இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1092கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1092)

பொழிப்பு (மு வரதராசன்): கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும்.

மணக்குடவர் உரை: என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம், வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று; பெரிது.
தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின் அது களவாயிற்று.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கண் களவு கொள்ளும் சிறுநோக்கம் - இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; காமத்தின் செம்பாகம் அன்று பெரிது - மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும். (தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளதாங்காலம் சிறிதாகலின், 'சிறு நோக்கம்' என்றும், அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை'என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான்.)

சி இலக்குவனார் உரை: இவள் கண்கள் நான் காணாமல் பார்க்கின்ற சிறுபார்வை காதலின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகுந்தது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது.

பதவுரை: கண்-கண்; களவுகொள்ளும்-கள்ளத்தனமாய்ப் பார்க்கும்; சிறுநோக்கம்-சிறுநேரப் பார்வை, அருகிய பார்வை, சுருங்கிய பார்வை, கடைக்கண் பார்வை; காமத்தில்-காதலில்; செம்பாகம்-சரி பாதி, செம்மையான பகுதி; அன்று-இல்லை; பெரிது-பெரியது.


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம்;
மணக்குடவர் குறிப்புரை: தலைமகள் தலைமகன் காணாமைநோக்குதலின் அது களவாயிற்று.
பரிப்பெருமாள்: என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: சோர்வு பார்த்தலாவது, தலைமகன் தனது காதலினாலே எப்பொழுதும் நோக்குவனன்றே. தலைமகளுக்கும் அவ்வாறு நோக்க வேண்டுதலின் அவன் பாராக்காலத்தைக் குறித்து நிற்றல். களவினால் நோக்குதலாவது, அக்காலத்தே நோக்குதல். தலைமகன் காணாமல் நோக்குதலின் களவு ஆயிற்று.சிறு நோக்கமாவது பார்த்ததும் மீளுதல். நெடிது நோக்காமையின் சிறுதாயிற்று.
பரிதி: கண் களவுகொண்டு கடைக்கணித்துப் பார்த்த பார்வை;
காலிங்கர்: இங்ஙனம் இவளது கண்களானவை வேறு புலப்படாதவாறு தாம் காதல் உருபினைக் கவர்ந்து கொள்வது போலும் சிறு நோக்கமானது;
பரிமேலழகர்: இவள் கண்கள் யான் காணாமல் என்மேல் நோக்குகின்ற அருகிய நோக்கம்; [அருகிய நோக்கம்-சுருங்கிய பார்வை, கடைக்கண் பார்வை]
பரிமேலழகர் குறிப்புரை: தான் நோக்கியவழி நாணி இறைஞ்சியும்,நோக்காவழி உற்று நோக்கியும் வருதலான், 'களவுகொள்ளும்' என்றும், அஃது உளதாங்காலம் சிறிதாகலின், 'சிறு நோக்கம்' என்றும்...[இறைஞ்சியும்-தலை குனிந்தும்]

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் 'என்கண்களைச் சோர்வுபார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம்' என்ற பொருளில் உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்கொண்டு கவரும் சிறிய பார்வை', 'இவள் கண்கள் யான் காணாமல் என்னை நோக்கும் சிறுநேரப் பார்வை', '(அவளுடைய கண்னைச் சுருக்கிய) இந்தச் சிறு பார்வைதான்; (முன் பார்த்த) பரந்த பார்வையல்ல', 'நான் அவளைப் பாராதபோது கடைக்கண்ணால் நோக்குகின்ற அருகிய பார்வை' என்றபடி பொருள் தருவர்.

நான் பாராதபோது என்னை அவள் கள்ளமாய்ப் பார்க்கும் சிறுநேரப் பார்வை என்பது இப்பகுதியின் பொருள்.

காமத்தில் செம்பாகம் அன்று பெரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று; பெரிது.
பரிப்பெருமாள்: வேண்டப்பட்ட பொருளிற் பாதியேயன்று; பெரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: வேண்டப்பட்ட பொருள் ஆவது புணர்ச்சி. செம்பாகமன்று பெரிது என்பது அதற்குப் பாதி இசைவுக்கு மேலே பெற்றேம் என்பது. இது மறைய நோக்குதல் உடம்பாடு என்றது.
பரிதி: செம்மை அழகுபெற்ற காமக்கூட்டத்திலும் பெரிது என்றவாறு.
காலிங்கர்: காமச் சுவையைப் பகுத்துணரின் யாண்டும் பரந்த முழு நோக்குடைய கலவியான காமத்திற் செவ்வனம் பகுத்த பாகச்சுவைப் பங்கு. எனவே, அன்றியும் பின்னும் பெரிதெனலாம் என்று இங்ஙனம் பெற்றான் போல்வதோர் பற்றுக்கோடு எய்திச் சிறுது படர் தீர்ந்தான் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி அளவன்று; அதனினும் மிகும்.
பரிமேலழகர் குறிப்புரை: அஃது உளப்பாடுள்வழி நிகழ்வதாகலின், இனிப் 'புணர்தல் ஒருதலை' என்பான் 'செம்பாகம் அன்று, பெரிது' என்றும் கூறினான். [உளப்பாடு-இசைவு (சம்மதம்); ஒருதலை-உறுதி; செம்பாகம்-சரிபாதி]

காமம் என்ற சொல்லுக்கு வேண்டப்பட்ட பொருள்/காமக்கூட்டம்/கலவியான காமம்/மெய்யுறு புணர்ச்சி என்றும் செம்பாகம் என்ற சொல்லுக்கு பாதி/செம்மை அழகு/செவ்வனம் பகுத்த பாகச்சுவைப் பங்கு/ ஒத்த பாதி என்றும் பழம் ஆசிரியர்கள் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்பத்தில் சரிபாதியினும் கூடுதலாகும்', 'புணர்ச்சியில் சரிபாதி அளவன்று அதனினும் மிகுதியாம்', 'காமத்தில் (காமநோயைத் தணிக்க) செம்மையான பக்குவத்தை உடையது', 'எனது விருப்பத்திற்கு ஒத்த பகுதி மாத்திரம் அன்று; அதனினும் அதிகம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்

காதல் இன்பத்தின் பாதி அல்ல; அதனினும் மிகுதி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நான் பாராதபோது என்னை அவள் கள்ளமாய்ப் பார்க்கும் சிறுநேரப் பார்வை காமத்தில் செம்பாகம் அல்ல; அதனினும் மிகுதி என்பது பாடலின் பொருள்.
'காமத்தில் செம்பாகம்' என்றால் என்ன?

'காதலில் வெற்றி! அவளை மிகவும் நெருங்கிவிட்டேன்' என்பது அவனது களிப்புக் கூற்று.

'கள்ளத்தனமாக என்னை நோக்குகின்ற இவளது சிறுபார்வையானது, காதல் இன்பத்தில் பாதியன்று; அதற்கும் மேலே' என்கிறான் தலைவன்.
காட்சிச் சூழல்:
முதன்முதலாக அவளைப் பார்த்து வியந்துநின்ற தலைவன், அவள்மேல் காதல் தோன்றியபின், அவளைப் பார்க்க ஏங்கினான். அவளுடன் நெருங்கி உரையாட, அளவளாவ, உறவாட, முற்பட்டான். அவளது உள்ளக் கருத்தினை அறிய விரும்பினான். அடுத்த காட்சியில் அவன் தோன்றினான். பின் அவன் எதிரில் அவள் தோன்றினாள். அவள் அவனைப் பார்க்கிறாள். அவளது பார்வையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான இரண்டு நோக்கு இருந்தன. முதல் பார்வை அவனுடைய உள்ளத்தே கிளர்ச்சியை உண்டாக்கிக் காமநோயைத் தந்தது; அவள் செய்த அந்நோயை ஆற்றவல்ல மருந்து இரண்டாவது பார்வையான அவளது கனிந்த காதல் பார்வையில் இருந்தது. இந்த இரண்டாவதான பார்வையில் அவனுக்கு ஒரு குறிப்புக் கிடைக்கிறது. அன்புடன் அவள் நோக்கியதால், காதலைத் தோற்றுவித்த அவள், அவனைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறாள் என்பதே அக்குறிப்பு.

இக்காட்சி:
அவன் மீது பரிவு காட்டுகிறாள் என்ற அவளது குறிப்பறிந்த நிலையில் மறுபடியும் அவர்கள் சந்திக்க நேருகிறது. அவன் அவளைப் பார்க்கிறான். நாணம் மேலோங்கி நின்றதால் அவள் அவனை நேர்கொண்டு பார்க்கவில்லை. ஆனாலும் பார்க்கவேண்டும் என்று ஆசை. அவனுக்குத் தெரியாமல் அவனைப் பார்க்கிறாள். கண் திருட்டுத்தனம் பண்ணியது. அவ்விதம் பார்ப்பது சிறுது நேரம்தான் கூடும். இவ்வாறு மறுபடி அவன் அவளைப் பார்த்துவிடுமுன் களவாகப் பார்த்ததைக் கண்களவு கொண்டது என்கிறார் வள்ளுவர். களவு இல்லாதவழி அவள் நேரே விழித்து அவனைப் பார்த்தாள்; களவுகலந்தமையாலேயே களவு கொள்ளும் சிறுநோக்கம் ஆயிற்று. இக்களவுப் பார்வை நொடிநேரம்தான் நீடித்தது. இந்நிகழ்வு இருவருக்கும் இன்பத்தைக் கொடுத்தது. அவளது களவுப்பார்வை அவன்மீது அவளுக்குள்ள காதலை வெளிப்படையாகக் காட்டிவிட்டதாக உணர்கிறான்; அவனுக்கு அவளது உள்ளத்தை வென்றுவிட்டோம் என்ற பேருவகை உண்டாகிறது. அப்போது தன் காதல் செம்மையான பகுதியைக் கடந்து விட்டது என மகிழ்ச்சி பீறிடக் கூறுகிறான்.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் என்பதற்குப் பரிப்பெருமாள் நல்லதோர் விளக்கம் தருகிறார். அவரது உரை கூறுவது: 'தலைமகன் தனது காதலினாலே எப்பொழுதும் அவளைப்பார்த்துக்கொண்டே இருப்பான். தலைமகளுக்கும் அவ்வாறு அவனை நோக்க விருப்பமாதலால் அவன் தன்னைப் பாராமல் இருக்கும் நேரத்திற்காகப் பொறுத்து இருப்பாள். களவினால் நோக்குதலாவது, அக்காலத்தே அதாவது அவன் பாராத நேரத்தே நோக்குதல்; தலைமகன் காணாமல் நோக்குதலின் களவு ஆயிற்று. சிறு நோக்கமாவது பார்த்ததும் மீளுதல்; நெடிது நோக்காமையின் சிறுதாயிற்று.'

'காமத்தில் செம்பாகம்' என்றால் என்ன?

'காமத்தில் செம்பாகம்' என்றதற்கு வேண்டப்பட்ட பொருளிற் பாதி, செம்மை அழகுபெற்ற காமக்கூட்டம், காமச் சுவையைப் பகுத்துணரின் யாண்டும் பரந்த முழு நோக்குடைய கலவியான காமத்திற் செவ்வனம் பகுத்த பாகச்சுவைப் பங்கு, மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி, காமத்தில் நேர்பாதி, காம இன்பத்தில் செம்பாதி, இன்பத்தில் சரிபாதி, காமத்தில் (காமநோயைத் தணிக்க) செம்மையான பக்குவம், எனது விருப்பத்திற்கு ஒத்த பகுதி, காதலின் ஒத்த பாதி அளவு, காதல் விருப்பத்தில் பாதி எல்லை, மெய்யுறு புணர்ச்சியில் சரிபாதி, காதல் நாடகத்தில் ஒரு சமமான பகுதி என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இக்குறளிலுள்ள காமம் என்ற சொல்லுக்கு பெரும்பான்மையான உரையாளர்கள் மெய்யுறுபுணர்ச்சி என்றே பொருள் கூறினர். அதாவது அவள் பார்த்த சிறுநோக்கம் புணர்ச்சிக்கு உடன்பாடு என்ற குறிப்பிற்கானது என விளக்கினர்.
காமத்தில் செம்பாகம் என்றதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'வேண்டப்பட்ட பொருளிற் பாதி' என்று பொருள் கூறினர். இவர்களில் பரிப்பெருமாள் மட்டும் விரிவுரையில் காமம் என்ற சொல்லுக்குப் புணர்ச்சி என்று பொருள் கூறி 'வேண்டப்பட்ட பொருள் ஆவது புணர்ச்சி. செம்பாகமன்று பெரிது என்பது அதற்குப் பாதி இசைவுக்கு மேலே பெற்றேம்' அதாவது 'தனக்கு வேண்டப்பட்ட பொருளான புணர்ச்சிக்கு பாதிக்கு மேல் இசைவு தெரிவிக்கின்றாள்' என்று கூறினார். பரிதி 'செம்மை அழகுபெற்ற காமக்கூட்டத்திலும் பெரிது' என்றார்; இவரும் காமத்திற்குப் புணர்ச்சி என்றே பொருள் கொள்கின்றார்; இவர் செம்பாகம் என்பதற்கு பாதி என்னாமல் 'செம்மை அழகு' என்றார். காலிங்கர் 'காமச் சுவையைப் பகுத்துணரின் யாண்டும் பரந்த முழு நோக்குடைய கலவியான காமத்திற் செவ்வனம் பகுத்த பாகச்சுவைப் பங்கு' என்று உரை வரைந்தார். இவரும் காமம் என்பதைப் புணர்ச்சி என்ற பொருளிலேயே ஆள்கிறார். ஆனால் செம்பாகம் என்பதைப் பாதி என்று கூறாமல் செம்மையான பாகம் என்கிறார். காமத்தில் செம்பாகம் என்ற தொடர்க்குப் பரிமேலழகர் 'மெய்யுறு புணர்ச்சியின் ஒத்த பாதி' அதாவது உடற்புணர்ச்சியின் சரிபாதி என்று பொருள் கூறினார்.
இன்றைய உரையாளர்களும் காமத்தில் செம்பாகம் என்றதற்குப் புணர்ச்சி சரிபாதி, புணர்ச்சி செம்மைப் பாகம் என்றும் காதல்/காமம் சரிபாதி, காதல்/காமம் செம்பாகம் என்றபடி விளக்கம் தருவர். நாமக்கல் இராமலிங்கம் '(காமநோயைத் தணிக்க) செம்மையான பக்குவத்தை உடையது' என்கிறார்.

'தலைவியின் சிறுநோக்கம் அவளை மெய்தொட்டுப் புணரும் புணர்ச்சியால் வருகிற இன்பத்திலும் மிகையானது' என்பதுதான் பழம்/இன்றைய ஆசிரியர்களில் பெரும்பான்மையர் இக்குறளுக்குக் கூறும் விளக்கம். இது சரியா?
தலைமக்களின் தொடக்கநிலைக் காதலைப் பற்றியும் தலைவியின் உள்ளத்தைத் தலைவன் வென்றுவிட்டதையும் கவித்துவமாகச் சொல்லும் பாடல் இது. ஆனால் அடுத்த அதிகாரம் புணர்ச்சி மகிழ்தல் என்பதால் உரையாசிரியர்கள், அவனது மனதில் புணர்ச்சியே மேலோங்கி நிற்பது போல், 'இனிப் புணர்தல் உறுதி' என்ற வகையில் பொருள்கூறி இப்பாடலினதும் பின்வரும் இவ்வதிகாரத்து மற்ற மென்மையான நாடகக் காட்சித் தொடர்களையும் அவை தரும் சுவைகளையும் அனுபவிக்க முடியாதபடி தடைகளைப் பாவுகின்றனர்.
காமம் என்பதற்குக் காதல் என்ற பொருளும் உண்டு. முதல் ஆசிரியரான மணக்குடவரும் இப்பாடலிலுள்ள காமம் என்ற சொல்லுக்கு 'விருப்பமான பொருள்' என்றுதான் பொருள் கொண்டார். அதற்கு இன்றைய ஆசிரியர்களில் வ சுப மாணிக்கம், இளங்குமரனார் ஆகியோர் 'இன்பம்' என்றும், கா சு பிள்ளை 'விருப்பம்' என்றும், ஜி வரதராஜன், சி இலக்குவனார் போன்றோர் 'காதல்' என்றுமே பொருள் கண்டனர் என்பது குறிக்கத்தக்கது.
செம்பாகம் என்றது செம்மை+பாகம் என விரியும். இதற்குச் சரிபாதி எனப் பொருள் கூறுவர். காமத்தில் செம்பாகம் என்றது காதல் இன்பத்தில் பாதி என்ற பொருள் தரும். காமம் என்பதற்கு காதல் என்று பொருள் கொண்டால், காதல் இன்பத்தில் பாதிக்கும் மேல் பெற்றுவிட்டேன் என்று தலைவன் சொல்வதாக இப்பாடல் அமையும்.

முதன் முதலில் அவனை நோக்கிய அவளது களவுச் சிறுநோக்கு அவனை எத்துணை அளவு பரவசப்படுத்தியது என்பதை விளக்கவந்தது இப்பாடல். அப்பொழுது அவன் பெற்ற இன்பநிலையைத்தான் காமம் என்று வள்ளுவர் குறிக்கிறார். எனவே காமம் என்ற சொல்லுக்கு இங்குக் காதல் இன்பம் என்றுதான் பொருள் காணவேண்டும். அக்குறுகிய நேரப்பார்வை அவன்மீது அவளுக்குக் காதல் உண்டாவதையும் வெளிப்படுத்தியது. 'காமத்தில் செம்பாகம் அன்று பெரிது' என்று பேருவகை கொண்டு தலைவன் கூறும் சொற்கள் 'அவள் உள்ளத்தில் இடம்பெற்றுவிட்டேன்; காதல் பாதையின் செம்மையான பகுதியில் வெகுதொலைவு கடந்து வந்துவிட்டேன்' என்று தலைவன் இறும்பூதெய்துவதைத் தெரிவிக்கிறது.

'காமத்தில் செம்பாகம்' என்றது தலைவியது சிறுநேரக் கள்ளப் பார்வை காதல் இன்பத்தில் பாதிக்கும் மேல் எய்திய உணர்வைத் தந்தது என்பதைச் சொல்வது.

நான் பாராதபோது என்னை அவள் கள்ளமாய்ப் பார்க்கும் சிறுநேரப் பார்வை காமத்தில் செம்பாகம் அல்ல; அதனினும் மிகுதி என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவளது களவுச்சிறுநோக்கம் காதல் இசைவுக்கான குறிப்பறிதலாம்.

பொழிப்பு

நான் காணாதபோது என்னக் காணும் இவளது குறுகிய நேர கள்ளப் பார்வை காதல்இன்பத்தில் செம்மையான பகுதியினும் கூடுதலாகும்.