இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1079உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்

(அதிகாரம்:கயமை குறள் எண்:1079)

பொழிப்பு (மு வரதராசன்): கீழ்மகன் பிறர் உடுப்பதையும் உண்பதையும் கண்டால் அவர்மேல் பொறாமைகொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

மணக்குடவர் உரை: பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின், அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர்.
இஃது அழுக்காறுடையா ரென்றது.

பரிமேலழகர் உரை: உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் - பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; பிறர்மேல்வடுக்காண வற்றாகும் - அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம்.
(உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில்மேல் நின்றன, அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: கயவன் பிறர் உடையணிவதையும் உண்பதையும் காண்பானயின், மனம் பொறாமல் அவரிடம் குற்றம் இல்லை எனினும், தானே உண்டாக்கிக் கூறும் வல்லமையுடையவன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடுப்பதூஉம் உண்பதூஉம் கீழ் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும்.

பதவுரை: உடுப்பதூஉம்-உடுத்திக் கொள்வதும், நல்ல ஆடை அணிந்து கொள்ளுதலும்; உண்பதூஉம்-உண்டலும், நல்ல உணவை உண்டு மகிழ்தலும்; காணின்-கண்டால்; பிறர்-மற்றவர்; மேல்-இடத்தில்; வடு-பழி, குற்றம்; காண-உண்டாக்க; வற்றாகும்-வல்லதாகும்; கீழ்-கீழாயினான்.


உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின்;
பரிப்பெருமாள்: பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின்;
பரிதி: உடுப்பதும் உண்பதும் கண்டால்;
காலிங்கர்: முன் நின்ற நிலையினும் மேற்பட உடுக்கும் ஆடையும் உண்ணும் சோறும் சிறிது மிகுதக் காணின்;
பரிமேலழகர்: பிறர் செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்; [துகில் - ஆடை; அடிசில் - சோறு]
பரிமேலழகர் குறிப்புரை: உடுப்பது உண்பது என்பன ஈண்டு அவ்வத்தொழில்மேல் நின்றன, அவற்றால், பூண்டல் ஊர்தல் முதலிய பிற தொழில்களும் கொள்ளப்படும். [அவற்றால் -உடுத்தல் உண்டல்களால்]

'பிறர் உடுப்பதனையும் உண்பதனையும் காண்பாராயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் வாளா உடுப்பதும் உண்பதும் என்றனர். காலிங்கர் 'முன் நின்ற நிலையினும் மேற்பட உடுக்கும் ஆடையும் உண்ணும் சோறும் சிறிது மிகுதக் காணின்' என்றார். பரிமேலழகர் 'பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும் கீழாயினான் காணுமாயின்' என இப்பகுதிக்கு உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உண்டு உடுத்து நடப்பதைக் கண்டாலே', 'யாராவது நல்ல உடை உடுத்து நல்ல உணவு உண்டு சுகமாக இருப்பதைக் கண்டால்', 'பிறர் நன்றாக ஆடையணிவதும் புசிப்பதுங் கண்டால்', 'பிறர் நன்கு உடுப்பதனையும் உண்பதனையும் கண்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உடுத்துவதையும் உண்பதனையும் கண்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அழுக்காறுடையா ரென்றது.
பரிப்பெருமாள்: அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அழுக்காறுடையா ரென்றது.
பரிதி: அவர்க்கு ஒரு குற்றம் விசாரிப்பர் கீழோர் என்றவாறு.
காலிங்கர்: மற்று அப்பொழுதே பிறரைக் கெடுப்பது ஓர் வடுக்காண வற்றாகும் கீழ் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றைப் பொறாது அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம். [அவற்றை- உடுத்தலையும் உண்டலையும்; அவர்மாட்டு வடுவில்லையாகவும்-பிறரிடத்துக் குற்றம் இல்லையாகவும்]
பரிமேலழகர் குறிப்புரை: அவற்றைக் கண்ட துணையானே பொறாமை யெய்தலின் 'காணின்' என்றும், கேட்டார் இது கூடும் என்று இயையப் படைத்தல் அரிது ஆகலின் 'வற்றாகும்' என்றும் கூறினார். இதனால், பிறர் செல்வம் பொறாமை கூறப்பட்டது. [பிறர் செல்வம் பொறாமை- கீழ்மக்கள் பிறர் செல்வமுடையவராய் இருத்தல்கண்டு பொறாமை அடைதல்]

'அவர்மாட்டு உள்ள குற்றங்களை ஆராயவல்லாராவர் கயவர் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் கூடுதலாக 'அவர்மாட்டு வடுவில்லையாகவும் உண்டாக்கவல்லனாம்' என்று பொருளுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர்கள்மேல் குற்றஞ் சுமத்துவான் கயவன்', 'கயவர்கள் அவர்கள் மீது குற்றம் கண்டு பிடித்து (அவர்களைத்) தூற்றுவதற்குத் தம்முடைய திறமையைச் செலுத்துவார்கள்', 'அவர்பாற் பொறாமையினாற் கீழ்மக்கள் குற்றங் காணவல்லர் ஆவர்', 'அவரிடம் குற்றங்காணும் தன்மையராவார் கீழ்மக்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவர்கள்மேல் குற்றங் காண வல்லவர் கயவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உடுப்பதூஉம் உண்பதூஉம் கண்டால் அவர்கள்மேல் குற்றங் காண வல்லவர் கயவர் என்பது பாடலின் பொருள்.
'உடுப்பதூஉம் உண்பதூஉம்' குறிப்பது என்ன?

இவர்க்கேது இவ்வளவு பணம்? என்று மற்றவர்மீது வேண்டாத ஆராய்ச்சியில் இறங்குவான் கயவன்.

பிறர் நன்றாக உடுப்பதையும் உண்பதையும் காணும்போது அவற்றைப் பொறாத கீழ்மக்கள் குறிகொண்டு அவர்பால் குற்றம் காணவல்லவர்கள் ஆவார்கள்.
இங்கும் கீழ் என்ற சொல் கயவனைக் குறிக்க இழிவானவன் என்ற பொருளில் ஆளப்படுகிறது. பிறர் நன்றாக வாழ்வதைக் கண்டால் கயவர் அவர்கள் மேல் அழுக்காறு கொள்வார்கள். பிறர் நன்றாக உடுப்பதையும் உண்பதையும் கண்டாலும்- இல்லை- வெறுமனே உடுப்பதையும் உண்ணலையும் கண்டாலே, அவர்களின் மேல் இல்லாத குற்றங்களை எல்லாம் கண்டுபிடிக்கக் கிளம்பிவிடுவர். இத்தகைய கீழான குணம் கொண்டவர்கள் அவர்கள்.
அவர் இதைச் செய்தும் அதைச் செய்தும் செல்வம் சேர்க்கிறார் எனப் பழி தூற்றவும் வல்லவர் அக்கயவர்கள். இக்குறளிலுள்ள 'காணின், காண' என்ற இரு சொற்களும் ஒரு பரபரப்பான நிலையைக் காட்டுகின்றன. இவை 'கயவர்கள் பிறர் நலம் கண்டதுமே குறைகாண விரைவார்கள்' என்பதைச் சொல்வதாகின்றன. கீழ்மக்கள் மற்றவர்கள் மகிழ்வுடன் வாழ்தலைக் காணப் பொறுக்கமாட்டாது அவர்கள் பொருள்பெறும் வழிகளை ஆராய்ச்சி செய்வர். அம்மற்றவர்கள் குற்றமில்லாதவராக இருந்து குடிசெய்து வாழ்ந்தாலும் அவர்மேல் குற்றம் கண்டுபிடிக்க முனைவர். அவர்கள் தோண்டித்துருவி செய்த ஆய்வில் குணம் கண்டாலும் அதை மறைத்துக் குற்றம் தூற்றுவர். குற்றங்கள் இருக்க வேண்டுமென்று தேவையில்லை. குற்றங்கள் இல்லையானாலும் இவர்கள் அவற்றைக் கற்பித்து விடுவார்கள். 'ஆ, அவன்தானே! அதிலே கொள்ளையடித்தும் இதிலே ஏமாற்றியும்தாமே சேர்த்து வைத்திருக்கிறான்' என்று வாய் கூசாமல் மாசுகளை உண்டாக்கி அவர்மீது ஏற்றிச் சொல்வர். பழிபாவங்களுக்கு அஞ்சி நடக்க வேண்டுமே என்ற கவலை கீழுக்கு இராது ஆதலால் மற்றவர்மீது அவதூறு பரப்பி அதில் இன்பம் காண்பர். இதை வடு காண்பதில் வல்லவர்கள் என்ற பகுதி சொல்கிறது. வடுச்சொல் கேட்டவர் இக்குற்றம் இவரிடத்து இருக்கலாம் என்று உடன்படச் செய்தலும் பொருந்தப் பொய்த்தலும் கடினமானது ஆதலால் அதன் அருமை தோன்ற 'வற்றாகும்' அதாவது வல்லதாகும் என்று கூறப்பட்டது.
தமது பொறாமைக் குணத்தை மறைக்க வேண்டி வாழ்வான் மீது குற்றம் சுமத்துவர் கயவர். மனிதரில் தாழ்ந்தவர்களான கீழ்மைக் கொண்ட இவர்கள் ஆள்வினையுடைமை இல்லாதவர்கள். புறங்கூறுதலிலும் அலர் பரப்புதலிலும் பொய்க்குற்றம் சாற்றுவதிலும் ஆர்வமுடையவர்கள். மற்றவர் அடைந்துள்ள பேறுகளைச் சிதைத்தல், தட்டிப் பறித்தல், தீராப்பழி தூற்றல் ஆகியன இவர்கள் செய்யும் தொழில்களாம்.

மேற்சொல்லப்பட்ட இழிவானவர்கள் எங்கு எந்த வடிவில் உலவினாலும் அடையாளம் கண்டு, கண்ணோட்டமின்றிக் கடிந்து ஒதுக்குதல் வேண்டும். இதனால்தான் அவர்கள் கீழ்கள் என்று அஃறினைச் சொல்லால் வள்ளுவரால் குறிக்கப் பெறுகின்றனர். கொம்புளதற்கு ஐந்து முழம், குதிரைக்குப் பத்து முழம், யானைக்கு ஆயிரம் முழம் எட்டியிருக்க வேண்டும் என்பர். காணின் குற்றம் கற்பிக்க ஓடுவர் என்பதால், அத்தகைய கயவர்களின் கண்காணாத் தொலைவிலேயே வாழவேண்டும் என்பது வள்ளுவர் கருத்து என்று தெரிகிறது.

'உடுப்பதூஉம் உண்பதூஉம்' குறிப்பது என்ன?

'உடுப்பதூஉம் உண்பதூஉம்' என்றதற்கு உடுப்பதனையும் உண்பதனையும், உடுப்பதும் உண்பதும், முன் நின்ற நிலையினும் மேற்பட உடுக்கும் ஆடையும் உண்ணும் சோறும் சிறிது மிகுத, செல்வத்தால் பட்டும் துகிலும் உடுத்தலையும் பாலோடு அடிசில் உண்டலையும், செல்வத்தினாலே பட்டும், பவவந்தியும் உடுத்துக் கொள்ளுகிறதையும் பலருடனேகூடச் சாப்பிடுகிறதையும், செல்வமுடையார் பட்டுந் துகிலும் உடுத்துப் பலரோடுங் கூடி அடிசில் உண்டலை, உடுப்பதையும் உண்பதையும், உயர்ந்தன உடுத்தலையும் நல்லன உண்டலையும், உடுத்தும் உண்டும், உண்டு உடுத்து நடப்பதை, உடையணிவதையும் உண்பதையும், நல்ல உடை உடுத்து நல்ல உணவு உண்டு சுகமாக இருப்பது, உடுப்பதைக் காணினும், உண்பதைக் காணினும், நன்றாக ஆடையணிவதும் புசிப்பதும், நன்கு உடுப்பதனையும் உண்பதனையும், நன்றாக உடுப்பதையும் உண்பதையும், நல்லன உண்டு நல்லன உடுப்பவர்கள், செல்வத்தின் பயனாக ஓவியப்பூம் பட்டாடையணிதலையும் அறுசுவை நெய்யுண்டி யுண்டலையும், நன்றாக உண்டு உடுத்திருப்பது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மாந்தர்க்கு உணவும் உடையும் இன்றியமையாத் தேவைகளாகும். உணவுக்கு நிகராக அவர்கள் உடையையும் மிக வேண்டப்படுவதும் விரும்பத்தக்கதுமான ஒன்றாகவே கருதுவர்.
இக்குறளில் உள்ள 'உடுப்பதூஉம் உண்பதூஉம்' என்ற தொடரை இருதிறமாக விளக்கினர். ஒரு சாரார் 'பிறர் செல்வச் செழிப்புடன் 'நன்றாக உடை' உடுத்தினாலும் 'நல்ல உணவு' உண்டாலும் இழிவான குணம் கொண்டவர் கண்டால் பொறார்' எனக் கூறினர்.
இன்னொரு சாரார் 'பிறர் வாளா உடுப்பதனையும் உண்பதனையுமே பொறுக்கமாட்டார்; பொதுவாக மதிப்புடன் உடை அணிந்து நல்ல உணவு உண்டு வாழும் மாந்தரிடம் அழுக்காறு கொள்வது இயல்பு; ஆனால் கயவர் தான் மட்டும் வாழவேண்டும் என்ற இழிவு உணர்வு கொண்டவர்களாயிருப்பர்; கீழ்கள் மற்றவர்கள் உடுப்பதையும் உண்பதையும் பார்த்தால் போதும் அவர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி வடு காணத் தொடங்கி விடும்' என்றனர். இவற்றுள் பின்னவர்கள் கூறும் உரையே பொருத்தமாக உள்ளது.
முன்பு கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் (அழுக்காறாமை 166 பொருள்: கொடுப்பது கண்டு பொறாமைப்படுபவன் சுற்றமும் உடையும் உணவும் இல்லாது கேடு அடைவான்) என்ற பாடலிலும் 'உடுப்பதூஉம் உண்பதூஉம்' என்ற தொடர் தேவைக்கு உண்பதையும் மானங்காக்க உடுப்பதையுமே குறித்தது. எனவே 'உண்டு உடுத்து நடப்பதைக் கண்டாலே அவர்கள்மேல் குற்றஞ் சுமத்துவான் கயவன்' எனப் பொருள் கொள்வதே சிறந்தது. இதுவே கயமைக் குணத்தின் இயல்பை நன்கு விளக்குவதாகவும் உள்ளது.

'உடுப்பதூஉம் உண்பதூஉம்' என்ற தொடர் உடுப்பதும் உண்பதும் எனப் பொருள்படும்.

உடுத்துவதையும் உண்பதனையும் கண்டால் அவர்கள்மேல் குற்றங் காண வல்லவர் கயவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிறர் உடுப்பதும் உண்பதுமே கயமைக்கு காழ்ப்பு உண்டாக்கும்.

பொழிப்பு

நன்கு உண்டு உடுத்து நடப்பதைக் காண்பானாயின், அவர்கள்மேல் குற்றங் காணும் வல்லமையுடையவன் கயவன்.