இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1091இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன்று அந்நோய் மருந்து

(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:1091)

பொழிப்பு (மு வரதராசன்): இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப் பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

மணக்குடவர் உரை: இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து; அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம்.
நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவள் உண்கண் உள்ளது இரு நோக்கு - இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று; ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து - அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.
(உண்கண்: மையுண்ட கண். நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர்,அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக.அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: இவளுடைய மையுண்ட கண்களில் இரண்டு பார்வைகள் உள. ஒரு பார்வை காதல் நோயைத் தருவது. இன்னொரு பார்வை அக்காதல் நோயைத் தணிப்பதற்குரிய மருந்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இவள் உண்கண் இருநோக்கு உள்ளது; ஒருநோக்கு நோய்நோக்கு; ஒன்று அந்நோய் மருந்து.

பதவுரை: இரு-இரண்டு; நோக்கு-நோக்கம், பார்வை; இவள்-இப்பெண்; உண்-(மை)உண்ட; கண்-கண்ணில்; உள்ளது-உள்ளது; ஒரு-ஒரு; நோக்கு-கருத்து, பார்வை; நோய்-துன்பம், காமப்பிணி; நோக்கு-நோக்கம், உட்கருத்து, பார்வை; ஒன்று-ஒன்று; அந்நோய்-அந்தநோய்(க்கு); மருந்து-மருந்து.


இருநோக்கு இவள்உண்கண் உள்ளது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து;
பரிப்பெருமாள்: இவள் உண் கண்ணிலுள்ள நோக்கு இரண்டு வகைத்து;
பரிதி: இரண்டு பார்வை உண்டு நாயகிக்கு;
காலிங்கர்: நெஞ்சமே! இவளது மையுண்ட கண்ணின்கண் உளதாகிய நோக்குத்தான் நம்பால் இரண்டு நோக்கமாயிருந்தது.
பரிமேலழகர்: (தலைமகன் தலைமகள் உளப்பாட்டுக் குறிப்பினை அவள் நோக்கினான் அறிந்தது.) இவளுடைய உண்கண் அகத்தாய நோக்கு இது பொழுது என்மேல் இரண்டு நோக்காயிற்று;
பரிமேலழகர் குறிப்புரை: உண்கண் - மையுண்ட கண்.

பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு 'இவளது மையுண்ட கண்ணில் இரண்டு நோக்கு உண்டு' என்று பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவள் மைக்கண்ணில் இருபார்வை உண்டு', 'இவளுடைய மையுண்ட கண்களில் உள்ள நோக்கம் இருவகையது', 'இவளுடைய மையுண்ட கண்களில் (ஒன்றுக்கொன்று நேர்மாறான) இரண்டுவித பார்வைகளிருக்கின்றனவே!', 'இரண்டு வகையான பார்வை இவளது மையுண்ட கண்களுக்கு இருக்கின்றன' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இவளுடைய மையுண்ட கண்களில் இருவகை நோக்கு இருக்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருநோக்கு நோய்நோக்குஒன்று அந்நோய் மருந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம்.
மணக்குடவர் குறிப்புரை: நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கம்: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். இது நாணமுடைய பெண்டிரது உள்ளக்கருத்து வெளிப்படுமாறு கூறியது.
பரிப்பெருமாள்: அவ்விரு வகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும்; ஒரு நோக்கு அதற்கு மருந்தாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நோய்நோக்கென்பது முதல்நோக்கின நோக்கு: மருந்து நோக்கென்பது இதனால் வருத்தமுற்ற தலைமகனைத் தலைமகள் கலங்கி நாணோடுகூடி நோக்கின நோக்கம். அதனானே உடம்பாடு காண்டலின் மருந்தாயிற்று. இது நாணிநோக்குதல் உடம்படுதலாம் என்றது.
பரிதி: ஒரு பார்வை விரகம் தரும். ஒரு பார்வை விரகத்துக்கு மருந்தாகிய அமுதபார்வை கொடுக்கும் என்றது.
காலிங்கர்: இஃது எங்ஙனம் எனில், ஒரு நோக்கு நம் இடர்செய்யும் நோக்கம். ஒரு நோக்கம் மற்று அவ்விடம் தணித்தற்கு ஒரு தணிமருந்து போலும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே எங்கும் ஓடும்போது நோக்கின், தனக்கு ஒரு பயன் இன்மையின் நோயது என்றும், இனித் தன்வயிற்சென்ற நோக்குத் தனது உயிர் ஆற்றங்கோர் தண்ணளி ஆகையால் இடர்தணி நோக்கு என்றும் இங்ஙனம் நோக்கினைப் பிரித்துக் கொண்டு அவள் உட்குறிப்பு அறிந்தான் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றுள் ஒரு நோக்கு என்கண் நோய் செய்யும் நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு.
பரிமேலழகர் குறிப்புரை: நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு. நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர், அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக. அவ் வருத்தந்தீரும் வாயிலும் உண்டாயிற்று என்பதாம். [கைக்கிளை-ஒருதலைக்காமம்- கை-சிறுமை; கிளை-உறவு; அவ்வருத்தம்-(அவள் அழகால் உண்டாகிய) இக் காமத் துன்பம்; வாயில்-(இருவகை நோக்கு) ]

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் அனைவரும் ஒரு பார்வை நோய் செய்வது; இன்னொரு பார்வை அந்நோய்க்கு மருந்தாக அமைவது என்றனர். விரிவுரையில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் முதல் நோக்கு நோய் செய்தது என்று சொல்லி அதனால் துன்பமுற்ற அவனை அவளது உள்ளங்கலங்கிய நாணோடு கூடிய இன்னொரு பார்வை பார்த்தாள்; இதனால் நாணமுடைய அவளது உள்ளக்கருத்து வெளிப்பட்டது என்று அதிகார இயைபும் கூறினர். காலிங்கர் உரை அவன் அவளது பார்வையை இடர்செய்யும் பார்வை, இடர் தணிக்கும் பார்வை என்று இரண்டாகப் பிரித்துக் கொண்டு- அவளது குறிப்பறிந்தான் என்கிறது. பரிமேலழகர் ஒரு நோக்கு தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு என்றும் இன்னொரு நோக்கு அந்த அன்பு நோக்கு செய்த நோயை ஆற்றும் மருந்து என்றும் விளக்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒன்று நோயாகும்; ஒன்று மருந்தாகும்', 'ஒரு நோக்கு நோய் செய்யும்; ஏனையது நோய் போக்கும் மருந்தாகும்', 'ஒரு பார்வை எனக்கு காம நோய் உண்டாக்கியது. இன்னொரு பார்வை அந்தக் காமநோய்க்கு மருந்தாக (நோயைத் தணிக்கக் கூடியதாக) இருக்கிறது', 'ஒரு பார்வை நோய் உண்டாக்குவது. மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தாவது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒரு நோக்கு துன்பம் தருவது; இன்னொன்று அந்த நோய்க்கு மருந்தாவது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இவளுடைய மையுண்ட கண்களில் இருவகை நோக்கு இருக்கிறது. ஒரு நோக்கு நோய் செய்தது; இன்னொன்று அந்த நோய்க்கு மருந்தாவது என்பது இக்குறட் கருத்து.
நோய் செய்த முதல் நோக்கு பொதுநோக்கா? அல்லது காதல் நோக்கா?

ஒரு பார்வை; இரு நோக்கு!

இவளது மையுண்ட கண்களில் இருவகை நோக்கு உள்ளது; ஒன்று என்னிடத்து நோய்செய்தது; மற்றொன்று அந்நோய்க்கு மருந்தானது.
காட்சிப் பின்புலம்:
முதன் முதலில் தலைவியைக் கண்ட உடனேயே அவளது அழகு அவனை ஓங்கித் தாக்குவதாக தலைவன் உணர்ந்தான். அவர்கள் எதிரெதிர் கண்ணால் பார்த்துக்கொண்டனர். முன்பின் அறிமுகமில்லாதவர்களானாலும் அவனுக்கு அவள்மேல் ஓர் ஈர்ப்பு உண்டாகிவிட்டது. அவளது பெண்மை நிறைந்த தன்மையையும் உணர்கிறான். அவளது கண்கள் கூற்றுவனாகி அவளைக் கொன்றது போலிருந்ததாம். புதியவனிடம் கனிவுப் பார்வை செலுத்தினோமே என்ற குற்ற உணர்வாலோ, அவனிடம் பார்வை மாற்றிக் கொள்வதை மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்று அஞ்சியோ மான்போன்று மருண்டு பார்க்கிறாள். அவள் முகஅழகில் துவண்டுபோனவன், 'தன் வீரம் எல்லாம் எங்கே மறைந்தது?' என்று அவளிடம் தன்னை ஒப்படைத்ததை ஒப்புகிறான்; மனத்தளவில் அவன் அவளிடம் மிகநெருங்கிச் சென்றுவிடுகிறான். காதலுற்றவர் ஒருவரை ஒருவர் பார்த்தாலே பேருவகை அடைவர் என்னும் நிலையில் முந்தைய தகையணங்குறுத்தல் அதிகாரம் முடிந்தது. காதல் அரும்பியபின், இப்பொழுது, அவளைப் பார்க்க ஏங்குகிறான். அவளுடன் உரையாட முற்படுகிறான். அவள் அவனைச் சந்திப்பாளா என்ற குறிப்பறிய ஆவல் கொள்கிறான்; அதாவது அவள் உள்ளக் கருத்தினை அறிய விழைகிறான்.

இக்காட்சி:
இங்குள்ள காட்சியில் அவன் வருகிறான். பின் அவன் எதிரில் அவள் தோன்றுகிறாள். அவள் கண்ணில் மை அணிந்துள்ளதால் அழகாக இருந்தாள். அவள் அவனைப் பார்க்கிறாள். அப்பார்வையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான இரண்டு நோக்கு உள்ளன. முதல் நோக்கு அவன் உள்ளத்திலே அமைதிகுலைவு (disturb) உண்டுபண்ணி துன்பம் தந்தது. அவனுடைய உள்ளத்தே கிளர்ச்சியை உண்டாக்கிக் காமநோயைத் தருகின்றது; என்ன விந்தை! அதே பார்வையில் அவளும் உள்ளங்கலங்கி நாணோடுகூடி நோக்கின இன்னொரு நோக்கமும் தெரிகிறதே! இரண்டாவதான அவளது கனிந்த காதல் நோக்கு, முதல் நோக்கு செய்த நோயைத் தணிக்கும், மருந்தாக அமைகின்றது. இரண்டு நோக்கும் ஒரே நேரத்தில் வந்தனவாதாலால் துன்ப உணர்வும், இன்ப உணர்வும் அவன் உள்ளத்தில் மாறி மாறித் தோன்றுகின்றன. தன் பார்வையால், ஒரே நேரத்தில் நோயையும் அதற்கான மருந்தையும் தருகிறாளே! தன் பார்வை தந்த நோயைத் தன் பார்வையாலேயே தணிக்கிறாளே!. துன்பம் தருவதும் அவள் கண்கள் தான். அந்த துன்பத்திற்கு மருந்து தருவதும் அதே கண்களே. முதல் நோக்கு காமவிருப்பத்தை உண்டாக்கியது. மறுநோக்கு 'நானும் காதல் கொண்டேன்' என்கிற குறிப்புத் தருகிறது. எனவே அது நோய் தீர்க்கும் மருந்தானது. இரண்டாவதான நோக்கில் குறிப்புக் கிடைக்கிறது. காதலைத் தோற்றுவித்த அவள், இப்பொழுது அன்புடன் அவனை நோக்கியதால், அவனைச் சந்திக்க விருப்பமாக இருக்கிறாள் என்பதே அக்குறிப்பு.

ஒரு குறளே உலக அறிஞர்களைத் தன்பால் ஈர்க்கவல்லது என்பதைக் காட்டிய கவிதை இது.
இக்குறளின் புதுமையான கற்பனையையும் பொருள் நுட்பத்தையும் துய்த்த கிரால் என்ற ஜெர்மன் நாட்டு அறிஞர் குறள் முழுவதையும் கற்றுக் களித்ததுடன் கி பி 1854 இல் ஜெர்மன் மொழியிலும் கி பி 1856 இல் இலத்தீன் மொழியிலும் மொழிபெயர்ப்பும் செய்தார்.

நோய் செய்த முதல் நோக்கு பொதுநோக்கா? அல்லது காதல் நோக்கா?

இப்பாடலில் சொல்லப்பட்ட முதல் பார்வை பொதுப்பார்வைதான் என்று சிலர் உரைத்தனர். பொதுப்பார்வை என்பது இவர் யாரோ என்று அறியாது பார்ப்பது அதாவது எல்லோரையும் பார்ப்பதுபோல் பொதுவாகப் பார்ப்பதாகும். ஆனால் பரிமேலழகர் 'நோய் செய்யும் நோக்கு அவள் மனத்தினாய நோக்குத் தன்கண் நிகழ்கின்ற அன்பு நோக்கு' அது எனக் கூறி 'நோய் செய்யும் நோக்கினைப் பொதுநோக்கு என்பாரும் உளர், அது நோய் செயின் கைக்கிளையாவதல்லது அகமாகாமை அறிக' என்று அதை மறுப்பார். அது பொது நோக்கா? அன்பு நோக்கா?
முதல் நோக்கு பற்றி 'குறிப்பறிதல் கைக்கிளை வகையுள் ஒன்றே யாதலானும் கண்ட முதல் நோக்கிலேயே தலைவி தன் மனத்துக் காமக் குறிப்பினை வெளிப்படுத்தி நோக்காள் ஆதலானும் அங்ஙனம் நோக்குதல் பெண் தன்மைக்கு இயலாத செயல் ஆதலானும் எல்லாரையும் பார்ப்பது போலப் பொதுவாக நோக்கினாள். அந்நோக்குத் தலைவற்குக் கவலை நோயைப் பிறப்பித்தது' எனச் சிலர் விளக்கம் தந்தனர்.
முந்தைய அதிகாரமான தகையணங்குறுத்தலின் இறுதிப்பாடல் (குறள் 1090) 'கள் உண்டார்க்குத்தான் மகிழ்ச்சியைத் தரும்; அது காதலுற்றார் போல் பார்த்தாலே மகிழ்ச்சியைத் தருவது இல்லை' என்பதைக் காதல் கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதிலே பெரும் மகிழ்ச்சியும் மயக்க உணர்வும் உண்டாவதைச் சொல்வதாக விளக்குவர். அதாவது அவனுக்கும் அவளுக்கும் இடையே காதல் முகிழ்த்துவிட்டது என்ற பொருள்படும்படி அமைந்துள்ளதாகக் கொள்வர். எனவே இக்குறளில் காதல் கொண்ட தலைவி பார்க்கும் நோக்குகளே சொல்லப்பட்டன என்பதாகிறது.
மேலும் இப்பாடலில் அவளது முதல் நோக்கு பொதுநோக்குத்தான் என்பதற்கான நேரடிக் குறிப்பு எதுவும் இல்லை. முதல் நோக்கு நோய் செய்யும் என தெளிவாகக் கூறப்படுகிறது. பொதுநோக்கு துன்பம் தராது. எனவே அது காதல் நோக்குத்தான். ஆதலால் அவளது முதல் பார்வையால் உண்டான காமநோயால் தலைவனுக்குத் துன்பம் நேர்ந்தது; இரண்டாவதான பார்வை அந்நோயைத் தீர்த்த மருந்தானது என்பதாகக் கொள்வதே சிறக்கும்.

இவளுடைய மையுண்ட கண்களில் இருவகை நோக்கு இருக்கிறது. ஒரு நோக்கு நோய் செய்தது; இன்னொன்று அந்த நோய்க்கு மருந்தாவது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இரட்டை நோக்குடன் கள்ளத்தனம் பயிலுகிற அவளது பார்வை வழி குறிப்பறிதல்.

பொழிப்பு

இவளுடைய மையுண்ட கண்ணில் இருநோக்கு உண்டு. ஒரு நோக்கு நோய் செய்யும்; மற்றது நோய் ஆற்றும் மருந்தாம்.