இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1101கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1101)

பொழிப்பு (மு வரதராசன்): கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாலாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

மணக்குடவர் உரை: கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும் இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள.
இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது.

பரிமேலழகர் உரை: (இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் -கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்; ஒண்டொடி கண்ணே உள - இவ்வொள்ளிய தொடியை உடையாள் கண்ணே உளவாயின.
(உம்மை, முற்று உம்மை, தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது. வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒரு காலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தொட்டும் துய்க்கின்ற ஐம்புல இன்பங்களும் இந்த ஒளி பொருந்திய வளையல் அணிந்தவளிடத்தே உள்ளன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.

பதவுரை: கண்டு-கண்ணால் பார்த்து; கேட்டு-காதால் கேட்டு; உண்டு-நாவால் உண்டு; உயிர்த்து-மூக்கால் மோந்து; உற்று-தொட்டு; அறியும்-உணரும்; ஐம்புலனும்-ஐந்து புலனுணர்வுகளும்; ஒண்-ஒளி பொருந்திய; தொடி-வளை(யணிந்தபெண்); கண்ணே-இடத்தே; உள-இருக்கின்றன.


கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும்;
பரிப்பெருமாள்: கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலனும்;
பரிதி: விளக்குக் கண்டு அழிந்த விட்டிலும், யாழ் கேட்டு அழிந்த அசுணமும், இரை கண்டு அழிந்த மீனும், செண்பக மணம் உண்டு அழிந்த வண்டும், மெய்யின்பம் கண்டு அழிந்த யானையும் ஒவ்வொரு புலனால் அழிந்தன;
காலிங்கர்: தாம் எப்பொழுதும் கண்ணுக்கு இனிய..... உறுதலுமன்றே; அதனால் இவை இத்துணையும்;
பரிமேலழகர்: (இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் சொல்லியது.) கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்;

'கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அனுபவிக்கப்படும் ஐம்புலனும்' என்று இப்பகுதிக்குப் பழைய ஆசிரியர்கள் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்டு கேட்டு உண்டு முகர்ந்து தொடும் ஐம்புல இன்பமும்', 'மேனியழகு என் கண்ணுக்கு இன்பமளிக்க, சொல்லின் இனிமை என் காதுக்கு இன்பமளிக்க, இதழ் சுவைப்பது என் வாய்க்கு இன்பமளிக்க, கட்டியணைப்பது என் உடலுக்கு இன்பமளிக்க ஐந்து இந்திரியங்களும் ஒரே காலத்தில் அனுபவிக்கக்கூடிய இன்பம்', 'கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் உண்டும், மூக்கால் மோந்தும், உடம்பால் தொட்டும் துய்க்கப்படும் ஐம்புலனும்', 'கண்ணால் கண்டும் செவியால் கேட்டும் நாவால் உண்டும் மூக்கால் மோந்தும் மெய்யால் தீண்டியும் நுகரப்படும் ஐம்புலன்களும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் தொட்டும் நுகரப்படும் ஐம்புல இன்பங்களும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒண்டொடி கண்ணே உள:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள.
மணக்குடவர் குறிப்புரை: இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது.
பரிப்பெருமாள்: இவ்வொள்ளிய தொடியை யுடையாள் மாட்டே யுள.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொறிகள் ஐந்தினுக்கும் ஒருகாலத்தே யின்பம் பயந்ததென்று புணர்ச்சியை வியந்து கூறியது.
பரிதி: ஐம்புலனும் ஓரிடத்திலே கூடியதால் என் செய்யாது என்றவாறு.
காலிங்கர்: நம்மால் காதலிக்கப்பட்ட இவ்வொண்டொடி மாட்டே உளவாகலான் இனிப்புறத்துப் போய் ஒன்று அறிவுறவேண்டுவதில்லை.
காலிங்கர் குறிப்புரை:இவ்வாறு இவளோடு இன்புற்று இனிது வாழ்தற்கு யாம் முன்னம் என்ன தவஞ்செய்தனம்; இஃது என்ன வியப்போ என்று இங்ஙனம் தன் நெஞ்சிற்குச் சொல்லுவானாய்த் தலைமகள் கேட்பச் சொல்லியது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இவ்வொள்ளிய தொடியை உடையாள் கண்ணே உளவாயின.
பரிமேலழகர் விரிவுரை: உம்மை, முற்று உம்மை, தேற்றேகாரம்: வேறிடத்து இன்மை விளக்கி நின்றது.வேறுவேறு காலங்களில் வேறு வேறு பொருள்களான் அனுபவிக்கப்படுவன ஒரு காலத்து இவள் கண்ணே அனுபவிக்கப்பட்டன என்பதாம். வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சித் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன. [இடக்கர்ப் பொருளாக-அவையில் சொல்லத் தகாத மறைத்துச் சொல்லும் சொல்லின் பொருளினவாக]

பழைய ஆசிரியர்கள் 'இவ்வொள்ளிய தொடியை உடையாள் கண்ணே உளவாயின' என்று உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவளிடமே உண்டு', 'அழகிய வளையலணிந்த பெண்ணிடத்திலேதான் இருக்கிறது', 'ஒளிமிக்க வளையணிந்த இவளிடத்தே உள்ளன', 'ஒளி பொருந்திய வளையலை அணிந்துள்ள இவளிடமே உள்ளன' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒளிமிக்க வளையணிந்த இவளிடமே உள்ளன என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் தொட்டும் நுகரப்படும் ஐம்புல இன்பங்களும் ஒளிமிக்க வளையணிந்த இவளிடமே உள்ளன என்பது பாடலின் பொருள்.
'அறியும் ஐம்புலனும்' குறிப்பது என்ன?

ஐம்புலன்களால் கிடைக்கும் சுவைகள் எல்லாம் ஒருசேர ஒரே காலத்து நுகர்ந்தனர்.

'கண்களால் அழகுறக் கண்டு, செவியால் இன்சொல் கேட்டு, நாவால் இதழமுதம் உண்டு, மூக்கால் நறுமணம் மோந்து, உடம்பால் தீண்டி நுகரும் ஐம்புலன்களின் இன்பமும் ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடமே உண்டு' என்று காதலியுடன் கூடி ஐம்புலன்களும் ஆரத்துய்த்ததைக் களிப்புடன் கூறுகிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
களவுஒழுக்கம் மேற்கொண்டுள்ள தலைவனும் தலைவியும் ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் முழுமையாகக் குடி புகுந்துவிட்டதை முந்தைய 'குறிப்பறிதல்' அதிகாரம் விளக்கியது. களவு ஒழுக்கம் என்பது உலகோர் அறியாமல் ஒருவரையொருவர் சந்தித்து, பேசி, உறவாடும் காதல் வாழ்வாகும். களவுக் காதலர் இருவரும் முதன்முதலாக மெய்யுறுபுணர்ச்சி அதாவது உடலுறவு கொண்டதைக் குறிப்பால் உணர்த்திச் சென்ற அதிகாரம் முடிந்தது.

இக்காட்சி:
கூடுதலினால் பெற்ற காம இன்பம் பற்றித் தலைவன் கூற்றாக அவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியதுபோல் அமைகிறது இப்பாடல். ஐம்புலன் இன்பங்களும் காதலியிடம் ஒருங்கே குடிகொண்டிருக்கும் தன்மையை உவந்து கூறுவதாக உள்ளது. அந்த முற்றிலும் வேறுபாடான இன்பத்தை அவளிடம் பெற்றதாக அவன் கூறுகிறான். ஐம்புல நுகர்ச்சியும் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் பெறுவது அரிது. ஐம்புலன்களும் ஒரே நேரத்தில் துய்ப்பதற்கான பொருள் வேறெங்கும் இல்லை; தலைவியிடம்தான் உண்டு என்கிறான் காதலன்.
ஒண்டொடி என்ற தொடர்க்கு ஒளி பொருந்திய வளை என்பது நேர்பொருள். இங்கு ஒளிரும் வளை அணிந்த பெண்ணைக் குறிக்கிறது. 'ஒண்டொடி கண்ணே' என்ற தேற்ற ஏகாரம் ஐம்புல இன்பங்களையும் வேறு வேறு காலங்களில் அல்லாமல் ஒரு காலத்தில் துய்த்தல் இவளிடத்திலன்றி வேறிடத்து இல்லை என்பதனை விளக்கிற்று. 'ஒண்டொடி' என்று சொல்லப்பட்டது கலவியின் போது இருட்டில் அவள் வளையின் ஒளி மிக்குத் தெரிந்தது என்பதைத் தெரிவிக்கிறது.

ஒரே நேரத்தில் ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிப்பவள் பெண் என்று புதுவதாகக் கூறப்பட்டது. இதனால் பெரும் புலவர்கள் பலர் இக்குறளை எடுத்தாண்டனர். வள்ளுவர் கலவியின் செயல்முறை விளக்கத்தை இப்பாடலில் புதுமையாகவும் இடக்கரடக்கலாகவும் (விரசமில்லாமலும்) கூறியுள்ளார்.
காதலர்கள் கூடி முழுமன இன்பம் உணர்ந்தனர் என்கிறது பாடல். இக்குறளுக்குப் பரிதி 'விளக்குக் கண்டு அழிந்த விட்டிலும், யாழ் கேட்டு அழிந்த அசுணமும், இரை கண்டு அழிந்த மீனும், செண்பக மணம் உண்டு அழிந்த வண்டும், மெய்யின்பம் கண்டு அழிந்த யானையும் ஒவ்வொரு புலனால் அழிந்தன. ஐம்புலனும் ஓரிடத்திலே கூடியதால் என் செய்யாது' என்று உரை வரைந்துள்ளார். இவரது உரை 'காணல், கேட்டல், உண்டல், முகர்தல், தீண்டல் என்றிவற்றில், ஒரு புலனால் விரைவு காட்டிய அஃறிணை உயிர்கள் அழிந்தன என்றால் காதலர் இருவரும் ஒரே சமயத்தில், ஐம்பொறிகளிடத்தும், மேற்கூறிய உயிர்கள் காட்டிய கண்மூடித்தனமான வேட்கையை வெளிப்படுத்தினால் என்ன ஆகும்' என்ற கருத்து தருவது. இவ்வுரை பாடலுக்கான நேர் விளக்கமாக இல்லாவிடினும் குறட்பொருளை நன்கு உணர வைப்பதாக உள்ளது.

'அறியும் ஐம்புலனும்' குறிப்பது என்ன?

அறியும் என்றது உணரும் என்ற பொருளில் வந்துள்ளது. கண், செவி, வாய், மூக்கு, மெய் என்னும் ஐம்பொறிகள் வழியாக ஒளி, ஓசை, சுவை, நாற்றம், ஊறு என்னும் ஐந்து புலன்கள் நுகரப்படும். இந்த உலகத்தில் ஒவ்வொரு புலனும் இன்பம் துய்ப்பதற்குத் தனித்தனிப் பொருள் உண்டு. நிலவு கண்ணுக்கும், குழலோசை காதுக்கும், முக்கனிகள் நாவுக்கும், மலரின் மணம் மூக்குக்கும், தென்றல் தீண்டுதல் உடலுக்கும் இன்பம் தரும். ஒருநேரத்தில் ஒன்று அல்லது இரண்டு புலனின்பங்களே அனுபவிக்கப்படும். காமத்தால் வரும் இன்பத்தை அதுவரை அறியாமல் இருந்த காதலன் ஐம்புல இன்பங்களையும் ஒரேநேரத்தில் துய்த்து இன்பம் கொண்டான் என்கின்றான். 'அறியும் ஐம்புலனும்' என்றது ஒவ்வொரு பொறியும் செயல்படும் பொழுது, செயலை அறிந்து இன்பம் அனுபவிக்கிறது என்பதை விளக்கவே என்பார் ஜி வரதராஜன்.
ஐம்புலனும் என்பதிலுள்ள 'உம்மை' இனைத்து (இவ்வளவும்) என்று அறிபொருளில் வந்த முற்றும்மையாம்.

'அறியும் ஐம்புலனும்' என்ற தொடர் நுகரப்படும் ஐந்து புலனின்பங்கள் என்ற பொருள் தரும்.கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் தொட்டும் நுகரப்படும் ஐம்புல இன்பங்களும் ஒளிமிக்க வளையணிந்த இவளிடமே உள்ளன என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

காதலர் முதன்முதலில் துய்த்த புணர்ச்சி மகிழ்தல்.

பொழிப்பு

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் தொட்டும் துய்க்கப்படும் ஐம்புல இன்பங்களும் ஒளிமிக்க வளையணிந்த இவளிடத்தே உள்ளன.