செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு
(அதிகாரம்:குறிப்பறிதல்
குறள் எண்:1097)
பொழிப்பு (மு வரதராசன்): பகைகொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர்போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.
|
மணக்குடவர் உரை:
செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும், அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்.
இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) செறாஅச் சிறு சொல்லும் - பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும்; செற்றார் போல் நோக்கும் - அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன.
(குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம்.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
உட்சினம் இல்லாது சொல்லும் இழிந்த சொல்லும், வெறுத்தவர்போலப் பார்க்கின்ற பார்வையும் தொடர்பிலார் போல வெளியே தோன்றி உள்ளே விருப்பம் உடையவர்களது அடையாளம் ஆகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
பதவுரை: செறாஅ-வெகுளாத; சிறுசொல்லும்-இன்னாத மொழியும்; செற்றார்போல்-பகைவர்போல; நோக்கும்-பார்க்கும்; உறாஅர்-நொதுமலர்; போன்று-போல; உற்றார்-நண்பர்; குறிப்பு-அடையாளம்.
|
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும்;
பரிப்பெருமாள்: செறுதலில்லாக் கடுஞ்சொல்லும், செற்றார்போல நோக்குதலும்;
பரிதி: ஊடுதலில்லாத சொல்லும் அயலார் போலப் பார்க்கும் பார்வையும்;
காலிங்கர்: நெஞ்சமே நமக்கு ஒன்று சொல்லினும் இவள் எங்ஙனம் சொல்லுமோ என்று இடர் உறவேண்டா; உள்ளத்தால் செறாது புறம்பு உரைக்கும் புன்சொல்லும் அங்ஙனம் சீரியாரே செற்றாரைப் போல்வதோர் நோக்கும் இவை இரண்டும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) பின் இனிதாய் முன் இன்னாதாய சொல்லும், அகத்துச் செறாதிருந்தே புறத்துச் செற்றார் போன்ற வெகுளி நோக்கும்; [சிறு சொல்-கடுஞ்சொல்;
செறாது-பகைக்காமல்]
பழம் ஆசிரியர்கள் சினம் இல்லாத கடுஞ்சொல்லும் பகைவர் போன்று பார்வையும் என்று இப்பகுதியை விளக்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகையாத கடுஞ்சொல் பகைபோல் பார்வை', 'வெறுப்பில்லாத மறுப்புச் சொல்லும் மனத்தில் பகையின்றிப் பகைவர் போலப் பார்க்கும் சினந்த பார்வையும்', 'சினமின்றியே சினங்கொண்டவர்போல் பேசிக் கொள்ளும் சிறுசொற்களும் பகையின்றியே பகைவர்கள் போல் பார்த்துக்கொள்ளும் பார்வைகளும்', 'சீற்றமுற்று வருத்தாத கடுஞ்சொல்லும், பகைவர் போன்ற பார்வையும்' என்றபடி உரை தந்தனர்.
சினங்கொண்டவர்போல் கூறும் சுடுசொல்லும் பகைவர்கள் போன்ற பார்வையும் என்பது இப்பகுதியின் பொருள்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அன்பின்மை தோற்ற நில்லாமையின் உடன்பாடென்று தேறியது
பரிப்பெருமாள்: அன்புறாதார் போல அன்புற்றாரது குறிப்பென்று கொள்ளப்படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேலே தலைமகள் கூறிய கடுஞ்சொல்லும் அதன்பின் கடுத்து நோக்கின நோக்கமும் குறித்து இவ்வாறு செய்யினும் அன்பின்மை தோற்றம் இல்லாமையின் உடம்பாடு என்று தேறியது.
பரிதி: காமம்மிக்க நாயகியின் குணம் என்றவாறு.
காலிங்கர்: புறத்துப் பரிவிலாதார் போன்று வைத்து அகத்து அன்புடையார் செய்யும் மனக்குறிப்பு என்று ஆற்றியுளேம் ஆதலே கருமம் என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: நொதுமலர் போன்று நட்பாயினார்க்கு ஒரு குறிப்புப்பற்றி வருவன.
பரிமேலழகர் குறிப்புரை: குறிப்பு: ஆகுபெயர். இவை உள்ளே ஒரு பயன் குறித்துச் செய்கின்றன இயல்பல்ல ஆகலான், இவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பதாம். [இவை-செறாஅர்ச் சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்]
புறத்துப் அன்பில்லாதவர் போன்று வைத்து அகத்து நட்புடையார் செய்யும் மனக்குறிப்பு என்பது பழம் ஆசிரியர்களின் உரையாகும். பரிதி காமம் மிக்க நாயகியின் குணம் என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'இவை அயலவர் போன்ற அன்பர் குறிப்பு', 'பொருந்தாத பகைவர் போன்ற நண்பராயினார்க்குக் குறிப்புணர்த்தும் செயல்களாம்', 'வெளியே உறவில்லாதவர்கள் போன்று காட்டிக்கொண்டு உள்ளே மனமொன்றிவிட்ட காதலர்களின் உட்குறிப்புள்ள செயல்களாகும்', 'தொடர்பு இல்லாதவர் போல் பிறர்க்குக் காணப்பட்டாலும் அவை நெருங்கிய பற்றுள்ளம் கொண்டவர்களது சொற்குறிப்பும் கண்குறிப்பும் ஆம்' என்றவாறு உரை பகன்றனர்.
தொடர்பு இல்லாதவர் போல் வெளிக்குக் காணப்பட்டாலும் பொருந்திய காதலர்களிடையேயான குறிப்புணர்த்தும் செயல்களாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சினங்கொண்டவர்போல் கூறும் சுடுசொல்லும், பகைவர்கள் போன்ற பார்வையும், உறாஅர்போன்று உற்றார் குறிப்பு என்பது பாடலின் பொருள்.
'உறாஅர்போன்று உற்றார்' யார்?
|
களவுக் காதலில் அவர்கள் தொடர்பற்றோர்போன்று காட்டிக்கொண்டு உறவை வளர்க்கின்றனர்.
உள்ளத்திலே சினவாதவளின் கடுஞ்சொல்லும், வெகுள்வார் போலப் பார்க்கும் பார்வையும், தொடர்பு இல்லாதவர் போல் வெளிக்குக் காண்பித்துக்கொள்வது ஆகியன உள்ளத்திலுள்ள ஒரு குறிப்பாலே வருவன.
காட்சிப் பின்புலம்:
முதல் பார்வையிலேயே அவன் அவள்மீது வெகுவாக ஈர்க்கப்பட்டான்; அங்கேயே அவனுக்கு அவள்மேல் காதலுண்டானது.
பின் உண்டான எதிர்ப்படுதல்களில் தன்மீது காதலுடையவளா என்று தெரிந்துகொள்ள முயல்கின்றான்.
அவளது ஒரு நோக்கு நோய் தருவதாகவும் மற்றொன்று அந்நோயைத் தணிப்பதாகவும் உணர்ந்தான்.
அடுத்து அவள் அவன்மீது ஒரு களவுப் பார்வை வீசியபோது அவளது உள்ளத்தை வென்றுவிட்டதாகக் களிப்புற்றான்.
பின் நிகழ்ந்த சந்திப்பில் அவள் நேராகவே பார்த்தாள், அவன் எதிர்நோக்கியபோது அவள் நாணித் தலைகவிழ்ந்து கொண்டது அவர்களது காதல் பயிருக்கு அவள் நீர்பாய்ச்சியது போல் இருந்ததாம்.
தொடரும் சந்திப்பில் தான் பார்க்கும்போது நிலத்தைப் பார்த்து, பார்க்காதபோது தன்னைப் பார்த்து சிறிதே தனக்குள்ளே சிரித்து மகிழ்கிறாள்.
பின்னர் நேருக்கு நேர் அவனை முழுமையாகப் பார்க்காமல், வேறு எங்கோ பார்ப்பது போல் முகம் காட்டிக்கொண்டு அவனை நோக்கித் காதல்குறிப்பு கலந்த ஓரக்கண் பார்வையைச் செலுத்தி, அவள் சிறக்கணித்துச் சிரித்தாள், இவ்வாறாக உளப் பொருத்தம் வளர்ந்து இருவரிடையே காதல் கனிந்தது.
இப்பொழுது ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள முயல்கின்றனர்; பழகத் தொடங்கிய அவர்கள் ஊடாடுகின்றனர். காதலர் உரையாடல்களிலும் உரசல்கள் உண்டாவது இயல்பு. சிலவேளைகளில் வெளிப்படையாக எதையும் பேச முடியாமல் அன்பிலாதார் போலவும் பேசுவர். அச்சமயங்களில் அவர்கள் மனம் கலக்கம் உறும். ஆனால் எண்ணிப்பார்த்தால் அவர்களது உரையில் வன்மையுள்ளது போல் தோன்றினாலும் உள்ளத்துள் ஒருவர்க்கொருவர் அன்புகொண்டவர் என்பதும் தெரியும். அன்பை மறைத்து காதல்வயப்பட்டவர்கள் சொன்ன கடுஞ் சொற்களுக்குள்ளும் காதற் கலப்பு உண்டென அறிந்துகொள்வார்கள்.
இக்காட்சி:
தலைமக்கள் ஒருவரையொருவர் நன்கு உணர்ந்து ஒத்த அன்பு பூண்ட காதலர்களாதலால் அவர்கள் உறவு பலப்பட்டே உள்ளது.
இக்காட்சியில், அறிமுகமாகாதவள் போல், வேற்று ஆள் போன்று, சினம்கொண்டு, ஆனால் மனதுள் வெறுப்பில்லாமல், சில சுடுசொற்களைச் சொல்லிப் பகைவனைப் பார்ப்பது போல பார்த்துக் கொள்கிறாள் தலைவி; அவர்கள் ஒருவரையொருவர் அறியாதவர்போல உறவாடிக்கொள்கிறார்கள். உரையாடும்போது சொற்களைச் சற்று வேறுபட்ட முறையில் ஆள்கின்றனர். மிகுந்த அன்புடைய நெஞ்சம் கொண்ட இருவரும், வேண்டாதவர்களிடம் அல்லது அயலவர்களிடம் பேசுவது போல பேசுகின்றனர். பகை உணர்வு இல்லாமலேயே பகைவனைப் பார்ப்பது போல பார்த்துக் கொள்கிறார்கள். அவளுக்கு அவனைத் தெரியாதது போல இருக்கிறாள்; அவன் அவளை அறியாதவன் போல் இருக்கிறான்.
இவையெல்லாம் ஒருவருக்கொருவர் உள்ளூர விரும்பிக் கொண்டிருக்கும் காதலர்கள் காட்டும் குறிப்புகளாகும். இவை இயல்பல்லாதவை. எனவே பொருட்படுத்த வேண்டியன அல்ல.
|
'உறாஅர்போன்று உற்றார்' யார்?
'உறாஅர்போன்று உற்றார்' என்ற தொடர்க்கு அன்புறாதார் போல அன்புற்றார், காமம்மிக்க நாயகி, புறத்துப் பரிவிலாதார் போன்று வைத்து அகத்து அன்புடையார், நொதுமலர் போன்று நட்பாயினார், புறத்தே அயலார்போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவர், வெளியே உறவில்லாதவர்கள் போன்று காட்டிக்கொண்டு உள்ளே மனமொன்றிவிட்ட காதலர்கள், அயலவர் போன்ற அன்பர், பகைவர் போன்ற நண்பராயினார், (காமநோய்) அடையாதவர் போலக் காட்டிக் கொள்ளும் காமநோய் அடைந்துவிட்ட பெண்கள், தொடர்பு இல்லார் போன்று தொடர்பு உள்ளார், தொடர்பிலார் போல வெளியே தோன்றி உள்ளே விருப்பம் உடையவர்கள், அன்பு பொருந்தாதவர் போன்று அன்புடையார், உறவில்லாதவர்போல் உறவு வளர்க்கும் காதலர், அயலார்போல் நடித்து அன்பராயிருப்பவர், தொடர்பு இல்லாதவர் போல் பிறர்க்குக் காணப்பட்டாலும் அவை நெருங்கிய பற்றுள்ளம் கொண்டவர்கள் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.
உள்ளே மனமொன்றிவிட்ட காதலர்கள் வெளியே உறவில்லாதவர்கள் போன்று காட்டிக்கொள்வதில் ஒருவித கிளர்ச்சி பெறுவர்.
தொடர்பு இல்லாதவர் போல் நாடகமாடுவது தங்கள் களவுக் காதலை வெளி உலகுக்கு மறைப்பதற்காகவும் இருக்கலாம். எனினும் சினமற்ற இன்னாத மொழியும் பகைவர்போல பார்வையும் கொண்ட இந்தப் பொய்யாட்டத்தில் அவர்கள் மகிழ்ச்சியும் அடைகின்றனர்; அதனால் அவர்களது உறவு இன்னும் நெருக்கமாக அமைவதை உணர்வர்.
சினமில்லாமல் ஆனால் சினத்தவர் போல் பேசும் சொற்களும் சினத்துடன் நோக்கும் பார்வையும் காதல் கொண்டதை வெளியே சொல்ல விரும்பாமல்
காதல் கொண்டவர்கள் தங்களை அறியாமல் காட்டும் அடையாளமாம்.
இதுவே பகைவர் போல நட்பாராயினர் தரும் குறிப்பு.
'உறாஅர்போன்று உற்றார்' என்ற தொடர் முன்பின் அறிமுகமற்றவர் போன்று வெளியுலகுக்குத் தோற்றமாகும் நெருங்கிய தொடர்புகொண்டவர் எனப் பொருள்படும்.
|
சினமில்லாமல் மொழிந்த கடிந்த சொற்களும் பகைத்தவர் போல் காட்டுகின்ற பார்வையும் காதல் கொண்டதை வெளியே சொல்ல விரும்பாத காதலர்கள் தங்களை அறியாமல் காட்டும் குறிப்புகளாம் என்பது இக்குறட்கருத்து.
காதலர்கள் அரங்கேற்றும் பொய்மை நாடகத்தால் மேலும் நெருக்கமான உற்றார் ஆயினர் என்ற குறிப்பறிதல்.
வெறுப்பற்ற கடுஞ்சொல் பகைவர்போல் பார்வை; இவை அயலார் போன்று நட்புடையார்க்கு குறிப்புணர்த்தும் செய்கைகள்.
|