| 
 
 
 
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபொழிப்பு (மு வரதராசன்): காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்.போழப் படாஅ முயக்கு
 (அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் 
குறள் எண்:1108)
 
 
 
 
 | 
 
| 
 மணக்குடவர் உரை: 
ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்; காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம்.இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.
 பரிமேலழகர் உரை: 
(ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்ற தொக்கும்) 
வளி இடை போழப்படா முயக்கு - ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; வீழும் இருவர்க்கு இனிதே - ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே.(முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து. களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு.)
 சி இலக்குவனார் உரை: 
காற்று இடையே நுழைந்து பிரிக்கப்படாத கூட்டுறவு, விரும்பும் காதலர் இருவர்க்கும் இனிமையைத் தருவதே. 
 | 
| பொருள்கோள் வரிஅமைப்பு:வளியிடை போழப் படாஅ முயக்கு வீழும் இருவர்க்கு இனிதே.
 பதவுரை: வீழும்-விரும்புகின்ற, காதலில் ஆழும், (ஒருவரையொருவர்) விழைவார்; இருவர்க்கு-(காதலன் காதலி) இருவருக்கு; இனிதே-இனிமையானதே; வளி-காற்று; இடை-நடுவில்; போழப்படாஅ-போகாத, இடையறுக்கப்படாத, பிளக்கப்படாத; முயக்கு-தழுவல், புணர்ச்சி. 
 | 
| 
 வீழும் இருவர்க்கு இனிதே:  
 இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:மணக்குடவர்: ஒத்த காதலுடையா ரிருவர்க்கும் இனிதாம்;
 பரிப்பெருமாள்: காதலுடையார் இருவர்க்கு இனிதாம்;
 பரிதி: விருப்பம் எய்திய நாயகற்கும் நாயகிக்கும் இனியது ஒன்று;
 காலிங்கர்: நெஞ்சே! உள்ளுற விரும்பும் விருப்பம் இருவர்க்கும் சால இனியது ஒன்றுளது;
 பரிமேலழகர்: (ஒத்த அன்புடைய நுமக்கு ஒரு பொழுதும் விடாத முயக்கமே இனியது என வரைவுகடாய தோழிக்குச் சொல்லியது.) 
(நீ சொல்லுகின்ற தொக்கும்) ஒருவரையொருவர் விழைவார் இருவர்க்கும் இனிதே; [வரைவுகடாய-மணம் செய்துகொள் என்று வினாவிய]
 பரிமேலழகர் குறிப்புரை: முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. 'ஈண்டு இருவர் இல்லை இன்மையான், இஃது ஒவ்வாது' என்பது கருத்து.
 'ஒருவரையொருவர் விரும்பும் காதலர் இருவர்க்கும் இனிமை தருவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'ஒத்த காதலுடைய இருவர்க்கும் இன்பம் தரும்', 'விரும்பும் காதலர் இருவர்க்கும் இனிமையைத் தருவதே', 'காதலிக்கும் இருவர்க்கும் இன்பம் தருவது', 'காதலர் இருவர்க்கும் பேரின்பமாம்' என்றபடி பொருளுரைத்தனர். ஒருவரையொருவர் காதலிக்கும் இருவர்க்கும் இன்பமாம் என்பது இப்பகுதியின் பொருள். வளியிடை போழப் படாஅ முயக்கு:  
 இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:மணக்குடவர்: காற்றால் இடை யறுக்கப்படாத முயக்கம்.
 மணக்குடவர் குறிப்புரை: இது புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.
 பரிப்பெருமாள்: காதலுடையார் இருவர்க்கு இனிதாம்; காற்றும் இடையறுக்கப்படாத முயக்கம்.
 பரிப்பெருமாள் விரிவுரை: என்றது இடையறுதல் இல்லாத முயக்கம் என்றவாறாயிற்று. தோழியிற்கூடிய தலைமகன் பகற் குறியாயினும் இரவுக்குறியாயினும் ஒழுகாநின்றுழிக்
காவல் கடுகுதல் நிலவு வெளிப்பாடு அல்லகுறி முதலாயினவற்றால் இடையீடுபட்ட தலைமகட்குத் தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தமையும்
தோற்ற ஊடற் குறிப்பினால் தலைமகன் கூறியது. புணர்ச்சி விருப்பினால் கூறியமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது.
 பரிதி: தென்றல் இடைபோகுதற்கு அரிய.....கலவி என்றவாறு.
 காலிங்கர்: அஃது யாது எனின் நுண்ணிதாகிய காற்றும் ஊடு போதரற்கு இடனில்லாதவாறு இறுக முறுக முயங்கப்பெறும் முயக்கம் என்றவாறு.
 பரிமேலழகர்: ஒரு பொழுதும் நெகிழாமையின் காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்; [நெகிழாமை-தளராமை]
 பரிமேலழகர் குறிப்புரை: களவிற்புணர்ச்சியை மகிழ்ந்து வரைவு உடன்படான் கூறியவாறு. [வரைவு உடன்படான்-மணத்திற்கு இசையாதவன்]
 'காற்றால் இடையறுக்கப்படாத முயக்கம்' என்று பழைய ஆசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்கு உரை செய்தனர். இன்றைய ஆசிரியர்கள் 'காற்று இடையில் புகாதவாறு நன்கு முயங்குதல்', 'காற்றும் புகாதபடி தழுவும் தழுவல்', 'காற்று இடையே நுழைந்து 
பிரிக்கப்படாத கூட்டுறவு', 'இடையில் காற்றுக் கூடப் புகுந்து பிளவுண்டாக்க முடியாதபடி இறுகத் தழுவிக் கொண்டிருப்பது' என்றவாறு உரை கூறுவர். காற்றும் ஊடே நுழைந்து பிளக்க இயலாதவாறு இறுகத் தழுவிக் கொண்டிருப்பது என்பது இப்பகுதியின் பொருள். | 
| நிறையுரை: காற்றும் ஊடே நுழைந்து பிளக்க இயலாதவாறு இறுகத் தழுவிக் கொண்டிருப்பது வீழும் இருவர்க்கும் இன்பமாம் என்பது பாடலின் பொருள்.
 'வீழும்' என்றால் என்ன?
 | 
| நெருக்கித் தழுவிக் கொண்டிருக்கும் காதலர்கள் அந்நிலையை விட்டு நீங்க விரும்பாமல் உள்ளனர்.   காற்றும் நடுவே புகுதற்கு முடியாதவாறு இறுகத் தழுவுதல், விரும்பிக் கூடும் காதலர் இருவர்க்கும் இன்பமாகும்.இக்காட்சி:காட்சிப் பின்புலம்:
 காதலனும் காதலியும் களவொழுக்கம் மேற்கொண்டவர்கள். ஒத்த அன்பினர் என்பதைத் தெரிந்து கொண்டபின் ஒருவர்க்கு மற்றவர் உரியவர் என்ற உணர்வுடன் ஒருவரையொருவர் தழுவிக்கொள்கின்றனர். முதற்கூடுதலில் ஐம்புலன்களால் கிடைக்கும் சுவைகள் எல்லாம் ஒருசேர ஒரே நேரத்தில் துய்த்ததை எண்ணி மகிழ்கிறான் தலைவன். தன் காதலியே தனக்கு நோயாகவும் அவளே அதைத் தணிக்கும் மருந்தாகவும் இருக்கிறாள் என்கிறான். தான் காதலியுடன் கூடிப்பெற்றது சொர்க்கலோகத்தினும் மேலான இன்பமாக இருந்ததாகக் கூறுகிறான். அவள் என்னைவிட்டு நீங்கினால் எனக்குச் சுடுகிறது; நெருங்கி இருந்தால் குளிர்வாக இருக்கிறது; இத்தன்மைய தீயை இவள் எங்கிருந்து அடைந்தாளோ? என வியக்கிறான். அவள் தோள்கள் நான் விரும்பிய இன்பங்களைத் தந்தன. அவள் உடம்பைத் தொட்டால் எனக்கு சிலிர்ப்பு உண்டாகிறதே! அவளைத் தழுவிப் பெறும் இன்பம் தம் வீட்டில் இருந்துகொண்டு தமக்கு உரிமையானதை உண்பதைப் போன்றது எனச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
 
 இப்பொழுது தழுவல் இறுகிக்கொண்டே போகிறது. இருவர் உடல்களுக்கும் இடையில் காற்றுக்கூட நுழைந்து அவர்களைப் பிரிக்க முடியாத அளவு கட்டிப்பிடித்துக் கொள்கின்றனர். உடலால் கட்டுண்டு கிடக்கின்றவர்களுக்கு அதனால் உண்டான பேரின்பத்தை இழக்க விருப்பமில்லை. எனவே தென்றலும் அவர்களுக்கு இடையில் வரக்கூடாது என எண்ணுகின்றனர். காதலர் இருவருக்கும் இன்பம் பெருக்கிய அம்முயக்கம் காற்றும் ஊடறுத்துச் செல்லாதவாறு அவ்வளவு நெருக்கமாக இருந்தது எனச் சொல்லி இருவரும் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கூடி மகிழ்ந்த நிலை புலப்படுத்தப்பட்டது.  முயக்கு என்பதற்குத் தழுவல் என்றும் புணர்ச்சி என்றும் பொருள் உள. அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல் என்பதால் காதலனும் காதலியும் தழுவிக்கொண்டதை புணர்ச்சி இன்பத்தில் ஈடுபடுவதைச் சொல்வதாக உரையாளர்கள் கொள்வது பொருத்தமே. முயக்கத்தின் தன்மையை காலிங்கர் உரை 'நுண்ணிதாகிய காற்றும் ஊடு போதரற்கு இடனில்லாதவாறு இறுக முறுக முயங்கப்பெறும் முயக்கம்' என்கிறது. இவருரையிலுள்ள 'இறுக முறுக முயங்கப்பெறுதல்' என்ற தொடர் குறட்காட்சியை இன்னும் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. பரிமேலழகர் 'ஒரு பொழுதும் விடாத முயக்கம்' எனக் குறிக்கிறார். 
மணக்குடவரும் பரிப்பெருமாளும் புணர்ச்சி நிலை எனக் கொள்ளாமல் புணர்ச்சி விருப்பம் என்று கூறுகின்றனர். அவர்கள் உரைக்குறிப்பு 'புணர்ச்சி விருப்பினால் கூறினமையால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று. இது குறிப்பினால் புகழ்ந்தது' எனச் சொல்கிறது. 
மணக்குடவர் உரைக்கு விளக்கம்போலப் பரிப்பெருமாள் 'புணர்ச்சி அல்லகுறிப்படுதல் முதலாயவற்றால் இடையீடுபட்டவழி அவட்குளதாகும் ஊடற்குறிப்பினால் இத்தகைய முயக்கம் இனிதாம் எனத் தலைவன் கூறினான்' என்கின்றார். பரிப்பெருமாளது உரைக்குறிப்பு தலைவனின் பரத்தமை காரணமாகத் தலைவியிடம் தோன்றிய ஊடற் குறிப்பினால் அவன் கூறியது எனச் சொல்கிறது. குறளில் பரத்தையர் பிரிவு எங்கும் சொல்லப்படவில்லை என்பதால் பரிப்பெருமாளது விளக்கம் ஏலாது.   | 
| 'வீழும்' என்றால் என்ன?  'வீழும்' என்ற சொல்லுக்கு ஒத்த காதலுடைய, காதலுடைய, விருப்பம் எய்திய, உள்ளுற விரும்பும், ஒருவரையொருவர் விழைவார், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர், தம்முள் ஒருவரையொருவர் விரும்புகின்ற காதலர், காதலர், ஒருவரையொருவர் காதலிக்கின்ற, ஒத்த அன்புடைய, விரும்பும் காதலர், ஒருவரையொருவர் விழையும், புணர்ச்சி விரும்பும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.  வீழும் என்பது வீழ்தல் என்ற சொல்லின் அடிப்படையில் காதலில் வீழந்த என்ற பொருளில் ஆளப்பட்டது. சி இலக்குவனார் 'ஆங்கிலத்தில் Fall in love என்பதுபோல் தமிழிலும் 'வீழ்தல்' என்று வந்துள்ளது' என்பார்.   'வீழும்' என்பதற்கு  தம்முள் ஒருவரையொருவர் விரும்புகின்ற என்பது பொருள்.  | 
| காற்றும் ஊடே நுழைந்து பிளக்க இயலாதவாறு இறுகத் தழுவிக் கொண்டிருப்பது ஒருவரையொருவர் காதலிக்கும் இருவர்க்கும் இன்பமாம் என்பது இக்குறட்கருத்து. 
 
 
  ஈருடல் ஓருடல் ஆன புணர்ச்சி மகிழ்தல்.   
  காற்று இடையில் நுழையாதவாறு தழுவுதல் மனமொன்றிய காதலர் இருவர்க்கும் பேரின்பமாம். 
 
 
 
 |