இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1005கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்

(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1005)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்குக் கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன்மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.

மணக்குடவர் உரை: பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்குப் பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.

பரிமேலழகர் உரை: கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல் - பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை.
(இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.)

தமிழண்ணல் உரை: பிறர்க்குக் கொடுப்பதும் தான் நுகர்வதுமாகிய இரண்டும் இல்லாதவர்க்குப் பலவாக அடுக்கிய கோடிச் செல்வங்கள் உளவாயினும், ஒன்றுமே இல்லாத நிலையே உளதாகும். பயன் கொள்ளாமையின் பொருள் இருந்தும் இல்லாத தன்மைத்தேயாம்; பயன்படுத்தாத செல்வம் இருந்தாலும் ஒன்றுதான்; இல்லாவிட்டாலும் ஒன்றுதானே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கியகோடி உண்டாயினும் இல்.

பதவுரை: கொடுப்பதூஉம்-தருவதும்; துய்ப்பதூஉம்-நுகர்வதும்; இல்லார்க்கு-இல்லாதவருக்கு; அடுக்கிய கோடி--பலப்பல கோடி, தொடர்ந்த கோடி, அளவிற்றாய பொருள்; உண்டாயினும்-உண்டானாலும்; இல்-இல்லை.


கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்கு;
பரிப்பெருமாள்: பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்கு;
பரிதி: தானும் உண்டு தன்மமும் செய்யாதவன்;
காலிங்கர்: ஒருவர் பொருள் பெற்றதனால் பயன் யாதோ எனின், நாள்தோறும் பிறர்க்கு உபகரித்தலும் தாம் உண்டு இன்பமுறுதலும் அன்றே; அதனால் அவை இரண்டும் இல்லாத அரும்பாவிக்கு;
பரிமேலழகர்: பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையரல்லாதார்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: இன்பத்தினும் அறம் சிறந்தமையின்,கொடுத்தல் தொழில் முற்கூறப்பட்டது.

'பிறர்க்குக் கொடுத்தலும் தாம் நுகர்தலும் இல்லாதார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர்க்கு வழங்கான் தானும் உண்ணான் இவனுக்கு', 'பிறர்க்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதும் ஆகிய இரு செயலும் இல்லாதவர்க்கு', 'பிறருக்குக் கொடுப்பதோ தாம் அனுபவிப்பதோ இரண்டுமில்லாதவர்கள்', 'பிறர்க்குக் கொடுத்தலும் தான் துய்த்தலும் இல்லாதவர்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறர்க்கு வழங்குதலும் தாம் துய்த்தலும் இல்லாதவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

அடுக்கிய கோடிஉண் டாயினும் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.
பரிப்பெருமாள்: பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோ டொக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்கூர்ந்தாரோடு ஒப்பர் என்றது.
பரிதி: திரவியம் கோடி உண்டாயினும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: அளவிறந்த கோடி பொருள் உண்டு ஆயினும் யாதுமில்லை என்பதே துணிவு என்றவாறு.
பரிமேலழகர்: பலவாக அடுக்கிய கோடிப் பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'அடுக்கிய கோடி' என்றது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின், 'இல்' என்றார். [பயனிரண்டும்-கொடுத்தலால் உண்டாகும் அறப்பயனும் துய்ப்பதால் உண்டாகும் இன்பப் பயனும்.]

'பல கோடிப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோடு ஒக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலகோடி இருந்தால் என்ன?', 'பல கோடி பொருள் உண்டாயினும் ஒருபயனுமில்லை', 'கோடி கோடியாகச் செல்வத்தைச் சேர்த்து வைத்தாலும் அவர்களுக்கு அதனால் ஒரு பயனுமில்லை', 'தொகுத்த பல கோடிப் பொருள் இருப்பினும் அவை யாவும் இல்லாதவனவேயாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தொகுத்த பல கோடிப் பொருள் சேர்த்து வைத்தாலும் அவை யாவும் இல்லாதவனவே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறர்க்கு வழங்குதலும் தாம் துய்த்தலும் இல்லாதவர்க்கு, தொகுத்த பல கோடிப் பொருள் உண்டாயினும் இல் என்பது பாடலின் பொருள்.
'உண்டாயினும் இல்' குறிப்பது என்ன?

உண்ணச்செய் அல்லது நீயாவது உண்.

பிறர்க்குக் கொடுத்து உதவுவதும். தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்கு கோடிக்கணக்கில் செல்வம் இருந்தாலும் இல்லாததற்குச் சமமே ஆகும்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று பொருள் தொகுக்கத் தொடங்கியவனுக்கு நற்பேற்றின் காரணமாகப் பலப்பல கோடியாய் செல்வம் வந்து கொட்டுகிறது. அவன் என்ன செய்வான்? அச்செல்வத்துக்கு அவன் முழுஉரிமையுள்ளவனாதலால் அதை நன்கு துய்க்கலாம். ஆனால் தனது பொருள் குறைந்து விடும் என்று துய்ப்பதில்லை. உரிமையோடு அவனுக்கு ஓர் சமுதாயக் கடமையும் உண்டு. அது பொருள் தேவைப்பட்டோர்க்கு ஈந்து மகிழ்வது. தம் உரிமைப்பொருளைத் தாமே துய்க்க விரும்பாதவன் அதை எப்படிப் பிறருக்குக் கொடுப்பான்? அவன் கொடுக்கவும் நுகரவும் செய்யாத பேதையாய் இருக்கிறான். உண்ணாமலும் கொடுக்காமலும் வாழ்நாட்களைக் கழிக்கிறான். கடமையை நினைக்காமலும் உரிமை பற்றி எண்ணாமலும் இரண்டுங்கெட்டான் நிலையில் அவன் இருக்கிறான். பொருளானாம் எல்லாம் எனத் தான் சேர்த்தையெல்லாம் பொத்திப்பொத்தி வைத்துக்கொண்டான். எதற்குமே பயன்படுத்தாமல் தன் செல்வத்தை முடக்கியுள்ளான். இவ்வாறு தேக்கிவைக்கப்பட்டுள்ள பயன்தரா உடைமைகள் அவனுக்கு உரியதாவன இல்லை என்கிறார் வள்ளுவர். கோடி கோடியாய் கொட்டிக் கிடந்தாலும் கொடுத்தும் துய்த்தும் ஆள்பவன்தானே செல்வத்திற்கு உடையவன் ஆவான்? செல்வத்தின் பயன், ஈதல்; துய்த்தல் ஆகியவையாம். இந்த வகைகளில் பயன்படாத செல்வம், இருந்தும் இல்லாதது போலேயாம். அடுக்கிய கோடிகளானாலும் அவற்றால் ஆவது என்ன என்னுமளவு ஒன்றுமில்லாதவன் போல்தானே இருக்கிறான். ஆளுதற்கு உரியவர் யாரும் இல்லை என்பதால் அச்செல்வம் 'இல்' என்றாகிறது.

வள்ளுரின் சமுதாயக் கொள்கை உடன் வாழும் மனிதர்க்கு எந்நிலையிலும் பயன்பட வாழவேண்டுமென்பது. இதை அவர் ஒப்புரவறிதல், ஈகை ஆகிய அதிகாரங்களில் சொல்லியபின்னர் இங்கும் வலியுறுத்துகிறார். பொருள் இல்லாதாரிடத்து அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடு பெரிது. ஈட்டிய பொருளை ஈத்து உவந்து நுகர வேண்டும் என்பவர் அவர். எதற்கும் பயன்படுத்தாமல் செல்வத்தைப் பூட்டி வைக்காதே; செல்வம் செலவு செய்வதற்கே உரியது; அதை வீணாகச் சேமித்து வைப்பதனால் ஒருபயனும் விளைவதில்லை என்பது அவர் வழங்கும் அறிவுரை.
ஒளவையாரும் பாடுபட்டுத் தேடிப்பணத்தை புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள் - கூடுவிட்டிங் காவிதான் போயினபின்பு யாரே யநுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம் ! (நல்வழி 22 பொருள்; பணத்தினை வருந்திச் சேர்த்து, அதனைத் தானும் உண்ணாமல், மற்றவர்களுக்கும் கொடுக்காமல் புதைத்து வைத்து, நன்மைகளை இழந்த மனிதர்களே! கேளுங்கள். உடலை விட்டு உயிர் பிரிந்த பின்பு அந்தப் பணத்தை யார்தான் அநுபவிப்பார்? இருக்கும் போதே நீங்களும் நுகருங்கள். மற்றவர்களுக்கும் ஈந்து மகிழுங்கள்) என்றார்.
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற.. செல்வம்...நாய் பெற்ற தெங்கம்பழம் (பழமொழி நானூறு 151 (216) பொருள்: பிறர்க்கீதலும் தான் அடைதலும் முதலியன அறியாதான் கொண்டிருக்கின்ற... செல்வம்.. நாய்பெற்ற தேங்காயை ஒக்குமல்லவா?) என்கிறது இப்பழம்பாடல். நாய் ஒரு தேங்காயைப் பெறின் தான் உடைத்துத் தின்னவுமறியாது; பிறர்க்குக் கொடுக்கவும் மனமின்றி, உருட்டிக்கொண்ட அலையும் என்பது இதன் கருத்து.

'உண்டாயினும் இல்' குறிப்பது என்ன?

'உண்டாயினும் இல்' என்ற தொடர்க்குப் பொருள் உண்டாயினும் அவை இன்மையோடொக்கும், உண்டாயினும் இல்லை, உண்டு ஆயினும் யாதுமில்லை என்பதே துணிவு, பொருளுண்டாயினும் ஒன்றும் இல்லை, திரவியம் உண்டானாலும் ஒன்றுமில்லை, பொருளுண்டாயினும் ஒன்றுமில்லாத வறியனாம், பொருள் உண்டானாலும் பயன் இல்லை, செல்வங்கள் உளவாயினும் ஒன்றுமே இல்லாத நிலையே உளதாகும், இவனுக்குப் பலகோடி இருந்தால் என்ன?, பொருள் உண்டாயினும் ஒருபயனுமில்லை, செல்வத்தைச் சேர்த்து வைத்தாலும் அவர்களுக்கு அதனால் ஒரு பயனுமில்லை, பொருள் இருந்தாலும் அவை இல்லாதவையேயாகும், பொருள் இருப்பினும் அவை யாவும் இல்லாதவனவேயாம், பொருள் உண்டானாலும் பயன் இல்லை, செல்வமிருப்பினும் அது செல்வமிருப்பதாகாது, பொருள்கள் இருந்தும் அந்தப் பொருளின் பயன் அவருக்கு இல்லை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'இல்' என்பது இல்லா நிலையைக் குறிக்கிறது. கொடுத்தலும் துய்த்தலும் இல்லாத செல்வமும் அதனைக் கொண்டவனும் இல்லாத நிலைக்கு ஆட்பட்டவர்.
ஒருவரிடம் கோடி கோடியாய்ப் பணம் பொருள் மாளிகைகள் வகைவகையாய் ஊர்திகள் ஏவலாட்கள் பலர் எனப் பலவாறு அடுக்கடுக்காய் செல்வவளம் உலகெங்கும் பரவிக் கொட்டிக் கிடக்கிறது. அவ்வளவு பணமிருந்தும் அதைச் செலவழிக்க விரும்பாமல் நல்ல உணவு உண்ணாது நல்ல ஆடை அணியாது வசதியற்ற வாழ்க்கை வாழ்வர். தன்னிடம் உதவி கேட்டு வருவார்க்கும் ஏதும் செய்யமாட்டார். இப்படித் தம்மிடம் இருக்கும் பொருளை பூதம் காப்பது போல் காப்போரிடம் உள்ள பொருள் இருந்தும் இல்லாததே.
பொருளால் அடையத் தக்க பயன் பிறர்க்குக் கொடுத்து மகிழ்தல் அல்லது தான் நுகர்ந்து இன்பம் பெறுதல். இந்த இரண்டும் பெறமுடியாதபோது பொருள் இருந்தாலும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ஒன்றுமில்லார் போலப் பயனிரண்டும் இழத்தலின் 'இல்' எனச் சொல்லப்பட்டது. கோடி கோடியாக இருந்தாலும், கொடாதானாகவும் நுகராதானாகவும் இருந்தால் அப்பொருளுக்கு அவன் உரிமை இழக்கிறான். பிறர்க்கீயாத பொருள், அதனை உடையானுக்கும் உரிமையுடையதன்று என்னும் கருத்தினை நாலடியார் பாடல் ஒன்று நகைச்சுவை கலந்து தருகிறது:
‘எனது எனது’ என்று இருக்கும் ஏழை பொருளை
‘எனது எனது’ என்று இருப்பன், யானும்; தனது ஆயின்
தானும் அதனை வழங்கான்; பயன் துவ்வான்;
யானும் அதனை அது
(நாலடியார் 276) இதன் திரண்ட கருத்தாவது: 'பணம் வைத்திருக்கும் 'ஏழை' ஒருவன் "எனது எனது" என்று சொல்லிக்கொண்டு வைத்திருக்கிறான். அவன் வைத்திருக்கும் பொருளை நானும் "எனது எனது" என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். எப்படி? அவன் வைத்திருக்கும் பொருளை அவனும் துய்ப்பதில்லை. பிறருக்கும் வழங்குவதில்லை. நானும் அவன் பொருளைத் துய்ப்பதில்லை. பிறருக்கும் வழங்குவதில்லை. இருவர் நிலையும் ஒன்றுதானே? தனக்கும் பயன்படாத, பிறருக்கும் பயன் தராத செல்வம் யாரிடம் இருந்தாலென்ன?'

'உண்டாயினும் இல்' என்ற தொடர், செல்வம் உண்டாயினும் அவை இன்மையோடொக்கும் என்ற பொருள் தருவது

பிறர்க்கு வழங்குதலும் தாம் துய்த்தலும் இல்லாதவர்க்கு, தொகுத்த பல கோடிப் பொருள் சேர்த்து வைத்தாலும் அவை யாவும் இல்லாதவனவே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தனக்கும் பிறர்க்கும் பயன்படாதது நன்றியில்செல்வம்தானே!

பொழிப்பு

பிறர்க்குக் கொடுப்பதும், தாம் துய்த்தலும் இல்லாதவர்க்குப் பல கோடி பொருள் உண்டாயினும் அவை யாவும் இல்லாதவனவே.