் வேறுபாடுகண்டு தலைமகனை அன்பிலாரென்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் என்னெஞ்சில் நின்று நீங்காரென்று ஊர்மேல் வைத்துக் கூறியது. வேறுபாடு கண்டு கூறுதல் பின்வருவனவற்றிற்கும் ஒக்கும்.
பரிதி: பிரிந்திருப்பார் என்று சொல்லும் இவ்வூர் என்றவாறு.
காலிங்கர்: பின்னும் ஓரிடத்து அகன்று உறைவர்; அவர் தாம் அயலார் என்று இங்ஙனம் பட்டாங்கு உணராது பழியுரைப்பர் இவ்வூரார் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை அறியாது அவரைப் பிரிந்து உறையா நின்றார், அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பிரியாமையும் அன்பும் உடையாரை இலர் எனப் பழிக்கற்பாலையல்லை' என்பதாம். [இலர் என-பிரியாமையும் அன்பும் இல்லாதவர் என்று; பழிக்கற்பாலை அல்லை - பழித்தல் செய்யாதிருக்கக் கடவாய்]

'அதனை அறியாது அவரைப் பிரிந்து உறைவர், அன்பிலர் என்று இவ்வூர் சொல்லாநிற்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிந்தார் அயலவர் என்று ஊர் பழிக்கும்', 'அதனை யறியாது அவரைப் பிரிந்து சென்றுவிட்டார் என்றும் அன்பில்லாத அயலவர் என்றும் இவ்வூரார் குறை கூறுவர்', 'அவர் என்னைப் பிரிந்து போய்விட்டாரென்றும் என்மீது அன்பில்லாதவரென்றும் இந்த ஊரார் சொல்லுகிறார்களே! என்ன அறியாமை இவர்களுக்கு!', 'இதனை அறியாத இவ் ஊரார் என்னை அவர் பிரிந்திருக்கின்றார். அவர் அன்பில்லாதவர் என்று பழிப்பர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

காதலியைப் பிரிந்து உறைபவர், அன்பிலார் என்று இவ்வூரார் அவரைப் பழிப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலர் என் உள்ளத்துள்ளே என்றும் மகிழ்ந்து உறைகிறார்; இகந்துறைவர் அன்பிலார் என்று இவ்வூரார் அவரைப் பழிப்பர் என்பது பாடலின் பொருள்.
'இகந்துறைவர்' என்றால் என்ன?

காதலருடனான உள்ளப் புணர்ச்சியை உயர்வாய்ப் பேசுகிறாள் தலைவி.

என் உள்ளத்துள்ளே தலைவர் உவப்புடன் தங்கியுள்ளார்; அவரைப் பிரிந்துபோய்விட்டார், அன்பில்லாதவர் என்றெல்லாம் இவ்வூர் பழிக்கிறதே!
காட்சிப் பின்புலம்:
புணர்ச்சிக்குப் பின்னர் தலைவி-தலைவன் இருவரிடை ஒருவருக்கு மற்றவர் மேல் காதல் மிகுந்துகொண்டு செல்கிறது. தாங்கள் நுகர்ந்த இன்பத்தை அவர்கள் எண்ணி மகிழ்கின்றனர். காதலியின் அழகுநலன்களைப் பாராட்டுகிறான் தலைவன்; அவள் அவனுடன் எத்துணை இணக்கமாகிவிட்டாள் என்பதை நினைக்கிறாள். தலைவன் அவள் தந்த முத்த இன்பச்சுவையை வியக்கிறான்; உடம்பும் உயிரும்போல் பிரிந்து தனித்தனியாக இயங்க முடியாதவைகளாக மாறிவிட்டோம் என்கிறான்; தன் கண்ணின் கருமணியில் காதலியின் உருவத்துக்கு மட்டுமே இடம் என்று சொல்கிறான்; அவளைச் சந்திக்காவிட்டால் சாதல் போன்ற உணர்வு உண்டகிறது என்கிறான்; அவளை மறந்தால்தானே அவளை நினைப்பதற்கு எனவும் கூறுகிறான். அந்தப்பக்கம் தலைவியின் எண்ண ஓட்டங்கள்: 'அவர் தன் கண்ணிலிருந்து நீங்கார்; இமைத்தால் வருந்தவும் செய்யாத அளவு நுண்ணியவர்'; 'அவர் என் கண்ணிலே முழுதும் நிறைந்திருந்து நீங்கக்கூடாது என்பதற்காக கண்ணுக்கு மையும் தீட்டமாட்டேன்'; 'நெஞ்சில் தங்கியிருக்கும் காதலர் வெம்மையுறுவார் என்பதால் சூடாக உண்ணுதலையும் அஞ்சுகிறேன்'; 'அவர் கண்ணைவிட்டு நீங்காதிருப்பதற்காக இமைக்காமலும் இருக்கிறேன்'.

இக்காட்சி:
தலைவியின் காதல் சிறப்புக் கூறப்படுகிறது.
முந்தைய குறளும் (1129) இப்பாடலும் 'ஏதிலர் என்னுமிவ் வூர்' என்னும் ஈற்றடியினைக் கொண்டுள்ளது. இரண்டு பாக்களுமே காதலன் அன்பில்லாதவன் என்று ஊர் இகழ்வதாக உள்ளன. 'காதலன் இவளை நீங்கிச் சென்றுவிட்டான்; எங்குள்ளானோ அந்த அயலன்' என்று ஊரார் பேசத் தொடங்குகிறார்கள் என்பது செய்தி. இப்பாடல்கள் காதலர் இருவரும் இப்பொழுது சந்திக்க முடியாத சூழலில் பிரிந்து நிற்கின்றார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்துகின்றன. ஒருவரையொருவர் காணமுடியாத அந்நிலையில் ஊரார் இவ்விதம் பேசுவது காதலிக்கு தெரியவர அதைத் தாங்கவொண்ணாத தலைவி, 'என் உள்ளத்தில் இருந்து நீங்காமல் எஞ்ஞான்றும் உள்ளவராயும் என் மீது பேரன்பும் கொண்டவராயும் உள்ளவரை நீங்கிச் சென்றுவிட்டவர் என்றும், 'அன்பற்ற எவரோ ஒருவர்' என்றும் பழிக்கின்றனரே இவ்வூர் மக்கள்' என்று தலைவி ஊரார்மீதான மனக்குறையைப் புலப்படுத்தி, காதலனது நலம் பாராட்டிக் கூறுகிறாள்.

தலைவன் பிரிவால் ஏற்படும் துன்பத்தைக்கூட எளிதாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது தலைவிக்கு. ஆனால் ஊரார் 'அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்' என்று சொல்வதைச் செறிக்க இயலவில்லை. பிரிவால் அவள் வருந்துகிறாள் என்று மற்றவர் சொல்லும்போது அதை அவள் பொருட்படுத்தவும் இல்லை. ஏனென்றால் அதைப் பிரிவாகவே அவள் கருதவில்லை. இருவர் உள்ளமும் கூடி ஒன்றாகிவிட்டது. உள்ளப்புணர்ச்சி உண்டானபின் பிரிவா இல்லையா என்ற கேள்வி எழ வாய்ப்பில்லை. அவர்களுக்குள் உண்டான உள்ளஒற்றுமை ஊருக்குத் தெரியாதலால் காதலனைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள். எனவே 'எனது காதலர் மகிழ்வுடன் என் உள்ளத்தில் வாழ்கிறார். அவர் என்னைப் பிரிந்து வாழ்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?' எனப் பொருமுகிறாள். உடலளவில் அவன் இங்கில்லை என்பது உண்மை. இருந்தாலும் அவளது உள்ளமும் அவனது உள்ளவும் இணைந்து விட்டதால் அவர்களிடையே பிரிவு என்பதை எந்தவிதத்திலும் ஏற்க மறுக்கிறாள் தலைவி. அதனால்தான் அவர் என் உள்ளத்தில் 'உவந்து உறைவர்' அதாவது விரும்பி மகிழ்வோடு தங்கியிருக்கிறார் எனப் பெருமிதத்துடன் கூறுகிறாள்.

'இகந்துறைவர்' என்றால் என்ன?

'இகந்துறைவர்' என்ற தொடர்க்கு நீங்கியுறைவர், பிரிந்திருப்பார், ஓரிடத்து அகன்று உறைவர், பிரிந்து உறையா நின்றார், பிரிந்து வாழ்கின்றார், பிரிந்து வருந்துகின்றார், பிரிந்தார், பிரிந்து சென்றுவிட்டார், பிரிந்து போய்விட்டார், என்னைப் பிரிந்துறைகிறார், என்னை அவர் பிரிந்திருக்கின்றார், காதலியைப் பிரிந்து உறைவர், பிரிந்துபோனவன், பிரிந்து வேறிடத்து வதிகின்றார், பிறிதோரிடத்திலே வாழ்கிறார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இகந்துறைவர் என்றது பிரிந்து வாழ்வர் என்ற பொருள் தரும். இகந்து உறை அர் - இகந்துறைவர்; இகந்து - நீங்குதலால்; 'இகந்துறைவர்' -பிரிந்து தங்கி இருக்கிறார்.
களவுக் காதலை அறிந்த தலைவியின் இல்லத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதனால் காதலனைச் சந்திக்க முடியாத நிலையில் அவனை ஒழிவின்று நினைந்துகொண்டு உண்ணாமலும் உறங்காமலும் அணிமணி அணிந்து கொள்ளாமலும் வேதனையுற்று உடல் மெலிந்து வாடிவதங்கி காணப்படுகிறாள் தலைவி. காதலனின் பிரிவால்தான் இப்படி இருக்கிறாள் என்பதை ஊரார் உய்த்துணர்ந்து அவன் இவளைக் கைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டான் என்று பேசுகின்றனர். இச்சூழலில் ஊர்மீதுள்ள தன் மனக்குறையை வருத்தத்துடன் இவ்வாறு வெளிப்படுத்துகிறாள்: 'இகந்துறைவர், ஏதிலார் என்னும் இவ்வூர்', என்று. மேலும் 'அவர் உவந்துறைவர் உள்ளத்துள் எப்பொழுதும்' என்றும் செருக்குடன் காதல் மிகுந்த தலைவி சொல்கிறாள்.

'இகந்துறைவர்' என்ற சொற்றொடர் நீங்கி வாழ்கிறார் என்ற பொருள் தரும்.

காதலர் என் உள்ளத்துள்ளே என்றும் மகிழ்ந்து உறைகிறார்; அதனை அறியாது, காதலியைப் பிரிந்து உறைவர் அன்பிலார் என்று இவ்வூரார் அவரைப் பழிப்பர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அகற்சியில் இருக்கும் காதலனை விட்டுக் கொடுக்காத தலைவியின் காதற்சிறப்பு உரைத்தல்.

பொழிப்பு

என் காதலர் எப்பொழுதும் என்னுள்ளத்திலே மகிழ்ந்து இருக்கின்றார்; அதனை அறியாது அவரைப் பிரிந்து சென்றுவிட்டார் என்றும் அன்பில்லாத அயலவர் என்றும் இவ்வூரார் பழிப்பர்.