மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன
ஒப்பாரி யாம்கண்டது இல்
(அதிகாரம்:கயமை
குறள் எண்:1071)
பொழிப்பு (மு வரதராசன்): மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
|
மணக்குடவர் உரை:
மக்களை யொப்பவர் கயவர்; அம்மக்களை யொக்குமாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை.
உறுப்பொத்துக் குணமொவ்வாமையால் கயவர் மக்களல்லராயினார்.
பரிமேலழகர் உரை:
மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பாரி யாம் கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை.
(முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தால் பெற்றாம். 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
கயவரும் மக்களைப் போலவே இருக்கிறார்கள்; குணங்களால் வேறுபட்ட இருவேறு வகையார் இப்படி உருவத்தாலொத்திருப்பதைப் பிற எங்குங் கண்டதில்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்டது இல்.
பதவுரை: மக்களே-மாந்தரே; போல்வர்-போன்றிருப்பர், ஒத்திருப்பர்; கயவர்-கீழ்மைக்குணம் கொண்டோர், கீழோர்; அவர்-அவர்; அன்ன-போன்ற; ஒப்பாரி-நிகர்த்தல், ஒப்புமை; யாம்-நாம்; கண்டது-அறிந்தது; இல்-இல்லை.
|
மக்களே போல்வர் கயவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மக்களை யொப்பவர் கயவர்;
பரிப்பெருமாள்: மக்களை யொப்பவர் கயவர்;
பரிதி: பொல்லாதவரும் நல்லவர்போல இருப்பர்;
காலிங்கர்: கை கால் முதலிய புறத்து உறுப்பெல்லாம் கண்ட இடத்து விலங்கு ஒத்தலன்றி மக்கள் ஒப்புடையார் இக்கயவரும்;
பரிமேலழகர்: வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்;
பரிமேலழகர் குறிப்புரை: முழுதும் ஒத்தல் தேற்றேகாரத்தால் பெற்றாம். [முழுதும் ஒத்தல் - மக்களும் கயவரும் வடிவால் முழுதும் ஒத்திருத்தல்; தேற்றம் - துணிவு]
'மக்களை ஒப்பர் கயவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கயவர் மக்கள்போன்றே இருப்பர்', 'தோற்றத்தால் மக்களே போன்று காணப்படுவர் கயவர்', 'கயவர் (என்று சொல்லப்படுகிற கீழ்மக்கள்) மனிதர்களைப் போலவே இருப்பார்கள்', 'கயவர் (குணங்களால் இழிந்தவர்) வடிவத்தால் மக்களைப் போன்றவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கயவர் தோற்றத்தால் மக்கள் போன்றே காணப்படுகின்றனர் என்பது இப்பகுதியின் பொருள்.
அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்டது இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அம்மக்களை யொக்குமாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: உறுப்பொத்துக் குணமொவ்வாமையால் கயவர் மக்களல்லராயினார்.
பரிப்பெருமாள்: அம்மக்களை யொக்குமாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: உறுப்பொத்துக் குணமொவ்வாமையால் கயவர் மக்களல்லராயினார். உறுப்பு ஒத்தலால் உவமிக்கப்பட்டார். இது, குணம் இலர் என்றது.
பரிதி: குணத்தினால் கயவர் என்று காணப்படும் என்றவாறு.
காலிங்கர்: ஆனால் மற்று அம்மக்கள் பண்புடையோர் தமது பண்பு ஒப்புமை சிறிதும் அக்கயவர்பால் யாம் கண்டது இல்லை; இது என்ன வியப்போ என்றவாறு.
பரிமேலழகர்: அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை. [வேறு இரண்டு சாதிக்கண் - மக்கட்சாதி, சுயசாதியுமாகிய இரண்டும் ஒழிந்த ஏனைய சாதிக்கண்]
பரிமேலழகர் குறிப்புரை: 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது. [அவர்-கயவர்; ஒப்புமையை - வடிவால் ஒத்துத்தலை]
'மக்கள் பண்புடையோர் தமது பண்பு ஒப்புமை சிறிதும் அக்கயவர்பால் யாம் கண்டது இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அன்ன வடிவொற்றுமையை யாம் கண்டதில்லை', 'அவர் மக்களை ஒத்துத் தோன்றுவது போன்ற ஒப்புமையை வேறு எந்த இனத்திலும் யாம் கண்டதில்லை', '(ஆனால்) அந்தக் கயவர்களைப் போலவே இருப்பார்கள் (வேறெவரும் உண்டோவெனில்) நாம் பார்த்தவரையிலும் ஒருவரும் இல்லை', 'அவர் மக்களையொத்தார் போன்ற ஒப்பு வேறு எங்கும் யாம் கண்டது இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அவர் மக்களையொத்தார் போன்றஒப்பு யாம் கண்டதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
கயவர் தோற்றத்தால் மக்கள் போன்றே காணப்படுகின்றனர்; அவர் மக்களையொத்தார் போன்ற ஒப்பாரி யாம் கண்டதில்லை என்பது பாடலின் பொருள்.
'ஒப்பாரி' என்ற சொல் குறிப்பது என்ன?
|
யார்கயவர் யார்நல்லவர் என்று பார்த்த அளவிலே அடையாளம் காணமுடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
கயவர் மக்களையே ஒத்திருக்கின்றனர்; இத்தகைய ஒப்புமையை வேறு எங்கும் நான் கண்டதில்லை.
மக்களுக்கென்று தனித்த குணநலன்கள் இருக்கின்றன. பொதுவாக, எல்லா இயல்புகளையும் அறிந்து கொண்டு, அவற்றோடு ஒத்து ஒழுகிற வன்மையாக விளங்குவன மனிதப் பண்புகளாம். நல்ல குணங்களையுடையவர் மக்கட்பண்பு கொண்டவர் எனப்படுவர். இப்பண்பு இல்லாதவர், கயவர் என அழைக்கப்படுவார்கள். 'மக்களே போல்வர் கயவர்' என்கிறது இப்பாடல். அதாவது வடிவமைப்பால் கீழ்மைக் குணமுடையோரும் மக்களைப் போன்றிருக்கிறார்கள் என்பது. அவரைப் போல ஒப்புமையான வேறிரண்டு பொருள்கள் எங்கும் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.
உறுப்பால் ஒத்திருந்தும் குணத்தால் ஒத்திராமையால் கயவர், மக்கள் என்று சொல்லத்தகாதவர்; அவர்கள் மக்கட்போலி என அறியப்படவேண்டும்.
இக்குறளின் நடைப்போக்கு மென்மையாகவும் நகைச்சுவை கலந்தும் அமைந்திருப்பினும், மக்களிடமிருந்து வேறுபாடு தெரியாவண்ணம் பிறரை வஞ்சித்து வாழ்வு நடத்தும் மக்களுடம்பு போர்த்திய போலியன்களின் குணம் கெட்ட நடவடிக்கைகளைக் கண்ட வள்ளுவரின் சினத்தின் வெளிப்பாடும் தெரிகிறது.
'உடம்பின் தோற்றத்தால் ஒத்திருப்பது மக்களோடு ஒப்புமை ஆகாது. பொருந்துவதாகிய ஒப்புமை எது என்றால் மக்கட் பிறப்பிற்கு உரிய பண்பால் ஒத்திருப்பதே ஆகும்' என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது இப்பாடல்.
முன்பும் உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு (பண்புடைமை 993 பொருள்: மக்களொப்பு மக்கள் என்ற உருவ அமைப்பில் ஒத்திருத்தல் அன்று; நிறைந்த பண்பால் ஒத்திருத்தலே ஒப்பாகும்) எனக் குறள் கூறியது.
மக்களுடம்போடு காணப்படுகிறவர்களெல்லாம் மக்களாகிவிட மாட்டார்கள்.
வள்ளுவர் மாந்தரை மேன்மக்கள், கீழ்மக்கள் எனக் குணத்தின் அடிப்படையில் இனம் பிரித்துப் பார்ப்பவர்.
குணநலன்களில் நிறைவு பெற்ற நிலையை எட்டியவரை வள்ளுவர் சான்றோர் என்றும் மனநலம் கெட்டு வெறுக்கத்தக்க கீழான குணங்கள் மிகுந்தவர்களாகத் திரியும் மாந்தர்களைக் கயவர் எனவும் அவர் அழைக்கிறார்.
கயவர் எனப்படும் கீழ்மைக் குணத்தோர் மக்கள் போலவே நடமாடுகிறார்கள் என்றாலும் அவர்கள் மக்கள் அல்லர்.
அவர்கள் உடலமைப்பாலும் உறுப்புகளின் நலத்தாலும் பிறமக்களைப் போன்றே தோற்றம் அளிக்கின்றனர். ஆனால், அவர்கள் உள்ளத்து உணர்ச்சியாலும், பண்புநலனாலும் மக்களிலிருந்து வேறுபட்டவராக இருப்பர். மக்கள் என்று கருதுவதற்குரிய பண்புகள் அவர்களிடம் இல்லை. மக்கள் தோற்றத்தர் அவ்வளவே.
தான் அறிந்ததை நேரடியாகவே 'யாம் கண்டதில்லை' என நம்மிடம் வள்ளுவர் நேராகப் பேசுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது.
'யாம்' என்ற நடைகொண்ட வேறு இரண்டு பாடல்களும் குறள்கத்தே உள. அவை: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற (மக்கட்பேறு [புதல்வரைப் பெறுதல்] 61 பொருள்: பெறும்பேறுகளுள் அறிய வேண்டியவற்றை அறிந்த மக்கட் செல்வம் அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை), யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற (வாய்மை 300 பொருள்: நான் மெய்யாக அறிந்தவரையில் வாய்மையினும் நல்ல பொருள் வேறு எதுவும் இல்லை) என்பன.
'கயவர்கள் யார்? அவர்களும் மனிதர்களைப் போன்றவர்களே' என்று வள்ளுவர் கயவர்களை எள்ளி நகையாடுகிறார். 'வடிவத்தால் மனிதர்களே ஒழிய, அறிவால், உணர்வால் அவர்கள் மனிதர்கள் அல்லர்' என்பதை வள்ளுவர் தெளிவுறுத்துவதில் நுட்பமாக நகைச்சுவை வெளிப்படுவதைக் காணலாம்' எனச் சொல்லி, 'இக்குறளில் காணப்படும் நகைச்சுவை உணர்வு கோபன்ஹவர் (A Scophenhauer) எனும் ஜெருமானிய அறிஞரைக் கவர்ந்தது' எனக் குறிக்கிறார் க த திருநாவுக்கரசு.
|
'ஒப்பாரி' என்ற சொல் குறிப்பது என்ன?
ஒப்பாரி என்பதற்கு ஒப்பு அல்லது ஒப்பது எனப் பொருள் கொண்டே பெரும்பான்மையர் உரை கூறினர். நாமக்கல் இராமலிங்கம் இதற்கு 'ஒப்பார்' எனவே பொருள் உரைக்கிறார்.
'அவர் அன்ன ஒப்பாரி' என்றது யாம் கண்டது இல் என்றது இவர்களைப் போன்ற மக்கள் போலிகளை நான் பார்த்ததில்லை எனப் பொருள்படும். எனவே ஒப்பாரி என்பது போலி என்ற பொருளில் ஆளப்பட்டது எனவும் கூறுவர்.
'ஒப்பாரி-ஒப்பானது என்ற பொருளில் சங்க நூல்களிலோ, கீழ்க்கணக்கு நூல்களிலோ ஆட்சியில் இல்லாத ஒன்று. இதனைப்படைத்து மொழியும் பொருளுமாக நாம் கருதுவதில் தவறு இல்லை' என்பது தண்டபாணி தேசிகர் கூற்று.
கயவர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, 'அவரன்ன ஒப்பாரியாம் கண்டதில்' என்று வள்ளுவர் சொல்கிறார்.
கயவர்களுக்கும் மற்ற மக்களுக்கு இருப்பது போல உறுப்புகளும் தோற்றமும் இருப்பதால் அவர்களைப் பிரித்தறிந்து கொள்ளுதல் எளிதன்று என்பது உணர்த்தப்படுகிறது.
அவர்களுக்குச் சிரிக்கவும் சிந்திக்கவும் தெரியும். ஆனால் கயவர்கள் என்றால் அவர்கட்கென்று அடையாளங்கள் ஏதும் இல்லை.
ஒன்றுபோன்ற உடை, ஒன்றுபோன்ற தோற்றப் பொலிவு, நல்லவர்-கயவர் யாரெனப் பகுத்தறிய முடியாதிருக்கிறது.
தோற்றத்தில் மக்கள் போல இருப்பதால்- குணத்தில் குள்ளநரி போன்ற வஞ்சகத்தன்மை கொண்டோரை- எளிதில் நன்மக்களிடமிருந்து பிரித்து இனம் கண்டுபிடித்து விடமுடியாது, உள்ளே உள்ள கயமைக் குணத்தை மறைத்து மக்கள் போன்றே வலம் வருவதால். அத்தகையோரை விலங்கு என்றோ மரம் என்றோ சொல்லாமல் 'மக்கள் போல்வர் கயவர்' எனும் உவமையால் மனதில் எளிதில் அழுந்துமாறு குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
குணம் செயல்களால் கெட்டவர்களாக இருக்கும் கயவர் வெளிப்புறத் தோற்றத்தில் எல்லா மனிதர்களைப் போலத்தான் இருப்பர். மனித இனத்தைத் தவிர்த்து வேற எந்த இனத்திலேயும் இப்படி ஓர் ஒப்புமை இருப்பதில்லை என வள்ளுவர் வியக்கிறார்.
என்ன வேடிக்கை இது! கயவர்கள் இவர்களைப் போன்றவர்கள்/இதைப் போன்றது என ஒருவரையும்/ஒன்றையும் ஒப்பிட முடிவதில்லையே!
மனிதர்களிடத்தில் தான் இப்படி இருவேறு நிலை கொண்ட மனிதர்களை காணமுடிகிறது என்று வெறுப்படைகிறார் அவர்.
இந்த உலகம் நல்லவர்களை மட்டுமல்ல, கயவர்களையும் கொண்டிருக்கிறது. நாம் நல்ல வாழ்க்கை வாழவேண்டுமானால் கயவர்களை இனங்கண்டு அவர்களிடமிருந்து நீங்கியிருக்க வேண்டும். பெருமைக்குரிய மக்கட் பிறவி எடுத்தும், வாழ்க்கையில் அதற்கான ஒழுக்கம் இல்லாமல் உள்ளத்தால் கயமைக் குணம் கொண்டவர் என்று அவரது கீழ்மை காட்டும்வண்ணம் 'அவரன்ன ஒப்பாரி யாம் கண்டது இல்' எனப்பட்டது.
கயவர் மக்களே போல்வர்; வடிவால் மக்களை ஒக்கும் கயவர், பண்பால் ஒப்பாவதை யாம் அறிந்தது இல்லை.
|
கயவர் தோற்றத்தால் மக்கள் போன்றே காணப்படுகின்றனர்; அவர் மக்களையொத்தார் போன்றஒப்பு யாம் கண்டதில்லை என்பது இக்குறட்கருத்து.
கயமைக் குணம் கொண்டவர்கள் மக்களல்லர்.
கயவர் மக்கள்போன்றே இருக்கின்றனர்; அவர் மக்களையொத்தார் போன்றஒப்பு யாம் வேறெங்கும் கண்டதில்லை.
|