இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1129இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1129)

பொழிப்பு (மு வரதராசன்): கண் இமைத்தால் காதலர் மறைந்துபோதலை அறிகின்றேன். அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

மணக்குடவர் உரை: கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன், அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்; அதற்காக இமைக்கிலன்.
இது கண் துயில்மறுத்தலென்னும் மெய்ப்பாடு.

பரிமேலழகர் உரை: (வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) இமைப்பிற் கரப்பாக்கு அறிவல் - என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்வூர் - அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
(தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். ஒரு பொழுதும் பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: என் கண்களை இமைத்தால் காதலர் மறைதலை அறிவேன். (ஆதலால் இமையாது விழித்திருக்கிறேன்) அவ்வளவில் அவர் தூங்காதவாறு நோய் உண்டு பண்ணி விட்டாரே! அன்பிலர் என்று அவரை இகழ்கின்றனர் இவ்வூர் மக்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னுமிவ் வூர்.

பதவுரை: இமைப்பின்-கண் இமைத்தால், கண் இமைக்குமாயின்; கரப்பாக்கு-மறைதல்; அறிவல்-அறிவேன்; அனைத்திற்கே-அவ்வளவிற்கே, அதற்கே; ஏதிலர்-அன்பிலர், அயலார், பகைவர் (இங்கு அன்பிலர் என்பது பொருள்); என்னும்-என்று சொல்லும்; இவ்வூர்-இந்த ஊர், இவ்வூர் மக்கள்.


இமைப்பின் கரப்பாக்கு அறிவல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன், அதற்காக இமைக்கிலன்;
பரிப்பெருமாள்: கண்ணிமைக்குமாயின் அவரொளிக்குமது யானறிவேன், அதற்காக இமைக்கின்றிலேன்.
பரிதி: கண் இமைத்து உறங்கில் நாயகர் கரப்பார். யான் அறிவன்.
காலிங்கர்: யான் விழித்த கண் சிறுது இமைப்பின், அப்பொழுது காண்பதரிதாகவே கரந்து உள்ளே நிற்கும் பண்பினை அறிவேன் யான். அதனால் அறிந்து இமைத்ததற்கு அஞ்சுவேன்; மற்று அத்தன்மைப்பட்டது ஒன்று.
பரிமேலழகர்: (வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) என்கண் இமைக்குமாயின் உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்; [வரைவிடை வைத்துப் பிரிதல்-மணம் செய்து கொள்ளுதலை இடையில் வைத்து அது காரணமாகப் பொருள் ஈட்டப் பிரிதல்; இயற்பட மொழிதல்-தலைவன் பண்புகளைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை] ]

'கண் சிறுது இமைப்பின், உள்ளிருக்கின்ற காதலர் மறைதலை அறிந்து இமையேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இமைத்தால் மறைவாரென இமையேன்', 'என் கண் இமைத்தால் கண்ணுள்ளிருக்கும் காதலர் மறைதலை அறிந்து இமைக்க மாட்டேன்', 'கண்களை மூடினால் என் காதலர் மறைந்து விடுவாரோ என்று கருதி நான் கண்ணை இமைப்பது கூடச் செய்யாமல் விழித்தபடியே இருக்கிறேன்', 'நான் கண்னை இமைத்தால் காதலர் மறைவாரென்று எண்ணி இமையாது இருக்கின்றேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.

என் கண் இமைத்தால் காதலர் மறைவார் என்பதை அறிவேன் (அதனால் இமைக்கமாட்டேன்) என்பது இப்பகுதியின் பொருள்.

அனைத்திற்கே ஏதிலர் என்னுமிவ் வூர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வொளித்தற்கு அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லும் இவ்வூர்.
மணக்குடவர் குறிப்புரை: இது கண் துயில்மறுத்தலென்னும் மெய்ப்பாடு.
பரிப்பெருமாள்: அவ்வளவு ஒளித்தற்குமாக அவரை நமக்கு ஏதிலரென்று சொல்லுவர் ஊரார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உறங்காய ஆயினது ஏன்? என்று வினவின் தோழிக்குக் கூறியது. அது கண் துயிலமறுத்தல் என்னும் மெய்ப்பாடு.
பரிதி: ஊரவர் இவள் நித்திரைகொண்டாள் இல்லை. அதனால் அவர் அயலார் என்று ஏசுமது என்னையோ என்றவாறு.
காலிங்கர்: (இவ்வாறு அறியாது) அயலார்.....என்று கூறுவர் இவ்வூரார் என்ன பாவமோ என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லாநிற்கும் இவ்வூர்.
பரிமேலழகர் கருத்துரை: தன் கருத்து அறியாமை பற்றிப் புலந்து சொல்லுகின்றாள் ஆகலின், தோழியை வேறுபடுத்து, 'இவ்வூர்' என்றாள். ஒரு பொழுதும் பிரியாதவரைப் பிரிந்தார் என்று பழிக்கற்பாலையல்லை என்பதாம்.

'அவ்வளவிற்கு அவரைத் துயிலா நோய்செய்தார் அன்பிலர் என்று சொல்லும் இவ்வூர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதற்கே அவரை அயலவர் என்று இவ்வூர் தூற்றும்', 'அவ்வளவிற்கே அவரை அன்பில்லாத அயலவர் என்று இவ்வூரார் பழி கூறுவர்', 'அதற்காக யாரோ எனக்குத் தீமை செய்துவிட்டதாக இந்த ஊரார் என் காதலரை நிந்திக்கிறார்கள்', 'அவ்வளவிற்கே நான் கண் இமையாது இருக்கும்படி என்னைவிட்டுப் போயினார் அன்பில்லாதவர் என்று அவரை இவ் ஊரார் குறை கூறுவர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதற்கே அவரை (துயிலா நோய்செய்த) அன்பிலா அயலார் என்று சொல்வர் இவ்வூர் மக்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என் கண் இமைத்தால் கண்ணுள்ளிருக்கும் காதலர் மறைதலை அறிந்து இமைக்க மாட்டேன்; அதற்கே அவரை (துயிலா நோய்செய்த) அன்பிலா அயலார் என்று சொல்வர் இவ்வூர் மக்கள் என்பது பாடலின் பொருள்.
அவள் கண் இமைக்காவிட்டால் அவன் எப்படி அன்பில்லாதவன் ஆவான்?

காதலரைக் கண்ணுக்குள்ளேயே சிறைவைத்துக் கண்ணிமைக்காது காக்கிறேன் என்கிறாள் தலைவி.

இமைத்தால் காதலர் மறைவார் என்று, கண்களை மூடாமலே துயிலொழித்துக் கிடக்கிறேன்; அதற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே!
காட்சிப் பின்புலம்:
தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்தில் உள்ளனர். காற்று அவர்களிடையே நுழைந்து பிரிக்கப்படாத கூட்டுறவு உண்டாயிற்று. அதன் பின் ஒருவருக்கு மற்றவர் மேல் காதல் மிகுகின்றது. தனிமையில் இருக்கும்போது அவர்கள் தாங்கள் நுகர்ந்த இன்பத்தை எண்ணி மகிழ்கின்றனர். தலைவன் தன் காதலியின் அழகுநலன்களைப் பாராட்டுகிறான்; தலைவி அவன் அவளுடன் எத்துணை இணக்கமாகிவிட்டான் என்பதை நினைக்கிறாள். முத்தம் பரிமாறிக்கொண்டதனால் பெற்ற இன்பச்சுவையை வியக்கிறான்; உடம்பும் உயிரும்போல் பிரிந்து தனித்தனியாக இயங்க முடியாதவைகளாக மாறிவிட்டோம் என்கிறான்; தன் கண்ணின் கருமணியில் காதலியின் உருவத்துக்கு மட்டுமே இடம் என்று சொல்கிறான். அவளைச் சந்திக்காவிட்டால் சாதல் போன்ற உணர்வு உண்டகிறதாம்; அவளை மறப்பதும்‌ இல்லை, அதனால்‌ நினைக்க வேண்டியதுமில்லை எனவும் கூறுகிறான். தலைவியின் எண்ணங்களாவன: 'தலைவர் தன் கண்ணிலிருந்து நீங்கார்; இமைத்தால் வருந்தவும் செய்யாத அளவு நுண்ணியவர்'; அவர் என் கண்ணிலே முழுதும் நிறைந்திருந்து நீங்கக்கூடாது என்பதற்காக கண்ணுக்கு மையும் தீட்டமாட்டேன் (மை தீட்டும் நேரத்தில் அவரைப் பார்க்கமுடியாது என்பதால்); நெஞ்சில் உறையும் காதலர் வெம்மையுறுவார் என்பதால் சூடாக உண்ணுதலையும் அஞ்சுகிறேன் எனக் காதலி கூறிக் கொண்டிருக்கிறாள்..

இக்காட்சி:
களவு வாழ்க்கையில் உள்ள காதலிக்குத் தலைவனைப் பிரிந்து மீண்டும் சந்திக்கும்வரை அவன் நினைவாகவே இருக்கிறது. அந்த நினைவை நீட்டிக்கச் செய்யும்வகையில் அவன் தன் கண்ணுக்குள்ளேயே அவன் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறாள். மேலும் அவன் கண்ணைவிட்டு நீங்காதிருப்பதற்காக இமைக்காமலும் இருக்கிறாள். கண் கொட்டாமல் இருந்ததால் அவளது உறக்கமும் கெட்டது. ஆனால் அவளது உறக்கமின்மையை ஊர் எப்படிப் பார்க்கிறது? 'எவனோ ஒருவன் இவளைத் தூங்கவிடாமல் செய்துவிட்டுப் போய்விட்டான். பாவம் இந்தப் பெண்!' எனச் சொல்கிறது. இதைக் கேள்வியுற்ற தலைவிக்கு ஊர்மக்கள் மீது மனக்குறை உண்டாகிறது. அவள் கூறுகிறாள்: 'நான் கண் இமைத்தால் கண்ணுள்ளிருக்கும் காதலர் மறைந்துவிடுவார் என்பதால் இமைக்க மாட்டேன்; அதற்கே அவரை அன்பிலா அயலார் என்று சொல்கிறார்களே இவ்வூர் மக்கள்' என்று.

கண்ணுள்ளாரைக் கட்டி வைப்பதற்காகவே தூங்கா நோயில் ஆழ்ந்ததாகத் தலைவி கூறுவது அவளது காதல் சிறப்பைப் புலப்படுத்துகிறது. முன்பு 'நான் இமைத்தால் கண்ணுள்ளில் நீங்காமல் இருக்கும் அவருக்கு வலிக்கும் என்றாலும் பொறுத்துக்கொள்வார்' என்று கூறியவள், இங்கு தான் இமைத்தால் அவர் கண்ணில் இருந்து மறைந்துவிடுவார் என்று அஞ்சிக் கண்ணை இமைக்காமலும், துயில் கொள்ளாமலும் இருப்பதாகச் சொல்கிறாள். மேலும் இதற்கெல்லாம் அவர்தானே காரணம் என்று அவர்மேல் பழியுண்டாகிவிடக்கூடாது என்றும் பதறுகிறாள். தான் தூக்கம் இல்லாதிருப்பது அவர் செய்த துன்பம் அல்ல என்பதையும் அவர் தன் கண்ணகத்தே அல்லவா இருக்கிறார் என்பதையும் இந்த ஊர் ஏன் புரியாதிருக்கிறது என வியக்கவும் செய்கிறாள்.

இப்பாடல் 'கண்துயில் மறுத்தல்' என்ற மெய்ப்பாடு குறித்தது என்பர் மணக்குடவர்/பரிப்பெருமாள்.
பரிமேலழகர் இக்குறட்பா வரைவிடை வைத்துப் பிரிவின்கண் தலைமகளாற்றுதற் பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது என்றார். வரைவிடை வைத்துப் பிரிதல் என்பது மணம் செய்து கொள்ள உடன்பட்டபின் பிரிதல் ஆகும். இயற்பட மொழிதலாவது தலைவன் பண்புகளைத் தலைவி புகழ்ந்து கூறுவதைக் குறிக்கும். மணம் செய்துகொள்ள உடன்பட்டபின் தலைவனது பண்புகளைத் தலைவி புகழ்தல் என்பது இதன் பொருள்.
தன் கருத்தறியாத தோழியின் பழிப்பை ஊரின் பழிப்பாக மாற்றிச் சொல்கிறாள் தலைவி என்றும் ஒரு பொழுதும் பிரியாதாரைப் பிரிந்தாரென்று பழிக்காதே என்று தோழியைக் கடிந்தாள் என்றும் பரிமேலழகர் சிறப்புரை கூறுகிறது.

தலைவி கண் இமைக்காவிட்டால் காதலன் எப்படி அன்பில்லாதவன் ஆவான்?

காதலரின் சிறு பிரிவையும் தாங்கவதளாதலின், தூக்கம் வாராதிருக்க இமையாதிருக்கிறாள் தலைமகள். தான் உறங்காமல் விழித்திருப்பதற்குத் தன் கண்ணுள்ளிருந்து நீங்கிவிடக்கூடாது என்பதான காரணத்தைச் சொல்லி அவன்பால் கொண்ட காதல்மிகுதியை வெளிப்படுத்துகிறாள்.
ஆனால் இவளின் கண் அயரா நிலை கண்டு ஊரார் காதலனைத் திட்டுகின்றனர். 'அவள் தூங்காமல் வருந்துமாறு எவனோ ஒருவன் செய்துவிட்டானே' என்கிறார்கள். அப்பொழுது 'இதற்கே இவ்வூரார் காதலரை அன்பில்லாதவர் என்கிறார்களே' என வருந்துகிறாள் தலைவி.
துயிலா நிலையும் அவளுக்குத் துன்பமாகத் தெரியவில்லை என்பதாலேதான் 'இதற்குப் போய் அவரைத் திட்டுகிறார்களே' என்கிறாள். தான் உறங்காமல் துன்புறுவதற்குக் காரணம் காதலன் என ஊர் எண்ணுவதால் அவன் அன்பில்லாதவன் ஆகின்றான். பாவம்! அவர் கண்ணுள் இருப்பதை அறியாதவர் ஊரார்; ஒரு பொழுதும் பிரியாதாரைப் பிரிந்தாரென்று ஊர் பழிக்கிறதே என்பதாம். தம் காதலைப் புரிந்து கொள்ளாமல் காதலரை ஏதிலர் எனக் குறை கூறும் ஊராரின் நிலை குறித்துத் தலைவி வருந்துகிறாள்.

தலைவன் நினைவாக உறக்கமற்றிருப்பது காதலிக்கு இயல்பு. தனது தூக்கமற்ற நிலையால் கணவனுக்குப் பழி வருதல் கூடாது என்பதனைக் கருதித் தலைவி கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.

என் கண் இமைத்தால் கண்ணுள்ளிருக்கும் காதலர் மறைதலை அறிந்து இமைக்க மாட்டேன்; அதற்கே அவரை அன்பிலா அயலார் என்று சொல்வர் இவ்வூர் மக்கள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துயிலா நோயுறுத்திய தலைவனுக்கு அதனால் பழி சேரக்கூடாதே என எண்ணும் காதலியின் காதற்சிறப்பு உரைத்தல்.

பொழிப்பு

இமைத்தால் கண்ணுள்ளிருக்கும் காதலர் மறைவாரென அறிவதால் இமையேன்; அதற்கே அவரை அன்பில்லாத அயலவர் என்பர் இவ்வூரார்.