ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்
(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல்
குறள் எண்:1109)
பொழிப்பு (மு வரதராசன்): ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர் பெற்ற பயன்களாகும்.
|
மணக்குடவர் உரை:
ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை அன்பினாற் கூடினார் பெற்ற பயன்.
காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.
பரிமேலழகர் உரை:
(கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது.) ஊடல் உணர்தல்
புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்.
('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும், அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவவூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினராய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளின் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா', என அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
சேர்க்கை இனியதாகும் பொருட்டு ஊடுதலும் அதனை அளவறிந்து நீங்குதலும் பின்னர்க் கூடுதலும் காதலால் பிணிக்கப்பட்டவர்கள் பெற்ற பயன்களாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம் கூடியார் பெற்ற பயன். .
பதவுரை: ஊடல்-பிணங்குதல்; உணர்தல்-ஊடல் நீங்கல்; புணர்தல்-கூடல்; இவை-இப்பொருள்கள்; காமம்-காதல்; கூடியார்-எய்தியவர், கைகூடியவர்; பெற்ற-அடைந்த; பயன்-நன்மை,விளைவு.
|
ஊடல் உணர்தல் புணர்தல் இவை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலுமென்னுமிவை;
பரிப்பெருமாள்: ஊடுதலும் ஊடல் தீர்தலும், பின்னைப் புணர்தலும் எனஇவை;
பரிதி: ஊடலும் ஊடிக்கூடவேண்டும் என்று நினைத்தலும், புணர்தலும்;
காலிங்கர்: நெஞ்சே! இன்னமும் கேளாய்; இவ்வளவு அன்றிப் பலவுள. அவை யாவை எனில் ஊடி இன்புறுதலும், அவ்வூடல் தீர்த்தற்குப் பணிதலும்,
பணிந்து பணிமொழி கூறி இன்புறுதலும், ஊடல் தீர்ந்தவிடத்துச் செறியக் கலந்து இன்புறுதலும் என்னும் இவை எல்லாம்;
பரிமேலழகர்: (கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது.) புணர்ச்சி
இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; [வரைவு கடாவியாட்கு-தலைவனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய தோழிக்கு; அதனை-ஊடலை]
'ஊடலும், ஊடல் நீங்குதலும், பின்னர்ப் புணர்தலும் எனஇவை' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை சொல்வர். உணர்தல் என்பதற்கு
மற்றவர்கள் ஊடல் தீர்தல் என்று பொருள் கூற பரிதி ஊடிக்கூடவேண்டும் என்று நினைத்தல் என்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிணங்குதல் தெளிதல் சேருதல் இவை', 'ஊடல், ஊடல் காரணத்தை அறிந்து தெளிதல், கூடல் என்னும் இவை',
'ஊடலும் ஊடல் காரணத்தை அறிதலும், கூடலும் ஆய இவைகள்', 'சிறு கோபங்கொள்ளுதலும், அந்தக் கோபத்தைத் தணித்து உணர்ந்துவிடுவதும் பின்னர்க்
கூடுவதும்' என்றபடி பொருள் கூறினர்.
ஊடுதலும், ஊடல் நீங்குதலும், பின்னர்ப் புணர்தலும் எனஇவை என்பது இப்பகுதியின் பொருள்.
காமம் கூடியார் பெற்ற பயன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பினாற் கூடினார் பெற்ற பயன்.
மணக்குடவர் குறிப்புரை: காமம் - அன்பு. புணர்தலெனினும் பேணுதலெனினும் ஒக்கும். ஊடற் குறிப்பு தோன்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப்
புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.
பரிப்பெருமாள்: அன்பினாற் கூடினார் பெற்ற பயன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: காமம்-அன்பு. ஊடற்குறிப்புத் தோற்றநின்ற தலைமகளை ஊடல் தீர்த்துப் புணர்ந்த தலைமகன் அதனால் வந்த மகிழ்ச்சி கூறியது.
காமம் கூடினார் பெற்ற பயன் என்றான். முன்பு, இவை கண்டு அறியாமையால். இவையெல்லாம் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லினவும் தலைமகளே
கேட்பது பயனாகச் சொல்லினவும் என்று கொள்ளப்படும். இவற்றுள் நீங்கின் தெறூஉம் என்பது முதலாகக் கூறியது என்னையோ எனின், முதலாகக் கூறிய குறள்
நான்கும் நலம் புனைந்துரைத்தலின் பின்னும், காதற் சிறப்புரைத்தலின் பின்னும், நாணுத்துறவுரைத்தலின் பின்னும் கூறற்பாலது. ஈண்டுக் கூறியது களவுக் காலத்துக்
கூடும் கூட்டம் எல்லாம் அருமையுடைத்து ஆதலானும் ஆண்டுத் தனி ஓரதிகாரம் கூறவேண்டுதலானும், அது கூறுங்காலும் புணர்ச்சி மகிழ்தல் என்று
கூறவேண்டுதலானும் ஈண்டுச் சேரக் கூறப்பட்டன. ஆயின், இக்கூட்டங்கட்கு நிமித்தமாகிய நலம்புனைந்துரைத்தல் முதலாகிய அதிகாரங்களை
அருமையிற்கூடல் என்று கூறவேண்டும் பிற எனின் ஒக்கும். அவை எல்லாம் புணர்ந்த பின்பு நிகழ்தலானும் பாங்கற் கூட்டமும் தோழியிற் கூட்டமும்
இயற்கைப் புணர்ச்சியோடு ஒத்த இயல்பிற்று அன்மையானும். அவைதாம் பெரும்பான்மையும் பிரிந்து கூடுதலானும், கூறப்படா என்க. இதனுள் ஆலிங்கனம்
முதலாயின கூறாது பசுக்களைப் போலப் புணர்ச்சி மாத்திரமே கூறிவிட்டது என்னை எனின், 'கண்டு கேட்டு' (1101) என்றார் ஆகலின் அவையெல்லாம்
இதனானே சொன்னார் என்று கொள்ளப்படும். இது காமப்பகுதி அன்றே! இதனை வடநூல் ஆசிரியர் விரித்துக் கூறியதெல்லாம் அளவும், காலமும்,
வேகமும் ஒவ்வாதாரை ஒப்பிக்கும் நெறியும், கைக்கிளை, பெருந்திணைப்பாற்பட்ட கன்னியரைக் கூடுந் திறனும் கணிகையர் சீலமும் கூறினார். ஈண்டு
உழுவலன்பினாற் கூடுகின்ற நற்கூட்டம் ஆதலின் இவையெல்லாம் விதியினாலே ஒக்க அமைந்து கிடக்கும் ஆதலான் கூறாராயினர் என்க.
பரிதி: காம மகிழ்வார் பெற்ற பயன் என்றவாறு.
காலிங்கர்: காம இன்பம் கலவியைக் கலந்தார் பெற்ற பெரும்பயன் என்றவாறு.
பரிமேலழகர்: வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும், அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும்,
அவ்வூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினராய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற
பயன். அப்பயன் இருதலைப் புள்ளின் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா', என அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு. [பரத்தையர் மாட்டாதலும்-பொது மகளிரிடத்து உளதாதலும்; ஊடி நிற்றல் - பிணங்கி நிற்றல். உழுவல் அன்பு - பிறவி தோறும் தொடர்ந்து வரும் நிறைந்த அன்பு; வரைந்தெய்தல் - மணம் செய்து கொள்ளுதல்]
'காம இன்பம் அடைந்தவர் பயன்கள்' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறுவர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இன்பக் கூட்டுறவினர் பெற்ற பயன்கள்', 'பேரன்பு செய்து இன்புற்ற காதலர்கள் எய்திய பயன்களாம்', 'இன்பத்தை இடைவிடாது
அடைபவர் அடையும் பயன்களாம்', 'காதல் வாழ்வு நிறைவேறப்பட்ட இருவர் அனுபவிக்கும் இன்பப் பயனாகும்' என்றவாறு உரை பகர்வர்.
அன்பினாற் கூடினார் பெற்ற பயன்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
ஊடலும், ஊடல் நீங்கலும், புணர்தலும் அன்பினாற் கூடினார் பெற்ற பயன்கள் என்பது பாடலின் பொருள்.
களவுஒழுக்கத்தில் ஊடலுக்கு இடம் உண்டா?
|
காமம் கனியும் முறைமை.
ஊடலும், அதனைத் தெளிவித்தலும், பின்னர்க் கூடுதலும், என்னும் இவை காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாம்.
காட்சிப் பின்புலம்:
காதலனும் காதலியும், ஊரார் அறியாமல், சந்தித்தனர், பேசினர், ஒருவரையொருவர் புரிந்து கொண்டனர். உள்ளம் ஒன்றிய அவர்கள் உறவாடிப் பின் கூடினர். களவு ஒழுக்கத்தில் துய்த்த அந்த இன்பத்தை நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான் தலைவன். அது ஐம்புல இன்பங்களும் காதலியிடம் ஒருங்கே குடிகொண்டிருக்கும் தன்மையது; மேல் உலகில் பெறும் இன்பத்தினும் மேலானது; தன்னை முழுதாக எனக்குத் தந்தாள்; ஒவ்வொருமுறை கூடும்போதும் புத்துயிர் தருபவள் இவள்' என்று பலவேறு வகையில் புணர்ச்சி மகிழ்ந்ததைச் சொல்லிக் கொண்டிருக்கின்றான்.
இக்காட்சி:
காமத்தில் மூன்று நிலைகள் உள என வள்ளுவர் இங்கு கூறுகிறார். அவை ஊடல், ஊடல் நீங்கல், புணர்தல் என்பன. இம்மூன்று நிலைகளிலும் காதலர்கள் பயன் பெறுகின்றனர் எனவும் கூறுகின்றார்.
ஊடல் கொள்வதில் ஒரு சுவையுண்டு. உணர்தலும் அதாவது அவ்வூடல் நீக்குதலும் ஒருவகையான கிளர்ச்சி தரவே செய்யும். எதிர்பாலரின் ஊடலை நீக்குவதற்குத் தனித்திறன் வேண்டும். அவரின் உளநிலையை அறிந்து, ஊடலுக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டபின், அதற்குத்தக நேரும் ஊடல் நீக்குதல் நிகழ்வுகளும் மகிழ்ச்சி தருவனவாகவே இருக்கும். பின் இறுதியாகப் புணரும் இன்பம். இவை காதல் கைகூடியவர் பயன்களாகின்றன.
மாந்தர் இருவர், எந்தச் சமயத்திலும் எங்காகிலும், கலந்து பழகும்போது கருத்து வேறுபாடு காரணமாக சிறு சிறு மோதல் நிகழ்வது இயல்பு என்று உளநூல் அறிஞர்கள் சொல்வர். இரு மனங்கள் ஒன்றுபட்ட காதல் வாழ்க்கையிலும். சில வேளைகளில் சில காரணங்களால் அவை வேறுபடுவது உண்டு. அப்பொழுது ஊடல் என்னும் சிறு சண்டை உண்டாகும்.
ஊடல் என்பது காதலரிடை உண்டாகும் நுண்ணிய உணர்வுகளுடன் கூடிய சிறு பிணக்கு அல்லது சண்டையாகும். பொய்க்காரணங்களுக்காவும்
ஊடல் கொள்வர். பிணக்கு கொண்ட இருவரிடை சினம் இல்லை, வெறுப்பு இல்லை. இப்பிணக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும் அமையும். இருவருடைய உடலின்பமும் இனிதாக அமையும் பொருட்டு ஊடல் தேவை என்பது வள்ளுவரின் திடமான கருத்து.
எனினும் ஊடலை மிகவும் கருத்துடன் கையாளவேண்டும். ஊடலுக்கான காரணங்கள்-ஊடல் நீடிக்கும் கால அளவு போன்றன, காதல் கொண்டவர்களின் உளவியல் நிலைகளை -உள்ளப்பக்குவம், சிறுசண்டையை எதிர்கொள்ளும் அவர்களது மனத்திறன் ஆகியவற்றைப் பொருத்ததாம். இதன் அளவு உணவுக்கு உப்பு அமைந்தாற் போன்று இருக்கவேண்டும் என்று குறள் மற்றோரிடத்தில் சொல்லும். பிணக்கம் தெளிதல் உணர்தல் எனப்படும். இருவருடைய உள்ளங்களிலும் ஒத்திசையும் தன்மை இருப்பதற்காக ஒருவர் மற்றவரின் குறை நிறைகளை உணர்ந்து, இருவருடைய உடல் நிலையிலும், உணர்விலும், இன்பத்திலும் சமனிய நிலை ஏற்படுமாறு ஒருவருக்கொருவர் நேர்செய்து கொள்வதுதான் உணர்தல் என்பது. ஊடல் தீர்த்தற்குக் காதலர்கள் பணிதலும் செய்வர். உணர்தல் உண்டாகா விட்டால் இன்பத்துக்கு ஊறு விளையும். ஊடலும் தெளிதலும், புணர்ச்சியை வளர்த்து, ஊடாடியவர்களுக்கு மனநலமாய்ப் புணர்தலில் முடியும். ஊடாமல் கூடுதலில் இன்பம் குன்றும்; புணரா உடலால் அன்பு குறையும்.
ஊடல், உணர்தல், கூடல் ஆகியன காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர் அடைந்த பயன்கள் என்கிறது பாடல். பயன் என்ற சொல் நன்மை என்ற பொருள் தரும்.
புணர்ச்சி என்ற சொல்லுக்கு சேர்வது/பொருந்துவது (செப்பின் புணர்ச்சி... ' (887)), நண்பர்கள் ஒன்று கூடுவது/சந்திப்பது (புணர்ச்சி பழகுதல் வேண்டா........ (785)), உடல் உறவு ஆகிய பொருள்கள் உண்டேனும், குறளில் அது உடல் உறவைக் குறிப்பதே பெரும்பான்மை. இங்கும் அச்சொல் உடல் உறவையே குறித்து நிற்கிறது.
களவுஒழுக்கத்தில் ஊடலுக்கு இடம் உண்டா?
காமத்துப்பாலைப் பரிமேலழகர் களவியல், கற்பியல் என இரு பெரும்பகுதிகளாகப் பிரித்து உரை வரைந்தார். இப்பிரிவைப் பிறர் பலரும் ஏற்றுக் கொண்டனர்.
இக்குறள் களவுக் காதல் கூறும் பகுதியில் வருகிறது.
இனி, களவுக் காதலில் ஊடலும் உணர்தலும் எங்கே பொருந்துகின்றன என்ற கேள்வி எழுதுகிறது. பழைய ஆசிரியர்களில் பரிப்பெருமாளும் பரிமேலழகரும் இதில் ஐயம் கொண்டனர் என்பது அவர்கள் உரைகளை நோக்கும்போது புலப்படும்.
பரிப்பெருமாள் உரை இயற்கைப் புணர்ச்சிக்கு முன் ஊடல் ஏது என்பதுபட அமைகிறது.
ஊடலும் உணர்தலும் வரைந்துகொண்ட (மணம்செய்துகொண்ட) இல்லொழுக்கம் உடையார்க்கே உரியதாகலின் களவியல் கூறும் இப்பகுதிக்குப் பொருந்தாது எனப் பரிமேலழகர் கருதியதால் காமம் கூடியார் என்ற தொடர்க்கு வரைந்தார் எனப் பொருள்கூறி வரைந்தார் பெறும் இன்பம் எமக்கு வேண்டாம்; களவொழுக்க இன்பமே சிறந்துநிற்கிறது என்று தலைவன் கூறினான் என்பதாக உரைவிளக்கம் செய்து அமைதி காட்டுவார். ஆனால் பரிமேலழகரின் இவ்விளக்கம் பொருத்தமாக இல்லை.
புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம் முன்பின் அறியாத பெண்ணோடு ஒரு புரியாத அச்சம் தோன்ற உவகை பெறக் கூடுதல் என்னும் அருமையிற்கூடல் (அறியாது கூடுதல்) பற்றியது என்பதால் ஊடல் எப்படி களவுப் பகுதியில் வந்தது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
எப்படிக் குறிப்பறிதல் அதிகாரத்தில் உரையாசிரியர்கள் தொடக்கத்தில் இருந்து காதலரிடை புணர்ச்சி ஒன்றே அவர்கள்
நோக்கு என்பதுபோல உரை செய்து காதல் மலரும் நயம் அதிகாரம் முழுக்க கிடப்பதைக் கூறத் தவறினார்களோ அது போலவே இவ்வதிகாரத்திலும்
அவர்கள் விலங்குப் புணர்ச்சி அதாவது அன்புப் பரிமாற்றம் இல்லாத கூடுதல் கொண்டது போல் உரை செய்தனர். வள்ளுவர் கருத்துப்படி களவுக் காதல்
என்பது மற்றவர்கள் அறியாமல் காதலர்கள் சந்திப்பது, உரையாடுவது, ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்வது, உள்ளங்கள் ஒன்றுபடுவது,
புணர்வது என்பனவற்றைக் குறிப்பது. களவொழுக்கம் மேற்கொண்ட காதலர்களிடை புணர்தல் மட்டுமல்ல ஊடலும் உணர்தலும் நிகழ்ந்தன என்பதைப் புரிந்து கொண்டால் பாடலுக்கு இயலியைபு உண்டாகி குறட்கருத்து தெளிவுபடும். அதாவது ஊடல், உணர்தல், புணர்தல் என்ற நிலைகள் களவுக் காதலில் ஈடுபடுவோர், கற்புவாழ்க்கை உடையோர் ஆகிய இருசாரார்க்கும் ஏற்றது என்ற புரிதல் வேண்டும்.
|
'காமம் கூடியார்' யார்?
காமம் கூடியார் என்ற தொடர்க்கு அன்பினாற் கூடினார், காம மகிழ்வார், காம இன்பம் கலவியைக் கலந்தார், வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர், காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர், காதல் கைகூடியவர், இன்பக் கூட்டுறவினர், காமத்திற் புணர்ந்த காதலர்கள், நிலையான அன்பு கூடிய துணைவன் துணைவியர், காதலால் பிணிக்கப்பட்டவர்கள், திருமணம் செய்துகொண்டு இன்பத்தை இடைவிடாது அடைபவர், காதல் நிரம்பிய உறவு, வரைந்து கொண்டு காமவின்பஞ் சிறந்தவர், காதல் வாழ்வு நிறைவேறப்பட்ட இருவர், மணந்தவர் என்றவாறு பொருள் கூறினர்.
'ஊடுதல்-ஊடாட்டம்-இருமன இடையாட்டம்-ஒருயிராய் முற்றிப் பழுக்கும் காட்சி-களிப்பு-இன்பம். இந்த வரலாறே காமத்துப்பால். ஊடல்,உணர்தல், புணர்தல் என்ற மூன்றும் ஊடலில் விளக்கமாக அமைவது தெளிவு' என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம். ஊடலிலும் உணர்தலிலும் காதலர்கள் வாழ்க்கை அனுபவம் பெறுகின்றனர். இது அறிந்த பயனாகும். புணர்தல் தரும் மகிழ்ச்சி இன்பப் பயனாகும். இவ்விதம் அனுபவமும் இன்பமும் பயன்களாகப் பெறுவர் காதல் கூடியவர். காதல் கைகூடியவர்க்கே இம்மூன்று நிலைகளிலும் பயன் கிட்டும் என்பது
குறிப்பு.
'காமம் கூடியார்' என்ற தொடர் காதல் வாழ்வு நிறைவேறப்பெற்றவர் என்ற பொருள் தரும்.
|
ஊடலும், ஊடல் நீங்கலும், புணர்தலும் அன்பினாற் கூடினார் பெற்ற பயன்கள் என்பது இக்குறட்கருத்து.
காதல் வாழ்வு கொண்டோர் புணர்ச்சி மகிழ்தல் எய்தற்கான பாலியல் பாடம்.
ஊடல், ஊடல் காரணத்தை அறிந்து தெளிதல், கூடல் என்னும் இவை காதல் நிறைவுபெற்றவர்கள் எய்திய பயன்களாம்.
|