சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து
(அதிகாரம்:நன்றியில் செல்வம்
குறள் எண்:1010)
பொழிப்பு (மு வரதராசன்): புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்கவல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது
|
மணக்குடவர் உரை:
சீருடைய செல்வர் சிறுதுனியால் ஈயாதொழிதல், மாரி பெய்யாமை மிக்காற் போலும்.
மேற்கூறிய நன்றியில் செல்வமுடையாரன்றி நற்செல்வமுடையாரும் பிறர்க்கு ஈயாராயின், மழை பெய்யாதாயின் உலகம் துன்பமுறுமாறு போல அவர் துன்பமுறுவர் என்றவாறு.
பரிமேலழகர் உரை:
சீர் உடைச் செல்வர் சிறுதுனி - புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை; மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து - உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து.
(துனி - வெறுப்பு, அதனைச் செய்தலால், துனி எனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராய வழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின், பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையால் பெறப்பட்டது. படவே, நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்கு, சீர் உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்புபடாமல் உரைப்பாரும் உளர். இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம்: உரை:
கொடைச் செல்வர்கள் சிலநாள் வறுமைப்படுதல் மேகம் வறுமைப்படுவது போலும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
சீர் உடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந்தனையது உடைத்து.
பதவுரை: சீருடை-சிறப்புடைய, பெருமையுடைய, புகழுடைய; செல்வர்-பொருட்பெருக்குடையவர்; சிறு-சின்ன; துனி-வறுமை இங்கே வெறுக்கத்தக்க வறுமையைக் குறிக்க வந்தது, வெறுப்பு, துயரம்; மாரி-மழை (மழையைப் பொழியும் மேகத்துக்கு ஆகிவந்தது); வறம்கூர்ந்து-வற்றுதல் மிகுந்து அதாவது மழைபெய்யாது போதல்; அனையது-அத்தகையது, போல்வது; உடைத்து-உடைத்து.
|
சீருடைச் செல்வர் சிறுதுனி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சீருடைய செல்வர் சிறுதுனியால் ஈயாதொழிதல்;
பரிப்பெருமாள்: சீர்மையையுடைய செல்வர் சிறுது துனிதலால் ஈயாதொழிதல்;
பரிதி: சிறியார் பெரியோரிடத்திலிருந்து கொடுத்துப் பிரதாபிக்கிறது செல்வம் பொல்லாதான் கையிலேயிருந்து மிடைப்படுவது எதுக்கு ஒக்கும்;
காலிங்கர்: அருளும் அன்பும் குறியும் முதலிய சீர்மைப்பாட்டினை உடைய செல்வர் பிறர்மாட்டுத் தம்மால் யாவரும் வெறுக்கத்தக்க சிறு துனி ஆகிய வறுமைவரின், அஃது எனைத்தோ எனின்;
பரிமேலழகர்: புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை;
பரிமேலழகர் குறிப்புரை: துனி - வெறுப்பு, அதனைச் செய்தலால், துனி எனப்பட்டது. [துனியைச் (வெறுப்பை) செய்யும் வறுமையைத் துனி என்றமையின் அது காரியவாகுபெயராம். வறுமை-காரணம். துனி-காரியம்]
இப்பகுதிக்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'சீருடைய செல்வர் சிறுதுனியால் ஈயாதொழிதல்' என்றும் காலிங்கர் 'அருளும் அன்பும் குறியும் முதலிய சீர்மைப்பாட்டினை உடைய செல்வர் பிறர்மாட்டுத் தம்மால் யாவரும் வெறுக்கத்தக்க சிறு துனி ஆகிய வறுமைவரின்' என்றும் பரிமேலழகர் 'புகழுடைத்தாய செல்வத்தினையுடையவரது நிற்கும் காலம் சிறிதாய வறுமை' என்றும் விளக்கம் தந்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'புகழுடைய செல்வர்க்குண்டாகும் சிறு வெறுப்பால் வறியவர்க்குக் கொடுக்காவிட்டால்', '(அன்பருக்கும் தமக்கும், அறங்களுக்கும் செய்து புகழத்தக்க) ஒழுங்கான வாழ்க்கையுடைய செல்வர்கள், சிறிது காலம் வறுமையடைந்துவிட்டாலும்', 'புகழ்படைத்த செல்வர் சிறிது காலம் வறுமைப்பட்டிருந்தால்', 'புகழுடைய செல்வரின் சிறிய வறுமைத் துன்பம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சீர்மைச் செல்வமுடையவர் சிறுதுகால அதாவது தற்காலிக வறுமை என்பது இப்பகுதியின் பொருள்.
மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாரி பெய்யாமை மிக்காற் போலும்.
மணக்குடவர் குறிப்புரை; மேற்கூறிய நன்றியில் செல்வமுடையாரன்றி நற்செல்வமுடையாரும் பிறர்க்கு ஈயாராயின், மழை பெய்யாதாயின் உலகம் துன்பமுறுமாறு போல அவர் துன்பமுறுவர் என்றவாறு.
பரிப்பெருமாள்: மாரி பெய்யாமை மிக்காற் போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய நன்றியில் செல்வமுடையாரன்றி நற்செல்வமுடையாரும் பிறர்க்கு ஈயாராயின், மழை பெய்யாக்கால் உலகம் துன்பமுறுமாறு போலத் துன்புறும் என்றவாறு.
பரிதி: மழை பெய்யாமல் உலகம் பார்ப்பதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: உலகு இன்புறுதற்கு உரித்தாகிய மழை வறம் கூர்ந்தாற் போலஅதனை உடைத்து;
காலிங்கர் குறிப்புரை: எனவே பின்னும் பின்னும் தமக்கு உளவழி எல்லாம் பிறர்க்கு உபகரித்தலே அவர்க்குக் கடன் என்றவாறு. [உபகரித்தல்-உதவுதல்]
பரிமேலழகர்: உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து. [வறங்கூர்தல் - வறுமை மிகுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராய வழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின், பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையால் பெறப்பட்டது. படவே, நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்கு, சீர் உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்புபடாமல் உரைப்பாரும் உளர். இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம் கூறப்பட்டது.
[அதனான் யாவர்க்கும் பயன்படுதலால்; கடிதின் நீங்குதலின் - விரைவில் அகலுதலின்]
'மாரி பெய்யாமை மிக்காற் போலும்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும். 'அஃது எனைத்தோ எனின், உலகு இன்புறுதற்கு உரித்தாகிய மழை வறம் கூர்ந்தாற் போல அதனை உடைத்து 'என்று காலிங்கரும் 'உலகத்தையெல்லாம் நிலை நிறுத்தும் மேகம் வறுமை மிக்காற் போல்வதோர் இயல்பினையுடைத்து' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.
மழை பொய்த்த நிலையை ஒக்கும் என்று இவ்வரிக்கு ஒருமித்த கருத்தாக உரைத்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அது மழைவளம் கொண்ட மேகம் நிலைமாறி மழை பொழியாதொழிந்தது போலும்', 'அது மேகமானது சிறிது காலம் நீரற்று நிலைமை மிகுந்து இருப்பதை ஒத்த இயல்புடையது', 'மேகமானது வறண்டுபோனாற் போலுந் தன்மையுடையது', 'மழை பெய்யாது வறட்சியடைந்த இயல்பினை உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மழைபெய்யாது வறண்டுபோனாற் போன்ற நிலைமைக்கு ஒப்பானதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சீர்மைச் செல்வமுடையவர் சிறுதுகால வறுமை, மழைபெய்யாது வறண்டுபோனாற் போன்ற நிலைமைக்கு ஒப்பானதாகும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?
|
ஈகைக் குணம்கொண்டோர் கெடார்.
கொடைநலத்தில் சிறந்த செல்வர் சிறிது காலம் வறுமைப்பட்டிருந்தாலும் அந்தச் சிறிய காலம் எது போன்று இருக்கும் என்றால் மழை பெய்யாது மேகமானது வறண்டுபோகும் காலமாக இருக்கும் அதாவது அது தற்காலிகமானதே.
இப்பாடலில் சொல்லப்படும் செல்வர் சீருடையவர் அதாவது சிறப்பும் பெருமையும் உடையவர். சமுதாயச் சீர்மையை நாடுகின்றவரே சீருடைச் செல்வர் ஆவர்.
இவரது செல்வம் ஈந்தும் துய்த்தும் பயனெய்திய நன்றிச்செல்வம் ஆகும்; இவர் ஈகைக்குணம் மிகுந்தவராம்.
அத்தகையோர்க்குச் சிறுதுனி உண்டானால், அது அவர் செல்வம் பலருக்கும் பயன்படுதலைத் தடுக்கும். அது சிறுதுனிதான் என்றாலும் அதன் விளைவுகள் மழை பொய்த்தல் போன்றதாம்.
துனி என்பது அளவிறந்த காதற்பூசல் என்ற பொருளில் குறளின் காமத்துப் பாலிலும் பரிபாடலிலும் ஆளப்பட்டுள்ளது. துனி என்பதற்குத் துயரம் என்றும் பொருள் உண்டு. இப்பாடலில் வரும் துனி என்ற சொல்லுக்கு வறுமை அல்லது வெறுப்பு என்று பலரும் பொருள் கூறினர்.
சிறுதுனி என்னும் தொடர்க்கு வ சுப மாணிக்கம் கொடை வறுமையை அதாவது கொடுப்பதற்கு இல்லாமல் போகும் இன்மையை இக்குறள் சொல்வதாகக் கூறி 'இதனை வறுமை என்ற சொல்லாமல் கிளக்கவும் அஞ்சி, சீருடைச் செல்வர் சிறுதுனி எனக் காதல்நடை இலங்க மொழிப' என்று நயமாகவும் கூறுகிறார்.
மு வரதராசன் 'செல்வர்களுக்குச் செல்வம் குறைந்து சிறுது வறுமையுற்ற நிலை' என்று குறித்தார்.
தண்டபாணி தேசிகர் 'கொடையாளியின் வறுமை' என்று பொருள் கொள்கிறார்.
பரிமேலழகர் அவ்வெறுப்பின் காரணமாய வறுமை எனப் பொருள் காண்கின்றார்.
இவ்வாறு இப்பாடலில் ஆளப்பட்டுள்ள 'சிறுதுனி' என்ற தொடர்க்கு சிறுவறுமை அல்லது சிறிதுகால வறுமை என்று பொருள் உரைத்தவர் பெரும்பான்மை.
நற்செல்வர். சிறுவறுமை ஆகிய சொற்கள் அச்செல்வர் சிறுது வறுமையுற்றாலும் அவரது கொடை தடைப்படும் என்பதைக் குறிக்க வந்தன. மேலும் அவ்விதம் ஈதல் இயலாவிட்டாலும் அது தற்காலிகமானதே; அவர்களின் வறுமை உலகத்தைக் காக்கின்ற மேகமானது வறண்டு போய் சிறுதுகாலம் வானம் பொய்த்துப் போவது போன்றதாகும் என உரையாளர்கள் இக்குறட்பொருளை விளக்கினர்.
மாரி என்பது மழையைக் குறிக்கும் சொல். இங்கு மழையைப் பொழியும் மேகத்துக்கு ஆகிவந்தது. மேகம் வற்றுதல் மிகுந்து மழை பெய்யாது போவதை வறம் கூர்தல் என்ற தொடர் விளக்கும்.
ஈத்துவக்கும் இன்பம் அறிந்தவர்கள் சில சமயம் வறுமைப்பட்டாலும், அந்தச் 'சிறுதுனி' அல்லது 'சிறுதுயரம்' வான்மழை வற்றியது போன்றதே என்று ஓர் உவமையால் தெளிவூட்டப்பட்டது; மழை நிலையாய்ப் பொய்க்கப்போவதில்லை. மழை பெய்யாநிலை குறுகிய காலத்திற்கே ஆகும். நீரில்லா அவ்வறுமை விரைவில் நீங்கப் பெற்றுப் பின்னரும் நீர் உடையதாய் மீண்டும் மழை பொழியத் தொடங்கும். அதுபோல சீருடைச் செல்வர்களது அந்தத் தற்காலிக வறுமையும் நீங்கி அவர்கள் மீண்டும் கொடைப்பணியில் ஈடுபடுவர் என்பது இவ்வுவமை தரும் செய்தி.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் (ஒப்புரவறிதல் 218 பொருள்: ஒப்புரவுக் கடமையை உணர்ந்த அறிவுடையார் உதவும் வாய்ப்பு இல்லாத போதும் பொதுநலம் குறையார்) என்ற ஒப்புரவு பாடலிலும் 'வறுமைக் காலத்தும் வள்ளல்கள் தம் இயல்பைக் கைவிடுவதில்லை' என்ற அவர்தம் பண்பு முன்பு உணர்த்தப்பட்டது.
பரிமேலழகரின் விளக்கவுரையில் 'இதற்கு, சீர் உடைச் செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில் வெறுப்பு 'மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து' என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்புபடாமல் உரைப்பாரும் உளர்' என்ற குறிப்பு உள்ளது. அதாவது புகழ்மிக்க செல்வர் இரவலரோடு வெறுக்கும் நிலையில்லாத வெறுப்பு, மேகம் வறுமை மிகுந்தது ஒத்த தன்மையை உடையதாம் என்ற பொருளில் உரை உள்ளதாகக் கூறி அவ்வுரை நன்றியில் செல்வம் என்னும் இவ்வதிகாரத்தோடு பொருந்தவில்லை; மேலும் பொருள் தொடர்பும் இல்லை என்கிறார் பரிமேலழகர்.
இவர் மேற்கோள் காட்டும் பிறர் உரைப்படி 'சீருடைச் செல்வர் செல்வமும் ஒரோவழித் தோன்றும் சிறுவெறுப்பால் அவரது செல்வம் ஈயப்படாது போனதால் அது நன்றியில் செல்வம் ஆயிற்று' என்பதும் பெறப்படுகிறது. இவ்விளக்கம் இப்பாடல் அதிகாரத் தொடர்புடையதைத் தெரிவிக்கிறது. ஆனால் சீருடைச் செல்வர் இரவலரோடு வெறுத்தல் எங்கும் இல்லை என்பதால் வெறுப்பு என்ற பொருள் ஏற்புடையதாக இல்லை.
|
இக்குறள் கூறும் செய்தி என்ன?
இவ்வதிகாரத்தில் இப்பாடல் ஒன்று மட்டுமே நற்செல்வமுடையாரது பொருள் பிறர்க்கு ஈயப்படாதாயின் என்ன ஆகும் என்ற சிந்தனையில் விளைந்ததாக உள்ளது. மற்ற ஒன்பது குறள்களும் ஈதல் இயல்புஇல்லாதவனது நன்றியில் செல்வம் பற்றியே பேசுகின்றன. நன்றியில்செல்வம் சீருடைச் செல்வர்பால் நாணிவந்து விரைந்து அகலுதலும் அதன் இயற்கை; ஒரு அறத்தின் கூறு உரைக்கும்போது நாணயம் போல் அதன் மறுகூறும் தெரிப்பச் சொல்வது வள்ளுவர் வழக்கம். நன்றியில்செல்வம் பற்றிச் சொல்லும்போது நன்றிச்செல்வத்தின் இயல்பும் மொழியப்பட்டது.
யாவர்க்கும் பயன்பட்டார் வறியராயினும் அவ்வறுமை விரைவில் நீங்கிப் பின்னும் பயன்படுவார் என்பது உவமையால் பெறப்பட்டது.
இதனால், நன்றியில் செல்வம் இடையறாதிருந்தும் எக்காலும் பயன்படாதென்பதும் எதிர்மறை யளவையால் உணரப்படும்.
சீருடைச் செல்வர் செல்வமும் ஒரோவழித் தோன்றும் சிறுவெறுப்பால் நன்றியில் செல்வமாதல் கூடும்.
காலிங்கர் 'அருளும் அன்பும் குறியும் முதலிய சீர்மைப்பாட்டினை உடைய செல்வர் பிறர்மாட்டுத் தம்மால் யாவரும் வெறுக்கத்தக்க சிறு துனி ஆகிய வறுமைவரின், அஃது எனைத்தோ எனின், உலகு இன்புறுதற்கு உரித்தாகிய மழை வறம் கூர்ந்தாற் போல அதனை உடைத்து; எனவே பின்னும் தமக்கு உளவழி எல்லாம் பிறர்க்கு உபகரித்தலே அவர்க்குக் கடன் என்றவாறு' என உரை வரைந்தார். மேலும் அவர் 'உலகத்து சீர்மை உடையோர் தாம் பிறர்க்குச் செய்வன செய்தற்கு இயையாக்கால் பெரிதும் நாணுவார்' எனவும் கூறினார்.
இது நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. (ஒப்புரவறிதல் 219 பொருள்: செய்யத்தக்க பொதுநலப் பணிகளைச் செய்ய இயலாதநிலையில், ஒப்புரவு செய்யும் நன்மையை உடையான் வறியன் ஆகிறான்) என்ற குறட்கருத்தை நினைவுபடுத்துகிறது. இன்று வறண்ட மாரி, மறுபடியும் வறம் நீங்கிப் பயன்படுதல் போலச் செல்வரும் வறுமை நீங்கினபோதெல்லாம பயன்படுவர் என்கிறது இவரது உரை.
பழைய உரை ஒன்று 'சீருடைச் செல்வர் கொடுத்திளைத்து வறியராதல் மேகம் பொழிந்து வறண்டதுபோலும்' என்கிறது.
கொடுத்து மகிழ்வுறும் ஒருவரது வாழ்க்கையில் ஒரோவழி வறுமை உண்டானாலும் அவ்வறுமை நிலையானதாக இருக்காது; அவர்தம் வாழ்க்கையில் மீண்டும் செல்வம் செழிக்கும்.
|
சீர்மைச் செல்வமுடையவர் சிறுதுகால வறுமை, மழைபெய்யாது வறண்டுபோனாற் போன்ற நிலைமைக்கு ஒப்பானதாகும் என்பது இக்குறட்கருத்து.
சிறுதுகாலம் ஈயாதுபோனாலும் அது நன்றியில்செல்வமே.
சீர்மைக் குணங்கள் கொண்ட செல்வர்க்கு உண்டாகும் சிறு வறுமையால் இரப்பார்க்கு ஈயாதிருந்தால் அது வானம் வறண்டு மழை பொழியாதொழிந்தது போன்றதாகும்.
|