இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1072



நன்றறி வாரின் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர்.

(அதிகாரம்:கயமை குறள் எண்:1072)

பொழிப்பு (மு வரதராசன்): நன்மை அறிந்தவரைவிடக் கயவரே நல்ல பேறு உடையவர்; ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

மணக்குடவர் உரை: நன்மையறிவாரினும் கயவர் திருவுடையர்; இம்மை மறுமைக்கு உறுதியாயின செய்யப்பெறுகிலோமென்னும் கவற்சி நெஞ்சின்கண் உறுதலிலராதலான்.
இது தாமறியா ரென்பது.

பரிமேலழகர் உரை: நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் - தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ்மக்கள் நன்மையுடையார்; நெஞ்சத்து அவலம் இலர் - அவர்போல அவை காரணமாகத் தம்நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான்.
(நன்று என்பது சாதியொருமை. உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே 'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற இவைதமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும் இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப் புகழ்முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராகலான், 'திருவுடையர்' எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: மெய்யறிஞர் போலக் கயவரும் மகிழ்வுடையர்; ஏன்? மனத்தில் எதற்கும் கவலைப் படார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்று அறிவாரின் கயவர் திருவுடையார் நெஞ்சத்து அவலம் இலர்.

பதவுரை: நன்று-நன்மை, நல்லது; அறிவாரின்-தெரிவாரைக் காட்டிலும்; கயவர்-கீழோர்; திருஉடையார்-பேறுபெற்றவர், நன்மை பெற்றுள்ளவர், பாக்கியசாலி; நெஞ்சத்து-உள்ளத்தில்; அவலம்-கவலை; இலர்-இல்லாதார்.


நன்றறி வாரின் கயவர் திருவுடையார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையறிவாரினும் கயவர் திருவுடையர்;
பரிப்பெருமாள்: நன்மையறிவாரினும் கயவர் திருவுடையர்;
பரிதி: நன்றறிவாரில் கயவர் திருவுடையார்;
காலிங்கர்: நன்னெறி அறியும் சான்றோரினும் கயவர் சால நலம் பெரிதுடையர்;
பரிமேலழகர்: தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ்மக்கள் நன்மையுடையார்; [அவையறியாத- தமக்கு உறுதியானவற்றை யறியாத]
பரிமேலழகர் குறிப்புரை: நன்று என்பது சாதியொருமை. உறுதிகளாவன, இம்மை மறுமை வீடுகட்கு உரியவாய புகழ் அற ஞானங்கள். [நன்மையுடைய செயல்கள் பலவற்றைக் குறிப்பதால் நன்று என்பது சாதி ஒருமை என்றார்]

'நன்மையறிவாரினும் கயவர் திருவுடையர்' என்று மணக்குவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். 'நன்னெறி அறியும் சான்றோரினும் கயவர் சால நலம் பெரிதுடையர்' என்ற பொருளில் காலிங்கர் உரை நல்கினார். பரிமேலழகர் 'தமக்குறுதியாவன அறிவாரின் அவையறியாத கீழ்மக்கள் நன்மையுடையார்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தமக்கு உறுதிகூறும் அறத்தை அறியும் நல்லோரினும் கீழ்மக்கள் முகமலர்ச்சியுடையர்', 'கயவர்கள் நன்மை தீமைகளை ஆராயும் அறிவாளிகளைவிடப் பாக்கியசாலிகள்', 'நன்மையை ஆய்ந்தறிகின்றவரைப் பார்க்கிலுங் கீழ்மக்கள் முகமலர்ச்சியுடையவர்கள்', 'நன்மையை அறிவாரை விடக் கீழ் மக்கள் செல்வம் உடையவர் ஆவார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நன்மை தீமைகள் அறிந்தவர்களினும் கயவர் பேறுபெற்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நெஞ்சத்து அவலம் இலர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மை மறுமைக்கு உறுதியாயின செய்யப்பெறுகிலோமென்னும் கவற்சி நெஞ்சின்கண் உறுதலிலராதலான். [கவற்சி - கவலை]
மணக்குடவர் குறிப்புரை: இது தாமறியா ரென்பது.
பரிப்பெருமாள்: இம்மை மறுமைக்கு உறுதி ஆவன செய்யப்பெறுகிலோமென்னும் கவற்சி நெஞ்சின்கண் உறுதலிலராதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறம் அறியார் என்றது.
பரிதி: அது எப்படி என்றால் மனத்திலே ஆலசியம் இல்லை என்றவாறு. [ஆலசியம்-தாமதம்]
காலிங்கர்: தமது உள்ளத்து யாதுமோர் இடரிலார்; எங்ஙனம் எனில், நன்னெறி ஆகிய கல்வியும், அறிவும், ஆசாரமும், குலமும், தருமமும், தவமும், பிறவும் குறைபடாமல் கொண்டு மேற்படவேண்டும் என்றும், இங்ஙனம் நெஞ்சம் அஞ்சி அவலிக்கும் அவலம் எஞ்ஞான்றும் இலர் என்றவாறு.
பரிமேலழகர்: அவர்போல அவை காரணமாகத் தம்நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான். [அவர்-நன்றறிவார்; அவை - தமக்கு உறுதியாவன]
பரிமேலழகர் குறிப்புரை: இவற்றை அறிவார் இதைச் செய்யாநின்றே 'மிகச் செயப்பெறுகின்றிலேம்' என்றும், செய்கின்ற இவைதமக்கு இடையூறு வருங்கொல் என்றும், இவற்றின் மறுதலையாய பழி பாவம் அறியாமை என்பனவற்றுள் யாது விளையுமோ என்றும் இவ்வாற்றான் கவலை எய்துவர்; கயவர் அப் புகழ்முதலிய ஒழித்துப் பழி முதலிய செய்யாநின்றும் யாதும் கவலை உடையரல்லராகலான், 'திருவுடையர்' எனக் குறிப்பால் இகழ்ந்தவாறு. இதனான் பழி முதலியவற்றிற்கு அஞ்சார் என்பது கூறப்பட்டது. [இவற்றை- புகழ், அறம், ஞானங்களை]

'தம்நெஞ்சத்தின்கண் கவலையிலராகலான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏனெனில், அறத்தைப் பொருட்படுத்தாது மனம்போன போக்கில் திரிதலால் அவர்கள் உள்ளத்தில் கவலை இல்லாதவர்கள் ஆதலின்', '(எப்படியெனில்) அவர்கள் மனதில் நன்மை தீமைகளைப் பற்றிய விசாரமே கிடையாது', 'ஏனெனில் இவர்கள் நெஞ்சிற் கவலையில்லாதவர்கள்', 'தம் நெஞ்சத்தில் கவலை இல்லாதவராயிருத்தலின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம் உள்ளத்தில் கவலையின் உறுத்தல் ஏதும் இல்லாதவர் ஆதலால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம் உள்ளத்தில் கவலையின் உறுத்தல் ஏதும் இல்லாதவர் ஆதலால் நன்மை தீமைகள் அறிந்தவர்களினும் கயவர் திருவுடையார் என்பது பாடலின் பொருள்.
'திருவுடையார்' குறிப்பது என்ன?

கயவர் தம்மனத்தில் எதையும் போட்டு உழன்றுகொண்டிருப்பதில்லை.

நல்லது கெட்டது அறிந்து செயல்படுகின்றவர்களைக் காட்டிலும் கீழ்மக்கள் பேறுபெற்றவர்களாவர். ஏனெனில் கீழ்மைக்குணமுடையோர் எதைப்பற்றியும் தம் நெஞ்சில் கவலைப்பட்டுக்கொள்வதில்லை ஆதலால்.
எப்பொழுதும் நல்லது நடக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் தனது செயற்பாடுகளால் ஒழுக்கம், நற்பெயர், குடிச்சிறப்பு என்றிவை குன்றிவிடக்கூடாதே என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பார்களாதலால் அவர்கள் மனதில் கவலை குடியிருந்து உறுத்திக்கொண்டிருக்கும். ஆனால் பழி தீவினை போன்ற எவை பற்றியும் மனதிலே போட்டுக்கொள்ளாமல் அலைகிற கயவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் செயல்படுவர் அதனால் அவர்கள் எதுபற்றியும் கவலை கொள்வதில்லை. எனவே அவர்கள் 'கொடுத்து வைத்தவர்கள்' அதாவது பாக்கியசாலிகள் என்கிறார் வள்ளுவர். நெஞ்சத்தில் அவலம்இல்லாத கயவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தாமே!

தமக்கு உரிய நல்வழி இது என்று அறிந்த நன்மக்களுக்கு, தம்மால் தீமை நிகழ்ந்துவிடக்கூடாதே என்ற கவலை, மனத்துள் எப்பொழுதும் தங்கியிருக்கும். மனச்சான்றுக்குப் பயந்து இவர்கள் செயல்படுவர். ஆனால் பொறுப்பற்ற கயவர்கள் தாம் நன்கு வாழவே தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பர். அவர்களுக்கு நாண் கிடையாது. அவர்கள் மானம், பண்பு போன்றிவை பற்றி எண்ணுவதேயில்லை. பின் எதைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் கவலைப்பட வேண்டும்? இதைத்தான் வள்ளுவர் நல்லோர்க்குரிய நெஞ்சத்து அவலம் அவர்க்கு இல்லை என்கிறார்.

அரசியலார், வணிகர், கல்வியாளர் இன்னபிறர் எனத் தொழில் வேறுபாடின்றி கயமைத்தனத்தால் பொதுப்பணத்தைச் சூறையாடி செல்வம் சேர்த்து நெஞ்சத்து அவலமின்றித் திரிகின்றவர்கள் எக்காலத்தும் இருக்கின்றனர்.

'திருவுடையார்' குறிப்பது என்ன?

'திருவுடையார்' என்ற தொடர்க்குத் திருவுடையர், நலம் பெரிதுடையர், நன்மையுடையார், நல்லவர்கள், செல்வமுடையவர், நல்ல பேறு உடையவர், நல்வினை உடையவர், செல்வமுடையார், மகிழ்வுடையர், முகமலர்ச்சியுடையர், பாக்கியசாலிகள், நலமுடையவர், செல்வம் உடையவர், நன்மையுடையவர், மிகப் பேறுடையார், சிறந்தவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

திரு என்ற சொல் பல குறட்பாக்களில் செல்வம், விரும்பப்படும் தன்மை, மேன்மை, சிறப்பு, பொலிவு, அழகு, தெய்வத்தன்மை போன்ற பலபொருள்களில் பயிலப்பட்டுள்ளது.
நன்மை தருபனவற்றை அறியும் நல்லவர் அறிவு, புகழ், வாழ்வு பற்றி எண்ணிக்கொண்டு அவற்றைக் காத்துக்கொள்ள உறுத்தலுடன் இருப்பர். தாம் மேற்கொள்ளும் செயல்களில் பழி பாவம் விளையுமோ என்று கவலை எய்துவர். ஆனால் கயவர் எந்த விளைவுகளைப் பற்றியும் நினைப்பதில்லை; கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என வாழ்பவர்கள். இவ்விதம் வாழ்வது கடினமில்லை, ஆகவே, கயவர்களின் மனத்தில் எந்தக்கவலையும் இருக்காது.
நல்லவர்களோடு கயவரை ஒப்பிட்டு நோக்கினால், மனதில் கவலை என்ற உறுத்தல் இல்லாத கயவர் நன்மக்களைவிடப் பேறு பெற்றவர்கள் அல்லவா என இகழ்ச்சிக் குறிப்புடன் சொல்ல்லப்படுகின்றது. திருவுடையார் என்றதற்கு இங்கு பேறுபெற்றவர் என்று பொருள் கொள்வது சிறக்கும்.
திரு என்ற சொல் பெரிதும் செல்வத்தைக் குறிப்பதாக ஆளப்படுவதால் திருவுடையார் என்றதற்குச் செல்வமுடையர் என்று சிலர் பொருள் கூறினர். '‘திருவுடையர்’ என்பதற்கு நன்மை யுடையர், செல்வமுடையர் என்னும் பொருளினும் முகமலர்ச்சியுடையர் என்னும் பொருள் பொருந்தும். பின்வரும் நெஞ்சத்து வமிலர் என்பதற்கு மாறாக அஃது அமைதலின்' என்பார் இரா சாரங்கபாணி.
கயவரைத் திருவுடையார் என்றது குறிப்பால் இகழ்வதாகும்; புகழ்வார் போன்று பழிப்பதாம்.

'திருவுடையார்' என்ற சொல் இங்கு பேறுபெற்றவர்கள் என்ற பொருள் தரும்.

தம் உள்ளத்தில் கவலையின் உறுத்தல் ஏதும் இல்லாதவர் ஆதலால் நன்மை தீமைகள் அறிந்தவர்களினும் கயவர் பேறுபெற்றவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கயமைக் குணம்கொண்டோர் பழி வருமே என அஞ்சுவதில்லை.

பொழிப்பு

பகுத்தறிந்து செயல்படுபவரினும் கயவர் பேறுபெற்றவர்; அவர் எது பற்றியும் கவலை கொள்ளார் ஆதலால்.