இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1102



பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1102)

பொழிப்பு (மு வரதராசன்): நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன; ஆனால், அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

மணக்குடவர் உரை: நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று: இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம்.
இது புணர்வதன் முன்னின்ற வேட்கை தணிந்தமை கூறிற்று.

பரிமேலழகர் உரை: (இடந்தலைப் பாட்டின்கண் சொல்லியது) பிணிக்கு மருந்து பிற - வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்; அணியிழை தன்நோய்க்கு மருந்து தானே - அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு மருந்தும் தானேயாயினாள். (இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும், அவ்வருத்தந் தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத், தீர்ந்தானாகலின் 'தானே மருந்து' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப்பெற்றிலம் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.)

இரா சாரங்கபாணி உரை: நோய்க்கு மருந்தாவன வேறுபட்ட இயல்புடையவை. அவ்வாறின்றி அணிகலன் பூண்டவள் தந்த காம நோய்க்கு மருந்து அவளேதான்; வேறில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிணிக்கு மருந்து பிற(மன்); அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து.

பதவுரை: பிணிக்கு-நோய்க்கு; மருந்து-மருந்து; பிற-மற்றவை; மன்-(ஒழியிசை); அணியிழை-அணியப்படும் இழையினை உடையாள்; தன்-தனது; நோய்க்கு-பிணிக்கு (பிணி நீக்கத்துக்கு); தானே-தானே, (அவளே); மருந்து-மருந்து.


பிணிக்கு மருந்து பிறமன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று;
பரிப்பெருமாள்: நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று;
பரிதி: வியாதிக்கு மருந்து பிறத்தியிலே;
காலிங்கர்: கேளாய் நெஞ்சே! உலகத்து வினையாய் வந்துற்ற நோய்க்கு அது தணித்தற்கு மருந்து பிற ஆம் இத்துணை;
பரிமேலழகர்: (இடந்தலைப் பாட்டின்கண் சொல்லியது) வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்;

'நோயுற்றால் அதற்கு மருந்தாவது பிறிதொன்று' என்று இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நோய்க்கு மருந்து அந்நோயின் வேறாகிய பொருள்கள்', 'வாதம் முதலிய நோய்கட்கு மருந்தாவன அவைகளினின்றும் வேறுபட்டன', 'நோய்கள் உண்டானால் அவற்றைப் போக்குவதற்கு மருந்து வேறு பொருளாகத்தான் இருக்கும்', 'நோய்வேறு. அதற்கு மருந்து வேறு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நோயுற்றால் அது தணித்தற்கு மருந்து வேறுஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது புணர்வதன் முன்னின்ற வேட்கை தணிந்தமை கூறிற்று.
பரிப்பெருமாள்: இவ்வணியிழையால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாயினள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புணர்வதன் முன்னின்ற வேட்கை தணிந்தமை கூறிற்று.
பரிதி: காமநோய்க்கு மருந்து அந்த நாயகிதானே என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று. இவ்வணியிழை தன்னால் முன் நமக்குளதாகிய நோய் பிண் தணிதற்கு மருந்து தானே ஆயினள்; அது என்ன வியப்போ என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு மருந்தும் தானேயாயினாள்.
பரிமேலழகர் குறிப்புரை: இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும், அவ்வருத்தந் தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத், தீர்ந்தானாகலின் 'தானே மருந்து' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப்பெற்றிலம் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.

'இவ்வணியிழையினை உடையாளால் வந்த நோய்க்குக் காரணமாகிய இவள் தானே மருந்தாம்' என்று பழைய ஆசிரியர்கள் உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் அழகிய நகையணிந்த இவள் தனது நோய்க்குத் தானே மருந்தாக இருக்கின்றாள்', 'ஆனால் அழகிய நகைகளை உடைய இவள், தன்னால் உண்டான நோய்க்கு மருந்து தானே ஆயினாள்', 'ஆனால், இந்த அழகிய ஆபரணத்தை அணிந்த பெண்ணினால் உண்டான காதல் நோய்க்கு இந்தப் பெண்ணே மருந்தாவாள்', 'இவள் தந்த நோய்க்கோ இவளே மருந்து' என்றவாறு இப்பகுதிக்கு உரை நல்கினர்.

அணிகளையுடையவள் தன்னால் உண்டான காதல்நோய்க்கு தானே மருந்தும் ஆவாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நோயுற்றால் அது தணித்தற்கு மருந்து வேறுஆகும்; அணிகளையுடையவள் தன்னால் உண்டான காதல்நோய்க்கு தானே மருந்தும் ஆவாள் என்பது பாடலின் பொருள்.
நோய் தந்தாள் சரி. அவள் எப்படி மருந்தானாள்?

அவளே நோய்; அவளே மருந்து.

எந்த நோய்க்கும் மருந்து பிறிதொரு பொருளாக இருக்கும். ஆனால் அணிகலம் அணிந்தவளால் எனக்கு உண்டாகிய நோய்க்கு மருந்து பிறிதொன்று இல்லை; அவளேதான் மருந்து.
காட்சிப் பின்புலம்:
காதலில் வீழ்ந்த தலைவனும் தலைவியும், களவொழுக்கத்தில் இருக்கின்றனர். மெய்யுறுபுணர்ச்சியும் நடந்தேறி விட்டது. முதற்கூடுதலில் தான் பெற்ற இன்பத்தை நினைவுகூர்ந்து காதலன் மொழிந்து கொண்டிருக்கிறான். ஐம்புலன்களால் கிடைக்கும் சுவைகள் எல்லாம் ஒருசேர ஒரே நேரத்தில் துய்த்ததை மகிழ்ந்து எண்ணிக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
காதலியை முதன் முதலில் பார்த்ததிலிருந்தே தலைவனது உள்ளமும் உடலும் துன்பம் உற்றன. அவளையே எந்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவளால் உண்டான இக்காமநோயை எப்படித் தீர்ப்பது? பின்னர் நேர்ந்த ஒரு சந்திப்பின்போது இருவரும் உடற்புணர்ச்சி கொள்கின்றனர். காமநோய் தணிகிறது. எப்பொழுதுமே அணிகள் பூண்டு அழகுறத் தோற்றம் தரும் அவளை நினைந்து அவன் கூறுகிறான்: 'மற்ற நோய்க்கு அதைத் தீர்க்கவல்ல ஒரு பொருளை எங்காவது, வெளியில் தேடித்திரிந்துதான் பெற வேண்டும்; ஆனால் என் அன்புக்குரியவள் தந்த காமநோய் அவளைச் சந்தித்தவேளையும் அவளைப் புணர்ந்த வழியும் உடன் நீங்கின. என்ன விந்தை இது!'

இக்குறட்கருத்துக் கொண்ட சங்கப்பாடல்கள் சில:
இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள் அல்லது
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே.
(நற்றிணை 80 பொருள்: கலன் அணிந்த ஆயத்தொடு தகுதியுடைய நாணம் தன்னை வளைக்கப்பட்டு; என்னைப் பெறுமாறு தான் எடுத்துக்கொண்ட நோன்பின் பயனாகத் தைத்திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விளமகளே யான் உற்ற நோயை நீக்கும் மருந்தாயமைந்துள்ளாள்; அவளல்லது பிறிதொரு மருந்து இல்லைகாண்.)
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
அருளினும் அருளாள் ஆயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம்
அருந்துயர் அவலந் தீர்க்கும்
மருந்துபிறிது இல்லையான் உற்ற நோய்க்கே.
(நற்றிணை 140 பொருள்: விளையாடுவதற்குப் பந்தோடு செல்லுகின்ற, நம்பால் அன்பில்லாத இளமகள், நம்மை அருள் செய்தாலும் அங்ஙனம் அருள்செய்யாளாய் அகன்று போனாலும், நீ பெரிதும் மனமழிந்து இரந்து வழிபட்டு நிற்றலை வெறாதே கொள்; யான் அடைந்துடைய காமநோயொடு கலந்த துன்பமாகிய அவலத்தை ஒழிக்குமருந்தாவாள் அந்த அன்பில்லாத இளமகள் ஒருத்தியேயன்றி வேறொன்று சிறிதளவேனும மருந்தாகும் தன்மையதில்லைகாண்!)
நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்!
(கலித்தொகை 60:20-21 பொருள்: நின்முகத்தை இக்காலத்தே பெறின் அது மருந்தாவதல்லது வேறு சிறிதும் மருந்தில்லையாயிருக்குமாயின், திருந்திழாய்!)
பூக்கஞல் ஊரன் மகள் இவள்
நோய்க்கு மருந்தாகிய பணைத்தோளோளே
(ஐங்குறுநூறு 99 பொருள்: பூக்கள் நிறைந்த ஊரிலுள்ளவன் மகள் பெருத்த தோளையுடைய இவளே என் நோய்க்கு மருந்தாகிறாள்.)

நோய் தந்தாள் சரி. அவள் எப்படி மருந்தானாள்?

நோய்கள் பலவகை; அவற்றுக்குரிய மருந்தும் பலவகை. நோய்கள் பொதுவாக அவற்றிற்கு மாற்றான மற்ற பொருள்களால் அமைந்த மருந்துகளால்தான் தீரும். இப்பாடல் நோய்ப்பொருளே அதாவது காதலியே மருந்தாக இருக்கிறாள் என்கிறது. அது என்ன?
அவன் அவளைப் பார்த்த நாளிலிருந்தே அவனுக்கு காதல் நோய் உண்டாயிற்று. நினைவிலெல்லாம் அவளே இருந்தாள். அவர்கள் கூடும் வரை இக்காதல்நோய் வளர்ந்து கொண்டே இருக்கும்போல் தெரிந்தது. புணர்ந்தபின் அது தணிந்தும் போனது. அப்பொழுது 'நோய் தந்ததும் அவளே. அதைத் தணிப்பதும் அவளே' என அறிகிறான். விழையத்தக்க இந்த இன்ப நோய்க்கு மருந்து வேறு எதுவும் கிடையாது; வெளியில் எங்கும் இல்லை. அம்மருந்து காதலியிடமே உள்ளது; மருந்தே அவள்தான். அதாவது நோயும் மருந்தும் ஒன்றாக இருக்கிறது. அவள் தந்த நோய்க்கு அவளே மருந்து.

தேவநேயப்பாவாணர் 'சேடா என்னும் சலங்கைப்பூரான் கடித்தால், அதன் விளைவைத்தடுக்க, அப்பூரானையே கொன்று உலர்த்தித் தூளாக்கி வெற்றிலையில் மடித்துண்ணக்கொடுப்பர். இங்ஙனம் சில நோய்கட்கு நோயுண்டாக்கிய பொருள்களையே மருந்தாகக் கொடுப்பது வழக்கம்' என்று இக்குறளுக்கான உரையில் நோய்க்குக் காரணமான பொருளே மருந்தாக உள்ள எடுத்துக்காட்டு ஒன்று கூறியுள்ளார்.

நோயுற்றால் அது தணித்தற்கு மருந்து வேறுஆகும்; அணிகளையுடையவள் தன்னால் உண்டான காதல்நோய்க்கு தானே மருந்தும் ஆவாள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புணர்ச்சிமகிழ்தல் காமநோய்க்கு மருந்து.

பொழிப்பு

மற்ற நோய்க்கு மருந்தாவன வேறுபட்ட இயல்புடையவை; அணிகலன் பூண்ட இவள் தந்த காம நோய்க்கு மருந்து இவளேதான்.