இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1098



அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1098)

பொழிப்பு (மு வரதராசன்): யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளாய் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.

மணக்குடவர் உரை: அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள்.
அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.

பரிமேலழகர் உரை: (தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்; அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு.
(ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: யான் நோக்க அவள் மனம் நெகிழ்ந்து மெல்லச் சிரிப்பாள். அப்பொழுது அசைந்தாடும் இயல்புடையவளுக்கு ஒரு பொலிவுண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர் யான் நோக்கப் பசையினள் பைய நகும்.

பதவுரை: அசை-அசைந்த, துவளும்; இயற்கு-இயல்பினை உடையாளுக்கு; உண்டு-உளது; ஆண்டு-அவ்விடத்து, ஆங்கே, அதில்; ஓர்-ஒரு; ஏஎர்-அழகு, தோற்றப் பொலிவு, நன்மைக் குறிப்பு; யான்-நான்; நோக்க-பார்க்கும்பொழுது; பசையினள்-நெகிழ்ச்சியுடையவளாய்; பைய-மெல்ல; நகும்-சிரிப்பாள்.


அசையியற்கு உண்டுஆண்டோர் ஏஎர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு;
மணக்குடவர் குறிப்புரை: அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்: அழகு- தன்வடிவினுள் மிக்க குணம்.
பரிப்பெருமாள்: அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு;
பரிப்பெருமாள் குறிப்புரை: அவ்விடமென்றது அவள் நெகிழ்ந்து நக்கவிடம்: அழகு உண்டு என்றது தன்வடிவினும் மிக்கது குணமெனக் குறிப்பு அறிந்தான் ஆதலான் என்றவாறு.
பரிதி: அசைந்தாடும் மயில்போன்ற சாயலையுடையாட்கு ஒரு அழகு உண்டு;
காலிங்கர்: அசைந்த இயல்பினை உடையாள்மாட்டுப் பின்னும் ஒரு நன்மை உண்டு; காலிங்கர் குறிப்புரை: ஆண்டோரோ என்பது அவ்விடத்து ஓர் அழகு என்றவாறு.
பரிமேலழகர்: (தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு.
பரிமேலழகர் குறிப்புரை: ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.

அசைந்த இயல்பினை உடையாள்மாட்டு அவ்விடத்தோர் அழகுண்டு/நன்மைக் குறிப்பு உண்டு என்று தொல்லாசிரியர்கள் இப்பகுதிக்கு உரை பகன்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அசையும் கொடிபோலும் சாயலுடையவளுக்கு ஒரு அழகு உண்டு', 'மெல்லியலுக்கு அப்போது ஓர் அழகு உண்டு', 'அந்த நேரத்தில் அசைந்துவரும் தன்மையுடைய அழகுடையாளின் தோற்றத்தில் ஒரு தனித்த அழகு தோன்றுகிறது', 'அசைந்து நடக்கும் அழகினை உடையாளாகிய அவளுக்கு ஓர் அழகு உண்டு.' என்று உரை நல்கினர்.

அசைந்து நடக்கும் அழகினை உடையாளாகிய அவளுக்கு ஓர் அழகு உண்டு என்பது இப்பகுதியின் பொருள்..

யான் நோக்கப் பசையினள் பைய நகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள்.
மணக்குடவர் குறிப்புரை: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.
பரிப்பெருமாள்: யான் நோக்க நெகிழ்ந்து மெல்ல நகாநின்றாள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பைய நகுதல்- ஓசைப்படாமல் நகுதல்.இது காமக்குறிப்புத் தோற்ற நின்று நகுதல் உடம்படுதலாம் என்றது.
பரிதி: அதுதான் யான் பார்த்தபோது தான் பாராமல் கடைக்கணித்து நோக்கிச் சிரிக்கும் சிரிப்பு என்றவாறு.
காலிங்கர்: யாதோ எனில், யான் தன்னை நோக்கிய நோக்கு எதிர்தானும் நம்மாட்டு உள்ளத்தால் ஒரு தோய்தல் உடையாள் போல மெல்ல நிகழ்வதொரு முறுவல் உண்டெனவே. இது பற்றுக்கோடாக அப்பொழுதைக்கு ஆறுதல் உள்ள தலைமகன் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்;

யான் நோக்க நெகிழ்ந்து புன்முறுவல் கொள்கிறாள் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யான் பார்க்க நெகிழ்ந்து மெல்லச் சிரிப்பாள்', 'யான் நோக்கிய போது மனநெகிழ்ந்து தனக்குள்ளே மெல்லச் சிரிக்கும்', 'நான் பார்க்கும்போது அன்பு கலந்த உள்ளத்தை உடையவளாய் மெதுவாகப் புன்முறுவல் புரிகிறாள்' என்றபடி உரை கூறினர்.

நான் பார்க்கும்பொழுது நெகிழ்ச்சியுடையவளாய் மெதுவாகச் சிரிப்பாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நான் பார்க்கும்பொழுது நெகிழ்ச்சியுடையவளாய் மெதுவாகச் சிரிக்கும்போது அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் ஏஎர் உண்டு என்பது பாடலின் கருத்து.
'ஏஎர்' குறித்தது என்ன?

அவளது முறுவலே ஓர் அழகான காதல்மொழிதான்.

அவளை நான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைப்பாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு அவ்விடத்து ஓர் அழகு தெரிந்தது.
காட்சிப் பின்புலம்:
தலைவியின் மீது காதல் தோன்றியபின், அவளது உள்ளக் கருத்தினை அறிய விரும்பினான் தலைவன். அவளும் அவனைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறாள் என்ற குறிப்பு கிடைக்கிறது. பின் நேர்ந்த சந்திப்பில் அவன் பார்த்த நேராகப் பார்க்கமுடியாமல் களவுப் பார்வை பார்த்தாள். அது அவன்மீது அவளுக்குள்ள காதலை வெளிப்படையாகக் காட்டிவிட்டதாய் இருந்தது. அடுத்த சந்திப்பில் நேராகவே அவனைப் பார்க்கிறாள். பின் தலை கவிழ்ந்து கொள்கிறாள். அவர்களது புதிய உறவு தொடர்வது உறுதிப்பட்டுவிட்டது போல் ஆனது. காதல் மலந்துவிட்டபின் ஒரு பார்வை விளையாட்டு தொடங்குகிறது. அவன் பார்த்தால் அவள் பார்க்க மாட்டள்; அவன் பாராதபோது அவனுக்குத் தெரியாமல் அவனைப் பார்ப்பாள்; உள்ளுக்குள் சிரிப்பாள்; உள்ளங்கள் ஒன்றுபட்டன. அவள் காதலை முழுமையாகத் தெரிவிக்கிறாள் என அவன் அறிகிறான். பின்னர் அவர்கள் ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள முயல்கின்றனர். ஒருவர் கருத்தை ஒருவர் ஒத்துக்கொள்ளாதவர்போலவும் பேசிக் கொண்டனர். தங்களுக்குள் சுடுசொல் பேசிக்கொள்வதும் பகைவனைப் பார்ப்பது போல பார்த்துக் கொள்வதுமான பொய் ஆட்டத்தில் மகிழ்ச்சி அடைகின்றனர்; உறவு இன்னும் நெருக்கமானது.

இக்காட்சி:
காதல் கொண்ட இருவரது சந்திப்பு தொடர்கிறது. மயில்போல் அசைந்து வருபவளை அவன் பார்க்கிறான். அவன் மேல் அன்பு கொண்டவளானதால் நெகிழ்ச்சியுண்டாகி அவள் மெல்லச் சிரிப்பாள். அப்பொழுது அது அவளுக்கு ஓர் புதுப் பொலிவு தருகிறது.
அவன் விரும்பியவாறு பெண்மைக் குணம் மிகுந்த பெண் காதலியாகக் கிடைத்திருக்கிறாள் என்று அவன் பெருமிதம் கொள்கிறான் என்பது உள்ளுறை.

அசையியல் என்பதற்கு அசைந்த இயல்பினையுடையாள், அசைந்தாடும் மயில்போன்ற சாயலையுடையாள், நுடங்கியஇயல்பினை உடையாள், அசைந்து நடப்பவள், அசையும் கொடிபோலும் சாயலுடையவள், கொடி போலசையுந் தன்மையாள், அசைந்து நடக்கும் அழகினை உடையாள், மெல்லியலாள் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் அசைந்தாடும் மயில்போன்ற சாயல் உடையவள், கொடி போல் அசையுந் தன்மையாள் என்பன பொருள் உணர்த்தி நிற்பனவாகும். அசையியல் என்பதற்கு அசைந்த இயல்பினையுடையாள் என்பது பொருள். அவள் நடந்து செல்லவில்லை; காற்றில் அசைந்து செல்கிறாளாம். மென்மையான இயல்பினள்.
பசையினள் என்றதற்கு நெகிழ்ச்சி உடையவள் என்று பழம் ஆசிரியர்கள் உரை கண்டனர். காலிங்கர் 'உள்ளத்தால் ஒரு தோய்தல் உடையாள்' என்று இன்னொரு அழகான சொற்றொடர் மூலம் பொருள் கூறுவார். பசை (பாசம்; அன்பு) என்ற வேர்ச் சொல்லிலிருந்து பசையினள் வந்தது என்பர். பிற்காலத்தவர்கள் அன்பு கொண்டவள், பரிவு கொண்டவள், இரங்கியவள், இரக்கம் உடையவள் என்று பொருள் கூறுவர். நெகிழ்ச்சி உடையவள் என்ற பொருள் சிறந்தது.
பைய என்பது மெல்ல என்ற பொருள் தரும். பையச் சென்றால் வையந் தாங்கும் (கொன்றைவேந்தன் 67 பொருள்: ஒருவன் தகுதியான வழியில் நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர்) என்னும் பழைய செய்யுளுள் இச்சொல் பயின்றுவந்துள்ளது. பைய என்னும் சொல் இன்றும் தென்மாவட்டங்களில் மெல்ல என்ற பொருளிலேயே பெருவழக்காக உள்ளது.

'ஏஎர்' குறித்தது என்ன?

ஏஎர் என்றால் என்ன?
'ஏர்' என்ற சொல் அளபெடுத்து 'ஏ எர்' ஆனது. ஏர் என்பதற்கு அழகு என்பது பொருள். அவளிடம் ஓர் ஏஎர் உண்டு என்றால் தனித்த ஓர் அழகு உண்டு என்று பொருள். அவள் காற்றில் அசைந்துவரும் தென்றல்போல் நடப்பதுவும், அவளது குளிர்ச்சியான பார்வையும் மெல்லிய சிரிப்பும் அவள் அழகுக்குக் அழகு சேர்க்கின்றன. அந்தத் தனித்த அழகுக்குள் காதற்குறிப்பு இருப்பதையும் எண்ணித் தலைவன் மகிழ்கிறான். தனது பெண்மைக் குணங்களால் அவள் குறிப்புணர்த்தினாள். அது அறிந்து அவன் பெருமிதம் கொள்கிறான். காதலால் இருவரும் இன்னும் நெருங்குகின்றனர். இது ஏஎர் என்னும் சொல் தரும் குறிப்பு.

'ஏஎர்' என்னும் ஓசையமைவுடைய சொல் குறளில் காணும் புதிய சொல் வடிவம் ஆகும் என்பர்.

நான் பார்க்கும்பொழுது நெகிழ்ச்சியுடையவளாய் மெதுவாகச் சிரிக்கும்போது அசைந்த இயல்பினையுடையாட்கு அப்போது ஒரு தனி அழகு உண்டு என்பது குறட்கருத்து.



அதிகார இயைபு

நிறைவான பெண்மைக் குணம் கொண்டவள் என்ற குறிப்பறிதல் பெற்றான்.

பொழிப்பு

நான் பார்க்கும்பொழுது நெகிழ்ந்து மெல்லச் சிரிப்பாள். அசைந்து நடக்கும் அழகினை உடையவளுக்கு அப்போது ஓர் அழகு உண்டு.