இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1099ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1099)

பொழிப்பு (மு வரதராசன்): புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும்.

மணக்குடவர் உரை: அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம்.
இது, குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.

பரிமேலழகர் உரை: (தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் - முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்; காதலார் கண்ணே உள - இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன.
(பொது நோக்கு : யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்கு. நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள்.)

இரா சாரங்கபாணி உரை: முன்னறியாத அயலார் போலக் கண்டும் காணாமலும் பொதுவாக நோக்குதல் காதலுடையாரிடத்தே காணப்படும். (இது காதலருக்குள்ள ஓரியல்பு.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.

பதவுரை: ஏதிலார்-முன்னறியாதவர், அயலார், நட்பிலார், பகைவர்; போல-ஒக்க; பொது-யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய; நோக்கு-பார்வை; நோக்குதல்-பார்த்தல்; காதலார்கண்ணே-காதல் உடையார் மாட்டே; உள-இருக்கின்றன.


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல்;
பரிப்பெருமாள்: அயலார்போலப் பொது நோக்கத்தால் நோக்குதல்;
பரிதி: அயலாரைப்போலப் பார்க்கும் பார்வை;
காலிங்கர்: நெஞ்சமே! இங்ஙனம் குறிக்கொண்டு நோக்காது அயலார்போலப் பொதுநோக்கு நோக்குதலும்;
பரிமேலழகர்: (தோழி மதியுடம்படுவாள் தன்னுள்ளே சொல்லியது) முன்னறியாதார் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல்;
பரிமேலழகர் குறிப்புரை: பொது நோக்கு - யாவர் மாட்டும் ஒரு தன்மைத்தாய நோக்கு.

அயலாரைப் போல ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல் என்று அனைத்துப் பழம் ஆசிரியர்களும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அயலார் போல மேலோட்டமாகப் பார்த்தல்', 'ஒருவரையொருவர் அறியாதவர்கள் போல வெறும் பார்வை பார்த்துக் கொள்ளுகிற தன்மை', 'அயலார் ஒருவரை ஒருவர் தெரியாது பார்த்தல் போலப் பொதுவாகப் பார்த்தல்', 'அயலார் போலப் பொதுப் பார்வையால் பார்த்துக் கொள்ளுதல்' என்று உரை கூறினர்.

முன் அறியாதவர்கள் போலப் பொதுவாகப் பார்த்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

காதலார் கண்ணே உள:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலித்தார் மாட்டே யுளதாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது, குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.
பரிப்பெருமாள்: காதலித்தார் மாட்டே யுளதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நோக்குதற் பன்மையால் உள என்றார். இது, குறித்து நோக்காமையும் உடன்படுதலென்றது.
பரிதி: ஆசையுற்றவரிடத்து உளது என்றவாறு.
காலிங்கர்: மற்று உள்ளத்துள் காதலுடையோர் மாட்டேயும் உள என்பது கண்டனம்.
காலிங்கர் விரிவுரை: அதனான் முன்னம் ஒரு நோக்கு நோய் நோக்கன்றி யாம் அஞ்சியதூஉம் இனிமைக்கூறு என்பது சிறுது பயின்ற இடத்துத் தெளிந்தனம் என்று ஆற்றாமை சிறுது நீங்கினான் தலைமகன் என்றவாறு.
பரிமேலழகர்: இக்காதலையுடையர் கண்ணே உளவாகாநின்றன.
பரிமேலழகர் குறிப்புரை: நோக்குதல் தொழில் ஒன்றேயாயினும், இருவர்கண்ணும் நிகழ்தலானும், ஒருவர்கண்தானும் குறிப்பு வேறுபாட்டால் பலவாம் ஆகலானும், 'உள' எனப் பன்மையாற் கூறப்பட்டது. இருவரும் 'மது மறைந்துண்டார் மகிழ்ச்சிபோல உள்ளத்துள்ளே மகிழ்தலின்' (இறையனார்-8) அதுபற்றிக் 'காதலார்' என்றும், அது புறத்து வெளிப்படாமையின் 'ஏதிலார் போல' என்றும் கூறினாள். [இருவரும்-தலைமகனும் தலைமகளும்]

இப்பகுதிக்குக் 'காதலித்தார் மாட்டே உள' என்று பழைய ஆசிரியர்கள் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரிடமே உண்டு', '(உண்மையான) ஆசையுள்ளவர்களாகிவிட்ட (ஆண்-பெண் இருவர்களிடத்திலும் உண்டாகிவிடுவது இயல்புதான்', 'அன்புடையவர்களிடத்துக் காணப்படும்', 'காதலை உடையாரிடம் உள' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காதலர் இருவரிடையே உள என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முன் அறியாதவர்கள் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலர் இருவரிடையே உள என்பது பாடலின் பொருள்.
'பொதுநோக்கு நோக்குதல்' என்றால் என்ன?

இயல்பாகப் பார்ப்பதுபோல், தங்களுக்குள் நோக்கி, காதலர்கள் உள்மகிழ்வர்.

முன் அறியாதவரைப் போலக் காதல்கொண்டவர்கள் தம்முள் பொது நோக்காகவே ஒருவரையொருவர் பார்ப்பதுபோல் நடந்துகொள்வர்.
காட்சிப் பின்புலம்:
தலைமக்களிடை காதல் மலர்ந்தபின் தலைவன் தலைவியின் குறிப்புகளை அறிந்தான்; உறவு தொடர்ந்தது. உளப் பொருத்தம் வளர்ந்து இருவரிடையேயான காதல் கனிந்த நிலை இப்பொழுது. பழகத் தொடங்கிய அவர்கள் அடிக்கடி சந்தித்து உரையாடுகின்றனர். பேச்சினிடையே உரசல்கள் ஏற்படுவது இயல்பு. ஒருவர் கருத்தை ஒருவர் ஒத்துக்கொள்ளாதவர்போலப் பேசிக் கொள்வர். அவ்வேளைகளில், மனதுள் வெறுப்பில்லாமல், சினம்கொண்டு சில சுடுசொற்களைச் சொல்லிச் சென்றுவிடுவர். அப்பொழுது ஒருகணம் மனம் கலக்கம் உறும். ஆனால் எண்ணிப்பார்த்தால் உரையில் வன்மையுள்ளது போல் தோன்றினாலும் உள்ளத்துள் அன்புகொண்டவர் ஆவர் எனத் தெரியும். அக்கடுஞ் சொற்களுக்குள்ளும் காதற் கலப்பு உண்டெனவும் அறிந்து கொள்கின்றனர்.

இக்காட்சி:
பொது இடங்களில் ஒருவரையொருவர் நேரில் பார்க்கும் வேளைகளில் காதலர்கள் தாம் முன்பின்பார்த்தறியாதவர்போலக் காட்டிக்கொள்வதில் உள்ளுக்குள் கிளர்ச்சி அடைவர்.
காதலில் வீழ்ந்த இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொண்டு தங்கள் காதல் உறவை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இது களவுக் காதல் அல்லவா? இன்னும் வெளிஉலகுக்கு அவர்கள் தாங்கள் காதலர்கள் என்பதைக் தெரிவித்துக் கொள்ளவில்லை. எனவே பொது இடங்களிலே ஒருவரையொருவர் காணநேரும்போது முன்பின் அறிமுகமற்ற அயலாரைப் பார்ப்பதுபோல் நடந்துகொள்கின்றனர். அயலாரைப் பார்ப்பது போல பார்த்துக் கொள்கிறார்கள். இவையெல்லாம் ஒருவருக்கொருவர் அன்பு கொண்ட காதலர்கள் அடையாளம் காட்டும் குறிப்புகளாகும். இந்தப் பொய் நாடகம் ஆடுவதில் உள்ளூர மகிழ்வும் கொள்கின்றனர்.

‘நோக்குதல் தலைவன், தலைவி இருவர் மாட்டும் நிகழ்வதால் பன்மை ஆயிற்று. இதனால் 'உள' எனச் சொல்லப்பட்டது.
'ஏதிலார்’ என்ற சொல்லுக்கு நட்பில்லாதவர் என்பது பொருள். இச்சொல் குறளகத்து அயலார், பகைவர் ஆகிய இரு பொருளில் ஆளப்பட்டுள்ளது. இங்கு அயலார் என்ற பொருளிலும் ....கொலைக்களத்து ஏதிலார் போல வரும் (பொழுதுகண்டு இரங்கல் 1224 பொருள்: கொலைக்களத்தில் உள்ள கொலைஞர்போல வரும்) என்றவிடத்துப் பகைவர் என்ற பொருளிலும் வந்தது.
காதலர் என்பது காதலார் எனக் குறில் நெடிலாக வந்துள்ளது. காதலுடையார் என்ற கருத்தில் 'காதலார்' (1099) என்ற சொல் தலைமக்கள் இருவரையும் குறிக்கும்.

இக்குறளைத் தோழி தன் கூற்றாகக் கூறியதாகப் பரிமேலழகரும், தலைமகள் தன் நெஞ்சிற்குக் கூறியதாகக் காலிங்கரும் கொண்டுள்ளனர். தலைவி, தலைவன், கண்டோர் ஆகிய மூவர் கூற்றாகவும் அமையலாம் என்பார் செ வை சண்முகம். ‘காதலர் கண்ணே யுள’ எனத் தலைமக்கள் இருவர்க்கும் பொதுவாகக் குறள் அமைந்து கிடக்கிறது.

இக்குறளுக்குப் பரிமேலழகர்,
ஏனல் காவல் இவளும் அல்லள்
மான்வழி வருகுவன் இவனும் அல்லன்
நரந்தங் கண்ணி இவனோ டிவளிடைக்
கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே
நம்முன் நாணுநர் போலத் தம்முள்
மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல
உள்ளத் துள்ளே மகிழ்ப
சொல்லும் ஆடுப கண்ணி னானே.
(இறையனார் களவியல் 8- ஆம் நூற்பாவுரை, பொருள்: உண்மையில் இங்கே இவள் தினைப்புனங் காப்பவளும் அல்லள், இவன் மானைத் தொடர்ந்து, அம்மானை நோக்கி வருபவனும் அல்லன். இவர் இருவரும் இங்குக் கருதியது வேறொன்றேயாகும். புறத்தே நாணுடையார் போன்று நடித்து, மதுவை மறைந்துண்ணும் மக்கள் மகிழுமாறு போல, இருவரும் தமக்குள்ளே மகிழ்கின்றார்கள். இன்னும் இவ்விருவர் கண்களும் தம்முள் பேசிக் கொள்கின்றன) என்பதில் உள்ள 'மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல' என்ற பகுதியை ஒப்பிட்டு உரை செய்துள்ளார். அதாவது பிறர் அறியாமல் கள்ளுண்டோர் தமக்குள் மகிழ்வதை, பொது நோக்குதல் காதலர்களுக்குள் மகிழ்வைத் தரும் என்பதோடு ஒப்புநோக்குகிறார் பரிமேலழகர். பிறர்க்குத் தெரியாமல் மது அருந்தினால் ஒருவர் மகிழ்வடைவாரா என்ன? சிலர்க்குச் சில வேளைகளில் கள்ளத்தனம் புரிவதிலும் ஒர் சிலிர்ப்பு இன்பம் உண்டுபோலும்!
காதலர்கள் களவில் அடையும் இன்ப உணர்வு பற்றி வள்ளுவர் இக்குறளில் பாடியுள்ளார்.

'பொதுநோக்கு நோக்குதல்' என்றால் என்ன?

'பொதுநோக்கு நோக்குதல்' என்றதற்குப் பொது நோக்கத்தால் நோக்குதல், பார்க்கும் பார்வை, ஒருவரையொருவர் பொதுநோக்கத்தான் நோக்குதல், அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், எல்லோரையும் பார்ப்பதுபோல் ஒருவரை ஒருவர் பொதுப்படப் பார்த்துக்கொள்ளுதல், மேலோட்டமாகப் பார்த்தல், கண்டும் காணாமலும் பொதுவாக நோக்குதல், வெறும் பார்வை பார்த்துக் கொள்ளுகிற தன்மை, தங்களுக்குள் பொதுப் பார்வை பார்த்துக் கொள்ளுதல், ஒருவரை ஒருவர் தெரியாது பார்த்தல் போலப் பொதுவாகப் பார்த்தல், ஒருவரை ஒருவர் தெரியாது பார்த்தல் போலப் பொதுவாகப் பார்த்தல், பொதுப் பார்வையால் பார்த்துக் கொள்ளுதல், ஒருவரையொருவர் பொது நோக்கால் நோக்குதல், பகைமையோ நட்போ இன்றிப் பொதுவாகப் பார்ப்பது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காதலர் இருவர் பொதுஇடங்களில் எதிர்கொள்ளும்போது தமக்குள் ஏதும் தொடர்பு இல்லாததுபோல் காட்டிக்கொள்வார்களாம். அருகில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போது அவர்கள் இருவரும் மனதுக்குள் தங்களது காதல் தொடர்பை நினைத்து மகிழவே செய்வார்கள். இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தமக்குள்ளே மறைவாகக் கொண்டாடிக்கொள்வர். இக்கள்ளத்தைத்தான் தமக்குள் ஒன்றுமேயில்லை என்பது போல பொது நோக்கு நோக்குதல் என்கிறார் வள்ளுவர். தலைமக்களின் காதல் நெஞ்சத்தை அவர்தம் கண்கள் காட்டும் பொதுமைப் பார்வை நுட்பமாக உணர்த்திற்று.

பொதுநோக்கு என்ற தொடர் ஒருவரையொருவர் அறியாதவர்கள் போல பார்க்கும் பார்வை என்ற பொருள் தரும்.

முன் அறியாதவர்கள் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலர் இருவரிடையே உள என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

பொதுநோக்கு நோக்குவதில் தங்கள் நெருக்கம் கூடியதாக காதலர் குறிப்பறிதல் பெற்றனர்.

பொழிப்பு

முன் அறியாதவர்கள் போலப் பொதுப் பார்வையால் பார்த்துக் கொள்ளுதல் காதலை உடையாரிடம் உள.