இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1125



உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1125)

பொழிப்பு (மு வரதராசன்): போர் செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும்; ஆனால், ஒருபோதும் மறந்ததில்லையே!

மணக்குடவர் உரை: மறந்தேனாயின் நினைப்பேன் யான்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை.
தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.

பரிமேலழகர் உரை: (ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.) ஒள் அமர்க்கண்ணாள் குணம், யான் மறப்பின் உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
(மன் : ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.)

வ சுப மாணிக்கம் உரை: போராடும் கண்களை யுடையவள் குணங்களை மறந்தால் நினைப்பேன்; மறக்கவே இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் மன்யான் மறப்பின் உள்ளுவன்; மறப்பறியேன்.

பதவுரை: உள்ளுவன்-நினைப்பேன்; மன்-(ஒழியிசை); யான்-நான்; மறப்பின்-நினைவொழிந்தால்; மறப்பு-நினைவு ஒழிதல்; அறியேன்-அறியமாட்டேன்; ஒள்-ஒளி பொருந்திய; அமர்-போர்; கண்ணாள்-கண்களையுடையவள்; குணம்-பண்பு.


உள்ளுவன் மன்யான் மறப்பின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறந்தேனாயின் நினைப்பேன் யான்;
பரிப்பெருமாள்: மறந்தேனாயின் நினைப்பேன் யான்;
காலிங்கர்: இடைவிடாமல் நினைப்பேன் யான். மறக்கக் கூடுமாயின்;
பரிமேலழகர்: (ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.) யான் மறந்தேனாயின், நினைப்பேன்; [தணந்த ஞான்று-பிரிந்த காலத்தில்; உள்ளியும் அறிதீரோ - நினைத்தும் அறிவீரோ]
பரிமேலழகர் குறிப்புரை: மன்-ஒழியிசைக்கண் வந்தது.

'யான் மறந்தேனாயின், நினைப்பேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யான் மறந்தேனாயின் நினைப்பேன்', 'மறந்தாற்போல் கூட மறக்க முடியவில்லை', 'யான் மறந்தேனாயின், நினைப்பேன்', 'யான் மறந்தால் நினைப்பேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.

நினைப்பேனா! நான் மறக்கமுடிந்தாலன்றோ என்பது இப்பகுதியின் பொருள்.

மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை.
மணக்குடவர் குறிப்புரை: தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.
பரிப்பெருமாள்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை.
பரிப்பெருமாள் குறிப்புரை: தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இது நாணுத்துறவுரைத்தலிற் கூறற்பாலது. காதல் மிகுதி நோக்கிக் கூறுகின்றார் ஆதலின் ஈண்டுக் கூறப்பட்டது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று. காதல் மிக்கார்க்குத் தான் காதலிக்கப்பட்டாரை ஒழிவின்றி நினைதலும் அவர் தம்மாட்டு இல்லாத காலத்தினும் கண் முன்னாய்க் காண்டலும் உண்ணாமையும் உறங்காமையும் கோலஞ்செய்யாமையும் உளவாம் அன்றே. அவை ஐந்தும் ஈண்டுக் கூறப்படுகின்றன.
காலிங்கர்: மறப்பு என்பதனை அறியேன்; ஒள்ளிய அமர் செய்யும் கண்ணினை உடையாள் குணத்தை என்றவாறு.
பரிமேலழகர்: ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
பரிமேலழகர் குறிப்புரை: குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.

'ஒள்ளிய அமர் செய்யும் கண்களையுடையாளது குணத்தை ஒருபொழுதும் மறத்தல் அறியேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒளி மிகுந்த அமர் செய்யும் கண்ணினையுடையவள் குணங்களை ஒரு பொழுதும் மறத்தலை அறியேன்; ஆதலால் நினைத்தலையும் அறியேன்', 'ஆசை மூட்டுகின்ற ஒளியோடு கூடிய கண்களையுடைய என் காதலியின் குணச் சிறப்பை எப்போதும் அதை எண்ணிக் கொண்டேயிருப்பேன்', 'ஒளிமிக்க போர்புரியுங் கண்ணை உடையாளது குணங்களை நான் அவற்றை மறத்தலை அறியேன்.', 'ஒளி பொருந்தியனவாய் ஒன்றோடொன்று பொருதலைச் செய்யும் கண்ணையுடையவளது குணத்தை ஒருபொழுதும் மறத்தலை அறியேன். (ஆதலால் நினைத்தலையும் அறியேன்.)' என்றபடி பொருள் உரைத்தனர்.

ஒளி மிகுந்த போராடும் கண்களை யுடையவள் குணத்தை மறத்தலை அறியேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நினைப்பேனா! நான் மறக்கமுடிந்தாலன்றோ; ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தை மறத்தலை அறியேன் என்பது பாடலின் பொருள்.
'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்' என்ற பகுதி குறிப்பது என்ன?

அவளை மறந்தால்தானே நினைப்பதற்கு?

போராடும் ஒளிமிகுந்த கண்களை உடையவளின் குணங்களை எப்பொழுது நினைப்பேனா? அவளை மறப்பதற்கே அறியேன்; அவளை மறந்தால்தானே நினைக்க முடியும்!
காட்சிப் பின்புலம்:
இப்பாடல் 'ஒருவழித் தணத்தல்' துறை சார்ந்தது என்பர் இலக்கணவியலார். ஒருவழித் தணத்தல் என்பது காதலரது களவுச் சந்திப்பைப் பலர் அறிந்து பழித்துப் பேசுதல் அடங்குமாறு சிலகாலம் தலைமகன் தன் ஊரின்கண் தங்கியிருந்து தலைவியைப் பிரிந்து வாழ்தலைக் குறிக்கும். அப்படிப் பிரிந்து தனியே யிருக்கும் தலைவன், காதல் மிகுதியால், தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிறான்.
அவன் தலைவியிடம் முன்பு பெற்ற இன்பங்களில் ஒன்றை நினைவு கூர்ந்து தன் காதலின் உயர்வு கூறத் தொடங்குகிறான்; அவளை விட்டு இனி வாழ்வு இல்லை என்னும் அளவிற்கு அவன் தன் உள்ளத்தில் காதல் வளர்ந்துள்ளதைச் சொல்கிறான்; 'உடம்பும் உயிரும் எப்படியோ யானும் இவளும் அப்படி' என்றும் 'உயிர்க்கு வாழ்வு எத்தன்மையானதோ, அத்தன்மையானவள் எனக்கு இவள்; உயிர்க்குச்சாவு எப்படியோ, அப்படிப்பட்டது இவளை விட்டுப்பிரிவது' என்று கூறுகிறான் அவன்; தன் கண்ணின் கருமணியில் காதலியின் உருவத்துக்கு மட்டுமே இடம் என்கிறான்

இக்காட்சி:
இங்கு அவளையும் அவளுடைய பண்புகளையும் என்றுமே தன் நெஞ்சிலேயே வைத்து மறவாமல் இருப்பதாகப் பெருமிதத்தோடு கூறுகிறான் தலைமகன். அவள் தன்னருகில் இல்லாத இந்நேரத்தில் அவளைக்கண் முன்னால் காண்பது போல கற்பனை செய்து பார்க்கிறான். காதலி தலைமகன் முன்தோன்றி 'பிரிந்த காலத்தில் (தணந்த காலத்து) என்னை நினைத்தாவது பார்த்தீர்களா?' என்று சிணுங்கி வினவுவதுபோலவும், அதற்குப் 'போராடும் கண்களை யுடையவளின் குணத்தை மறந்தாலல்லவா நினைப்பேன்' என்று அவன் பதில் சொல்வதுபோலவும் புனைந்து எண்ணி மகிழ்ந்து கொள்கிறான் அவன்.
பிரிவில் அவளும் அவளது குணநலங்களும் காதல் மிக்க அவன் நினைவில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கின்றன; அவனுடன் பழகிய தலைவியின் குணங்களை அவனால் மறக்க இயலாது. அவள் குணங்களைத் தன் நெஞ்சிலேயே மறவாமல் வைத்து இருப்பதால் அவற்றை எப்படி மறப்பேன் என்கிறான்.

'யான் மறப்பின் உள்ளுவன்' என்ற கூற்றில் உள்ள நயம் எண்ணி மகிழத்தக்கது. அவளை மறத்தல் இல்லாத நிலை இருப்பதால் அவளை நினையாமை என்கிற ஒன்று நிகழ்வதில்லை என்பது இதன் கருத்து.

'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்' என்ற பகுதி குறிப்பது என்ன?

ஓள் என்பதற்கு ஒளி மிகுந்த என்பது பொருள். அமர் என்பது போர் எனப் பொருள்படும். 'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்' என்ற தொடர் ஒளிமிக்க போர்புரியுங் கண்ணை உடையாளது குணம் என்ற பொருள் தரும்.
போர்க் குணம் கொண்ட ஒளிமிகுந்த கண்களைக் கொண்ட காதலி, அவனை நோக்கி, மிகுந்த உரிமை கொண்டு, 'பிரிந்திருந்த காலத்தில் எம்மை நினைத்தீரோ?' என்று வினவுகிறாள். அவள் அவனைப் போராட்ட உணர்வோடு வினவும்போது அவளது கண்கள் ஒளிர்ந்தன. அதனால் ஒள்ளமர்க் கண்ணாள் எனச் சொல்லப்பட்டது. அவனிடம் செல்லமாகச் சண்டை போடும்போது அவனுக்கு அவளுடன் கூடியபோது அவள் காட்டிய காதல் பண்புகளும் நினைவிற்கு வருகின்றன. அக்காதல் பண்புகளே இங்கு குணம் எனச் சொல்லப்படுகிறது. அதுவே 'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்'.
உடலழகில் பற்றிய காதல் அவளது குணநலன்களில் போய்த் தங்கி அவர்களது காதலை வலுப்படுத்துகின்றது. 'அவளுடைய பண்புநலன்களுக்காகவும் அவளைக் காதலிக்கிறேன். அவளது காதல் பண்பை யான் மறந்ததே இல்லையே, பின் எப்படி நினைக்க முடியும்' என்று காதற் சிறப்பு உரைக்கிறான்.

நினைப்பேனா! நான் மறக்கமுடிந்தாலன்றோ; ஒளி மிகுந்த போராடும் கண்களை யுடையவள் குணத்தை மறத்தலை அறியேன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

என் நினைவெல்லாம் காதலியே என்று தலைவன் பெருமையுடன் காதற்சிறப்பு உரைத்தலைச் சொல்வது.

பொழிப்பு

போராடும் கண்களை யுடையவள் குணத்தை நான் மறந்தால்தானே நினைப்பதற்கு; அதை மறக்கவே இல்லை.