இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1096



உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1096)

பொழிப்பு (மு வரதராசன்): புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

மணக்குடவர் உரை: கூடாதவர் போலச் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும்.
இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.

பரிமேலழகர் உரை: (தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும்.
(கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.)

வ சுப மாணிக்கம் உரை: உறவில்லாதவர் போலச் சொன்னாலும் வெறுப்பில்லாதவர் சொல் விரைவில் புரியும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறாஅதவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப்படும்.

பதவுரை: உறாஅதவர்போல்-அயலார் போல, புதியவர் போல, பகை நட்பில்லாதவர் போல; சொலினும்-சொன்னாலும்; செறாஅர்-வெகுளாதவர், வெறுப்பில்லாதவர்; சொல்-மொழி; ஒல்லை-கடிதின்; உணரப்படும்-அறியப்படும்.


உறாஅ தவர்போல் சொலினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடாதவர் போலச் சொல்லினும்;
பரிப்பெருமாள்: கூடாதவர் போலச் சொல்லினும்;
பரிதி: அயலார் போலவே பார்த்தாலும்;
காலிங்கர்: நெஞ்சே! நெஞ்சிற் பருவுறாதார் போல் சில சொல்லினும்;
பரிமேலழகர்: (தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; [நொதுமலர்-அயலார்; செறுதல் இலாதார்-பகை இல்லாதவர்]
பரிமேலழகர் குறிப்புரை: கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. [வரற்பாலிர் அல்லீர்-வாராதீர்]

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் 'அயலார் போலச் சொன்னாராயினும்' என்ற பொருளில் உரை தந்தனர். மற்றவர்கள் தலைமகளது வன்சொல் என்று கொள்ள பரிமேலழகர் தோழி கூறிய கடுஞ்சொல் என்று கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறவில்லாதவர் போல் சொன்னாலும்', 'வெளியே ஏதிலார் போலக் கடுஞ்சொல் சொன்னாலும்', 'ஆசையில்லாதவர் போலப் பேசினாலும்', 'தொடர்பு இல்லாதவர் போல அவரது சொல் இருந்தாலும்', 'அன்பு இல்லாதவர் போல் சொன்னாலும்' என்றபடி உரை தருவர்.

அயலார் போலப் பேசினாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறுதலில்லாதார் சொல்லை அதற்குக் காரணமாகப் பிறிதொன்று உளதென்று விரைந்தறிதல் வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது.
பரிப்பெருமாள்: செறுதலில்லாதார் சொல்லை இதற்குக் காரணம் பிறிதொன்று உளதென்று விரைந்து அறிய வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உறுப்பினாலிசைவுகாட்டி, உரையினால் மறுப்பினும் உடன்படுதலாமென்றது. மனம் நெகிழ்ச்சிகண்டு சாரலுற்ற தலைமகனைத் தனதில் வலியுறுத்தற்பொருட்டுக் கடுஞ்சொல் கூறித் தலைமகள் நீங்கின வழி, இஃது உள்ளன்பு இன்மையால் கூறினாள் அல்லள்; அதற்குக் காரணம் யாது?' என்று தலைமகன் தன்னுள்ளே சொல்லியது என்றவாறு.
பரிதி: இன்பம் உள்ள ஆசைப் பார்வையாலே கூடுதற்கு இட்டம் என்று அறிக என்றவாறு.
காலிங்கர்: பரிவுடையார் சொல்லும் சொல்லினது குறிப்பினை அனாதரிக்க அடாது;
காலிங்கர் குறிப்புரை: மற்று இதன் கருத்து என்னை கொல் என்று விரைந்து குறித்துணர அடுக்கும் என்பதனால் தனக்கு ஆற்றாமை வந்தவிடத்து இதுவும் ஒரு பற்றுக்கோடு ஆயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். [பிற்பயத்தல்-பின் பயனைத் தருதல்; கடிதின்-விரைவில்
பரிமேலழகர் குறிப்புரை: 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.

இப்பகுதிக்கு மணக்குடவர்/பரிப்பெருமாள்/காலிங்கர் 'கடுஞ்சொல்லை உள்ளன்பு இல்லாமல் கூறவில்லை; பின் ஏன் அவள் அப்படிப் பேசினாள்? என்று விரைந்து அறியவேண்டும்' என்று தலைமகன் பேசுவதாக உரைத்தனர். பரிதி 'அவளுக்கு கூடுதற்கு விருப்பம்தான்' என்றும் பரிமேலழகர் 'தோழியின் சொல் பின் பயனைத் தரும் என்பது கடிதின் அறியப்படும்' என்றும் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெறுப்பில்லாதவர் சொல் விரைவில் புரியும்', 'உட்சினமில்லாதவர்கள் மொழி ஈதென்று விரைவில் அறியலாம்', 'பகைமைக் குணமில்லாதவர் சொல் பயன்தரத் தக்கது என்பதை விரைவில் அறியப்படும்', 'அகத்திற் பகையில்லாதவர் சொல் பின்பயன் படுதல் குறைவேண்டியவரால் விரைந் தறியப்படும்', 'பகை எண்ணம் இல்லாதவரது சொல்லானது விரைவில் அவர் உற்றவர் என்பதை உணர்த்திவிடும்' என்று தலைவன் எண்ணுவதாகப் பொருள் கூறினர்.

பகையில்லாதவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று விரைவில் உணரப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறாதவர் போல் பேசினாலும் பகையில்லாதவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று விரைவில் உணரப்படும் என்பது பாடலின் கருத்து.
'உறாதவர்' யார்?

காதலர் ஒருவர்மேல் மற்றொருவர் பொய்ச்சினம் கொண்டு உறவாடிக் கொள்கின்றனர்.

புறத்தே நம்மை விரும்பாதவரைப் போலச் சொன்னாரானாலும், நம்மிடம் சினந்து கொள்ளாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும்.
காட்சிப் பின்புலம்:
எங்கோ ஓர் இடத்தில் அவனும் அவளும் நேருக்கு நேர் பார்க்கின்றனர். அவளது அன்புப் பார்வை அவனது காதல்நோயைத் தணித்து ஒர் குறிப்பும் கொடுத்தது; அது அவள், அவனைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறாள் என்பதே. மறுசந்திப்பில் அவன் அவளைப் பார்க்கிறான் அவள் நாணத்தால் அவனைக் களவுப் பார்வை பார்க்கிறாள். அவளது களவுப்பார்வை அவன்மீது அவளுக்குள்ள காதலை வெளிப்படையாகக் காட்டிவிட்டது; அவனுக்கு அவளது உள்ளத்தை வென்றுவிட்டோம் என்ற களிப்பு உண்டாகிறது; அடுத்த சந்திப்பில் அவன் இன்னும் நெருக்கமான இடைவெளியில் அவளைக் காண்கிறான். இப்பொழுது நேராகவே பார்க்கிறாள். அவன் அவளை எதிர்நோக்கு கொள்கிறான். உடனே அவள் ஏதோ கருத்தை உட்கொண்டு நாணித் தலைகவிழ்ந்து கொண்டது அவர்களது காதல் பயிருக்கு அவள் நீர்பாய்ச்சியது போல் இருந்தது என்கிறான் அவன். அவர்களது புதிய உறவு தொடர்வது உறுதிப்பட்டுவிட்டதற்கான குறிப்பு கிடைத்தது. காதல் மலர்ந்துவிட்டது. அடுத்து, இடைவெளி முற்றிலும் குறைந்து உள்ளங்கள் ஒன்றுபடும் நிலையில் நேருக்கு நேர் அவனை முழுமையாகப் பார்க்காமல், அவன்மீது கடைக்கண் வீசி, வேறு எங்கோ பார்ப்பது போல் முகம் காட்டிக்கொண்டு அவனை நோக்கித் தனக்குள்ளே சிரித்து மகிழ்கிறாள். காதல் கலந்த ஓரக்கண் பார்வை அவளது எண்ணத்தில் அவனே நிறைந்திருக்கிறான் என்பதைக் குறிப்பாகக் காட்டியது. உளப் பொருத்தம் வளர்ந்து இருவரிடையேயான காதல் கனிந்த நிலை இது. காதல் பற்றிக்கொண்ட பிறகு உறவு பலப்படத் தொடங்கியது. ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள முயல்கின்றனர். பழகத் தொடங்கிய அவர்கள் அடிக்கடி சந்தித்து உரையாடுகின்றனர்.

இக்காட்சி:
மனிதஉறவில், உரையாடல்கள் நிகழும்போது, இடையிடையே உரசல்கள் ஏற்படுவது இயல்பு. காதலர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. காதலர்கள் ஒருவர் கருத்தை ஒருவர் ஒத்துக்கொள்ளாதவர்போலும் நிலையும் உண்டாகும். களவுக்காதல் ஆகையால் பலவேளைகளில் வெளிப்படையாக எதையும் பேச முடியாமல் உறாதவர் போலவும் பேசுவர். இக்காட்சியில், அறிமுகமாகாதவள் போல், வேற்று ஆள் போன்று, சினம்கொண்டு, ஆனால் மனதுள் வெறுப்பில்லாமல், சில சுடுசொற்களைச் சொல்லிச் சென்றுவிட்டாள் தலைவி. அப்பொழுது ஒருகணம் காதலன் மனம் கலக்கம் உற்றது. ஆனால் எண்ணிப்பார்த்தால் அவளது உரையில் வன்மையுள்ளது போல் தோன்றினாலும் உள்ளத்துள் அன்புகொண்டவள் என்பதும் தெரிந்தது. அன்பை மறைத்து அவள் சொன்ன கடுஞ் சொற்களுக்குள்ளும் காதற் கலப்பு உண்டென அவன் அறிவான்.
குறளின் சொல்லமைப்பு காதலன், உள்ளத்தில் ஒன்றும் வைக்காமல், கடுங்சொற்களைச் சொல்லிவிட்டுச் சென்றதாகவும் கொள்ள இடமளிக்கிறது.

வன்சொல் பகர்ந்தாலும் காதலர் நட்பு உள்ளத்தை உணர்ந்தோர், வெளிப்பட்ட மொழி பொய்ச்சொல்தான் என்பதை அதைக் கேட்ட மற்றவர் தெரிந்து கொள்வார். புறத்தில் உறவு அல்லாதவர் போலப் பேசினாலும் அகத்தில் அன்புடையவரின் அந்தக் கடும் சொற்களின் உட்பொருளை விரைவில் உணர்வார். அயலார் போல அவரது சொல் இருந்தாலும், பகை எண்ணம் இல்லாதவரது உரை விரைவில் அவர் உற்றவர் என்பதை உணர்த்திவிடும் என்பது கருத்து.
'செறார்' அதாவது வெறுப்பில்லாதவர் எனச் சொல்லப்பட்டதால் அன்புகொண்டவள் என்பது பெறப்படும். 'உறாஅதவர்போல்' என்பதிலுள்ள 'போல்' என்ற சொல் உண்மையில் உறாதவரல்லர் என்பதை உணர்த்தும்.
சொல்லும் குறிப்பறிதற் கருவியாதலால் அவள் கூறிய கடுஞ்சொற்கள் பொய்ச்சொற்கள் என்பதையும் அவற்றில் காதல் குறிப்பும் இருந்ததையும் காட்டும். சிடுசொல்லும் அயலார் போன்று தோன்றி அன்பு செலுத்தும் காதலர் குறிப்பேயாகும்.

இக்குறளின் ஈற்றடியைக் கொண்ட இன்னொரு பாடல் ஒன்று உள்ளது. அது, நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும் (கூடா நட்பு 826 பொருள்: நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்ன போதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரையில் உணரப்படும்) என்பது. இங்கு சுடுசொல்வழி நட்பு நெஞ்சும், கூடாநட்பு அதிகாரத்தில் இன்சொல்வழிப் பகைநெஞ்சும் காட்டப்பட்டன.

'உறாதவர்' யார்?

'உறாதவர்' என்ற சொல்லுக்குக் கூடாதவர், அயலார், நெஞ்சிற் பருவுறாதார், உறவில்லாதவர், ஏதிலார், நொதுமலர், விருப்பம் இல்லாதவர், தொடர்பு இல்லாதவர், அன்பு இல்லாதவர், காதல் உறாதவர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இங்கு குறிக்கப்பட்ட உறாதவர் என்பது 'தோழி'யைக் குறிப்பதாகப் பரிமேலழகரும் 'தலைவி'யைச் சொல்வதாகப் பிறரும் கொண்டனர். தோழி என்பது அகத்திணைக்கு ஏற்புடையதாக இருந்தாலும் தலைவன், தலைவி இருவருக்குமே 'உறாதவர்' என்ற சொல் பொருந்துவதே. உறாதவர் என்பது தலைமக்களைக் குறிக்கும் எனக் கொள்வதே சிறக்கும்.
தொடர்பிலார் அல்லது முன்பின் பழக்கமில்லாதவர் இடத்துப் பேசும்போது ஒருவர் பட்டும்படாமலும் பொருட்படுத்தாத தன்மையில்தான் பேசுவர். அதுபோல் இங்கு காதலர் பேசிக்கொண்டனராம். பின் பிரியும்போது காதலனோ அல்லது காதலியோ வெறுப்புமொழியில் சில சொற்களைச் சொல்லிவிட்டுச் சென்றார் என்கிறது பாடல்.
'உறாதவர் சொல்' என்பது மனத்துள் ஒன்று வைத்துப் புறத்து ஒன்று பேசும் குறிப்பு மொழியைக் காட்டுவதாகும் என்றும் கொள்வர்.

இனி, உறாதவர்போல் என்ன கூறப்பட்டது? ஏன் கூறப்பட்டது? 'உறாதவர்சொல்'லின் உட்பொருள் என்ன? என்பனவற்றிற்கு உரைகாரர்கள் கூறிய விளக்கங்களிலிருந்து சில:

  • கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வாராதீர்' என்று தோழி கூறல் முதலாயின.
  • எம் உறவினர் கடுங்கண் மறவர் என்றும், இவ்விடம்காவன் மிகுதி யுடைமையால் வரத்தகாது என்றும் அன்பிலாதவள் போலக் கடுஞ்சொற்களைச் சொல்லுதல் மரபு.
  • அன்பு மிகுதியினாலும், வெளிப்படையாகப் பேசக் கூசுவதனாலும், பழக்கமின்மையாலும் உறாதவர் போல் பேசுவர்.
  • ஒருமித்த அன்புடையாரிடையே, 'ஆமா, உங்களைத் தெரியாதாக்கும்?' என்பது போலவும், 'சும்மா! அனத்தாதே! ஒரு கணம் நிம்மதியா இருக்கவிடமாட்டியா?' என்றும் ஒருவரை ஒருவர் மறுப்பார்போல் பேசிக் கொள்வர்.
  • உள்ளே பகைக்காது, வெளியே 'உஹூ, நான் மாட்டேன் போ' என்னும் சிறு கடுஞ்சொல் கூறுவர்,
  • 'யார் நீங்கள்?' என்கிறாள்; அறியாதவள் போல் பேசுகிறாள்; அந்நியன் போல் என்னை நடத்துகிறாள்; அன்பில்லாதவள் போல் காட்டிக் கொள்கிறாள்; சம்பிரதாய வார்த்தைகளையே கூறுகிறாள்; ஆனால், 'இவள் உள்ளம் வேறு' என்பதை ஒரு நாள் அறிவேன்; வெறுப்பவர்கள் பேசும் மொழியல்ல அது.
  • வந்த தோழி அவனைக் கண்டதும் 'யாரையா நீர்? பெண்கள் உள்ள இடத்தில் ஆண்களுக்கு என்ன ஐயா வேலை?' என்று கடிந்து உரைக்கத் தொடங்கினாள்.
  • உடன்பாடில்லாதவர் போல் பேசினும் உள்ளத்துள் உடன்பாடுண்டென்பது, உடன்பட்டவர்களால் உள்ளத்துள் உணரப்படுமாம்.
  • விரைந்து குறித்துணர அடுக்கும் என்பதனால் தனக்கு ஆற்றாமை வந்தவிடத்து இதுவும் ஒரு பற்றுக்கோடு ஆயிற்று.

'உறாதவர்' என்ற சொல்லுக்கு இங்கு அயலார் என்பது பொருள்.

அயலார் போலப் பேசினாலும் பகையில்லாதவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று விரைவில் உணரப்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதலரிடை சுடுசொற்கள் என்பது அன்பின் மிகுதியால்தான் என்னும் குறிப்பறிதல்.

பொழிப்பு

உறவில்லாதவர் போலச் சொன்னாலும் வெறுப்பில்லாதவர் சொல் விரைவில் புரியும்.