இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1076



அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்

(அதிகாரம்:கயமை குறள் எண்:1076)

பொழிப்பு (மு வரதராசன்): கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை போன்றவர்.

மணக்குடவர் உரை: கயவர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான்.
இஃது அடக்கமில ரென்றது.

பரிமேலழகர் உரை: தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர்.
(மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தாம் கேட்ட மறைவான செய்திகளை இடந்தோறும் சுமந்துகொண்டு பிறர்க்குப் பரப்புதலால், கயவர் அறையப்படும் பறைக் கருவியை ஒப்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் கயவர் அறைபறை அன்னர்.

பதவுரை: அறை-அடிக்கப்படும், அறையப்படும்; பறை-'தப்பு' என்னும் ஒருவகை இசைக்கருவி; அன்னர்-ஒத்திருப்பர்; கயவர்-கீழோர்; தாம்-தாம்; கேட்ட-செவியேற்ற; மறை-மறுக்கப்படுவது, இரகசியம்; பிறர்க்கு-மற்றவர்க்கு; உய்த்து-கொண்டுபோய், சுமந்து சென்று, செலுத்தி; உரைக்கலான்-சொல்லுதலான்.


அறைபறை அன்னர் கயவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கயவர் அறையும் பறைபோல்வர்;
பரிப்பெருமாள்: கயவர் அறையும் பறைபோல்வர்;
பரிதி: அறைபறைக்கு ஒப்பர் கயவர்;
காலிங்கர்: ஒருவன் தான் வாய்க்கொண்டு ஒக்கடித்து உணர்ந்த தாளப் பகுதியைப் பிறர்க்கு அவ்வாறு உரைவழி புலப்படாமைக் குறிக்கொண்டு தன் கைகொண்டு அதன்கண் உற வைத்த இடத்து, மற்று அஃது அதனை யாவர்க்கும் புலப்படச் சாற்றும் பறைக் கருவியை ஒப்பர்;
பரிமேலழகர்: கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர்; [பறை- கொட்டும் இசைக்கருவி]

'கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கயவர் அறிவிக்கும் பறைபோல்வர்', 'கயவர்கள் பறைசாற்றும் தமுக்குக்குச் சமானமானவர்கள்', 'கயவர் அடிக்கப்படும் பறையைப் போன்றவர்', 'கயவர் அடிக்கப்படும் பறையினை ஒப்பர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கயவர் அடிக்கப்படும் பறைக்கருவி போன்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.

தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அடக்கமில ரென்றது.
பரிப்பெருமாள்: தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அடக்கமில ரென்றது.
பரிதி: இரகசியமான விஷயத்தை எங்கும் உரைத்தலால் என்றவாறு.
காலிங்கர்: என் எனில், ஒருவர் தம்மை நம்பி மறைய ஓம்பு என்றுரைப்ப, மற்று அந்த மறையினை அடக்கலாற்றாது அப்பொழுதே பிறர்க்குச் சென்று அச்செவிக்குச் செல்லுமாறு அதனை விளக்கச் செலவு படுத்துரைக்கும் தீமை உடையார் என்றவாறு.
பரிமேலழகர்: தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்.
பரிமேலழகர் குறிப்புரை: மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார் அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனால் அவரது செறிவின்மை கூறப்பட்டது. [அவர்க்கு அது பெரும் பாரம்-அக்கீழ்மக்களுக்குத் தாம் கேட்ட மறைச்செய்தி பெரும் பளு; .செறிவின்மை- அடக்கமின்மை]

'தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏன்? மறைச்செய்தியைப் பிறரிடம் போய்க்கூறுவர்', 'தம் காதில் விழுகிற இரகசியங்களை (பல இடங்களுக்கும் தாமே சென்று) வலியச் சொல்லும் குணத்தால்', 'தாங் கேட்ட மறைவுகளைத் தாங்கிக்கொண்டு போய் எல்லார்க்குஞ் சொல்லுதலால்', 'தாம் கேட்ட மறைகளை (இரகசியங்களை) பிறரிடம் சென்று சொல்லுதலால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தாம் கேட்ட மறைச்செய்தியை இடந்தோறும் கொண்டுசென்று சொல்லுதலால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தாம் கேட்ட மறைச்செய்தியை இடந்தோறும் கொண்டுசென்று சொல்லுதலால் கயவர் அறைபறை போன்றவர் என்பது பாடலின் பொருள்.
'அறைபறை' குறிப்பது என்ன?

கயவர்க்கு மறைச்சொல்லும் பறைச் செய்தியாம்.

தாம் கேட்ட மறைச் செய்திகளை வலியச் சென்று பிறர்க்கு சொல்வதனால் கயவர் அறையப்படும் பறையினைப் போல்வர்.
பொதுவெளியில் விடப்படக்கூடாத, தாம் கேள்விப்பட்ட, செய்திகளைத் தாங்கிக் கொண்டு பிறரிடம் போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர். மறை என்று அறிந்தும், அது தொடர்புடையார்க்குத் தீங்கு விளைக்கும் என்று தெரிந்தும், பிறரை வஞ்சிக்கும் எண்ணம் கொண்டு, உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்க, அம்மறைச் செய்தியை வெளியுலகுக்குப் பரப்புவர் கீழ்மைக் குணம் கொண்டோர். வெளிப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்ட செய்திகளையும் கயவர் ஊரறிய உரைத்திடுவர்.
உய்த்து என்ற சொல் கொண்டுசென்று எனப் பொருள்படும். உய்த்து உரைக்கலான் என்றது பிறர் வேண்டாமலும் தாமே கொண்டுபோய் உரைப்பதைச் சொல்வது.

கயவர்கள் அடக்கம் இல்லாது செயல்படுவர்; தம்மைத் தாம் ஆளும்முறை அவர்களுக்குத் தெரியாது; கோணல் போக்குடையவராயுமிருப்பர்; உள்ள அறிவையும் தவறாகப் பயன்படுத்துபவர். இக்குணக் குறைபாடு வெளிச்செயல்களில் நன்றாகவே புலப்படும். ஏதாவது மறை ஒன்றை அவர்கள் கேள்விப்படுவார்களானால், கேட்ட அச்செய்தியை, தாமே வலியச் சென்று பரப்புவதில் பெருவிருப்பம் கொண்டவர்களாகி, நாவடக்கமின்றி, மற்றவர்களிடமெல்லாம் அதைக் கொண்டுபோய்ச் சொல்லிக் கேடுகளை விளைவிப்பர். அதில் இன்பம் அடைபவர்களாகவும் இருப்பர். அதைப் பிறருக்குத் தெரிவிக்காவிடில் அவர்களுக்குத் தலை வெடித்துவிடும்! மறை காப்பது என்பது மனநலம் கெட்டுத் திரியும் இவர்களுக்கு இயலாத ஒன்று.
இரண்டு பேருக்குத் தெரிந்த செய்திதான் மறையாக இருக்க முடியும்; மூன்றாவது ஆளுக்குத் தெரிந்த மறை உலகத்துக்குத் தெரிந்த மறை என்று ஆங்கிலத்தில் ஓர் முதுமொழி உண்டு. மறை வெளிப்பட்டால் குற்றம் விளையும் என்பதை உணர்ந்தும் அதை ஒளிக்காது ஊருக்கே தெரியும்படி சொல்லும் திறன் கொண்டவர் கயவர் என்று நகைச் சுவையாகக் கூறப்பட்டது.

கயமைக்குணம் கொண்டவர்கள் நம்பத்தகாதவர்கள்.
உலகில் பலரும் தம்மைப் பற்றிய எல்லாமும், எல்லோருக்கும் தெரியவேண்டும் என விரும்ப மாட்டார்கள். மறைபொருள் என்று ஒன்று உண்டு. எல்லாமே எல்லாருக்கும் அறியப்பட வேண்டியது என்பதுமில்லை. மறைவுகள் உண்மைகள் என்றாலும் அவை யாரும் அறியாமல் வைத்துக் காக்கப்பட வேண்டியனவாகவும் இருக்கும். ஆனால் மறைக்கப்பட வேண்டிய செய்தியைக் கேட்டுவிட்டால், அடக்கமில்லாமல், கொஞ்சமும் காலம் தாழ்த்தாது அதை எல்லாருக்கும் கொட்டி முழக்கும் சிறுமைக்குணம் உடையவராயிருப்பர் கயவர். நன்மை தீமைகளை உணர்ந்து நடக்காதவர்களாயிருப்பதால் இவர்களால் தீமைகளே உண்டாகும்.

அற்றம் மறைக்கும் பெருமை..... (பெருமை 980) என்ற குறட்கருத்தையும் இணைத்து எண்ணலாம். பிறரது மானக்கேடான செய்திகளை வெளியிடாது மறைத்தே வைத்திருப்பர் பெரியோர்... என்பது அக்குறளின் திரண்ட பொருள்.

'அறைபறை' குறிப்பது என்ன?

அறைபறை என்பது அறையப்படும் பறை அதாவது அடிக்கப்படும் பறை எனப்பொருள்படும். பறை தமுக்கு என்றும் அறியப்படும். இது ஒரு தோல் இசைக் கருவியாகும். அதைக் குறுந்தடி கொண்டு அடிக்கும்போது பேரொலி எழும். ஊருக்குச் செய்தியறிவிக்க பறையை அடித்து ஒலி எழுப்புவர். அவ்வொலி பெரிதாக முழங்கி எல்லார்க்கும் ஓர் செய்தி இருப்பதை உணர்த்தும். பறையின் ஒலி கேட்டவுடன் ஊர்மக்கள் செவி கூராகிடும். நன்றாயினும் தீயதாயினும் பலருமறியப் பறை தட்டி ஒவ்வொரு இடமாக நகர்ந்துபோய்ச் செய்தி சாற்றப்படும். இவ்விதம் செய்திகளைப் பறையடித்து ஊருக்கு உரைப்பது வழக்கம். பறை தட்டி ஊரார் கவனத்தை ஈர்த்துச் செய்தியை அறிவிக்கும் முறை இன்றும் பல இடங்களில் வழக்கத்தில் உள்ளது. ஆட்சியாளர் பொது மக்களுக்குச் செய்திகளைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் முறையாக இருந்தது/இருக்கிறது. பெரும்பாலும் அரசு தொடர்பான செய்திகளை அறிவிக்கவும் ஊரில் நடக்கும் முதன்மை நிகழ்வுகளைத் தெரிவிக்கவும் பறையடித்து உரக்கச்சொல்வர். செய்தி பலருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக பறை முழக்கம் செய்யப்படுகிறது.

இங்கு தாம் கேட்ட மறைத்து வைக்க வேண்டிய செய்திகளை மற்றவர்க்கு வலியச்சென்று சொல்லுவதால் கயவர் அறையப்படும் பறையோடு ஒப்பிடப்படுகின்றனர். பறையின் ஓசையால் செய்தி வலிந்திழுக்கப்பட்டுப் பிறர் உணர்வதுபோலக் கயவரின் செய்கையும் அமையும். ஒருவர் மறைக்கப் படவேண்டிய செய்தி ஒன்றை இவரை நம்பிச் சொல்லி இம்மறையை வெளித்தெரியாமல் காக்க என்கிறார். ஆனால் கயவரோ அதைக் கேட்டவுடன் அடக்க இயலாது அதைப் பலர் அறியுமாறு வெளிப்படுத்துவர். இதனால் அவர்கள் அறையும் பறை போன்றவர்கள்.
இக்குறளில் வரும் வினைச்சொல்லும், அதன் ஒலியும் உட்பொருளை யுணர்த்துவதுடன் உருவக்காட்சியாகவும் உள்ளது.

அறைபறை என்ற தொடர் குறளின் மற்றோரிடத்திலும் ஆளப்பட்டுள்ளது. மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து (கண்விதுப்பு அழிதல் 1180 பொருள்: எம்மைப் போல உள்ளத்தை வெளிப்படுத்தும் பறையாகிய கண்களை உடையார் தம் மனத்திலேயுள்ள மறைவை ஊரார் அறிதல் கடினமில்லை) என்பது அது. இங்கு தலைவி தன்னைத் தானே அறைபறை கண்னார் என அறிவிக்கிறாள். இடைவிடாது சொரிந்துகொண்டே இருக்கும் கண்ணீர் நிறைந்ததாக இருப்பதால் அவள் கண்களைப் பார்த்தவுடன் அவள் படும் துயரத்தை ஊரார் அறிந்து கொள்கிறார்களாம்.

தாம் கேட்ட மறைச்செய்தியை இடந்தோறும் கொண்டுசென்று சொல்லுதலால் கயவர் அடிக்கப்படும் பறைக்கருவி போன்றவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தம்பட்டம் அடித்து ஒருவரை இக்கட்டில் மாட்டிவிடுதல் கயமைக் குணம்.

பொழிப்பு

தாம் கேட்ட மறைச்செய்தியை இடந்தோறும் சுமந்துசென்று சொல்லுதலால், கயவர் அறையப்படும் பறைக்கருவி போன்றவர்.