இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1121பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1121)

பொழிப்பு (மு வரதராசன்): மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர், பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

மணக்குடவர் உரை: பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர்.
இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.

பரிமேலழகர் உரை: (இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும்.
('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.)

வ சுப மாணிக்கம் உரை: கொஞ்சுமொழி பேசும் வெண்பல்லில் ஊறிய நீர் பாலும் தேனும் கலந்தாற் போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் பாலொடு தேன்கலந் தற்றே.

பதவுரை:
பாலொடு-பாலுடன்; தேன்-தேன்; கலந்தற்றே-கலக்கப்பட்டது போன்றது; பணிமொழி-பணிவான சொல்உடையாள் அதாவது மென்மையாய்ப் பேசுபவள், கொஞ்சுமொழி; வால்-தூய்மையான; எயிறு-ஈறு; ஊறிய-சுரந்த; நீர்-நீர்.


பாலொடு தேன்கலந் தற்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போலும்:
பரிப்பெருமாள்: பாலொடுகூடத் தேனைக்கலந்தாற் போல;
பரிதி: பாலொடு தேன் கலந்தாற்போலும்;
காலிங்கர்: நெஞ்சே! பாலொடு தேனும் கூடக் கலந்த அத்தன்மைத்தேதான்;
பரிமேலழகர்: (இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும்; [தன் நயப்பு உணர்த்தல் - தன் காதலை அறிவித்தல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. [கலந்ததற்று என்பது கலந்தற்று எனத்தொக்கது]

'பாலொடு தேன் கலந்தாற்போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பாலும் தேனும் கலந்த கலவைபோல் இனிக்கும்', 'பாலோடு தேன் கலந்தது போலும்', 'பாலுடனே தேனைக் கலந்த கலவை நீரை ஒக்கும்', 'பாலோடு தேன் கலந்தால் எப்படி இனிக்குமோ அப்படி இருக்கிறது' என்றபடி உரை தந்தனர்.

பாலோடு தேன் கலந்தது போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகவும் இனிமைதரும் புகழினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர்.
மணக்குடவர் குறிப்புரை: இது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோன்றத் தலைமகன் கூறியது.
பரிப்பெருமாள்: மிகவும் இனிமைதரும் தாழ்ந்த மொழியினையுடையாளது வெள்ளிய எயிற்றினின்று ஊறிய நீர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரந்து பின்னின்ற தலைமகனை நோக்கி, நீர் பெரியீராதலானே எமது புணர்ச்சி நுமக்கு இன்பம் தரவற்றோ என்ற தோழிக்குத் தனது புணர்ச்சியுண்மையும் காதல் மிகுதியும் தோற்றத் தலைமகன் கூறியது.
பரிதி: மாதர் இதழில் உண்டாகிய அமிர்தம் என்றவாறு.
காலிங்கர்: இப்பணிமொழியினாளது வெளிய நகையினூறிய நீரொனாவ நாமுயற்சி செய்துகொண்டன.
காலிங்கர் குறிப்புரை: வேற்றுமையுடைய இரண்டிற்கும் சுவையும் இருவகைய அன்றே; மற்று அங்ஙனம் வேறுபட்டவற்றை ஒன்றோடு ஒன்று கலந்து சுவை பெறும் தன்மைத்து அன்று; இவை யாவும் இன்று இயல்பாக இவள்வாய் இன்னகையினின்று இனிது ஊறிய நீர் நலம் யாம் அறிந்தனம். ஆதலான் என்று இங்ஙனம் இன்றியமையாமை தன் நெஞ்சிற்குச் சொல்லுவான் போல அவள் கேட்பச் சொல்லினான் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர். [வாலிய எயிறு- தூய்மையான பல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.

'மெல்லிய மொழியினை யுடையாளது தூய எயிற்றின்றூறிய நீர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மென்மொழி பேசும் இப்பெண்ணின் தூய எயிற்றினிடத்து ஊறிய நீர்', 'பணிவான இன்சொல்லுடைய இவளது வெண்மையான பல்லில் ஊறிய நீர்', 'மெல்லிய மொழியினையுடையாள் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர்', 'பணிவான மொழியினையுடைய இந்தப் பெண்ணின் தூய்மையான பற்களின் முன்பாகத்தில் ஊறுகிற உமிழ் நீரானது' என்றபடி பொருள் உரைத்தனர்.

மென்மொழி பேசும் இவளது தூய்மையான எயிற்றினிடத்துச் சுரந்த நீர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மென்மொழி பேசும் இவளது தூய்மையான வாலெயிறு ஊறிய நீர், பாலோடு தேன் கலந்தது போன்றது என்பது பாடலின் பொருள்.
'வாலெயிறு ஊறிய நீர்' என்றால் என்ன?

இதழ்கள் பொருந்திய முத்தம் தந்த இன்பம்.

'மென்மொழி பேசும் இவளின் தூய்மையான எயிற்றினிடையே ஊறிய நீரானது பாலோடு தேனைக் கலந்ததைப் போன்ற இனிமையை உடையது' எனச் சொல்கிறான் காதலன்.
காட்சிப் பின்புலம்:
ஒருவரையொருவர் அறிந்துகொண்ட தலைவனும் தலைவியும் சந்திக் கொள்கின்றனர். மெய்யுறு புணர்ச்சியும் நடந்தேறியது. பின்னர் தனித்திருக்கும்போது தாங்கள் துய்த்த இன்பத்தை மகிழ்ந்து நினைவு கூர்கின்றனர். அவன் அவளது அழகைப் புகழ்ந்து வியக்கிறான்.

இக்காட்சி:
களவொழுக்கத்தில் காதலியுடன் கூடித் திளைத்த நினைவுகள் தொடர்கின்றன.
காதலியின் சிறப்பை உரைக்கும் காதலனின் மொழியாய் அமைந்த இப்பாடல் முத்தம் தரும் இனிய சுவை பற்றியது. காதலர் தம்முள் முத்தம் பரிமாறிக்கொள்வது அவர்களது அன்பை வெளிப்படுத்தும் முறையாகும். முத்தம் காதலர்களுக்குள் மேலும் இணக்கத்தை ஏற்படுத்தும் தன்மையது, அது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துப் புத்துணர்ச்சி ஊட்டவல்லதும் ஆகும்.
தலைவன் பணிவாகப் பேசுகின்ற தன் காதலியை முத்தமிடுகிறான். பணிமொழி என்று அவளைக் கூறுவதால் அவளது செறிவார்ந்த அடக்கம் புலனாகிறது. அது அவளின் பண்பின் அழகைக் காட்டுகிறது. எப்பொழுதும் அக அழகுடன் சேர்ந்த புற அழகைப் பேசுவது குறளின் சிறப்பு ஆகும். காதலனும் பன்மாயக் கள்வன்... (நிறை அழிதல் 1258) பணிமொழி பேசுபவனே. காதலர் இருவரும் ஒருவருக்கொருவர் மென்மைக் குணம் காட்டிக் கொள்பவர்களாக இருப்பதும் அவர்களது வாய்நீர் பாலொடு தேன் கலந்தது போன்றது என்றதற்கு ஏதுவானது.
இவ்வாறாக தங்களுள் கலந்த காலத்தில் காதலர்கள் இன்பம் துய்த்த முறை ஒன்றைக் காதலன் சிறப்பித்துரைக்கிறான்.

பால் சுவை மிகுந்தது. தேன் இனிமை நிறைந்தது. அந்த இரண்டையும் கலந்தால் அதன் இரு சுவைகளும் ஒன்றுடன் ஒன்று கூடி மேலும் இனிமை பெற்று அருந்த அருந்தத் திகட்டாதத் தித்திப்பைக் கொடுக்கும். முத்தத்தில் உண்டான வாய் அமுதம் தொடர்ந்து அருந்திக் கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆவலைத் தருகின்றது என்ற குறிப்பும் கிடைக்கிறது.

'வாலெயிறு ஊறிய நீர்' என்றால் என்ன?

வால் என்ற சொல் தூய்மை அல்லது வெண்மையைக் குறிக்கும் சொல். இங்கு தூய்மை என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. எயிறு என்ற சொல்லுக்குப் பல் என்றே பலரும் பொருள் கொண்டனர். பல்லைத் தாங்கியிருக்கும் தசைக்கும் (Gum) எயிறு என்றே பெயர். அது ஈறு என்று சொல்லப்படுவது. எயிறே ஈறு ஆயிற்று. பல் வேறு; எயிறு வேறு. ஈறுகளிலிருந்து தான் நீர் சுரக்கும். பல்லிலிருந்து நீர் ஊறாது. எனவே இங்கு எயிறு பற்சதையையே குறித்தது. வாலெயிறு என்பது தூய்மையான எயிறு என்ற பொருளில் வந்தது.

காதலியின் தூய்மையான எயிற்றில் ஊறிய நீர் பாலும் தேனும் கலந்தது போல் சுவையுடையது என்கிறது இக்குறள். எயிற்று நீர் இயல்பாக வெறுக்கப்படுவது. எச்சில்பண்டத்தை எவரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் காதலர்களுக்கு அந்த எச்சிலே சுவைமிகு நீர் ஆகிவிடுகிறது.
காம இன்பத் தூண்டுதலை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது வாய்ப்பகுதி. இங்கு சொல்லப்பட்ட முத்தம் இதழோடு இதழ் பொருத்தும் காதலர்களுக்கான முத்தம் ஆகும். இது உதடுகளின் உரசல் மட்டும் அல்ல; மேற்குநாட்டவர்களால் ஃபிரெஞ்ச் முத்தம் (French Kiss) என்று அழைக்கப்படுகிறதே அந்த வகையைச் சார்ந்தது. இந்த முத்தம் உதடு, நாக்கு, பற்கள், எயிறு என்ற வாயின் உறுப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இயங்கி இன்பம் அளிப்பது. உதடுகளைத் தாண்டிச் சென்று பற்களையும் எயிற்றையும் நாக்கால் துழாவி நீர் சுரக்க வைக்கும் நீண்ட ஆழமான முத்தம். அதன்வழி ஊறி வந்ததே 'வால் எயிறு ஊறிய நீர்' ஆகும்.

'வாலெயிறு ஊறிய நீர்' என்ற தொடர் தூய்மையான பற்களிடையே ஊறிய நீர் என்ற பொருள் தரும்.

மென்மொழி பேசும் இவளது தூய்மையான வாலெயிறு ஊறிய நீர், பாலோடு தேன் கலந்தது போன்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

முத்தப் பரிமாற்றக் காதற்சிறப்பு உரைத்தல்.

பொழிப்பு

மென்மொழி பேசும் இவளது தூய எயிற்றினிடத்து ஊறிய நீர் பாலும் தேனும் கலந்தாற் போலும்.