கண்ணொடு கண்இணை நோக்கொக்கின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின்;
பரிப்பெருமாள்: கண்களோடு கண்கள் காமக்குறிப்பினால் நோக்கும் நோக்கம் ஒக்குமாயின்;
பரிதி: மனமும் கண்ணும் பொருந்திய பார்வை உண்டாகில்;.
காலிங்கர்: ஒருவனோடு ஒருத்தியிடை மற்று அவர் தம் கண்ணொடு கண் எதிர்ந்து நோக்குங்கால் நெஞ்சில் காதல் குறிப்புக் கண்ணில்
புலப்படுமாறு இரண்டு நோக்கும் தம்மில் ஒக்கக் குளிர்ந்திருக்கப்பெறின்;
பரிமேலழகர்: காமத்திற்கு உரிய இருவருள் ஒருவர் கண்களோடு ஒருவர் கண்கள் நோக்கால் ஒக்குமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: நோக்கால் ஒத்தல்: காதல் நோக்கினவாதல்.
இப்பகுதிக்கு மணக்குடவர, /பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் 'கண்களோடு கண்கள், காமக்குறிப்பில் நோக்கம் ஒத்த தன்மை'யைக் குறிப்பிடுகின்றனர். பரிதி 'கண்களோடு மனமும் பொருந்திய பார்வை' பற்றிப் பேசுகிறார். காலிங்கர் 'கண்ணொடு கண் எதிர்ந்து நோக்குங்கால் நெஞ்சில் காதல் குறிப்புக் கண்ணில் புலப்படுமாறு' என்று உரைக்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'தலைவன் தலைவியருடைய இருவர் கண்களும் தம்முள் நோக்கு ஒத்துவிடின்', 'கண்களும் கண்களும் பொருந்தி பார்வையில் ஒத்துக் கொண்டால்', 'காதல் மிக்க இருவருடைய இருகண்களும் ஒத்த பார்வையுடையனவாயின்', '(காதலை உடைய இருவர்களுள்) ஒருவர் கண்களோடு மற்றவர் கண்ணிரண்டும் பார்வையால் ஒக்குமாயின்', என்றபடி உரை தருவர்.
கண்ணோடு கண் பொருந்தி தம்முள் நோக்கு ஒத்துவிடின் என்பது இப்பகுதியின் பொருள்.
வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வாயினாற் சொல்லுஞ் சொற்கள் ஒரு பயனுடையவல்ல.
மணக்குடவர் குறிப்புரை: இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: வாயினாற் கூறும் சொற்கள் ஒரு பயனுடையவல்ல.
பரிப்பெருமாள் கருத்துரை: இது சார்தலுறுகின்ற தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: வாய்ச்சொல்லினால் என்ன பயனும் இல என்றவாறு.
காலிங்கர் 'வாய்ச்சொற்கொண்டு' பாடம்: மற்று வாய்ச் சொற்கொண்டு என்ன பயனும் இல.
காலிங்கர் குறிப்புரை: எனவே யாம் இவள் வாய்ச்சொல் கேட்கப்பெறின் எனைத்துப் பயனும் அதன்கண்னே நிகழும் என்று அவள் சொற்கேட்டலும்
காதலித்தான் தலைமகன் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவர் வாய்மை தோன்றச் சொல்லுகின்ற வாய்ச்சொற்கள் ஒரு பயனும் உடைய அல்ல.
பரிமேலழகர் குறிப்புரை: வாய்ச் சொற்கள்- மனத்தின்கண் இன்றி வாயளவில் தோன்றுகின்ற சொற்கள். இருவர் சொல்லும் கேட்டு உலகியல்மேல்
வைத்துக் கூறியவாறு. இருவர் சொல்லுமாவன: அவள் புனங்காவல் மேலும், அவன் வேட்டத்தின் மேலும் சொல்லுவன. பயனில் சொற்களாகலின்,
இவை கொள்ளப்படா என்பதாம். இவை புணர்தல் நிமித்தம். [புனங்காவல்-தினைக் கொல்லை (வயல்) காத்தல்; வேட்டம்-வேட்டை]
இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் 'வாய்ச்சொல்லினால் என்ன பயனும் இல்லை' என்று பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வாய்விட்டுத் தம் காதலைப் புலப்படுத்தச் சொற்கள் தேவையே இல்லை', 'அதன் பிறகு பேச்சுக்கு அவசியமில்லை', 'வெளிப்படையாக அவர்கள் சொல்லும் வாய்ச்சொல்லினால் யாது பயனும் இல்லை', 'வாயிலிருந்து தோன்றும் சொற்கள் எத்தகைய பயனும் உடையன வல்ல' என்று உரை கொண்டனர்.
வாய்ப்பேச்சுக்கு எத்தகைய பயனும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|