இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1077



ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு

(அதிகாரம்:கயமை குறள் எண்:1077)

பொழிப்பு (மு வரதராசன்): கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதறமாட்டார்.

மணக்குடவர் உரை: தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு, ஈரக்கையையுந் தெரியார் கயவர்.
ஈரக்கை- கழுவினகை. இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.

பரிமேலழகர் உரை: கயவர் கொடிறு உடைக்கும் கூன் கையர் அல்லாதவர்க்கு - கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு: ஈர்ங்கை விதிரார் - தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார்.
(வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: கன்னத்தில் அறைந்து பல்லை உடைக்கும் வளைந்த கையினை உடைய முரடர் அல்லாதவர்களுக்குக் கயவர்கள் தாம் உண்டு கழுவிய ஈரக் கையையும் உதற மாட்டார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லாதவர்க்கு ஈர்ங்கை விதிரார்.

பதவுரை: ஈர்ங்கை-கழுவின ஈரக்கை, நனைந்த கை; விதிரார்-உதறமாட்டார், தெறிக்கமாட்டார்; கயவர்-கீழ்மைக்குணம் உடையோர்; கொடிறு-கதுப்பு, கன்னம், தாடை; உடைக்கும்-நெரிக்கும்; கூன்-வளைவாகிய, முறுக்கியதான; கையர்-கைகளையுடையவர்; அல்லாதவர்க்கு-அல்லாதார்க்கு.


ஈர்ங்கை விதிரார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஈரக்கையையுந் தெரியார்.
மணக்குடவர் குறிப்புரை: ஈரக்கை- கழுவின கை.
பரிப்பெருமாள்: ஈரக்கையும் தெரியார்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈரக்கை- உண்டு கழுவின கை.
பரிதி ('ஈகை' (விதிரார்) பாடம்): ஈகிற கை விதிர்த்துக் கொள்ளார். [ஈகிற கை-ஈயுந்தொழில் செய்யும் வலக்கை; விதிர்த்து-உதறி]
காலிங்கர்: பிறர் தம்பால் இரந்து கொள்ளும் இடத்து ஈரக்கை விதிர்த்தலும் இலர்.
பரிமேலழகர்: தாம் உண்டு பூசிய கையைத் தெறித்தல் வேண்டும் என்று இரந்தாலும் தெறியார். [பூசிய கையைத் தெறித்தல்- கழுவிய கையை உதறுதல்]

'ஈரக்கையையுந் தெரியார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எச்சிற்கையையும் உதறமாட்டார்கள்', '(தாம் உணவுண்ட) ஈரக்கையிலுள்ள (பருக்கையைக்கூட) தெறிக்க மாட்டார்கள்', 'உண்டு கழுவிய கையைக்கூட உதறமாட்டார்கள்', 'தாம் உண்டுவிட்டுக் கழுவிய ஈரக் கையையும் உதிர்க்கவும் மாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தமது ஈரக்கையையும் கூட உதறமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு கயவர். [கதுப்பினை- கன்னத்தை]
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.
பரிப்பெருமாள் ('கூர்ங்கையர்' பாடம்): தம்கதுப்பினை ஒடிக்கும் வலிய கையினை உடையரல்லாதார்க்கு கயவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: 'கூன்கை' என்று பாடமோதினும் அமையும். இஃது இரப்பார்க்குக் கொடா ரென்றது.
பரிதி: கயவர் கொறடாலே அடிப்பவர்க்குக் கொடுப்பர் என்றவாறு. [கொறடாலே - பல்லைப் பிடுங்குங் கருவி]
காலிங்கர் ('கூர்ங்கையர்' பாடம்): கயவர் ஆனவர் கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூரிய கையினை உடையோர் அல்லாத குணம் உடையவர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு. [கதுப்பினை-கன்னத்தை]
பரிமேலழகர் குறிப்புரை: வளைந்த கை - முறுக்கிய கை. 'மெலிவார்க்கு யாதும் கொடார்: நலிவார்க்கு எல்லாம் கொடுப்பர்' என்பதாம். [மெலிவார்க்கு- உணவின்மையான் வருந்தி இரப்பவர்க்கு; நலிவார்- வறுத்துபவர்]

'கயவர் தம் கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையரல்லாதார்க்கு கயவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் கதுப்பினை உடைக்கும் கை பற்றியும், பரிதி கொறடாலே அடிப்பது பற்றியும் காலிங்கர் கொடிறு போல இடுக்கிப்பிடித்து உடம்பை உடைப்பது பற்றியும் பரிமேலழகர் கதுப்பினை நெரிக்கும் வளைந்த கை பற்றியும் பேசுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல்லை உடைக்கும் கொடுங்கையர்க்கு அன்றிக் கயவர்கள்', 'தவடையில் அடித்துப் (பல்லை) உடைக்கக் கூடிய மடக்கிய கையுடையவர்களுக்கன்றி (மற்ற யாருக்கும்) கயவர்கள்', 'கன்னத்தை அடித்துடைக்கும் வளைந்த கையை உடையர் அல்லாதார்க்கு, கீழ்மக்கள்', 'தம் முகவாயை உடைக்கும் வளைந்த கையினை உடையவர் அல்லாதார்க்குக் கயவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கன்னத்தை அடித்துடைக்கும் வளைந்த கையினை உடையர் அல்லாதார்க்கு, கயவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லாதார்க்கு, கயவர் தமது ஈரக்கையையும் கூட உதறமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.
'கொடிறுடைக்கும் கூன்கையர்' யார்?

கயவர்க்கு ஈகைக்குணம் அறவே இராது.

கன்னத்தை உடைக்கும் முறுக்கிய கையை உடையவர் அல்லாதார்க்குக் கீழ்மக்கள் தமது ஈரக்கையையும் கூட உதறமாட்டார்கள்.
செல்வத்தைக் காப்பதிலேயே தன் முழுச் சிந்தனையையும் பறிகொடுப்பவரும் கயவரே என்கிறது இப்பாடல். இக்கயவர் வறுமை காரணமாக தம்மிடம் வந்து இரப்போர்க்கு எதுவும் ஈயமாட்டார்கள்; தம்மைத் துன்புறுத்துவார்க்கே கொடுப்பர் எனச் சொல்கிறது.
ஈர்ங்கை என்பதற்கு ஈரக்கை என்பது பொருள். இங்கு உணவு உண்டபின் கழுவிய கையைக் குறிப்பதாக உள்ளது. விதிர்தல் என்ற சொல் தெரித்தல் அல்லது உதறுதல் எனப்பொருள்படும். விதிரார் என்றால் உதறார் என்ற பொருள் தரும். இங்கு சொல்லப்படும் கயவர் ஈகைக் குணம் சிறிதும் இல்லாதவர். உணவு உண்டபின் எல்லோரும் கையைக் கழுவியபின் அதில் ஒட்டிய நீரை உதறிவிடுவர் அல்லது துணியால் துடைத்துக் கொள்வர். இக்கயவர் தெறிக்கும் நீரை யாராவது பயன்படுத்தி விடுவார் என்பதால் கையை உதறமாட்டாராம். அந்த அளவு சிறுமைக் குணம்! 'எச்சிற்கையால் காக்கா ஓட்டமாட்டான்' என்று கஞ்சத்தனம் மிகுந்தவனை ஏளனம் செய்யும்போது கூறுவர். கையை உதறும்போது அதில் ஒட்டியுள்ள சோற்றுப் பருக்கைகளை காகம் தன் இரைக்காக எடுத்துவிடுமாம். இப்பழமொழியை ஒட்டிய கருத்து இக்குறளில் காணப்படுகிறது.

பிறர்க்கு உதவியாக வாழ்தலைக் கயவரிடம் காண முடியாது. சமுதாயக் கடமையை முற்றிலும் உணராதவராக அவர் இருப்பார். இவர் செல்வம் ஈட்டியவனே முழுதும் துய்க்க வேண்டும் என்ற கொள்கையுடையவர், தாம் மட்டும் உண்டால் போதும் என்று நினைப்பவர்; தம் இல்லத்திலுள்ள மற்றவர்களைப் பற்றியும்கூட எண்ணமாட்டார். அத்துணை இழிநிலையுடையவர். ..... நிரப்பிய தாமே தமியர் உணல் (ஈகை 229) என்று முன்குறள் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது போல உணவுக் குவியல் இருந்தும் நிறையத் தாமே தனியாக உண்ணுதல் என்னும் கொடுமையையுடையவர் ஆவர் இவர். உண்ட இலையில் ஒன்றையும் மிச்சம் வைக்காது, கையில் ஒன்றும் ஒட்டாதவாறும் திருத்தமாய் உண்டபின் கழுவிய கையைக்கூட உதறமாட்டார். ஈரக்கையைத் தெரித்தால் அதில் ஒட்டியுள்ள நீரைப்பிறர் பயன்படுத்திவிடுவர் என்பதால் இவர் மனம் நடுங்கும். அச்சுறுத்தி வருத்தி அவர்களிடம் உள்ள பொருளைக் கொள்ள முடியுமே அல்லாமல், தாமாக ஒன்றும் கொடுக்கமாட்டார்கள். எவர் இவர் கையை வளைத்து மடக்கித் தாடையில் ஓங்கிக் குத்தி உடைக்கின்றாரோ அவருக்கே உதவுவர் என்கிறது இக்குறள்.

வறுமையாளர் தம் பசியைத் தீர்த்துக் கொள்ளச் செல்வந்தராகிய கயவரை அடிக்கலாம் என்கிறது இப்பாடல். ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை (நன்றியில்செல்வம் 1003 பொருள்: பொருள் தேடுவதையே விரும்பி புகழை வேண்டாத மாந்தரின் பிறவி வாழ்க்கை நிலத்திற்குச் சுமையாகும்) என்று முன்பு சொல்லப்பட்டது. தான் ஈட்டியதைச் சேமித்து வைக்கிறார் ஒருவர். தீதாகப் பொருள் சேர்த்தவர் என்றால் குற்றமானவராவார். அப்படி ஒரு குறிப்பும் இவ்வதிகாரப் பாடல்களில் இல்லை. அவர் ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர். அதில் என்ன குற்றம்? அவர் பூமிக்குப் பாரம் சரி. அவரை ஏன் வன்முறையால் துன்பப்படச் செய்ய வேண்டும்? இது சிந்தித்தற்குரியது.

'கொடிறுடைக்கும் கூன்கையர்' யார்?

'கொடிறுடைக்கும் கூன்கையர்' என்ற தொடர்க்குக் கதுப்பினை ஒடிக்கும் வளைந்த கையினை உடையர், கதுப்பினை ஒடிக்கும் வலிய கையினை உடையர். கொறடாலே அடிப்பவர், கொடிறு போல இடுக்கிப் பிடித்து உடம்பை உடைக்கும் திறமையால் கூரிய கையினை உடையோர், கதுப்பினை நெரிப்பதாக வளைந்த கையினை உடையர், தாடையில் அடிக்க வல்ல கைகளை உடையவர், கன்னத்தினைக் குத்தி உடைப்பதாய, கொடிய கையை உடையவர், கன்னத்தை இடித்து உடைக்கும்படி வளைந்த கை உடையவர், கன்னத்தைத் தாக்கி உடைக்கும்படியான முறுக்கி வளைந்த கையையுடையவர், கதுப்பினை (கன்னத்தினை) உடைக்கும் கொடியவர், பல்லை உடைக்கும் கொடுங்கையர், கன்னத்தில் அறைந்து பல்லை உடைக்கும் வளைந்த கையினை உடைய முரடர், தவடையில் அடித்துப் (பல்லை) உடைக்கக் கூடிய மடக்கிய கையுடையவர், கன்னத்தில் அடித்து உடைக்கும் குவித்த (மடங்கிய) கையை உடையவர், கன்னத்தை அடித்துடைக்கும் வளைந்த கையை உடையர், முகவாயை உடைக்கும் வளைந்த கையினை உடையவர், கன்னத்தை இடித்து உடைக்கும் வளைத்த கையை உடையவர், கன்னத்தில் அறைந்து பல்லை உடைக்கும் கொடிய கரங்கள் படைத்தவர், அலகைப் பெயர்த்தற்கு வளைத்த கையினையுடையார், முகவாய்க்கட்டையை உடைக்கும், மடக்கிய கையினை உடையவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கொடிறு என்ற சொல்லுக்குக் கன்னம் அதாவது கதுப்பு என்று தொல்லாசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் பொருள் கூறினர். பரிதியும் காலிங்கரும் கொடிறு என்பதற்கு இடுக்கி எனப் பொருள் கொண்டனர். கூன்கையர் என்றதற்கு மணக்குடவரும் பரிமேலழகரும் வளைந்த கையினை உடையர் என உரைக்க பரிப்பெருமாளும் காலிங்கரும் கூர்ங்கை எனப் பாடங்கொண்டு வலிய/கூரிய கையினை உடையர் என்றனர். கொடிறுடைக்கும் கூன்கையர் என்றதற்கு கன்னத்தை உடைக்கும் வளைந்த அல்லது முறுக்கிய கையினை உடையர் என்பது பொருள்.
விரல்களை இறுக்கமாக்கி முட்டியை மடக்கிக் கன்னத்தில் அறைந்து கேட்பவர்களுக்குத்தான் கயவர் உதவுவர் என்பதைச் சொல்லக் 'கொடிறுடைக்கும் கூன்கையர்' என்ற தொடர் ஆளப்பட்டது.

'கொடிறுடைக்கும் கூன்கையர்' என்ற தொடர் கன்னத்தை அடித்துடைக்கும் வளைந்த கையை உடையர் என்ற பொருள் தரும்.

கன்னத்தை அடித்துடைக்கும் வளைந்த கையினை உடையர் அல்லாதார்க்கு, கயவர் தாம் உண்டு கழுவிய கையைக்கூட உதறமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஈயாத கயமையின் தேட்டைத் தீயார் கொள்வர்.

பொழிப்பு

கன்னத்தில் அறைந்து (பல்லை) உடைக்கும் கொடுங்கையர்க்கு அன்றிக் கயவர்கள் தாம் உண்டு கழுவிய ஈரக் கையையும் உதறமாட்டார்கள்.