தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்துஒழுக லான்
(அதிகாரம்:கயமை
குறள் எண்:1073)
பொழிப்பு (மு வரதராசன்): கயவரும் தேவரைப் போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
|
மணக்குடவர் உரை:
கயவர் தேவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான்.
இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.
பரிமேலழகர் உரை:
தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான்.
(உயர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.)
மயிலை சிவமுத்து உரை:
கயவரும் தேவரும் ஒரே தன்மையர் ஆவர். அஃது எவ்வாறெனில் கயவரும் தேவரைப் போன்றே தாம் விரும்புவனவற்றைத் தம் மனம் போனவாறு செய்து ஒழுகுவர் ஆதலால் என்க.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
தேவர் அனையர் கயவர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான்.
பதவுரை: தேவர்-வானுலகில் இருப்பவர்; அனையர்-ஒப்பர்; கயவர்-கீழோர்; அவரும்-அவரும்; தாம்-தாங்கள்; மேவன-விரும்பியவை; செய்து-செய்து; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்.
|
தேவர் அனையர் கயவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கயவர் தேவரை யொப்பவர்:
பரிப்பெருமாள்: கயவர் தேவரை யொப்பவர்:
பரிதி: தேவர்க்கு நிகர் கயவர்.
காலிங்கர்: குடிமை என்னும் பண்புடைய மக்களைக் கயவர் ஒவ்வார் ஆதலால், மற்று யாரையும் ஒப்பாரோ என்னில் ஈசன் முதலாம் தேவரை ஒப்பர் கயவர்;
பரிமேலழகர்: தேவரும் கயவரும் ஒரு தன்மையர்;
'கயவர் தேவரை யொப்பவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கயவர் அரசர் போன்றவர்கள்', 'தேவரும் கயவரும் ஒத்த இயல்பினர்', 'கயவர் என்ற அவரும் தேவர்களுக்குச் சமானம் (என்று சொல்லிவிடலாம்)', 'அவர்கள் அங்ஙனஞ் செய்யவல்ல வரம்படைத்த விண்ணவரைப் போல்வார்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கயவர் வானுலகில் இருக்கும் தேவரைப் போன்றவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
அவரும்தாம் மேவன செய்து ஒழுகலான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.
பரிப்பெருமாள்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கயவர் வேண்டிற்றுச் செய்வாரென்றது.
பரிதி: அது எப்படி எனில், தே தெய்வமும் பத்தி பண்ணுவார்க்கு நன்மை தரும்; அல்லாதார்க்குத் தீமை தரும். அதுபோலக் கயவரும் தமக்கு இதம் செய்வார்களுக்கு இதமும் அகிதம் செய்வார்களுக்கு அகிதமும் செய்வர். [தே தெய்வம் - தெய்வங்களுக்குத் தெய்வம்; அகிதம்- தீமை]
காலிங்கர்: என்னை காரணம் என்னின் அவரும் பிறரால் இடித்துரை பெற்று அஞ்சி நடத்தலின்றித் தாம் வேண்டுவன செய்யும் தகுதியார் ஆதலால் அவர் போல் மற்று இக்கயவரும் இருபெருங்குரவரும் சான்றோரும் பிறரும் தம்மின் பெரியோர் என்று அஞ்சிக்கை இன்றி அவர் இடித்துரைக்கும் இடத்து இடித்துரை கைக்கொண்டு ஒழுகும் இயல்பினர் அன்றித் தாம் வேண்டியன செய்து ஒழுகலான் என்றவாறு.
பரிமேலழகர்: அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: உயர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது. [உயர்வுக்குக் காரணம் விரும்பியது செய்யாமை. இழிவுக்குக் காரணம் விலக்கப்படுவனவற்றையல்லாமல் விரும்புவனவற்றைச் செய்தல்; விலக்கற்பாடு - நீக்கப்படுதல்]
'தேவரும் கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஏன்? தாம் விரும்பியபடியே நடப்பார்கள்', 'ஏனெனில், தேவரைப் போன்று தம்மை ஏவல் கொள்பவர் இன்றிக் கயவரும் மனம் விரும்பினவற்றைத் தொடர்ந்து செய்தலால்', '(மற்றெவரையும் மதிக்காமல் தாம் இச்சைப்பட்டதையெல்லாம் செய்து திரிகிற காரணத்தால்)', 'கீழ்மக்கள் கட்டுப்பாடின்றித் தாம் விரும்பியதையே செய்து வாழ்தலால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அத்தேவரும் இக்கயவரைப் போலக் கட்டுப்பாடின்றித் தாம் விரும்பியபடியே நடப்பதால் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
கயவர் வானுலகில் இருக்கும் தேவரைப் போன்றவர்கள்; அத்தேவரும் இக்கயவரைப் போலக் கட்டுப்பாடின்றி மேவன நடப்பதால் என்பது பாடலின் பொருள்.
'மேவன' குறிப்பது என்ன?
|
கயவர்கள் தான்தோன்றித்தனமாய் நடப்பவர்கள்.
கயவர் தம்மை இடித்துரைப்பார் எவருமின்றி தாம் விரும்புவன செய்து ஒழுகுதலால், வானுலகத் தேவரைப் போல்வர்.
இக்குறளில் சொல்லப்படும் தேவர் என்பவர் யார்? தேவர் என்பவர் வடநூலாரின் தொன்மங்களில் சொல்லப்படுபவர் ஆவர். தம்மினும், உயர்ந்த நிலையில் உள்ளவர்களைக் கொண்ட உலகம் ஒன்று வானில் உள்ளது என மாந்தர் நம்பினர். மனிதரின் உயர்ந்தவர் தேவர், நிலவுலகைவிடச் சிறந்த இடம் வானுலகம் என்று சிந்தித்து தேவரையும் தேவருலகையும் படைத்தனர். இமையார், வானோர், வானத்தவர் என்று பலபட அறியப்படும் இவர்கள் பூமியில் வாழும் மனிதர்கள் போல் உருக்கொண்டவர்களாகக் கற்பனையால் படைக்கப்பட்டவர்கள்; நிலவுலக மாந்தரைக் காட்டிலும் உயர்வானவர்களாகக் காட்டப்பட்டனர். அவர்கள் கண்ணை இமைக்காமல், கால்கள் நிலத்தில் படியாமல், அமிழ்தத்தை உணவாகக் கொண்டு வானில் இன்பமாக உலவுபவர்கள்; உழைக்கத் தேவையின்றி கழிபேருவகையில் கட்டுப்பாடின்றி நடக்கக்கூடியவர்களாகவும் அவர்கள் தோற்றம் தருகிறார்கள்.
வானுலகம் என்பதும் புனைவு உலகமே. தேவருலகம் பற்றித் தொன்மங்கள் கூறும் செய்திகள் அங்கு போகும் ஆர்வத்தை எவர்க்கும் உண்டுபண்ணுவன. அவ்வானுலகில் கற்பகமரம், காமதேனு போன்றவை இருப்பதால், நினைத்தன எல்லாம் நினைத்தவுடன் கிடைக்கும். வேண்டியன வேண்டியாங்கு கிடைப்பதால், தேவர்கள் தாம்தாம் நினைத்தபடி வாழலாம். அங்கு துன்பமே இராது; எல்லாவகையான இன்பங்களும் கிடைக்கும். அங்குள்ளவர்கள் அனைத்து உரிமையுடன் வாழ்பவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்துபவர் எவருமில்லை. எனவே அவர்கள் விரும்பியதைச் செய்து ஒழுகுபவர்களாக இருக்கின்றனர்.
கயவர் யார்? மக்களுள் கீழ்மைக் குணங்கள் கொண்டவரை வள்ளுவர் கயவர் என அழைக்கின்றார். இவர் யார் சொல்லையும் கேட்கமாட்டாதவராய் தமக்குத் தோன்றியதைச் செய்து மனம்போன போக்கில் நடப்பவர். இவர் மற்றவர்களுடன் பண்புடன் நடந்து கூடிவாழக் கற்றுக்கொண்டவர் அல்லர். அவரிடத்தில் ஆய்வும் இல்லை; மற்றவர் ஆய்ந்து சொல்வதையும் கேட்காமல் அலைவார். இக்கீழ்மக்கள் நல்லது அறியமாட்டார்கள்; அவர்களுக்கு நன்மை தெரியாது; நல்லவர்களின் அருமையும் தெரியாது. அவர்களிடையே ஒரு வரன்முறை, கட்டுப்பாடு கிடையாது. விலக்கப்படுதல் இல்லாமல் விரும்புவனவற்றைச் செய்தலால் கயவர்கள் இழிவானவர்களாவர். பொறுப்பற்றவர்களான இவர்கள், துன்பங்களை உணராதவர்கள், அகந்தை கொண்டு தாம் நினைத்ததைச் செய்வார்கள். அவர்களுக்கு அவர்தம் வாழ்வே பெரிது. தாம் செய்யும் செயல்களால் விளையும் பயன் அல்லது எதிர்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். மற்றவர்களைப் பற்றியும் எண்ணார்.
இவர்களது பொறுப்புணர்ச்சியும் நன்னெறியுமற்ற வாழ்க்கை தேவர்களது ஒழுகுமுறை போன்று தோன்றுவதால் தேவரனையர் கயவர் எனப்பட்டது.
பழங்கதைகளில் வரும் வானுலகத் தேவர்களுக்கும் பூமியிலுள்ள கயவர்களுக்கும் ஒற்றுமை நிறைய இருப்பதைக் கண்ட வள்ளுவர் இருவரும் ஒரு தன்மையர் எனக் கூறுகிறார்.
இக்குறள் பற்றி உ வே சாமிநாதையர் சமத்காரம் என்ற தலைப்பின் கீழ் '‘தேவரனையர் கயவர்’ என்று பொய்யில் புலவர் சொல்லும்போது ‘தேவரை அலட்சியம் செய்கின்றாரா அல்லது கயவரை உயர்த்துகின்றாரா?' என்று யோசனை செய்கின்றோம். ‘அவரும் தாம் மேவன செய்தொழுகலான்’ என்று காரணம் காட்டும்போதுதான் புலவருடைய புலமைத்திறன் மனத்தைக் கவர்கின்கிறது' எனக் கருத்துரைத்துள்ளார்.
எதற்கும் கட்டுப்படாமல், நினைத்தபடி அலையும் கீழ்மக்கள் என்று நகையாடுகிறது இக்குறள்.
தாம் விரும்புவனவற்றையே செய்து நடப்பதால் கயவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவார்களாம்!
உயர்ந்தோர்க்குச் சட்டமே தேவையில்லை; கயவர் சட்டத்தை மதிப்பதே இல்லை; இருவருக்கும் சட்டத்தால் பயன்பாடு இல்லை என்ற வகையால் ஒப்பாகிவிடுகின்றனர்!
முதலில் தேவர்கள் போன்று மிக உயர்ந்தவர்கள் என்ற குறிப்புத் தோன்றும்படி சொல்லி, அதற்கான ஏது பின்னர் காட்டப்படுகிறது. கட்டுப்பாடற்ற போது-தேவர்-கயவர்-மக்கள் எல்லாம் ஒரு நிலையரே ஆகின்றனர்.
கயமையைச் பொறுத்துக் கொள்ளமுடியாத வள்ளுவர் கயவரைப் புகழ்வது போலப் பழிக்கிறார்.
இங்கு கயவர்களும் தேவர்களும் ஒத்த இயல்பினர்தாம் என்று ஏளனத்துடன் சொல்லப்படுகிறது.
ஒன்றனைப் புகழ்ந்தாற் போன்று பழிப்பது வஞ்சப்புகழ்ச்சி எனப்படும். ‘'மக்களே போல்வர் கயவர்’, ‘நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்’ என்பன போல், ‘தேவரனையர் கயவர்’ என்பதும் வஞ்சப் புகழ்ச்சியாகும். இதனால் தேவர் தாழ்ந்தவர் என்பது கருத்தாகாது' (இரா சாரங்கபாணி).
|
'மேவன' குறிப்பது என்ன?
'மேவன' என்ற சொல்லுக்கு வேண்டியன, பிறரால் இடித்துரை பெற்று அஞ்சி நடத்தலின்றித் தாம் வேண்டுவன, விரும்புவனவற்றை, நினைத்தபடியே, தடையின்றி விரும்பினவற்றை, விரும்புகின்றவைகளைசெய்து மனம் போன போக்கில், விரும்பிய வண்ணமெல்லாம் மனம்போன போக்கில், விரும்பின, விரும்பியபடியே, மனம் விரும்பினவற்றை, இச்சைப்பட்டதையெல்லாம், விரும்புவன வெல்லாம், விரும்பியதை, விரும்பியனவற்றை (இழிந்தன), விரும்புவனவற்றைத் தம் மனம் போனவாறு, விருப்பம்போல், முழுவுரிமையுடையவராய்த் தாம் விரும்பியவற்றை யெல்லாம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'மேவன' என்றது விரும்புவனவற்றை எனப் பொருள்படும். நல்லன என்ற வரையறையில்லாமல் விரும்பின செய்வது. இது நல்லொழுக்கமின்மையைக் குறிப்பது.
‘மேவன செய்தொழுகல்’ தேவருக்கும் கயவருக்கும் உள்ள பொதுத்தன்மை என்கிறது பாடல். இதை விளக்கும்போது காலிங்கர் 'பிறரால் இடித்துரை பெற்று அஞ்சி நடத்தலின்றித் தாம் வேண்டுவன செய்யும் தகுதியார் ஆதலால் அவர் போல் மற்று இக்கயவரும் இருபெருங்குரவரும் சான்றோரும் பிறரும் தம்மின் பெரியோர் என்று அஞ்சிக்கை இன்றி அவர் இடித்துரைக்கும் இடத்து இடித்துரை கைக்கொண்டு ஒழுகும் இயல்பினர் அன்றித் தாம் வேண்டியன செய்து ஒழுகலான் என்றவாறு' என்றார்.
செய்வன தவிர்வன என்னும் மக்கட்பண்பை அறிந்து, அதன்படி நடவாமல் தம் மனம் போனபடியே செய்து நடத்தலைச் சொல்வது மேவன செய்தொழுகல் என்பது.
தேவரைப் போன்று கயவரும் தம்மை ஏவுவாரோ, தடுப்போரோ இன்றி மனம் விரும்பியபடி எல்லாம் செய்து நெறியற்ற வாழ்க்கை நடத்துவர். மற்றெந்த நன்மை தீமை பற்றியும் கவலை கொள்ளாமல் தாம் விரும்பியதையெல்லாம் செய்து திரிவார்கள் இவர்கள். எல்லாவற்றிற்குமே தாம் முழு உரிமை கொண்டவர்கள்போல் தாம் விரும்பியவற்றைச் செய்து முடிப்பவர்கள். தேவருள்ளும் கயமைத் தனம் இருந்ததற்கு ஓர் எடுத்துக்காட்டாக இந்திரனின் கயமையை வைதிகத் தொன்மத்தில் வரும் இந்திரன்-கௌதமர்-அகல்யை கதையை நோக்கலாம்.
'மேவன' என்ற சொல் விரும்பியவற்றை என்ற பொருள் தருவது.
|
கயவர் வானுலகில் இருக்கும் தேவரைப் போன்றவர்கள்; அத்தேவரும் இக்கயவரைப் போலக் கட்டுப்பாடின்றித் தாம் விரும்பியபடியே நடப்பதால் என்பது இக்குறட்கருத்து.
கயமைக் குணம் கொண்ட கீழோர் மீதான சினத்தைத் தணிக்கும் வண்ணம் வள்ளுவரது எள்ளல்.
கயவர்கள் மனம் போன போக்கில் நடந்து கொள்வதால் அவர்கள் தேவர்களைப் போல்வர்.
|