இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1126கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1126)

பொழிப்பு (மு வரதராசன்): எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போகமாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்தமாட்டார்; அவர் அவ்வளவு நுட்பமானவர்.

மணக்குடவர் உரை: என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்: ஆதலான் எம்மாற் காதலிக்கப்பட்டார் நுண்ணியவறிவை யுடையார்.

பரிமேலழகர் உரை: (ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர்.
(இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.)

சி இலக்குவனார் உரை: எம் காதலர் கண்ணிடத்திலிருந்து நீங்கார்; இமைத்தால் அதனால் வருந்துதலும் செய்யார். ஆதலால் பிறர் அறியா நுட்பத் தன்மை பொருந்தியவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எம் காதலவர் கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்.

பதவுரை: கண்-விழி; உள்ளின்-உள்ளிருந்தும், அகத்தினின்றும்; போகார்-நீங்கமாட்டார்; இமைப்பின்-கண் கொட்டினால்; பருவரார்-துன்புறமாட்டார்; நுண்ணியர்-நுட்பமானவர்; எம்-எமது; காதலவர்-காதலர்.


கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்:
பரிப்பெருமாள்: என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்:
பரிதி: தான் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக. எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; யாம் அறியாது இமைத்தோமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்;
காலிங்கர்: கேளாய்! இங்ஙனம் எம் கருத்துள் உறைதலேயன்றிக் கண்ணுள் நின்றும் போகின்றிலர். மற்று இமைப்பின்கண் நெருக்குண்டு வருந்துவதோர் வருத்தமும் மிகார்.
பரிமேலழகர்: (ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் கண்ணகத்து நின்றும் போகார்; யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; [இயற்பழிக்கும்-ஒழுக்கமில்லாதவன் என்று பழித்துப் பேசுவாள்; சேய்மைக்கண்-தொலைவிடத்து; அதனால்-இமைத்தலினால்]
பரிமேலழகர் குறிப்புரை: இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.

'எம் கண்ணகத்து நின்றும் போகார்; யாம் அறியாது இமைத்தோமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'எம் கருத்துள் உறைதலேயன்றிக் கண்ணுள் நின்றும் போகின்றிலர்' என்று உரை தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்ணுள் இருப்பார், இமைப்பின் வருந்தார்', 'என் கண்ணிலிருந்து என் கணவர் நீங்கார். கண்ணை இமைத்தாலும் வருந்தார்', 'எந்த நேரமும் என் கண்ணிலேயே இருந்து கொண்டிருக்கிறார். அவர் என் கண்ணுக்கு உள்ளேயும் போகாமல் விழிகளுக்கும் இமைகளுக்கும் இடையிலேயே இருந்து கொண்டு, இமைகளை மூடும்போது அதனால் அடிபட்டுத் துன்பமடையாமலும் இருக்கிறாரே!', 'எமது கண்ணுள்ளே யிருந்து வெளியே போக மாட்டார். அவர் அங்கிருப்பது தெரியாமல் கண்னை இமைத்தாலும் அவர் வருந்த மாட்டார்' என்ற பொருளில் உரை தந்தனர்.

என் கண்ணிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் நீங்கார்; நான் இமைத்தேனாயினும் அதனால் வருந்தவும் மாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நுண்ணியர் எம் காத லவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலான் எம்மாற் காதலிக்கப்பட்டார் நுண்ணியவறிவை யுடையார்.
பரிப்பெருமாள்: ஆதலான் எம்மாற் காதலிக்கப்பட்டார் நுண்ணியவறிவை யுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது 'அறிவிலர்' என்று இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் கூறியது. இஃது எதிர் பெய்துபரிதல் என்னும் மெய்ப்பாடு.
பரிதி: ஆதலால் கணவர் நுண்ணியர் என்றவாறு.
பரிதி குறிப்புரை: ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அவள் கேட்பத் தலைமகள் சொல்லியது.
காலிங்கர்: அதனால் ஆண்டு அங்குக்கண்ட உருவு நலனுடையரேனும் ஈண்டு இங்ஙனம் பெரிதும் நுண்ணியர் எம்மாற் காதலிக்கப்பட்டவர்.
காலிங்கர் குறிப்புரை: எனவே மற்று இவன் தான் காண்பதும் கருதுவதும் அவள் அல்லது பிறிது ஒன்றும் இல்லை என்பது பெரும்பாலும் பாங்கன் உட்கொள்வான் ஆவது பயன் என்றவாறு.
பரிமேலழகர்: ஆகலான் எம்முடைய காதலர் காணப்படா நுண்ணியர்.

எம்முடைய காதலர் நுண்ணியர் என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எம் காதலர் மிகவும் சிறிய வடிவினர்', 'ஆதலால் என் காதலர் கண்ணிற்குத் தோன்றாத நுண்ணிய உருவினர்', 'என் காதலர் எவ்வளவு சாமார்த்தியம், 'எம் காதலர் அதிக நுட்பமானவர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

எம் காதலர் நுட்பமானவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என் கண்ணுள் நின்று நீங்கார்; நான் இமைத்தேனாயினும் அதனால் வருந்தவும் மாட்டார்; எம் காதலர் நுண்ணியர் என்பது பாடலின் பொருள்.
'நுண்ணியர்' என்றால் என்ன?

என் கண்ணுக்குக் கண்ணாக அவர் உள்ளார் என்கிறாள் தலைவி.

'காதலர் எம் கண்களிலிருந்து எப்பொழுதுமே நீங்கார்; இமைத்தாலும் வருந்தார்; அவ்வளவு நுண்ணியவர் அவர்' என்கிறாள் தலைவி. காட்சிப் பின்புலம்:
காதலில் வீழ்ந்த தலைவனும் தலைவியும் அடிக்கடி சந்திக் கொள்கின்றனர்; மெய்யுறு புணர்ச்சியும் கொண்டனர். அதன்பின் தனிமையில் இருக்கும்போது தாங்கள் கூடியதில் எய்திய இன்பத்தை மகிழ்வுடன் நினைத்துக் கொள்கின்றனர். அவன் அவளது அழகுநலனை வியக்கிறான். முத்தம் தந்த இன்பத்தை எண்ணுகிறான்; உடம்பும் உயிரும் போன்றது தங்களது நட்பு எனப் பெருமைப்பட்டுக் கொள்கிறான்; அவளைச் சந்திக்காவிட்டால் இறந்துபோதல் போன்ற உணர்வு உண்டாகின்றது என்று சொல்கிறான். தன் கண்ணின் கருமணியில் காதலியின் உருவத்துக்கு மட்டுமே இடம் என்றும் அவளை மறத்தலை ஒருபோதும் அறியேன் என்றும் கூறுகிறான்.

இக்காட்சி:
தலைவியும் தன் காதல் நினைவுகளைச் சொல்லத் தொடங்குகிறாள். 'என் காதலர் என் கண்ணுள்ளேதான் எப்பொழுதும் நீங்காமல் இருக்கிறார்; அவர் நுண்ணியர்' என்று காதலி இங்கு கூறுகிறாள். அவள் அவ்விதம் கூறும்போது, 'கண்ணுக்குள்ளே காதலன் இருந்தால் நீ இமைக்கும்போது அவன் என்ன ஆவான்' என்று மடக்கிக் கேட்போர்க்கு 'நான் அறியாது இமைத்தாலும் அவருக்கு வலிக்காது; அவ்வளவு நுட்பமானவர் என் காதலர்' என இவள் பதிலிறுக்கிறாள்.
இதே அதிகாரத்து முந்தைய பாடல் ஒன்றில் காதலன் அவளுக்காகத் தன் கருமணியை இடம்பெயரச் சொன்னான்: கருமணியின் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம் (1123 பொருள்: கண்ணில் உள்ள கருமணியின் பாவையே! நீ போய்விடுவாயாக! யாம் விரும்பும் முகஅழகி இருக்க இடம் வேண்டும்). இங்கு காதலி தன் கண்களைவிட்டு தலைவன் நீங்குவது இல்லை என்கிறாள்; இவ்வாறு இருவரும் ஒத்த உணர்ச்சி கொண்டு திகழ்கின்றனர்.
அவன் காதலியின் விழிகளிலேயே நிலைபெற்று, அதனின்றும் நீங்காதவனாம்; எப்போதும் அவன் அவள் முன்னே தோன்றி நிற்பதாக உணர்கிறாளாம். அவளது கண்பார்வையினின்று நீங்காது எப்பொழுதும் கண்ணுள்ளேயே தன் காதலன் உறைந்து இருக்க விரும்புகிறாள் என்பது கருத்து.

‘தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சித் தலைவி கூறியது’ என்னும் துறை சார்ந்தது இக்குறட்பா என்பர். (இயற்பழித்தல்-குணத்தைப் பழித்தல்). களவில் ஈடுபட்ட காதலர்களைப் பற்றிய அலர் எழுந்ததை ஒட்டி அது தணியும் வரை தலைவியைப் பார்க்கத் தலைவன் வரவில்லை என்றும், தன் முன்னால் உள்ள தோழி, தலைவி தன் இயல்பு நிலை மாறி வருந்துவாளோ என்று நினைப்பதாகவும், கற்பனை செய்து கொண்டு பேசுகிறாள் தலைவி: 'உங்கள் கண்களுக்கு எல்லாம் தென்படாத நுண்மையுடையவராக இருப்பதால் அவர் இங்கே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அவர் என்றுமே என் கருத்திலும் என் கண்ணிலேயேயும் இருப்பவர். நான் எப்போதாவது இமைத்தாலும் நெருக்குண்டு துன்புற்று என் காதலர் நீங்குவதில்லை' என்றவாறு இக்காட்சியை விளக்குவர் உரையாசிரியர்கள்.
இப்பாடல் 'எதிர்பெய்துபரிதல்' என்ற மெய்ப்பாடு சார்ந்தது என்பர் பரிப்பெருமாள். எதிர்பெய்து பரிதல் என்பது தலைமகன் முன்னின்றி அவனின்றாகப் பெய்துகொண்டு வருந்துதல் பற்றியது.

'நுண்ணியர்' என்றால் என்ன?

'நுண்ணியர்' என்றதற்கு நுண்ணியவறிவையுடையார், பெரிதும் நுண்ணியர், காணப்படா நுண்ணியர், அவ்வளவு நுட்பமானவர், அத்தகைய நுண்ணியவர், கண்ணிற்குத் தோன்றாத நுண்ணிய உருவினர், நுட்பமான திறமைசாலி, அதிக நுட்பமானவர், பிறர் அறியா நுட்பத் தன்மை பொருந்தியவர், அத்துணைக் கட்புலனாகாத நுண்மை யுடையவர், கண்ணால் பார்க்க முடியாத அவ்வளவு நுட்ப உருவம் உடையவர் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

நுண்ணியர் என்ற சொல்லுக்கு நுண்ணறிவை உடையர் என்றும் காணப்படா நுண்ணியர் என்றும் பொருள் கூறினர். பெரும்பான்மையர் நுண்ணிய உருவம் கொண்டு தன் கண்ணில் தங்க முடிந்து மற்றவர் கண்களுக்குத் தென்படாமலும் இருக்கிறார் தனது காதலர் என்பது கருத்து என்றனர். 'என்னுடைய காதலர் என் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டமையால், நான் கண்ணை மூடும் போதும், அவர் உருவம் தோன்றிக்கொண்டேயிருக்கிறது என்னும் உள்ளக் கூட்டுறவும் குறிப்பிடப்படுகிறது' என்றும் 'கண்ணுக்குள் சிறு தூசி விழுந்தாலும் உறுத்தும். ஆனால் கண்ணுக்குள்ளேயே இருக்கும் காதலரோ, பருப்பொருள்போல் உறுத்தவே மாட்டாராம். அவ்வளவு நுண்ணியவராம்' என்றும் 'கண்ணுக்கு உள்ளே போகாமல் கண்ணுக்கும் இமைக்கும் இடையில் இருந்துகொண்டே நான் கண்ணை இமைக்கும் போதெல்லாம் இமைகள் தம்மீது தாக்காதபடி இருந்துகொண்டிருக்கிற என் காதலர் வெகு நுட்பமான சமர்த்தர்' என்றும் உரை செய்தனர்.

அவளுடைய காதல் உள்ளம் இடைவிடாது தன் காதல்தலைவனை நினைப்பதால் அவன் நுட்பமாகக் காதலியின் கண்ணிறைந்திருந்து காட்சி அளிக்கின்றான்.

நுண்ணியர் என்பது கண்ணுக்குப் புலனாகாத நுண்மை உடையவர் என்ற பொருளது.

என் கண்ணிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் நீங்கார்; நான் இமைத்தேனாயினும் அதனால் வருந்தவும் மாட்டார்; எம் காதலர் நுட்பமானவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

என் கண்களுக்குள் அவரைச் சிறை வைத்துள்ளேன் என்று தலைவி காதற்சிறப்பு உரைத்தல்.

பொழிப்பு

என் கண்ணிலிருந்தும் உள்ளத்திலிருந்தும் நீங்கார். நான் கண்ணை இமைத்தாலும் வருந்தார். என் காதலர் நுட்பமானவர்.