உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்
(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல்
குறள் எண்:1106)
பொழிப்பு (மு வரதராசன்): பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும்.
சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்- தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன.
(ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான்.
தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
(அவள் தோள்களை நான்) அடையும் போதெல்லாம் என் உயிருக்கும் புதுப்புது செழிப்புகள் உண்டாகும்படி (அவளுடைய மேனி என் உடலைத்) தீண்டுவதால் அவளுடைய உடல் அமிழ்தத்தினால் செய்யப்பட்டிருக்கிறது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன.
பதவுரை: உறு(ந்)தோறு-பொருந்தும் போதெல்லாம், சாரும்போதெல்லாம், தொடும்போதெல்லாம்; உயிர்-உயிர்; தளிர்ப்ப-(இன்பத்தால்) தழைக்க, தளிர்க்க, தழைக்க; தீண்டலால்-தொடுதலால்; பேதைக்கு-இளம்பெண்ணுக்கு; அமிழ்தின்-அமிழ்தத்தால், அமுதத்தால்; இயன்றன-செய்யப்பட்டன; தோள்-தோள்.
|
உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால்;
பரிப்பெருமாள்: சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால்;
பரிதி: தென்றற் கொடுமையாலும் சந்திரன் கொடுமையாலும் வற்றின சரீரத்தை நாயகி தீண்டச் சரீரம் தளிர்க்கையினாலே;
காலிங்கர்: நெஞ்சமே! யாம் இங்ஙனம் இருந்தவள் மெய்யோடு மெய்யுறுதோறும் ஒருகாலைக்கு ஒருகால் நமது உயிர் தளிர்த்து ஏமுறுமாறு மயங்கிச் சேறலான்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்;
பரிமேலழகர் பதவுரை: தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.
'தழுவும்போதெல்லாம் என் உயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உடல் அணையுந்தோறும் உயிர் தழைத்தலால்', 'முயங்கும் போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படி அவள் தீண்டுதலின்', 'சேருந்தோறும் வாடிய உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால்', 'அடையும்தோறும் உயிர் தழைக்குமாறு தொடுதலால்' என்றபடி உரை தந்தனர்.
'சேரும் பொழுதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தொடுதலால்' என்பது இப்பகுதியின் பொருள்.
பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.
பரிப்பெருமாள்: பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும்.
பரிப்பெருமாள் கருத்துரை: சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.
பரிதி: நாயகிக்கு அமுதினால் பண்ணின தோள் என்றவாறு.
காலிங்கர்: இப்பேதையாட்கு அமிழ்தினான் அமைத்தன போலும் இத்தோள்களானவை என்றவாறு.
பரிமேலழகர்: இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன.
பரிமேலழகர் குறிப்புரை: ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான்.
'பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும்' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்குப் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இவளுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆயவை', 'அப்பெண்ணுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆகியன', 'இம்மாதினுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டன', 'இளநங்கைக்குத் தோள்கள் அமிழ்தத்தினால் செய்யப்பட்டன (போலும்)' என்றபடி பொருள் உரைத்தனர்.
'இவளுக்குத் தோள்கள் அமுதால் செய்யப்பட்டன' என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
உடல் அணையுந்தோறும் உயிர் தழைத்தலால் இப்பெண்ணுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆகியன என்பது இக்குறட்கருத்து.
காமக்கூட்டம் எப்படி உயிர் தளிர்த்தலைச் செய்யும்?
|
தலைவியைத் தழுவும்போது தான் புத்துயிர் பெறுவதாகக் காதலன் கூறுகிறான்.
உடல் அணையுந்தோறும் உயிர் தழைத்தலால் இவ்விளம்பெண்ணுக்குத் தோள்கள் அமிழ்தால் அமைந்தவை போலும்!
காட்சிப் பின்புலம்:
தலைவனும் தலைவியும் களவுக்காதலில் ஈடுபட்டுள்ளனர். தம்முள் ஒத்த அன்பினர் என்பதைத் தெரிந்து கொண்டபின் மெய்யுறுபுணர்ச்சியும் நடைபெற்றது. தலைவன் தான் துய்த்த புணர்ச்சி இன்பங்களை எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறான். ஐம்புலன்களால் கிடைக்கும் சுவைகள் எல்லாம் ஒருசேர ஒரே நேரத்தில் அவளிடமிருந்து தான் பெற்றது, அவளே தனக்கு நோயாகவும் அந்நோயைத் தணிக்கும் மருந்தாகவும் இருந்தது, கூடிய இன்பம் மேலுலக இன்பத்தினும் மேலான இன்பமாக இருந்தது, அவளை விட்டு நீங்கினால் சுடுதலுமாகவும் நெருங்கி இருந்தால் குளிராகவும் தீயாக இருந்தது, தான் விரும்பியவாறெல்லாம் காம இன்பங்களை தந்தது ஆகியவற்றை எண்ணிப் பேருவகையில் இருக்கிறான்.
இக்காட்சி:
காதலரிடை புணர்ச்சி பழகுதல் தொடர்கிறது.
குறளின் காமத்துப்பாலில் 'தோள்' என்ற சொல் தோள் என்ற உறுப்பை மட்டும் சுட்டாமல் உடல் முழுவதையும் குறிப்பதாகவே உள்ளது.
எனவே உறுதோறு என்ற சொற்றொடர்க்கு மெய்யோடு மெய்யுறுதோறும் எனப் பொருள் கொள்ளலாம்.
காதலியின் உடல் தன் உடலோடு சாரும் ஒவ்வொரு முறையும் அது புதுப்புது துடிப்பை உயிருக்கு உண்டாக்குவதாக உணர்கிறான் தலைவன். இவளைத் தீண்டிக் கூடும் பொழுதெல்லாம் அச்சேர்க்கை இன்பத்தால் அவனது உயிர் தளிர்த்தது என்கிறான். தொன்மங்களில் சொல்லப்படும் அமிழ்தம் உயிரளிக்கும் தன்மையது என்பர். காதலியின் தோள்களைப் பொருந்தும் தோறும் இனிமை பயந்து புத்துணர்ச்சி பெறுதலால் அவள் உடல் அமுதினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவன் மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறான்.
புணர்ச்சியில் ஐம்புல இன்பங்களும் ஒருசேர ஒரேநேரத்தில் துய்த்த தலைவனுக்கு அவற்றுள் ஊறின்பம் (மெய்யால் தீண்டும் இன்பம்) அவனுக்குச் சிறப்பாகப் படுகிறது. அதை உயிர் தளிர்க்கச் செய்யும் இன்பம் என உயர்வாகப் பேசுகிறான்.
களங்கமற்ற இளம்பெண்ணான காதலியுடனான புணர்ச்சியில் உயிர் குளிர்ந்து, அது அமுதம் துய்த்தது போன்று இருந்ததாகவும் அவன் கூறுகிறான்.
காதலரிடை உண்டான கூட்டத்தின் தன்மையும் அதனால் உளதாகும் மகிழ்வும் சொல்லப்பட்டன.
|
காமக்கூட்டம் எப்படி உயிர் தளிர்த்தலைச் செய்யும்?
உயிர் என்றும் நிலைக்கும் படி செய்வது அமிழ்தம் என்று தொன்மங்கள் புனைந்துரைத்தன.
உயிரைத் தூண்டிப் புத்துணர்ச்சி தோற்றுவிக்கும் பண்பு, அமிழ்தத்துக்கே உண்டு என்றும் அமிழ்தம் உண்ணுவோர் புத்துயிருடன் இறவாதிருப்பர் என்றும் அவை சொல்லும்.
குறளும் வானோர் உண்ணும் அமிழ்தத்தைச் சாவா மருந்து (82) என்று கூறிற்று.
வான்சிறப்பு அதிகாரத்தில் மழையை அமிழ்து என்று கூறினார் வள்ளுவர்.
வானின்று வழங்கி வரும் மழை என்னும் அமுதம் (குறள் 11) இல்லையென்றால் பயிர் அழியும்; பயிர் இல்லையானால் உலக உயிர்களும் இல்லாமற் போய்விடும்.
மழைத்துளி பட்டதும் பசும்புல் தலைநீட்டி எழுகிறது; பயிர்கள் தழைக்கின்றன.
மழைபெய்து மரம்/செடி தளிர்ப்பது போல் காதலியைத் தழுவுந்தோறும் புத்துயிர் பெற்றதுபோல் இருப்பதைத் தலைவன் உயிர்தளிர்க்கிறது என்கிறான். உயிர் தளிர்க்கின்றது என்பதால் அவள் உடல் அமிழ்தம் கொண்டு செய்ததாகத்தான் இருக்கவேண்டும் எனவும் சொல்கிறான் அவன். அவளைத் தழுவாத நேரம் உயிர் உரமின்றிப் போய்விடுகிறது என்பது உட்பொருள்.
தம் மக்கள் மெய் தீண்டுதல் உடலின்பம் தரும் என்று முன்பு (65) கூறப்பட்டது; இங்கு காதலியுடன் மெய்யுறுதல் உயிரின்பம் நல்குவதாகிறது.
இக்குறட்கருத்தை விளக்கும் தேவநேயப்பாவாணர் 'மென்மையுந் தண்மையும் இன்பமும் பற்றி 'அமிழ்தின் இயன்றன' என்றான்' எனச் சொல்லி தழைத்தல் என்பது கிளர்ச்சியும் உரமும் பெறுதல் எனவும் உரைக்கிறார். பரிதி இதைச் சிறிது கவிதை கலந்த சொற்களால் இவ்விதம் கூறுகிறார்: 'தென்றற் கொடுமையாலும் சந்திரன் கொடுமையாலும் வற்றின சரீரத்தை நாயகி தீண்டச் சரீரம் தளிர்க்கையினாலே, நாயகிக்கு அமுதினால் பண்ணின தோள்'. இதையே பரிமேலழகர் 'வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல்' என்றார்.
புணர்ந்தால் புணருந்தோறும் பேரின்பம் பின்னும் புதிதாய் உண்டானது. உடற்பசி போலக் காம இன்பமும் ஒரு பசி. பசி தீர்த்து உணவுண்பதால் உடல் நலமுறும். அதுபோல காமப் பசி தீரும்போது உயிர்தளிர்க்கும் என்பது கருத்து.
மெய்யுறுபுணர்ச்சி காதலரது மனஇறுக்கத்தை நெகிழ வைத்துப் புத்துணர்வு ஊட்டுவதால் காமக்கூட்டம் உயிர் தளிர்த்தலைச் செய்யும் எனச் சொல்லப்பட்டது.
|
'சேரும் பொழுதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தொடுதலால் இவளுக்குத் தோள்கள் அமுதால் செய்யப்பட்டன' என்பது இக்குறட்கருத்து.
புணர்ச்சி மகிழ்தல் பெற்ற தலைவன் அது புத்துணர்ச்சி தந்தது என்றும் கூறுகிறான்.
உடல் சேருந்தோறும் உயிர் தழைத்தலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆகியன.
|