இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1007அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று

(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1007)

பொழிப்பு (மு வரதராசன்): பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடைய செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.

மணக்குடவர் உரை: பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி தனியாளாய் முதிர்ந்தாற்போலும்.
இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது.

பரிமேலழகர் உரை: அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள்தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து.
(நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.)

தமிழண்ணல் உரை: ஒரு பொருளும் இல்லாது வறியவரான ஏழைகளுக்கு, அவர்க்குத் தேவையான ஏதேனும் ஒன்றைக் கூடக் கொடுத்துதவானது செல்வம், மிகுந்த அழகுடையாள் ஒருத்தி திருமணமாகாமல் தனியளாய் இருந்தே அகவை முதிர்ந்த தன்மையினையுடையதாகும். அவள் நலம் துய்க்கப்படாது, அவளும் இன்புறாது கழிதல்போல ஈயாதான் செல்வமும் யார்க்கும் பயன்படாது தானும் அழியுமென்பதாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.

பதவுரை: அற்றார்க்கு- ஏதும் இல்லாதவருக்கு, பொருளில்லாதார்க்கு; ஒன்று-ஒன்று, ஒரு சிறு பொருள்; ஆற்றாதான்-மாட்டாதான். கொடுத்துத் துன்பத்தைத் தணிவித்தல் செய்யாதவன்; செல்வம்-பொருள்மிகுதி; மிகநலம்-மிக்க அழகு, மிக்க இளமை; பெற்றாள்-பெற்றவள்; தமியள்-தனியளாக; மூத்துஅற்று--முதுமையுற்றாற் போலும்.


அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம்;
பரிப்பெருமாள்: வறியவர்க்கு ஒன்றைக் கொடுக்க மாட்டாதான் பெற்ற பெரிய செல்வம்;
பரிதி: செல்வம் தேடி வைத்து அறஞ் செய்யாதவன் என்போலும் எனின்;
காலிங்கர்: தம்மாட்டு ஒன்று அற்றாராகிய வறியோர்க்கு ஒன்று உதவாதான் பெற்ற பெருஞ்செல்வமானது;
பரிமேலழகர்: ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; [கொன்னே கழிதல்-பயனின்றிப் போதல்]

'பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏழைக்கு யாதும் ஈயாதவனது செல்வம்', 'பொருளில்லாத வறியவர்க்கு அவர் வேண்டியதொன்றைக் கொடாதவனது செல்வம் பயனின்றிக் கழிதல்', 'ஏழைகளுக்கு உதவி செய்யாதவன் பெற்றுள்ள பெருஞ்செல்வம்', 'வறியவர்களுக்கு ஒன்றைக் கொடுக்க மாட்டாதவனுடைய செல்வம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருளில்லாதவர்க்கு யாதும் கொடாதவனது பெருஞ்செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.

மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி தமியளாய் முதிர்ந்தாற்போலும். [தமியளாய் - தனித்தவளாய்]
மணக்குடவர் குறிப்புரை: இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது.
பரிப்பெருமாள்: மிக அழகினைப் பெற்ற ஒருத்தி கொழுநனை இன்றி மூத்துத் தமியளாக் கழிந்தது போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தமியள் மூத்தல்- தன்னைப் பிறர்க்கு ஈவார் இன்றித் தமியளாகி மூத்தல். இது செல்வந்தானும் ஒரு பயன் பெறாது என்றது.
பரிதி: மிகவும் உருவ நலம் பெற்றவள் தனியே இருந்து மூத்தற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: மிக நலம் பெற்றாள் கணவனோடு கலந்து இன்புறுதற்கு விதி இலளாகித் தானே தனியளாய் மூத்து இருந்த அத்தன்மைத்து. எனவே செல்வமிருந்தும் இருந்திலன் என்பது பொருளாயிற்று.
பரிமேலழகர்: பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து. [பெண்டிரின் - பெண்களுள்ளே; தமியளாய் - தனித்தவளாய்]
பரிமேலழகர் குறிப்புரை: நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று. [இரண்டும் - வடிவழகும் குணவழகும்; தானும்- பொருள் இல்லாதவர்க்கு வழங்காத தானும்; ஏற்பானும் - பொருளைப் பெறுபவனும்]

'மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி தமியளாய் முதிர்ந்தாற்போலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அழகுள்ள குமரி மணவாது மூத்தது போலும்', 'அழகு, குணம் முதலிய பல நலங்களைப் பெற்ற குமரி மணந்து கொள்ளாமல் தனியளாய்க் கிழவியான தன்மையது', 'வெகு அழகு பெற்ற ஒரு பெண் (அந்த அழகை அனுபவிக்கும் கணவனில்லாமல்) தனியாகவே இருந்து கிழவியாகி விடுவதைப் போன்றது', 'அழகு மிகுந்த கன்னிகை கணவன் இல்லாமல் தனியாய் வாழ்ந்து மூப்படைந்தது போலாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அழகு மிகுந்த ஒரு பெண் மணவாது தனியளாய் மூத்தது போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருளில்லாதவர்க்கு யாதும் கொடாதவனது பெருஞ்செல்வம் அழகு மிகுந்த ஒரு பெண் மணவாது தனியளாய் மூத்தது போலும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

மணவாத் துறவு மேற்கொண்ட மகளிரும் பெட்டிக்குள்ளேயே போட்டுப் பூட்டிவைத்த செல்வமும் ஒரே தன்மையன.

ஏதும் இல்லாதவருக்கு ஒரு சிறுபொருளேனும் கொடுத்து உதவாதவனது செல்வம், அழகுநலங்கள் எல்லாம் குறைவறப் பெற்ற பெண் எவரையும் மணந்து கொள்ளாமல், தன்னந் தனியாகவே இருந்து முதுமை அடைந்தற்குச் சமம் ஆகும்.
அழகான, குணமான பெண் ஒருத்தி, உரிய வயதில் மணம்முடித்துக் கணவனுடன் சேர்ந்து வாழ்க்கை இன்பத்தை நுகராமல் தனியே இருந்து முதுமை அடைகிறாள். இப்பெண்ணைப் வறியவர்க்கு எதுவும் ஈயாமல் வைத்திருக்கும் பெரும்செல்வத்திற்கு ஒப்பிடுகிறார் வள்ளுவர் இங்கு. இரண்டுமே பயன்படாமல் போகும் தன்மையன.
பெண் என்று சொல்லாமல் அழகுநலம் நிறைந்த பெண் என்றது பெருஞ்செல்வம் வைத்திருந்தும் கொடுப்பதற்கு மனமில்லாதவன் என்பதைக் குறிப்பதற்காக. ஏதம் பெருஞ்செல்வம்... (1005) என்ற முந்தைய குறட்கருத்து போன்று இங்குள்ள உவமையும் பெரும்பொருள் உடையவனது நன்றியில்செல்வத்தின் மேல் இரக்கங் கொள்வதாகவே உள்ளது.

ஒரு பெண் தனக்கேற்ற ஒருவனோடு கூடி இல்லறவாழ்க்கையில் ஈடுபட வேண்டுமே ஒழிய அவள் நலம் பயனற்றுப்போகக் கூடாது எனக் கருதியவர் வள்ளுவர் என்பது இக்குறள்வழி அறியக்கிடக்கிறது.
மணவாத் துறவு இயற்கை முரண்; ஒருவரும் கொள்ளத்தகாதது. சில பெண்கள் திருமணம் என்றாலே வெறுத்து ஒதுங்கும் நிலை காணப்படுகிறது. மனவேறுபாடுகள் உண்டாகி பல திருமணங்கள் விரைவிலேயே முறிவில் முடிவதை நேரில் கண்டும் அல்லது ஊடகங்கள் வாயிலாக அறிந்தும், அவர்கள் ஆடவர் சமூகத்தை விழையாமலிருக்கின்றனர். வேறு சில மகளிர்க்குக் குடும்பப் பொறை சுமக்க அஞ்சுவது, பெண்வழிச்சீர் சிக்கல்கள், சில பல வேக வெறுப்புக்கு உட்படுதல் போன்றவை இளமைத் துறவு கோடலுக்கு தூண்டுதலாக அமைகின்றன. தான் தோன்றித்தனமாய்க் கண்டவாறு திரிய விழைவது என்பது இன்னொரு காரணம்; இது கூடா வொழுக்கத்தில் முடிந்து வாழ்வை இழிவுபடச் செய்யும்.
மணவாத்துறவு உலகியல்பு அல்ல. மணவா நிலையும் மணந்து விடுகையும் விரும்பத்தக்கதன்று. மணவாத் தனி நிலை கழிவிரக்கம் கொள்ளத்தக்கது; ஆண் தனிமை பெண் தனிமை இரண்டுமே வாழ்வு எனப்படா. என்றும் மணமின்றி இருக்கும் துறவு ஏற்புடையதன்று. ஆண் பெண் என்னும் ஈருயிர்கூட்டே மனித வாழ்க்கை. அதுவே வள்ளுவர் வேண்டுவது. அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை ... (49) என ஆண்-பெண் சேர்ந்து வாழும் குடும்பவாழ்க்கையே அறமும் வாழ்வும் என மொழிந்தவரல்லவா அவர்?

தண்டபாணி தேசிகர் 'மிகநலம் மிகுநலம் என்ற இரண்டு பாடம் உண்டு. அவற்றுள் உறுந்தோறும் உறுந்தோறும் ஒருகாலைக் கொருகால் மிகுவதாகிய நலத்தைக் கணவனோடு உறாமலே தமியனாய்க் கழிப்பாளை ஈயாதான் செல்வத்திற்கு ஒப்பித்தலின் வினைத்தொகையாகிய மிகுநலம் என்ற பாடமே பொருளாழம் உடையது' என்பார்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

பொருள் ஈட்டுவதை மட்டுமே நோக்காக உடையவர் ஈட்டிய செல்வத்தின் இயல்பை விளக்குவது இக்குறட்பா. எல்லா அழகு நலங்களும் உடையாள் இல்லறம் கொள்ளாது தனித்திருந்தே முதுமையடைந்ததை ஒக்கும் இல்லார்க்குப் பயன்படாத செல்வம் என்பது இதன் கருத்து.

கன்னி கழியாமல் முதுமை எய்திய பெண் பற்றி இங்கு பேசுகிறார் வள்ளுவர். மூப்பிலும் பார்ப்பதற்கு அழகுநலம் எல்லாம் நிறைந்தவளாகவே இருக்கிறாள் அம்முதிர்கன்னி. மணம் முடிக்காது தன் வாழ்நாளைத் தனியளாகவே கடந்து வந்துவிட்டாள். அவளது அழகும் இளமையும் எந்தவிதப் பயனுமில்லாமல் கழிந்து இப்பொழுது மூப்புமுற்றாள். இவ்வளவு ஆனபின் அவள் பெற்றது என்ன? மற்றவர்களும் சமுதாயமும் அவளால் அடைந்தது என்ன? ஒன்றுமில்லை. நிறை நலம்பெற்ற அவள் உரிய பருவத்தே கணவனைப் பெற்று இன்புறுதலும், மகிழ்வுறுத்தலுமில்லாமல் மூப்பாளாயினதால் அவளுக்கும் பயனில்லை; மற்றவர்க்கும் பயனில்லை. அன்புச் செல்வங்களை ஈன்றெடுத்து தராததால் உலகத்தின் இடையறாத வழிவழி மரபும் தடைப்பட்டது. இல்வாழ்க்கை என்ற அறத்தை ஓம்பி சமுதாயக் கடமையும் செய்யமுடியாது போயிற்று. அவளது மிகுநலம்போலவே இல்லார்க்கு ஒன்று ஈயாதவனது செல்வமும் பயன்படாமல் போனது. இரண்டுக்குமுள்ள பொதுத்தன்மை தன்மை பயனிழத்தலாம். இரண்டுமே பயனற்றுப் போய்விட்டன என்பது கருத்து.

திருமணமல்லாத வாழ்வு முழுமையுறாது. இளமையில் திருமணம் அழகானது. மகளிர் மணமில்லாதிருந்தால் பயன் ஏதும் எய்துவதில்லை எனச் சுட்டிக்காட்டி மணந்து வாழும் மகளிரின் அழகு புகழப்பட்டது. மணவாத் துறவு கூடாது. ஆண் தனிமையும் பெண் தனிமையும் வாழ்வெனப்படாது. பெண் தனித்து வாழாமல் மணந்து வாழவேண்டும். இல்லற நெறி போற்றும் மணவாழ்க்கையே விழுமிது. இவை இக்குறள் கூறும் செய்திகள்.

பொருளில்லாதவர்க்கு யாதும் கொடாதவனது பெருஞ்செல்வம் அழகு மிகுந்த ஒரு பெண் மணவாது தனியளாய் மூத்தது போலும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இல்லார்க்கு உதவாமல்போவது நன்றியில்செல்வம்.

பொழிப்பு

பொருளில்லாதவர்க்கு ஏதேனும் ஈயாதவனது செல்வம் அழகுமிகுந்த பெண் மணவாது தனியளாய் மூத்த தன்மையது.