இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1103தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1103)

பொழிப்பு (மு வரதராசன்): தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில்போல் இனிமை உடையதோ?

மணக்குடவர் உரை: தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ? இந்திரனது சுவர்க்கம்.
இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது.) தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
(ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)

இரா சாரங்கபாணி உரை: தாம் விரும்பும் பெண்களின் மென்மையான தோளில் துயிலும் துயிலினும் இன்பந் தருமோ தாமரைக் கண்ணான் உலகு?


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.

பதவுரை:
தாம்-தாங்கள்; வீழ்வார்-விரும்பும் மகளிர்; மென்-மென்மையான; தோள்-தோள்; துயிலின்-உறக்கதை விட; இனிது-நன்றானது; கொல்-(அசை நிலை); தாமரை-தாமரை மலர்; கண்ணான்-கண்களையுடையவன்; உலகு-உலகம்.


தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மால் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ?
பரிப்பெருமாள்: தாம் விரும்பப்படுவாரது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ?
பரிதி: தாமும் தாமும் விரும்பும் இன்பம் போலே இருக்குமோ?
காலிங்கர்: நெஞ்சே! நாம் விரும்புதற்கு உரிமையுடையோர் தமது மென்தோள் மேவித் துயிலும் துயிலின் இனிமை போலே இனிதோதான்? இஃது அன்று;
பரிமேலழகர்: (நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது.) ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ? [இன்பம் அதிசய இன்பம் நிரதிசய இன்பம் என இருவகைப்படும். அதிசய இன்பம் சிற்றின்பம். நிரதிசய இன்பம்-பேரின்பம். அப்பேரின்பப் பேதமற்றதாய் நிலைத்திருப்பது ஆதலின் நிரதிசய இன்பம் எனப் பெயர் பெற்றது; இன்னையாதல்- இத்தன்மையள் ஆதல்]
பரிமேலழகர் குறிப்புரை: ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப்பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிதுகொல்' என்றான். [தவயோகங்களான் வருந்த வேண்டுதலின்- (தாமரைக் கண்ணான் உலகினை அடைய) தவத்தைச் செய்வதாலும் யோகத்தைச் செய்வதாலும் வருந்த வேண்டுதலால்; இப்பெற்றித்தாய - தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலுவதாகிய]

பழைய ஆசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் தாம்வீழ்வார் என்றதற்குத் 'தாம் விரும்பும் மகளிர்' என்றும் பரிதி 'தாமும் தாமும் விரும்பும்' என்றும் பொருள் கூறினர். அடுத்த பகுதிக்கு மெல்லிய தோளின்கண் துயிலினும் இனிதோ என்ற வகையில் மணக்குடவர்/பரிப்பெருமாள், காலிங்கர், பரிதி முதலானோர் கூற, பரிமேலழகர் மெல்லிய தோளின்கண் துயிலினும் எளிதோ என்று உரை பகன்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் காதலிக்கிற பெண்ணின் மிருதுவான தோள்களைத் தழுவிக்கொண்டு படுத்துறங்கும் இன்பத்தைப் போல் உண்டா?', 'தாம் விரும்பும் பெண்களுடைய மெல்லிய தோளிடத்தே தூங்குவதைப் பார்க்கிலும் இனியதாகுமோ?', 'தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோள்களில் துயிலும் இன்பத்தை விட இனியதோ?', 'நான் விரும்பும் மெல்லிய தோளையுடைய பெண்ணை அனுபவிப்பதால் பெறும் இன்பத்தைவிட உயர்ந்ததாகுமோ?' என்றபடி உரை தந்தனர்.

தாம் விரும்பும் காதலியின் மென்தோள்களில் உறக்கம் கொள்ளும் இன்பத்தைவிடவா இனியது? என்பது இப்பகுதியின் பொருள்.

தாமரைக் கண்ணான் உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்திரனது சுவர்க்கம்.
மணக்குடவர் குறிப்புரை: இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.
பரிப்பெருமாள்: இந்திரனது சுவர்க்கம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சுவர்க்கத்தின்பமும் இதுதானே யென்று கூறியது.
பரிதி: வைகுண்டத்தில் இன்பம் என்றவாறு.
காலிங்கர்: யாதெனின், ஆயிரம் வேள்வியின் எய்துவராக அருமறை கூறும் அயனுலகு ஆண்டு உறும் இன்பம் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தாமரைக்கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது; மாயவன் உறையும் வைகுந்த உலகம் என்றும் ஆம்.
பரிமேலழகர்: அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம். [செங்கண்மால் உலகம்- செந்தாமரை மலர் போலும் கண்களை உடைய திருமாலின் வைகுண்ட உலகம்]
பரிமேலழகர் குறிப்புரை: இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.

இப்பகுதிக்கு உரை கூறுவதில் பழம் ஆசிரியர்கள் வேறுபடுகின்றனர். மணக்குடவர்/பரிப்பெருமாள் 'இந்திரனது சுவர்க்கம்' என்றனர். 'அயனுலகு' என்பது காலிங்கர் கண்ட பொருள். காலிங்கர் 'தாமரைக்கண்ணான் என்பது தாமரையிடத்தான் என்றது; மாயவன் உறையும் வைகுந்த உலகம் என்றும் ஆம்' எனவும் கூறுகிறார். பரிதி 'வைகுண்டம்' என்றும் பரிமேலழகர் 'செங்கண்மால் உலகம்' என்றும் திருமால் உலகத்தைக் குறிப்பர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திருமால் உலகாகிய வைகுந்தம்', 'திருமாலது வைகுந்தம்', 'தாமரை போன்ற கண்களுடைய திருமாலின் உலகம்', 'செந்தாமரையைப் போன்ற கண்ணையுடைய திருமால் வாழும் வைகுண்டம்' என்று அனைவரும் வைகுந்தத்தையே பொருளாகக் கொள்கின்றனர்.

'தாமரை போன்ற கண்களுடைய திருமாலின் உலகம்' என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தாம் விரும்பும் காதலியின் மென்தோள்களில் உறக்கம் கொள்ளும் இன்பத்தைவிடவா இனியது தாமரைக் கண்ணான் உலகு? என்று காதலன் மகிழ்ந்து கூறுகிறான்.
தாமரைக் கண்ணான் உலகு குறிப்பது என்ன?

காதலியுடன் கூடுதல் பேரின்பம் பயக்கிறது என்று தலைவன் களிப்பு நிலையில் கூறுகிறான்.

தாம் விரும்பும் காதலியின் மென்மையான தோள்களில் துயிலும் இன்பத்தைக் காட்டிலும் தாமரைக் கண்ணான் உறையும் இடம் இனிதாகவா இருக்கும்? எனக் கேட்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
ஒருவரை யொருவர் விரும்புகின்ற தலைவனும் தலைவியும், களவொழுக்கத்தில் இருக்கின்றனர். மெய்யுறுபுணர்ச்சியும் நடந்தது. முதற்கூடுதலில் ஐம்புலன்களால் கிடைக்கும் சுவைகள் எல்லாம் ஒருசேர ஒரே நேரத்தில் துய்த்ததை மகிழ்ந்து எண்ணிக் கொண்டிருக்கிறான். தன் காதலியே நோயாகவும் அவளே அதைத் தணிக்கும் மருந்தாகவும் இருக்கிறாள் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:

தான் காதலியுடன் கூடிப்பெற்ற இன்பத்தை 'தன் காதலியின் மென்தோளில் துயிலுதலைவிட இன்பந் தருமோ தாமரைக் கண்ணான் உலகு?' எனத் தலைவன் இங்கு சொல்கிறான். தாம்வீழ்வார் என்ற சொற்றொடர்க்கு தாம் விரும்பும் காதலி என்றும் தம்மை விரும்பும் காதலி என்றும் இருதிறமாக விளக்கம் சொல்லியுள்ளனர். ஒருவரையொருவர் விரும்பும் காதலர் எனக் கொள்ளலாம். துயில் என்ற சொல்லுக்கு உறங்குதல் என்பது நேர் பொருள். 'தோளில் துயில்' என்பது புணர்ச்சி நிலை இடக்கரடக்கலாகச் (விரசம் தோன்றாமல்) சொல்லப்பட்டது. காதலியுடன் புணர்ச்சி இன்பத்தில் ஈடுபட்ட காதலன் இக்காம இன்பத்தை விட சொர்க்கலோக இன்பம் இனியதா என வியந்து வினவுவதாக உள்ளது இப்பாடல். இன்பங்கள் மட்டுமே நிறைந்ததாகச் சொர்க்க உலகத்தைக் கூறுகின்றன தொன்மக் கதைகள். அங்கு கிடைக்கும் இன்பம் விருப்பமான காதலி தரும் காமஇன்பத்தைவிட இனிதாக இருக்காது என்று காதலன் எண்ணுகிறான்.

மாந்தர் கொள்ளும் இயல்பான காமநலப் படுக்கையறைக் காட்சி ஒருபுறம்; பெருமுயற்சிகொண்டு 'பேரின்பம்' பெற்று அடையக்கூடிய கற்பனையான தாமரைக்கண்ணான் உலகு மறுபுறம். முன்னதிலும் பின்னது இனிதோ? என்று முடிவு கண்ட வினா ஒன்றை எழுப்பி, மனிதக்காதலையும் தெய்வத்தை அடைய மேற்கொண்ட தவத்தையும் இணைத்துப் பேசுகிறது இக்குறள். இந்த ஒப்பீடு சரியானதுதானா? ஒப்புக்கொள்ளக் கூடியதா? கண்கண்ட இன்பமே சிறந்ததா? 'பேரின்பம்' என்று ஒன்று இல்லையா? வள்ளுவர் இறைமறுப்பாளரா? உலகாயுத வாதியா? இவை இக்குறள் பற்றி எழுப்பப்படும் சில ஐயவினாக்கள். இவ்வினாக்கள் எழத் தேவையே இல்லை. பாடலின் நோக்கம் 'புணர்ச்சி மகிழ்தல்' பற்றிச் சொல்வதே. வேறு உள்ளர்த்தம் கற்பிக்கப்பட வேண்டியதில்லை. இது முல்லைத் தெய்வமான திருமாலைப் போற்றவுமில்லை; இழிவுபடுத்தவுமில்லை. சிற்றின்பம்-பேரின்பம் என்ற கருத்தாடல் செய்வதும் பயனற்றது. மனிதக் காதலின் மேன்மையைச் சொல்கிறது என்றோ, காதல் இன்பத்தை இறை உலகம் என்று கூறுவதாகவோ இப்பாடலைக் கொள்ளலாம். காதலர் அனுபவித்த காமஇன்பம் மிகுவித்துக் காட்டப்படுகிறது. அவ்வளவுதான். காதல் இன்பத்தை மேலுலக இன்பத்துடன் ஒப்பிடும் வகையில் புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ....(ஊடலுவகை 1323 பொருள்: காதலரிடம் ஊடுதலைவிட இன்பமான மேலுலகம் உளதோ?....) என்று குறளின் இன்னோர் இடத்திலும் பாடப்பட்டது.

மனதிற்கினிய காதலியின் முயக்கத்தினும் மேலான இன்பம் வேறில்லை என்ற கருத்துக் கொண்ட சில சங்கப்பாடல்கள்:
விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும்
இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போ லுண்கட் பொன்போன் மேனி
மாண்வரி யல்குற் குறுமகள்
தோண்மாறு படூஉம் வைகலொ டெமக்கே.
(குறுந்தொகை 101 பொருள்: விரிந்த அலையையுடைய பெரிய கடல், வளைந்த பூவுலக இன்பமும், பெறுதற்கரிய தலைமையையுடைய தேவருலக இன்பமும், ஆகிய இரண்டும், தாமரைப் பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன்னைப் போன்ற நிறத்தையும், மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலையும் உடைய, தலைவியினது, தோளோடு தோள் மாறுபடத்தழுவும், நாளிற்பெறும் இன்பத்தோடு, ஒருங்குவைத்து ஆராய்ந்தாலும், அவ்வைகலின்பத்தின் கனத்திற்கு ஒவ்வா.)
செய்வுறு விளங்கிழைப் பொலிந்த தோள் சேர்பு
எய்திய கனை துயில் ஏற்றொறுந் திருகி
மெய்புகு வன்ன கைகவர் முயக்கின்
மிகுதி கண்டன்றோ இலெனே;
(அகநானூறு 379 பொருள்: செய்யப்பெற்ற விளங்கும் அணிகளாற் பொலிவுற்ற தோளை அணைந்து, பொருந்திய மிக்க துயிலை ஏற்கும்தொறும், மாறுபட்டு மெய்யினுள் மெய் புகுதலெத்த கைகளால் விரும்பிக் கொள்ளும் முயக்கத்தினும் மேம்பட்ட பொருளை, யான் கண்டதில்லேன்;)
தூமலர்த் தாமரைப் பூவின் அங்கண்
மாயிதழ்க் கவளை மலர்பிணைத் தன்ன
திருமுகத் தலமரும் பெருமதர் மழைக்கண்
அணிவளை முன்கை ஆயிதழ் மடந்தை
வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினம்
கவவுப்புலந் துறையுங் கழிபெரு காமத்து
இன்புறு நுகர்ச்சியிற் சிறந்ததொன் றில்லென
அன்பால் மொழிந்த என்மொழி கொள்ளாய்
(அகநானூறு 361 பொருள்: தூயமல ராய தாமரைப் பூவிடத்தே, கரிய போன்ற, அழகிய முகத்திடத்தே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்தகண்களையும், அழகிய வளைகளையுடைய முன்கையினையும், அழகிய வாய் இதழனையுமுடைய நம் தலைவியின், வார் அணிந்த முலைப் பரப்பின் முயக்கத்தினை, ஒரு நூல் இடையே தடுப்பினும், அதனை வெறுத்து உறையும், மிகப் பெரிய காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் காட்டினும், மேம்பட்டதோர் இன்பம் இல்லைஎன, அன்புடன் கூறிய என் மொழியினை ஏற்றுக்கொள்ளாயாகி)

தாமரைக் கண்ணான் உலகு குறிப்பது என்ன?

தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ள இந்திரனது சுவர்க்கம், அயனதுலகம், திருமால் உலகம் என்ற மூன்று உலகங்கள் இப்பாடலுக்கான பழம் ஆசிரியர்களின் உரைகளில் காணக்கிடக்கின்றன. இவை சொர்க்கலோகம் (துறக்க உலகம்), மோட்சம், வைகுந்தம் எனவும் அறியப்படும்.
முதல் உரையாசிரியரான மணக்குடவர் தாமரைக் கண்ணான் உலகு என்பதற்கு இந்திரன் உலகு என்று பொருள் கூறினார். மணக்குடவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று நம்பப்படுபவர். சமணக் கொள்கைப்படி, நல்வினைக்கட்டால் தேவக்கதியை அடைந்த உயிர்கள் தேவலோகத்தில் தேவர்களாக பிறந்து பலவகை இன்பங்களையும் அனுபவிப்பர். எனவே இக்குறள் கூறுவது சமண இந்திரன் உலகு என்பர். ஆனால் இந்திரனுக்குத் தாமரைக் கண்ணான் என்னும் பெயரில்லை என்று இதை மறுப்பார் பரிமேலழகர்.
காலிங்கர் 'தாமரைக்கண் +ஆன்' எனப் பிரித்து 'தாமரை இடத்தான்' என்று பொருள் கொண்டு இது அயன் உலகை (படைப்புக் கடவுளான பிரமன் உலகை) அதாவது நான்முகன் உலகைக் குறிக்கும் என்கிறார். '‘கண்ணான்’ என்பதில் இடையில் நிற்கும் கண் என்பதற்கு இடப்பொருள் கொண்டு பின் ஆன் விகுதி ஏறிற்று என்றல் மரபன்று' என்று சொல்வார் இரா சாரங்கபாணி; இது பூ மேல் நடந்தானது உலகமாகிய வீட்டுலகத்தைக் குறிப்பது என்னும் விளக்கத்தை அறிஞர்கள் ஏற்கவில்லை.
தாமரைக் கண்ணான் என்பதற்கு அடியாரின் இதயத் தாமரையிடத்து வீற்றிருக்கும் கடவுள் எனப் பொதுவாகக் கடவுளைக் காட்டு மென்பாருமுளர் என்பார் வை மு கோபாலகிருஷ்ணமாச்சார்யார்.

அரிதின் முயன்று அருந்தவமியற்றிப் பெறுவது வைகுந்த வாழ்வு; அறம் செய்த மக்கள் இறந்தபின் அங்கு செல்வர் என்பது நம்பிக்கை. வைகுந்தமும் அழியா இன்பத்தைத் தரும் என்று பழம் நூல்கள் கூறும். இதுவே திருமால் உலகு எனப்படுவது. தாமரைக் கண்ணான் என்பது திருமாலுக்குரிய பெயர்; தாமரைக் கண்ணான் உலகு என்றது திருமால் உலகு என்பதே பல உரையாசிரியர்களின் கருத்து. திருமாலைத் தவிர மற்றொருவர் கண்ணையும் செந்தாமரைக்கு ஒப்பிட்டுத் தமிழ்நூல்களில் சொல்லப்படவில்லை. இலக்கிய மரபை ஒட்டி நோக்கினால் 'தாமரைக் கண்ணான்' என்றதற்குத் 'திருமால்' என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். ஆதலால் தாமரைக் கண்ணான் உலகு செங்கண்மால் அதாவது தாமரை நிறக் கண் கொண்டவன் உலகு-திருமால் உலகைக் குறிக்கிறது எனலாம்.

தாம் விரும்பும் காதலியின் மென்தோள்களில் உறக்கம் கொள்ளும் இன்பத்தைவிடவா இனியது தாமரைக் கண்ணான் உலகு? எனக் கேட்கிறான் காதலன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலியிடம் பெற்ற புணர்ச்சி மகிழ்தலிலும் மேலான இன்பம் வேறெங்கும் கிடையாது.

பொழிப்பு

தம்மை விரும்பும் காதலியின் மென்தோளில் துயிலுதலைவிடத் தாமரைக் கண்ணான் மேலுலகம் இனிதாக இருக்குமோ?