இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1009அன்பொரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்

(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1009)

பொழிப்பு (மு வரதராசன்): பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்த பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

மணக்குடவர் உரை: பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி, அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர்.

பரிமேலழகர் உரை: அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று- வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர்.
(பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.)

இரா சாரங்கபாணி உரை: தொடர்புடையவரிடத்தில் அன்புகாட்டுதலைத் தவிர்த்து, உண்ணாமல் தன்னையும் வருத்திக்கொண்டு, அற நெறியையும் எண்ணிப் பார்க்காது சேர்த்து வைத்தவனது சிறந்த பொருளைக் கள்வர் முதலிய தீயவர் கவர்ந்து சென்று பயன்கொள்வார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பொரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.

பதவுரை: அன்பு-உள்ள நெகிழ்ச்சி; ஒரீஇ-ஒழிந்து, நீத்து, விடுத்து; தன்-தன்னை; செற்று-அழித்து; அறம்-நற்செயல்; நோக்காது-நினைக்காமல்; ஈட்டிய-திரட்டிய, தேடிய; ஒண் பொருள்-மிளிர்கின்றசெல்வம், (இங்கு) பெருஞ்செல்வம்; கொள்வார்-கொண்டு போய்ப் பயன் பெறுவர்; பிறர்-மற்றவர்.


அன்பொரீஇத் தன்செற்று அறம்நோக்காது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி, அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி அறத்தையுஞ் செய்யாது;
பரிப்பெருமாள்: பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலை நீக்கி, அது தேடினானான் நுகர்தலும் இன்றி அறத்தையுஞ் செய்யாது;
பரிதி: அன்பு நெறியை விட்டுத் தன்மநெறியை விட்டு;
காலிங்கர்: ஒருவன் தானும் உண்டு இனிது வாழாது தன்னையும் செறுத்து மற்றும் வறியார் மாட்டு ஓர் இரக்கமின்றி அதனால் அறனையும் செய்யக் கருதாது;
பரிமேலழகர்: ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து, வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து, வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; [செறுத்து - வருத்தி]

'கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து, வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து, வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பின்றித் தன் வாய்வயிற்றைக் கட்டி', 'அன்புச் செலவுகளுக்கும் செலவிடாமல் (தானும் உண்ணாததால்) தன்னையே துன்பப்படுத்திக் கொண்டு, தான தர்மத்தையும் கருதாமல்', 'இனத்தாரிடத்து அன்பில்லாது தன்னை வருத்தி அறத்தையுங் கருதாது', 'அன்பினை நீக்கித் தன்னை வருத்தி அறநெறியைப் பாராது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அன்பு காட்டுதலை நீங்கி, தானும் உண்டு இனிது வாழாது வருத்திக்கொண்டு, அறத்தையும் எண்ணாது என்பது இப்பகுதியின் பொருள்.

ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர்.
பரிப்பெருமாள்: தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நன்றியில் செல்வமாவது இத்தன்மையது என்பதூஉம், அது பிறர் கொள்வர் என்பதூஉம் கூறிற்று. பிறர் என்றது தன் வழியில் உள்ளார் அல்லாதாரை.
பரிதி: தேடிய பொருள் தனக்காகாது, பிறர்க்காம் என்றவாறு.
காலிங்கர்: தான் தொகுத்து வைத்த ஒள்ளிய பொருள் இனிக் கைக்கொள்வார் பிறர்; எனவே தான் தன் பயன் இழந்தான் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர்.
பரிமேலழகர் குறிப்புரை: பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார். [வழியினுள்ளார் - பரம்பரையினர்]

'ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சேர்த்த பொருளை எடுத்துக்கொள்வார் யாரோ?', 'சேர்த்து வைக்கிற பெருஞ் செல்வத்தை அனுபவிக்கப் போகிறவர்கள் (அவனுமல்ல அவனைச் சேர்ந்தவர்களுமல்ல) யாரோ அன்னியர்கள்', 'தேடிய நல்ல பொருள், பிறரால் எடுத்துக்கொள்ளப்பட்டு நுகரப்படும்', 'ஈட்டிய நல்ல பொருளைப் பிறர் அடைவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தொகுத்த பெருஞ்செல்வத்தைக் கொள்வார் பிறர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பு காட்டுதலை நீங்கி, தானும் உண்டு இனிது வாழாது வருத்திக்கொண்டு, அறத்தையும் எண்ணாது, தொகுத்த பெருஞ்செல்வத்தைக் கொள்வார் பிறர் என்பது பாடலின் பொருள்.
'பிறர்' யார்?

ஈயான் தேட்டைத் தீயார் கொள்வார்.

அன்புகாட்டத்தக்கவரைத் தள்ளிவைத்து, தானும் உண்ணாமல் கொள்ளாமல் தன்னை வருத்திக்கொண்டு, அறம் புரியவும் எண்ணாமல் சேர்த்துவைத்த மிகுசெல்வத்தை யார்யாரோ கொண்டு செல்வர்.
அன்பொரீஇ: உறவினர், நண்பர் போன்றோரிடம் அன்புடன் பழகி நடந்துகொண்டால் பொருள் உதவி கேட்டு வந்திடுவார்களோ எனஅஞ்சி அவர்களுடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்வதை அன்பொரீஇ என்ற சொல் குறிக்கிறது. தம்மிடம் மிகுந்த பொருளிருந்தும் உதவவேண்டும் என்ற இயல்பே இல்லாதவர் இவர். அன்பு என்ற சொல் குறளில் பெரும்பான்மையும் தொடர்புடையார் அதாவது சுற்றத்தார், நண்பர் ஆகியோரிடம் காட்டும் அன்பையே குறிப்பதாக ஆளப்படுகிறது. 'அன்பு-பிறர்மாட்டுச் செய்வது' எனச் சிலர் உரைத்தனர். இவற்றுள் முன்னதே பொருத்தமானது.
தன்செற்று: தன்னை வருத்திக்கொண்டு என்பது பொருள். தன்னுடைய வாயையும் வயிற்றையும் கட்டித் தான் ஏதும் நுகராமல் பொருளைப் பெருக்குவதிலேயே சிலர் மனம் செலுத்துவர். செல்வம் குன்றாதிருக்க தனக்காகவும் செலவழித்துக் கொள்ளாமல் தம்மையும் வருத்திக் கொள்வதை தன்செற்று என்ற தொடர் குறிக்கிறது,
அறம்நோக்காது: பொருள் சேர்ப்பவர்களில் பலர் பொருளின் ஒரு பகுதியை அவ்வப்பொழுது நற்செயல்களுக்காக செலவிடுவர். ஆனால் இவன் அறச்செயல்களில் சிறிதும் நாட்டமின்றி பொருள் சேர்த்துக் குவிக்கிறான். நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கமே இல்லாமல் இருக்கிறான். அப்படிப்பட்டவனை அறம் நோக்காதவன் என்கிறார் வள்ளுவர்.
சிலர் அறம் நோக்காது என்பதற்கு அறவழியில் அல்லாது பொருள் சேர்ப்பது எனப் பொருள் கூறினர். அக்கருத்தில் பொருள்செயல்வகை அதிகாரத்தில் கூறப்பட்டுவிட்டது. இவ்வதிகாரம் நன்மையில் செல்வம் பற்றிப் பேசுவது. தீதுடன் பொருள் ஈட்டுவது பற்றியது அல்ல. எனவே அறம் நோக்காது என்பதற்கு அறத்தைப் பார்க்காமல் ஈட்டித் தொகுத்த பெரும் பொருள் என்னாமல் மனிதநேய அறங்களைச் செய்ய எண்ணாது பொருள்பெருக்குவது எனக் கொள்ளல் சிறக்கும்.
இவ்வாறு சுற்றத்தின் அன்பைநீக்கி, தன்ன வருத்தி தானும் நுகராமல், ஈதல் அறம்பற்றிச் சிறிதும் எண்ணாமல் சேர்க்கும் செல்வத்தையெல்லாம் இருட்டறையில் பூட்டிவைத்தால் அதை வேறுயாரோ கொண்டு போகப் போகிறாரே என அச்செல்வத்திற்காக இரங்குகிறார் வள்ளுவர். ஈயாமல் சேர்த்த பொருள் இழக்கப்படுவதை ஈகை அதிகாரத்திலும் சொல்லப்பட்டது: ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்கணவர் (ஈகை 228 பொருள்: பொருளைச் சேர்த்து வைத்து இழக்கும் கொடியவர்கள் பிறர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்தலால் எய்தும் இன்பத்தை அறியாரோ என்ன?)

ஒண்பொருள் என்ற ஒரே சொற்றொடர் இக்குறளிலும் ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு (பொருள்செயல்வகை 760 பொருள்: முறையாகப் பொருளினை முற்ற ஈட்டியவர்க்கு மற்றைய அறம், இன்பம் என்னும் இரண்டும் ஒருங்கே எளிய பொருள்களாம்) என்பதிலும் வந்துள்ளது. ஆனால் அக்குறட்பாவில் 'ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு' என்றும், இக்குறட்பாவில் 'ஈட்டிய ஒண்பொருள்' என்றும் குறிப்பிடுகிறார். அங்கு அறநெறியில் ஈட்டிய செல்வம் என்பதால் ஒண்பொருள் என்பதற்கு ஒள்ளிய பொருள் எனக் கொள்வர். இங்கு அப்பொருள் அறச்செயல்களுக்குப் பயன்படவில்லை என்பதைச் சொல்ல வந்ததால் குறிப்புமொழியாய் அது ஒண்மையற்ற பொருளையுணர்த்துவதாகக் கொள்வர்.

'பிறர்' யார்?

'பிறர்' என்ற சொல்லுக்குப் பிறர், தன் வழியில் உள்ளார் அல்லாதார், அரசன் கள்வர் நெருப்பு முதலாயினார், மற்றவர், அவனும் வழியினரும் அல்லார், அவன் வமிசத்தாரல்லர்- அரசர் கள்ளர் அன்னியர், உரிமை வழியும் அறநெறிவழியும் உரிமையுடையாரல்லாத கள்வர் பகைவர், பிள்ளைக்கு முதவாது-அரசன் கள்வர் நெருப்பு முதலாயினார், யாரோ, கள்வர் முதலிய தீயவர், யாரோ அன்னியர்கள், அயலார், வேலோடு நின்று இடுவென்பார் போல்வர், தொடர்பற்ற எவரோ, கள்வரும் கொள்ளைக்காரரு மாகிய பிறர், சிறிதும் தொடர்பற்றவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஓடிஓடிச் சேர்த்த பேதையவன் சேர்த்த பெருஞ்செல்வம் யார்க்கு உடைமையாகப்போகுதோ என்பதைச் சொல்லவந்த வள்ளுவர் 'ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்' என்றார். இதன் பொருள் ஈட்டியவன் நுகரான் என்பது.
அறம்பற்றிச் சிந்திக்காது செல்வம் சேர்க்கும் இவனுடைய உரிமையும் பறிக்கப்பெற்றுப் யாரோ பிறர் அதைத் துய்ப்பர். உடைமையாம் உரிமையும் இழந்து இரக்கத்திற்குரியவனாகின்றான். 'கொள்வார்' என்றதனால் கொடுக்காமலே வலிய எடுத்துக் கொள்ளப்படுதலும், 'பிறர்' என்பதனால் உரிமையும் உறவுமுடையார் அல்லர் என்பதும் உணரப்படும். அந்த யாரோ பிறர் அரசு, கள்வர் அல்லது மற்ற தீயோர் ஆகியோரைக் குறிக்கும் என உய்த்துணரலாம்.

'பிறர்' என்ற சொல் யார்யாரோ என்ற பொருள் தரும்.

அன்பு காட்டுதலை நீங்கி, தானும் உண்டு இனிது வாழாது வருத்திக்கொண்டு, அறத்தையும் எண்ணாது, தொகுத்த பெருஞ்செல்வத்தைக் கொள்வார் பிறர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தொடர்புடையார்க்கும் தனக்கும் உலகிற்கும் பயன்படாதது நன்றியில்செல்வம்.

பொழிப்பு

தொடர்புடையவரிடத்து அன்புகாட்டுதலை நீங்கி, வாய்வயிற்றைக் கட்டி, அறத்தையுங் கருதாது, தொகுத்த பெருஞ்செல்வத்தை யாரோ பிறர் கொண்டு சென்றுவிடுவர்.