இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1094



யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1094)

பொழிப்பு (மு வரதராசன்): யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

மணக்குடவர் உரை: யான் தன்னைப்பார்க்குங்கால் தான் நிலத்தைப் பார்க்கும்; யான் பாராத விடத்துத் தான்பார்த்தது தோன்றாமை நகும்.
மெல்ல நகுதல்- முகிழமுகிழ்த்தல்.

பரிமேலழகர் உரை: (நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
(மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: யான் அவளை நோக்கும்போது எதிர்நோக்காமல் நாணித் தலை குனிந்து நிலத்தை நோக்குவாள். அஃதறிந்து யான் நோக்காதது போல் சாடையாக நோக்கினால் தானே புன்முறுவல் செய்வாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்.

பதவுரை:
யான்-நான்; நோக்கும்காலை-பார்க்கும்பொழுது; நிலன்நோக்கும்-நிலத்தைப் பார்க்கும்; நோக்காக்கால்-பாராதபோது; தான்-தான் (தன்னை-அதாவது தலைவனை); நோக்கி-பார்த்து; மெல்ல நகும்-முறுவலிக்கும்.


யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் தன்னைப்பார்க்குங்கால் தான் நிலத்தைப் பார்க்கும்;
பரிப்பெருமாள்: யான் தன்னைப்பார்க்குங்கால் தான் நிலனைப் பார்க்கும்;
பரிதி: காதலியின் குறிப்பு யான் பார்க்கில் தான் நிலத்தைப் பார்க்கும்;
காலிங்கர்: நெஞ்சமே! யான் தன்னை நோக்கும் நேரத்து நாணினள் போலத் தான் நிலம் நோக்கி நிற்கும்;
பரிமேலழகர்: (நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; [இறைஞ்சி-தலைகுனிந்து]

இப்பகுதிக்கு மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி முதலியோர் 'நான் பார்க்கும்போது அவள் நிலத்தைப் பார்ப்பாள்' என்று உரைத்தனர். காலிங்கர் அவள் ''நாணி' நிலம் நோக்கினாள்' என்று உரைத்தார். பரிமேலழகர் ''எதிர்நோக்காது' நிலம் நோக்குவாள்' என்று உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நான் பார்க்கும்போது நிலம் பார்ப்பாள்', 'நான் (அவளைப்) பார்க்கிற போதெல்லாம் (அவள் தலைகுனிந்து கொண்டு) நிலத்தைப் பார்ப்பதும்', 'நான் அவளை நோக்கும்போது என்னை நோக்காது குனிந்து நிலம் பார்ப்பாள்', 'நான் பார்க்கும்போது அவள் நிலத்தைப் பார்ப்பாள்' என்றபடி இப்பகுதிக்கு உரை கூறினர்.

நான் பார்க்கும்பொழுது நிலத்தைப் பார்ப்பாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் பாராத விடத்துத் தான்பார்த்தது தோன்றாமை நகும்.
மணக்குடவர் குறிப்புரை: மெல்ல நகுதல்- முகிழமுகிழ்த்தல்.
பரிப்பெருமாள்: யான் பாராத காலத்துத் தான்பார்த்தது தோற்றாமல் நகும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மெல்ல நகுதல்- முகிழமுகிழ்த்தல். எதிர் நோக்காமல் உடன்படுதலாம் என்றவாறு.
பரிதி: யான் பாராதபொழுது தான் என்னைப் பார்த்துச் சிரிக்கும் என்றவாறு.
காலிங்கர்: யான் அவள் குறிப்பு அறிதற்கு நோக்காதேன் போலக் கடைக்கணித்து நின்ற நேரத்துத் தான் என்னை நோக்கி மெல்லென வேறாய ஓர் புன்முறுவல் செய்யும்.
காலிங்கர் குறிப்புரை: எனவே தன்வயிற் கொண்டதோர் குறிப்பின்குணம் பற்றிக்கொண்டு இன்புற்று ஆற்றினான் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: மெல்ல-வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர். [முறுவலிக்கும்-புன்னகை செய்வாள்]

இப்பகுதிக்கு அனைத்து பழம் ஆசிரியர்களும் 'நான் பாராதபோது என்னைப் பார்த்து' என்றவரை ஒரே கருத்துடையர். ஆனால் 'மெல்ல நகும்' என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'தோன்றாமை/தோற்றாமை நகும்' என்றும், பரிதி 'சிரிக்கும்' என்றும், காலிங்கர் 'மெல்லெனெ புன்முறுவல் செய்யும்' என்றும் பரிமேலழகர் 'தன்னுள்ளே மகிழ்ந்தாள்' என்றும் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பாராக்கால் என்னைப் பார்த்துப் புன்சிரிப்பாள்', '(நான்) அவளைப் பார்க்காத போதெல்லாம் அவள் என்னைப் பார்த்துப் புன்சிரிப்பு செய்வதுமானாள்', 'உள்ளுக்குள் மகிழ்வாள்', 'அதையறிந்து நான் பாராதபோது அவள் என்னைப் பார்த்து மெதுவாகப் புன்சிரிப்புக் கொள்ளுவாள்', 'பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்துத் தன்னுள்ளே சிறிதே நகைபுரிவாள் (புன்முறுவல் புரிவாள்)' என்று இப்பகுதிக்குப் பொருள் கொள்வர்.

நான் பாராதபோது என்னைப் பார்த்து புன்முறுவல் கொள்வாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நான் பார்க்கும்பொழுது நிலத்தைப் பார்ப்பாள்; நான் பாராதபோது என்னைப் பார்த்து மெல்ல நகும் என்பது பாடலின் பொருள்.
'மெல்ல நகும்' குறிப்பது என்ன?

அவளது புன்முறுவல் பேசாமற் பேசி காதல் இசைவுக் குறிப்பைக் காட்டியது.

'நான் அவளை நோக்கும்போது தலைகவிழ்ந்து அவள் நிலத்தைப் பார்ப்பாள்; அவளைப் பாராதபோது என்னைப் பார்த்து மெல்லென நகுவாள்' என்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
தலைவியைப் பார்த்தபொழுதே தலைவனுக்கு, அவள்மேல் காதல் தோன்றியது. அதன்பின்னர் அவளது உள்ளக் கருத்தினை அறிய விரும்பினான். அடுத்த முறை அவளைப் பார்த்தபோது அவளும் அவனைப் பார்க்கிறாள். அப்பொழுது அவளது பார்வையில் இரண்டு நோக்குகள் தெரிந்தன - முதல் பார்வை காமநோயைத் தந்தது; இரண்டாவது பார்வை அந்நோயை ஆற்றவல்ல மருந்தாக இருந்தது. இரண்டாவது பார்வையில் அவளும் அவனைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறாள் என்ற ஒரு குறிப்புக் கிடைக்கிறது. பின் நேர்ந்த சந்திப்பில் அவன் அவளைப் பார்க்கிறான். அவள் அவனுக்குத் தெரியாமல், அவன் அவளைப் பார்த்துவிடுமுன், அவனைக் கண்களவு கொண்டு பார்க்கிறாள். இந்நிகழ்வு இருவருக்கும் இன்பத்தைக் கொடுத்தது. அவளது களவுப்பார்வை அவன்மீது அவளுக்குள்ள காதலைக் காட்டிவிட்டதாக உணர்ந்ததால் அவனுக்கு அவளது உள்ளத்தை வென்றுவிட்டோம் என்ற பேருவகை உண்டாகிறது. அப்போது தன் காதல் செம்மையான பகுதியைக் கடந்து விட்டது என மகிழ்ச்சி பீறிடக் கூறுகிறான். அதற்கடுத்த சந்திப்பில் அவன் இன்னும் நெருக்கமான இடைவெளியில் அவளைக் காண்கிறான். அன்று களவுப்பார்வை பார்த்தவள் இப்பொழுது நேராகவே பார்க்கிறாள். அவன் அவளை எதிர்நோக்குக் கொள்கிறான். அவள் நாணித் தலைகவிழ்ந்து கொள்கிறாள். அவ்வாறு அவள் செய்தது அவர்களது காதல் பயிருக்கு அவள் நீர்பாய்ச்சியது போல் இருந்தது என்கிறான் அவன். அவர்களது புதிய உறவு தொடர்வது உறுதிப்பட்டுவிட்டதற்கான குறிப்பு கிடைத்தது. இவ்விதம் அவள் ஊற்றிய நீரால் மெல்லப் பற்றி அவர்களிடைத் தோன்றிய காதல்பயிர் முளையிடத் தொடங்கியது.
இக்காட்சி:
அவர்களிடையே காதல் அரும்பிவிட்டாலும், வாய்ப்பேச்சு இன்னும் தொடங்காத நிலையில், அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அவா இருக்கும். ஆனால் பெண்ணியல்பான நாண் அவளைத் தடுக்கின்றது. அவன் பார்த்தாலும் பார்க்கட்டும், ஆனாலும் நாம் பார்க்கக்கூடாது என்று அவள் நினைக்கிறாள். ஒரு பார்வை விளையாட்டு தொடங்குகிறது. அது என்ன? தலைவன் தனக்குள் சொல்லிக் கொள்வதாக உள்ள வரிகள் அதைக் கூறுகின்றன: 'நான் அவளைப் பார்க்கும்பொழுது தலைகவிழ்ந்து நிலத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். நான் அவளைப் பார்க்காது கண்ணை வாங்கிக்கொண்டவுடன் அவள் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரிக்கிறாள்.'
அவன்தான் அவளைப் 'பார்க்காதிருந்தபோது' என்று சொல்கிறானே, பின் எப்படி அவள் அவனைப் பார்த்ததும், புன்னகைத்ததும் அவனுக்குத் தெரிந்தது? இப்பாடலிலுள்ள 'நோக்காக்கால்' என்பதற்கு 'பார்க்காதவனைப் போல் பார்த்தல்' என விளக்கம் தருவர் அதாவது தலைவியை விட்டுவிட்டு அவன் கண்கள் வேறெங்கும் செல்லவில்லை. அவள் காணாதவகையில் அவன் பாராமல் பார்க்கும்போது, அவள் அவனைப் பார்க்கிறாள்; மெல்லச் சிரிக்கிறாள்.

'மெல்ல நகும்' குறிப்பது என்ன?

'மெல்ல நகும்' என்றதற்கு முகிழமுகிழ்த்தல், சிரிக்கும், மெல்லென வேறாய ஓர் புன்முறுவல் செய்யும், தன்னுள்ளே மகிழா நிற்கும், மெல்லத் தனக்குள் மகிழ்வாள், தன்னுள்ளே மெல்லச் சிரித்துக் கொள்கின்றாள், புன்சிரிப்பாள், தானே புன்முறுவல் செய்வாள், புன்சிரிப்பு செய்வதுமானாள், மெல்லென நகுவாள், மெதுவாகப் புன்சிரிப்புக் கொள்ளுவாள், தன்னுள்ளே சிறிதே நகைபுரிவாள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'மெல்ல நகும்' என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'முகிழமுகிழ்த்தல்' என பதவுரை தந்து 'தான்பார்த்தது தோன்றாமை நகும்' என நயம்பட உரையும் வரைந்தனர். பரிப்பெருமாள் 'எதிர் நோக்காமல் உடன்படுதலாம்' என மேலும் விளக்கினார். காலிங்கர் முறுவலிக்கும் என்ற பொருள் தோன்ற 'மெல்லென ஓர் புன்முறுவல் செய்வாள்' என்ற அழகான சொல்லமைப்புடன் கூடிய உரை வரைந்தார். பரிமேலழகர் 'தன்னுள்ளே மகிழும்' என உரைத்தார்.

இந்தமுறை அவளை எதிர்கொண்டபோது அவன் துணிவுடன் அவள் அருகே சென்று நிற்கின்றான். ஆனாலும் நேரடியாக வாய்விட்டுப் பேச இன்னும் அவனுக்கு ஒருவித அச்சமாகவே இருக்கிறது. ஒருவேளை இப்பொழுது தன் காதலை மறுத்துவிட்டால் என் செய்வது என்று எண்ணியதால் உண்டான பயம் அது. இப்படி அவன் மனம் தவிப்பதைப் புரிந்துகொண்டு அவள் புன்முறுவல் பூத்திருக்கலாம். நான்தான் குறிப்புக் காட்டிவிட்டேனே! இன்னும் அதை அவன் உணரவில்லையா? ஏன் காலத்தை வீணாக்குகிறான்? என்று நினைத்து அவள் நகைத்திருக்கலாம்.
அவளது நாணும் புன்முறுவலும் அவள் அவனை உளமார விரும்புகின்றாள் என்பதனை அறியச்செய்கின்றன. பெண் தன் இயல்பான குணத்தால் எதையுமே வெளிப்படையாகக் காட்ட மாட்டாள். தனது உணர்வுகளை மறைமுகமாகத் தனது மௌனத்தின் மூலமோ, அல்லது சில சைகைகள் மூலமோ வெளிப்படுத்துவாள். அவனை விரும்பும் தலைவி அவளது அன்பை இவ்வாறு மறைமுகமாக அவன் பார்க்கும்போது நிலத்தைப் பார்ப்பது, அவன் பார்க்காதபோது அவனைப் பார்ப்பது, தனக்குள்ளே மெல்லச் சிரித்துக் கொள்வது போன்ற செயல்கள் மூலம் தெரிவிக்கிறாள்.

அந்த ‘மெல்ல நகும்’ தான் எத்துணை அழகு! அவனைக் கள்ளத்தனமாகப் பார்த்த வெட்கக் களிப்பில் தனக்குள் புன்முறுவல் பூக்கிறாள் அவள். அவள் அவனைக் கண்ட மகிழ்ச்சியாலே புன்னகை புரிகிறாள் என்பதையும், அவன்பால் அவள் ஈடுபாடு கொண்டு விட்டாள் என்பதையும், அவனுடனான காதல் உறவை விரும்புகின்றாள் என்பதையும் மெல்ல நகுதல் பேசாமல் சொல்லியது.

'நான் பார்க்கும்பொழுது நிலத்தைப் பார்ப்பாள்; நான் பாராதபோது என்னைப் பார்த்துப் புன்முறுவல் கொள்வாள்' என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மலர்ந்தும் மலராத முறுவல்வழி அவளது காதல் விருப்பத்தைக் குறிப்பறிதல் பெறுகிறான் என்னும் கவிதை.

பொழிப்பு

நான் அவளை நோக்கும்போது நிலத்தைப் பார்ப்பாள்; நான் பாராதபோது என்னை நோக்கிப் புன்முறுவல் செய்வாள்.