இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்

(அதிகாரம்:கயமை குறள் எண்:1078)

பொழிப்பு (மு வரதராசன்): அணுகிக்குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

மணக்குடவர் உரை: பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள். அவ்வாறன்றிக் கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள்.
இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது.

பரிமேலழகர் உரை: சொல்லப் பயன்படுவர் சான்றோர் -மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்; கீழ் கரும்புபோல் கொல்லப் பயன்படும் - மற்றைக் கீழாயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர்.
(பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: பெரியோர், வருந்துவோர் தம் குறையைச் சொன்னவுடனே பயன்படுவர்; கீழோர் (கயவர்) கரும்பு போல வலியார் வதைத்த பொழுதுதான் பயன்படுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்.

பதவுரை: சொல்ல-சொல்லிய துணையால், சொல்லிய அளவிலே; பயன்படுவர்-பயன் செய்வர் (அதாவது உள்ளது கொடுப்பர்); சான்றோர்-மேலானவர், பல குணங்களாலும் நிரம்பியவர்; கரும்பு-கன்னல்; போல்-போன்று; கொல்ல-நைய நெருக்கியவழி; பயன்படும்-பயனாகும்; கீழ்-கீழாயினான்.


சொல்லப் பயன்படுவர் சான்றோர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள்;
பரிப்பெருமாள்: பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள்;
பரிதி: வார்த்தை சொன்ன மாத்திரத்திலே பயன்படுவர் நல்லோர்;
காலிங்கர்: ஒருவர் வந்து தம் குறை சொல்ல அமையும்; மற்று இவ்வளவிலே பயன்படுவர் சால்பினை உடையோர்;
பரிமேலழகர்: மெலியர் சென்று தம் குறையைச் சொல்லிய துணையானே இரங்கிப் பயன்படுவர் மேலாயினார்;

'பிறர் தங்குறையைச் சொல்ல அதற்கு இரங்கிப் பயன்படுவர் மேன்மக்கள்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சொன்ன அளவிலே பயன்செய்வர் மேலோர்', 'பிறர் நெருங்கிக் குறையைக் கூறிய அளவிலே சால்புடையோர் மனமிரங்கிப் பயன்படுவர்', '(வேண்டியதைச்) சொன்னவுடன் உதவி செய்கிறவர்கள் மேன்மக்கள்', 'சான்றோர் நல்லதைச் சொல்லக் கேட்டுப் பயன்படுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவர் தம் குறையைச் சொல்லிய அளவிலே இரங்கிப் பயன்செய்வர் மேன்மக்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வாறன்றிக் கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது.
பரிப்பெருமாள்: அவ்வாறன்றிக் கரும்பு பயன்படுமாறு போலத் தம்மை நெருக்கினால் பயன்படுவர் கீழ்மக்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒறுப்பார்க்குக் கொடுப்பரென்றது.
பரிதி: கரும்பு போலத் தண்டிக்கப் பயன்படுவர் கீழோர் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று இவ்வாறன்றித் தறித்தும் நெரித்தும் அடர்த்தும் சாறு கொள்ளும் கரும்புபோலப் பெரிதும் கொல்லக் கொல்லப் பயன்படுவர் அத்துணைக் கீழான கயவர் என்றவாறு. [தறித்தும்-துண்டாடியும்; நெரித்தும் - கருவியிற் கொடுத்து நெருக்கியும்; அடர்த்தும்- அமுக்கிப் பிழிந்தும்]
பரிமேலழகர்: மற்றைக் கீழாயினார் கரும்பு போல வலியார் நைய நெருக்கிய வழிப் பயன்படுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: பயன்படுதல்: உள்ளது கொடுத்தல். கீழாயினாரது இழிவு தோன்ற, மேலாயினாரையும் உடன் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் கொடுக்குமாறு கூறப்பட்டது. [அவர் கொடுக்குமாறு- கயவர் கொடுக்குமாறு]

'கரும்பு போலத் தம்மை நெருக்கியவழி பயன்படுவர் கீழ்மக்கள்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கரும்புபோல் நசுக்கின் பயன்செய்வர் கீழோர்', 'ஆனால், கயவர் கரும்பு போல் கொடியவர் நையப் புடைத்தவழியே பயன்படுவர்', 'கரும்பை (ஆலையில் கொடுத்துப்) பிழிவதைப் போல் நெருக்கினால் மட்டும் கொடுப்பவர்கள் கீழ் மக்கள்', 'கீழ்மக்கள் கரும்பினை ஆலையில் வைத்துச் சாறு பிழிவதுபோல் வருத்தினாற் பயன்படுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கரும்பு போல் நையப் புடைத்தவழியே கீழ்மக்கள் பயன்படுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவர் தம் குறையைச் சொல்லிய அளவிலே இரங்கிப் பயன்செய்வர் மேன்மக்கள்; கரும்பு போல் கொல்ல, கீழ்மக்கள் பயன்படுவர் என்பது பாடலின் பொருள்.
'கொல்ல' என்ற சொல் குறிப்பது என்ன?

அடிமேல் அடி கொடுத்தால்தான் காசை வெளிக்கொணர்வான் கயவன்.

தம்மிடம் வந்து குறையைச் சொல்லிய அளவிலேயே சால்புடையார் உதவிடுவர்; கீழ்மைக் குணம் கொண்டோர் கரும்பினை ஆலையில் வைத்துப் பிழிவது போல வருத்தினால்தான் செவிமடுப்பர்.
சான்றோரிடம் சென்று தனக்கு நுகர்வதற்கு ஒன்றும் இல்லை என்று முறையிடும் சொல்லை கேட்டவுடன் அவரது பசிப்பிணி அகற்ற உடனே உதவி செய்து உவப்பர்; இதை சொல்லப் பயன்படுவர் மேலோர் என்னும் வரியால் குறிக்கிறது பாடல். கயவரோ கேட்பித்தாலும் கற்பித்தாலும் தாமே உதவமாட்டார்; வலியவர் வந்து கரும்பு போல நைய நெருக்கி நசுக்கிப் பிழிந்தவழிதான் உதவ முன்வருவர் என்று இதைக் கடுமை நிறைந்த சொற்களால் கூறுகிறது குறள்.

இக்குறள் (1078) சான்றோர்க்கு நேர் மாறாகக் கயவரை வள்ளுவர் கருதுகிறார் என்பதைத் தெளிவுபடுத்துவதாக உள்ளது. அதாவது சான்றாண்மைக்கு எதிர்நிலையில் கயமை என்றவாறு. சான்றாண்மை பண்பின் உச்சநிலை என்றால், தாழ்ந்த குணங்களின் கீழ் எல்லையாகக் கயமை காட்டப்படுகிறது.
சான்றோரை உடன் கூறியதால் கீழாயினாரது இழிவு மிகுத்துத் தோன்றுகிறது.
இப்பாடலில் 'கொல்லப் பயன்படும் கீழ்' எனக் கயவரை அஃறிணைப்படுத்திக் கூறப்பட்டுள்ளதும் அறியத்தக்கது.

இங்கு சொல்லப்பட்ட உவமைவழி கரும்பை வெட்டிச் சாறு கொள்ளும் தொழில் அன்று இருந்தமை தெரியவருகிறது. கரும்பும் கரும்புச் சாற்றினால் காய்ச்சி எடுக்கப்படும் வெல்லம் அல்லது சர்க்கரை முதலியன உணவாகப் பயன்தருவன. கரும்புச் சாறில் இனிக்கும் சர்க்கரை உள்ளது. அந்தக் கரும்புச் சாறை எளிதாய் எடுக்க இயலாது. இயந்திரத்தில் இட்டுக் நெருக்கிப் பிழிந்தால்தான் சாறு கிடைக்கும். கரும்பிலிருந்து கரும்புச் சாறை எடுக்கும் கருவிகளும் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்பது இக்குறள் மூலம் அறியமுடிகிறது. சில சங்கப்பாடல்களும் கரும்புச்சாறு எடுக்கும் எந்திரம் பற்றிக் கூறியுள்ளன. கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண் (புறநானூறு 322 பொருள்; கரும்பு எந்திரம் கரும்பைச் சாறுபிழியும் ஓசையைக் கேட்டதும் பக்கத்து வயலில் இருக்கும் வாளைமீன் புரண்டு ஓடும்...) என்ற புறப்பாட்டும் கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்.. (ஐங்குறுநூறு 55 பொருள்: கரும்புச் சாறு பிழியும் எந்திரத்திலிருந்து எழும் ஒலி யானையின் பிளிறல் ஒலிபோல்...) என்னும் ஐங்குறுநூறு பாடலும் கரும்பின் எந்திரத்தைக் குறிப்பிடுகின்றன. கரும்பு விளைநிலங்கள் பற்றியும் புறநானூறு பேசுகிறது.

இப்பாடற் கருத்து போன்றே முந்தைய குறட்பொருளும் (1077) அமைந்தது. இவை 'அடி உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவார்' என்னும் முதுமொழியை நினைக்க வைக்கின்றன. அதாவது பயனுற வேண்டுமானால் சில இடங்களில் வன்முறை தேவையாயிருக்கிறது என்று இவ்விரண்டு பாடல்களும் கருத்து தெரிவிக்கின்றன.

'கொல்ல' என்ற சொல் குறிப்பது என்ன?

'கொல்ல' என்ற சொல்லுக்கு நெருக்கினால், தண்டிக்க, தறித்தும் நெரித்தும் அடர்த்தும் (சாறு கொள்ளும் கரும்புபோலப்) பெரிதும் கொல்லக் கொல்ல, அடித்து நெருக்கினவர்களுக்கு, வலியார் நைய நெருக்கிய வழி, அழித்துப் பிழிந்தால்தான், நையப்புடைத்து நெருக்கியவழி, கொலையனைய துன்பம் தந்தால், நசுக்கின், நையப் புடைத்தவழி, நெருக்கினால், வருத்தினால், வலியார் வதைத்த பொழுது, நசுக்கினால்தான், வருத்தி நெருக்கிய போதே, துன்பப்படுத்தும்போதுதான், சக்கையாக வெளுக்கப்பட்டால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

சொன்னவுடன் பெரியாரும், துன்பம் கொடுத்தால்தான் கீழ்மைக் குணம் கொண்டவரும் உதவுவர் என்பது இக்குறளின் கருத்து.
'கொல்ல' என்று ஆளப்பட்ட சொல்லுக்கு உயிரை நீக்க என்ற பொருள் இங்கு இல்லையாயினும் கொடிய துன்பம் தந்த வழியே கயவர் இரப்போர்க்கு உதவுவர் என்பதே இக்குறள் தரும் செய்தி என்பதில் எவர்க்கும் ஐயமில்லை.
செல்வந்தரிடம் உள்ள பொருள் வன்முறையினால் பிறர்க்குப் பயன்படுத்தப்பட வேண்டும் நிலையும் ஏற்படக் கூடும் என்கிறாரா வள்ளுவர்? அல்லது ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பதை நிறுவுவது போல வறுமைத் துன்பம் பெருகினால் பலர் கள்வராக மாறி வழிப்பறி செய்தோ பிறவகையிலோ செல்வரின் உடைமைகளைக் கவரும் நிலை ஏற்படல் கூடும் என அவர் கருதுகிறாரா? என்னும் வினாக்கள் எழுகின்றன.

ஒருவர் தம் குறையைச் சொல்லிய அளவிலே இரங்கிப் பயன்செய்வர் மேன்மக்கள்; கரும்பு போல் நையப் புடைத்தவழியே, கீழ்மக்கள் பயன்படுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மெல்லவே சொல்லப் பயன்படுவதில்லை கயமை.

பொழிப்பு

குறையைக் கூறிய அளவிலே மனமிரங்கிப் பயன்செய்வர் மேலோர்; கரும்புபோல் நசுக்கிய வழியே பயன்படுவர் கீழோர்.