இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1008



நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று

(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1008)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர்நடுவில் நச்சுமரம் பழுத்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: பிறரால் ஆசைப்படாதவனது செல்வம், ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து.
இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின் அவரைக் கொல்லுமென்றது.

பரிமேலழகர் உரை: நச்சப்படாதவன் செல்வம் - வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று - ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும்.
('நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: யாராலும் விரும்பப்படாதவனது செல்வம் நடுவூரில் நஞ்சுமரம் பழுத்தது போலாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நச்சப் படாதவன் செல்வம் ஊர் நடுவுள் நச்சு மரம்பழுத் தற்று.

பதவுரை: நச்சப்படாதவன்-விரும்பப்படாதவன்; செல்வம்-பொருள்மிகுதி; நடு-இடைப்பகுதி; ஊருள்-நகரினுள்; நச்சு-நஞ்சுடைய; மரம்-மரம்; பழுத்து-கனிந்தால்; அற்று-அத்தன்மைத்து.


நச்சப் படாதவன் செல்வம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரால் ஆசைப்படாதவனது செல்வம்;
பரிப்பெருமாள்: பிறரால் நச்சப்படாதவன் செல்வம்;
பரிதி: பிறர் நச்சப்படாதவன் செல்வம்;
காலிங்கர்: தன்மாட்டு வந்து எமக்கு இது வேண்டும் என்று யாவராலும் விரும்பப்படாத அரும்பாவி பெற்ற பெருந்திருவானது எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: வறியார்க்கு அணியனாயிருந்தும் ஒன்றுங்கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வமெய்துதல்; [அணியனாயிருந்தும் -பக்கத்தினனாய் இருந்தும்; அவரால் - வறியவரால்]

'யாவராலும் விரும்பப்படாதவன் பெற்ற செல்வம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர்க்குதவாமையால் மக்களால் விரும்பப்படாத தீயவனது செல்வம்', 'கொடைக்குணம் இல்லாததால் யாராலும் விரும்பப்படாதவன் செல்வம் நிறைந்தவனாக இருப்பது', 'விரும்பப்படாதவனுடைய செல்வம்', 'பிறரால் விரும்பப்படாதவன் செல்வம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எவராலும் விரும்பப்படாதவனது செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.

நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊர் நடுவுள் பழுத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின் அவரைக் கொல்லுமென்றது.
பரிப்பெருமாள்: ஊர் நடுவுள் பருத்து நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: தமதாசையாலே தின்பாருண்டாயின் இது கொல்லும் என்றவாறாயிற்று.
பரிதி: நடுவூரில் எட்டிமரம் பழுத்ததற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: ஊர் நடுவாகிய மன்றினுள் ஒரு மரம் பழுத்தால் மற்று அஃது யாவர்க்கும் பொது அன்றே. அங்ஙனம் பொதுப்பட நுகர்தற்குரிய மன்றினுள் நச்சு மரமாகிய காஞ்சிரை பெரிதும் பழுத்து நின்ற அத்தன்மைத்து என்றவாறு. [காஞ்சிரை-ஒருவகை மரத்தின் பெயர்]
பரிமேலழகர்: ஊரிடை நிற்பதோர் நச்சு மரம் பழுத்தாற் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'நடுவூர்' என்பது பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம். [ஊர்நடு என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகைநிலைத் தொடர் நடு ஊர் எனப் பின்முன்னாக மாறிநின்றது. ஊர் நடு-ஊரினது நடு]

'ஊர் நடுவுள் நிற்பதொரு நச்சுமரம் பழுத்த தன்மைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊர் நடுவே நின்ற நச்சுமரம் பழுத்தாற்போலப் பயன் தராது', 'நடு ஊரில் விஷமரம் பழம் நிறைந்ததாக இருப்பதைப் போன்றது', 'ஊர் நடுவே நச்சுமரம் பழுத்தாற்போலும்!', 'ஊரின் நடுவே நஞ்சு மரம் பழுத்துள்ளதை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஊர் நடுவேயுள்ள நச்சுமரம் பழுத்தாற்போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எவராலும் விரும்பப்படாதவனது செல்வம் ஊர் நடுவேயுள்ள நச்சுமரம் பழுத்தாற்போன்றது என்பது பாடலின் பொருள்.
'நச்சு மரம்பழுத்து' குறிப்பது என்ன?

எட்டி பழுத்து என்ன? பழுக்காவிட்டால் என்ன?

பிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம் ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்திருப்பதற்குச் சமம்.
அவன் பெரும் செல்வம் படைத்தவன். நடுவூருள் அருகாமையிலேயே ஓங்கி உயர்ந்த ஒரு மாளிகையில் வாழ்கிறான். அவனிடத்தில் ஏராளமான செல்வமுண்டு. ஆனால் யார்மாட்டும் அன்பாக பழகமாட்டான். ஈகைக் குணம் கொஞ்சமும் இல்லை. பொருள்கேட்டு யாரும் அவனை அணுக முடியாது; சுற்றியுள்ள ஒருவராலும் விரும்பப்படாமல் வாழ்கின்றான். அவனை ஊர்இடையே நிற்கின்ற நச்சு மரத்திற்கு ஒப்பிடுகிறார் வள்ளுவர். அந்த நச்சுமரமானது நிறையப் பழம் பழுத்து விளங்குவது அவனது செல்வம் கூடிக்கொண்டு போவது போன்றதாகும் என்கிறார். எப்படி இருந்தாலும் அந்த நச்சுப் பழத்தைத் தீண்டுவார் யார்? என வசை அமைந்த நடையில் நன்றியில் செல்வம் இகழப்படுகிறது.

இது பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான் கண்படின் (ஒப்புரவறிதல் 216 பொருள்: பிறர்க்கு உதவும் நன்மையுடையான் இடத்து செல்வம் உண்டாகுமானால், பயன் தரும் மரம் ஊர் நடுவில் பழுத்துள்ளது போன்றது ஆகும்) என்ற குறட்பாவின் மறுதலை அமைப்பாக உள்ளது. பலருக்கும் பயன்படுபவன் செல்வத்தைப் பழமரம் என்றும் மருந்துமரம் என்றும் முன்பு குறிப்பிட்டார் வள்ளுவர், இங்கு ஊர்மக்களுக்குப் பயன்படாதவனுடைய செல்வம் அந்த ஊர்நடுவில் உள்ள நச்சு மரம் பழுத்தது போன்றது என்ற எதிர் உவமையை எடுத்தாள்கிறார். பொருள் சேருமிடத்தின் தன்மையைக் கொண்டு செல்வத்தின் இயல்பினை உரைக்கிறார்.

'நுனிக்கொம்பர்', 'கடைக்கண்' 'முற்பகல்', 'பிற்பகல்' என்பன பின் முன்னாகத் தொக்கன போன்று ஊர்நடுவுள் என்பது 'நடுவூருள்' என இங்கு நிற்கிறது

'நச்சு மரம்பழுத்து' குறிப்பது என்ன?

'நச்சு மரம்பழுத்து' என்பதை நச்சுமரப்பழம் தமதாசையாலே தின்பாருண்டாயின் அவரைக் கொல்லுமென்றது, பொதுப்பட நுகர்தற்குரிய மன்றினுள் நச்சு மரமாகிய காஞ்சிரை பெரிதும் பழுத்து நின்ற அத்தன்மைத்து, அண்மை உடைமைகளான் பயனில்லை, நச்சு மரத்தின் பழத்தை நச்சினால் சாவுக்கு வருவதால் நச்சாத நச்சுமரம் பழுத்தது போலாம், அச்செல்வம் தீங்காகவும் முடியும், உதவாமை மட்டுமன்று. சுரண்டுதலின் மூலம் செல்வம் அடைவான் தரும் துன்பமும் சேரும், நச்சுமரம் பழுத்தாற்போலப் பயன் தராது, விஷமரம் பழம் நிறைந்ததாக இருப்பதைப் போன்றது, பிறருக்கு உதவாத கருமியின் பணமும் ஒருவனுக்கும் பய்ன்படாமல் அழியும், பிறருக்குப் பயனில்லாதவன் கையிலுள்ள பொருளையும் யாரும் விரும்பமாட்டார்கள்; விஷமரம் என்றதால் அச்சத்தையும் கொடுப்பான் என்றறிக எனப்பலவாறு விளக்கினர்.

மாமரம், வாழைமரம், பலாமரம் போன்றன சுவையுள்ள பழங்களைத் தருவதால் அவை பயன்தரு மரங்கள் என அறியப்படுகின்றன. தின்றால் சாவு உண்டாக்கும் காய், பழங்களைத் தரும் எட்டி, காஞ்சிரை மரங்கள் நச்சு மரங்கள் எனச் சொல்லப்படுவன; ஊர்நடுவே வளர்ந்தாலும் அவற்றை உடனே வெட்டி அழித்துவிடுவார்கள். இவை அணுகுதற்கு எளியதாய் இருந்தும் நன்றாகப் பழுத்து இருந்தும் தெரியாமல் உண்பார்க்குக் கேடும் விளைக்கும் தன்மையன.
நச்சுமரத்தில் நிரம்பப் பழுத்துக் குலுங்கினாலும் யாரும் அவற்றத் தொட அஞ்சுவர். அதுபோல் கொடுக்க மனமில்லாதவனுக்குச் செல்வம் பெருகிக்கொண்டே இருந்தாலும் அவனை யாரும் அணுகமாட்டார் என்பதால் அவனை நச்சுமரம் என்றார் வள்ளுவர். 'பழுத்தற்று' என்றது அவனுக்குச் செல்வம் சேர்தலைக் குறிப்பதாக வந்தது.

எவராலும் விரும்பப்படாதவனது செல்வம் ஊர் நடுவேயுள்ள நச்சுமரம் பழுத்தாற்போன்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நன்றியில்செல்வம் பெருகிக்கிடந்தாலும் என்ன பயன்?

பொழிப்பு

யாராலும் விரும்பப்படாதவனது செல்வம் நடுவூரில் உள்ள நச்சுமரம் பழுத்தது போன்றதாம்.