இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1110அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1110)

பொழிப்பு (மு வரதராசன்): செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல், நூற்பொருள்களை அறிய அறிய அறியாமை கண்டாற் போன்றது.

மணக்குடவர் உரை: யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும், இச்சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை.
காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று.

பரிமேலழகர் உரை: (புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது.) அறிதோறு அறியாமை கண்டற்று - நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது; சேயிழைமாட்டுச் செறிதோறும் காமம் - சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச்செறிய இவள்மாட்டுக் காதல்.
(களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப்பெறாது அவாவுற்றான், இதுபொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்' என்றார். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறியஅறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத்தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: நூல்களை நுணுக்க ஆராய்ந்து அறியுந்தோறும் முன் அறிந்த தமது அறியாமையைக் காண்டல்போல, அழகிய அணி அணிந்த இவளைச் சேருந்தோறும் இவள் பாலுள்ள காதல் மேன்மேலும் மிகுந்து இன்பம் தருகின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிதோறு அறியாமை கண்டற்றால் சேயிழை மாட்டு செறிதோறும் காமம்.

பதவுரை: அறிதோறு-அறியும்போதெல்லம் (அறிய அறிய); அறியாமை-தெரியாதிருத்தல்; கண்டற்றால்-உணர்ந்தாற் போலும்; காமம்-காதல்; செறிதோறும்-புணரும்போதெல்லாம் (புணரப் புணர), செறி என்ற சொல் கலத்தல், சேருதல், பொருந்துதல், இறுக்குதல், திணித்தல் எனப் பல பொருள் தரும். இங்கு புணர்ச்சியைக் குறிக்கிறது. செறிதோறும் என்பதற்கு ஒவ்வொருமுறை நெருக்கிச் செல்லும்போதும் என்று பொருள்; சேஇழை--சிறந்த/சிவந்த அணிகலம், சிவந்த அணிகலன் அணிந்தவள் என்றும் செவ்வரி ஓடியவை (கண்கள்) என்றும் பொருள் கொள்வர்; மாட்டு-இடத்தில்.


அறிதோறு அறியாமை கண்டற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும்;
பரிப்பெருமாள்: யாதானும் ஒன்றை அறியுந்தோறும் அறியாமை தோன்றினாற்போலும்;
பரிதி: நூல்களாலும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய அறிய முன் அறியாமை கண்டாற் போலக் காணப்படாநின்றது;
காலிங்கர்: நெஞ்சே! யாம் பலவகைப்பட்ட நூல்களையும் கற்று அவற்றின் கருத்து அறியுந்தோறும் அறியுந்தோறும் மற்றது ஒழிந்த நன்னூலும் அவ்வாறு கற்று இனிது அறியப்பெறாமை யாகிய விரும்புதலை நெஞ்சில் கண்டு செல்கின்ற அதுவே போலும்;
பரிமேலழகர்: (புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள்ளே சொல்லியது.) நூல்களானும் நுண்ணுணர்வானும் பொருள்களை அறிய முன்னை அறியாமை கண்டாற்போலக் காணப்படாநின்றது;

'ஒன்றை அறியுந்தோறும் முன் அறியாமை கண்டாற் போல' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிய அறிய அறியாமையை அறிவது போலும்', 'ஒரு பொருளை அறிய அறிய அறியாமை புலப்படுவது போல', 'அறியும்தோறும் தமது அறியாமை வெளிப்படுவது போன்ற தன்மையை ஒக்கும்', 'கல்வி அறிவு பெறப்பெற முன்பே அறிந்தனவெல்லாம் அறியாமையாக எண்ணப்படுவது போல' என்றபடி உரை கூறுவர்.

அறியும்தோறும் அறியாமை புலப்படுவது போல என்பது இப்பகுதியின் பொருள்.

காமம் செறிதோறும் சேயிழை மாட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இச்சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை.
மணக்குடவர் குறிப்புரை: காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமையாமையின் கூற்று.
பரிப்பெருமாள்: இச்சேயிழைமாட்டுப் புணர்ச்சியும் புணருந்தோறும் அமையாமை.
பரிப்பெருமாள் குறிப்புரை: காமப்புணர்ச்சியாயிற்று. இஃது அமைவின்மை கூறியது.
பரிதி: சிவந்த விழியினை உடையாளை இடைவிடாது செறியச் செறிய இவள் மாட்டுக் காதல் என்றவாறு.
பரிதி குறிப்புரை: புணர்ந்து உடன் போகின்றான் தன்னுள் சொல்லியது.
காலிங்கர்: இந்தச் சேயிழையாளை யாம் செறியுந்தோறும் இவள் திறத்து நமது உள்ளம் செல்கின்ற காமச்சுவையும் என்றவாறு.
பரிமேலழகர்: சிவந்த இழையினையுடையாளை இடைவிடாது செறியச்செறிய இவள்மாட்டுக் காதல்.
பரிமேலழகர் குறிப்புரை: களவொழுக்கத்திற் பல இடையீடுகளான் எய்தப்பெறாது அவாவுற்றான், இதுபொழுது நிரந்தரமாக எய்தப் பெற்றமையின், 'செறிதோறும்' என்றார். அறிவிற்கு எல்லை இன்மையான், மேன்மேல் அறியஅறிய முன்னையறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவிற்கு எல்லையின்றி, மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத்தன் ஆராமை கூறியவாறு. இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்கும் உண்டேனும் அவள்மாட்டுக் குறிப்பான் நிகழ்வதல்லது கூற்றான் நிகழாமை அறிக.

'இச்சேயிழைமாட்டுப் புணருந்தோறும் இவள் மாட்டுக் காதல்' என்று இப்பகுதிக்கு பழைய ஆசிரியர்கள் உரை வழங்கினர். சேயிழை என்றதற்குப் பரிதி சிவந்த விழியினை உடையாள் எனப் பொருள் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நகையுடையாளைக் கூடுந்தோறும் காமவுணர்ச்சி', 'சிறந்த அணிகலன் உடையவளை முயங்க முயங்க இன்பக்குறை புலப்படும்', 'சிறந்த அணிகலன்களை உடையாள் மாட்டு இடைவிடாது நெருங்க நெருங்க உண்டாகும் காதல்', 'இவ்விளையாள் தரும் இன்பமும் கூடுந்தோறும் கூடுந்தோறும் புதுப்புதுச் சுவையுடையதாகிறது' என்றவாறு உரை கூறினர்.

சிறந்த அணிகலன் உடையவளைக் கூடுந்தோறும் காமஇன்பக்குறை தோன்றுகிறது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு பொருளை அறிய அறிய கற்பவன் அறியாமை புலப்படுவது போல சிறந்த அணிகலன் உடையவளைக் கூடுந்தோறும் காமஇன்பக்குறை தோன்றுகிறது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

தன் காதலியுடன் ஒவ்வொருமுறை உறவாடும்போதும் 'இதுகாறும் இவ்வின்பம் அறிந்திலமே; இன்னும் எத்தனை எத்தனை இன்பம் உள்ளதோ' என்ற எண்ணம் தலைவனிடத்துத் தோன்றுகிறதாம்.

ஒன்றை அறியும் போது, முன்னிருந்த அறியாமை உணரப்படும்; சிறந்த அணிகளை உடையவளைச் சேருந்தோறும், முன்னையின்ப நுகர்ச்சிக்குறைவு தெரியவருகின்றது.
காட்சிப் பின்புலம்:
களவொழுக்கம் மேற்கொண்டுள்ள காதலனும் காதலியும் தம்முள் ஒத்த அன்பினர் என்பதைத் தெரிந்து கொண்டபின் ஒருவர்க்கு மற்றவர் உரியவர் என்ற உணர்வுடன் பழகுகின்றனர். மெய்யுறுபுணர்ச்சியும் நடைபெறுகின்றது. தலைவன் புணர்ச்சி இன்பங்களை எண்ணிக் கொள்கிறான். ஐம்புலன்களால் கிடைக்கும் சுவைகள் எல்லாம் ஒருசேர ஒரே நேரத்தில் அவளிடம் பெற்றது, அவளே தனக்கு நோயாகவும் அதைத் தணிக்கும் மருந்தாகவும் இருக்கிறாள் என்பது, புணர்ச்சியின்பம் மேலுலக இன்பத்தினும் மேலான இன்பமாக இருப்பது, அவளை விட்டு நீங்கினால் தனக்குச் சுடுவதும் நெருங்கி இருந்தால் குளிர்வதுமாக இருப்பது, அவன் விரும்பிய இன்பங்களை அவள் தந்தது, அவள் உடம்பைத் தொடும்பொழுது தனக்கு சிலிர்ப்பு உண்டாவது, அவளைத் தழுவிப் பெறும் இன்பம் தம் வீட்டில் இருந்துகொண்டு தமக்கு உரிமையானதை உண்பதைப் போன்றதாக இருப்பது, இருவருக்கும் இடையில் காற்றுக்கூட நுழைந்து பிரிக்க முடியாத அளவு கட்டிப்பிடித்துக் கொள்வது என்றிவை போன்றவற்றை நினைந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான். ஊடலின்பம் துய்த்து, காதலின்பம் உணர்ந்து, புணர்ச்சி இன்பம் எய்தி காமப் பயன்களைப் பெற்றவர்களாக இருக்கின்றனர் அக்காதலர்கள்.

இக்காட்சி:
'ஒரு பொருளை அறிய அறிய அதற்கு முன் அதை அறிந்திலோமே என்ற எண்ணம் ஏற்படும்; அதுபோல ஒவ்வொருமுறை இவளைக் கூடும்பொழுதும் புதிய இன்பம் கிடைக்கிறது; இந்த இன்பத்தை முன்பு அறிந்திலோமே என நினைக்கத் தோன்றுகின்றது' எனத் தலைவன் புணர்ச்சிக்குப் பின்னர் இங்கு கூறுகின்றான்.
புதுப் பொருட்களை அறிய அறிய முன்னரே இவற்றை அறியவில்லையே என்ற உணர்வு ஏற்படும். இக்கருத்து இங்கு காமப்புணர்ச்சிக்குப் பொருத்தப்படுகிறது. காதலர் ஒவ்வொருமுறை சேரும்பொழுதும் முந்தைய காம இன்பம் நிரம்பாமை அவர்களுக்குத் தெரியவருகிறது என்கிறது பாடல். கல்லாதது உலகளவு என்பதுபோல் காதலர் காணும் புணர்ச்சி இன்பமும் எல்லையில்லாதது. காதலில் ஈடுபட ஈடுபட மேலும் மேலும் ஆசை மிகுதிப்பட்டுக் கொண்டே செல்கிறது. புணரும் ஒவ்வொரு முறையும் முன் துய்க்காத இன்பம் பெறப்படுகிறது. காதலர் பழக்கம் வளர வளர புதிது புதிதாக நலம் சிறந்து விளங்குவதால் ஒருவர்க்கொருவர் இன்பஞ்சுரக்கும் புதையல் ஆகி அவர்களது காதல் சிறப்பு வெளிப்படுகின்றது. காமஇன்பத்தில் நிறைவு கொண்டதான உணர்வு தோன்றுவதே இல்லை.
குறள் சொல்லமைப்பு காதலர்கள் பல நாள் நெருங்கிப் பழகி மகிழ்ந்தவர்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது.
தலைவிக்கும் இங்கு சொல்லப்பட்ட புணர்ச்சிமகிழ்தல் எல்லாமே உண்டு ஆயினும் பெண்ணியல்பால் அவள் அதைக் கூற்றாய் வெளிப்படுத்துவதில்லை.

சேயிழை என்ற சொல்லுக்கு பெரும்பான்மையோர் சிவந்த அணிகலன் அணிந்தவள் எனப் பொருள் கூறினர். பரிதி என்ற பழம் ஆசிரியர் இதற்குச் சிவந்த விழியினை உடையாள் எனப் பொருள் உரைக்கின்றார். காமத்தின் செறிவு நிலையில் கண்களில் செவ்வரிகள் எழுவது இயல்பு. அதனைக் கண்ட காதலனுக்கு அது அவளுக்கு அணியாக அமைந்தது எனத் தோன்றியது போலும்; சிவந்த இழைகள் நிறைந்த கண்கள் எனச் சொல்கிறான்.

'அறிதோறு அறியாமை காண்டல்' என்பது கருத்துக்கு இனிய ஒரு அழகான சொற்றொடர். சொல்லாட்சி தவிர நுட்பச் செறிவும் சீரிய பொருண்மையும் கொண்ட பாடல் இது. அறிஞர்களுக்கும் பிடித்தமான குறளாக விளங்குகிறது. காமச்சுவையைச் சொல்லவந்த பாடல் என்றாலும், இதிலுள்ள அறிவுடைமைக் கருத்து -இப்பாடலின் முதற்பகுதி- பற்றியே இவர்கள் மிகையாகப் பேசினர். கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்ற நான்கு அதிகாரங்களில் அறிவுப் பொருள் பற்றிப் பலப்படப் பாடிய வள்ளுவர் அவை போதா என்றெண்ணி 41-ஆவதான பாடலாக காமத்துப்பாலிற் சென்று புதியதோர் அறிவுக்கூற்றை அறிவிக்க இதைப் படைத்தார் என்பர்.
திருக்குறளை ஒவ்வொருமுறை படிக்கும்பொழுதும் புதிய புதிய கருத்துகள் தோன்றி, புதிய கருத்தில் புது இன்பம் பெறுகிறோம் என்பது நாம் உணர்வதுவே.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

காமம் கல்வி, கேள்வி அறிவால் வருவது அல்ல. அது உணர்வால் எழுவது. காமத்திற்கும் அறியாமைக்கும் என்ன தொடர்பு? அதிகாரம் புணர்ச்சிமகிழ்தல். காதலர் துய்த்த புணர்ச்சி இன்பத்தைச் சொல்வது. இப்பாடலில் காமச்சுவைதான் சொல்லப்படுகிறது. காமத்தில் அறியாமை என்பது முன் அறியாத இன்பம் ஆகும். காதலியை நெருக்கிச் செல்லச் செல்லக் காதலனுக்கு அவள் மேல் காதல் மிகுந்தது என்பது உவமைப் பொருள்.
காதலியைச் சேருந்தோறும் என்ன ஆகிறது என்பதற்கு உரையாளர்கள் தரும் விளக்கங்களாவன:

 • புணருந்தோறும் அமையாமை.
 • செறியச் செறிய இவள் மாட்டுக் காதல் (முன் இல்லாத அளவு தோன்றுகிறது).
 • செறியுந்தோறும் இவள் திறத்து நமது உள்ளம் செல்கின்ற காமச்சுவை (மேலும் விரும்புதலை நெஞ்சில் காண்டல்).
 • இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல் (முன்னை இல்லாதது காண்டல்).
 • இவ்விளையாள் தரும் இன்பமும் கூடுந்தோறும் கூடுந்தோறும் புதுப்புதுச் சுவையுடையதாகிறது.
 • கூடுந்தோறும் காமவுணர்ச்சி அறிவது போலும்.
 • முயங்க முயங்க இன்பக்குறை புலப்படும்.
 • புணர்ச்சி செய்கிற ஒவ்வொரு தரமும் முன் அனுபவிக்காத இன்பமாகவே இருக்கிறது இந்த காம இன்பம்.
 • கூடுந்தோறும் புதுப்புது இன்பம்தோன்றுவதாம்.
 • இவளைச் சேருந்தோறும் இவள் பாலுள்ள காதல் மேன்மேலும் மிகுந்து இன்பம் தருகின்றது.
 • இடைவிடாது நெருங்க நெருங்க உண்டாகும் காதல், அறியும்தோறும் தமது அறியாமை வெளிப்படுவது போன்ற தன்மை.
 • தன் காதலியொடு மேன் மேற் கூடக்கூட முன்னையின்ப நுகர்ச்சிக்குறைவு விளங்கித் தோன்றுகின்றது.
 • இந்தப் பெண்ணிடம் கூடி வாழ வாழ முந்திய கூட்டுறவெல்லாம் இன்பம் இல்லாதது போலத் தோன்றுகிறது.
ஒவ்வொரு முறை கூடும்போதும் பெறும் காம இன்பம் முன் அனுபவிக்காத இன்பமாகவே இருக்கிறது என்றும், இவளைச் சேருந்தோறும் இவள் பாலுள்ள காதல் மேன்மேலும் மிகுகிறது என்றும், இவளைப் பொருந்துந்தோறும் இன்பக்குறை புலப்படும் என்றும் உரைகாரர்கள் கூறினர். மணக்குடவர் 'புணருந்தோறும் அமையாமை' என ஒர் சிறப்பான விளக்கம் தந்தார். அதைத் தழுவி பரிமேலழகர் 'செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையாய் முடியாநின்றது எனத்தன் ஆராமை கூறியவாறு' என உரை செய்தார்.

எப்பொழுதெல்லாம் கூடுகிறோமோ அப்பொழுதெல்லாம் காமஇன்பக் குறை தெரிகிறது என்கிறது பாடல். இதன் பொருளாவது இப்பொழுது கூடியபோது முன் இருந்த இன்பக் குறை தெரிந்தது. அடுத்த முறை கூடும்போது அதை ஈடு கட்டிக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றும். காம இன்பத்தில் எப்பொழுதும் நிறைவு உண்டாகாத நிலைதான் இருக்கும்போலும். அதாவது அவளை எப்பொழுதும் நெருக்கிச் செல்ல வேண்டும் என்ற உணர்வு தோன்றிக் கொண்டே இருக்கும்.
அன்பு கொண்டவரிடம் காமம் பெறும்போது இன்னும் காமஇன்பம் அறியவேண்டும் என்று அதில் ஈடுபடுவர். அவ்வழி காதல்வாழ்வு இன்பமானதாக நீடித்துக்கொண்டே இருக்கும். அறிவுக்கு எல்லையில்லை; அதுபோல கலவி இன்பத்திற்கும் எல்லை காண இயலாது என்பது செய்தி.

ஒவ்வொரு முறை கூடும்போதும் அது நிறையா இன்பமாகக் காதலர்களுக்குத் தோன்றுகிறது என்பது இக்குறள் கூறும் கருத்து.

ஒரு பொருளை அறிய அறியக் கற்பவன் அறியாமை புலப்படுவது போல சிறந்த அணிகலன் உடையவளைக் கூடுந்தோறும் காமஇன்பக்குறை தோன்றுகிறது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புணர்ச்சி மகிழ்தல் என்றுமே நிறைவு பெறாத இன்பம்தான்.

பொழிப்பு

அறிய அறிய அறியாமை புலப்படுவது போலச் சிறந்த அணிகலன் உடையவளைப் கூடுந்தோறும் காமஇன்பம் புதிது புதிதாக உள்ளது.