இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1004எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்

(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1004)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்கு உதவியாக வாழாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?

மணக்குடவர் உரை: ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?
இது புகழில்லையா மென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?
(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: பிறருக்கு ஒன்றும் உதவாதிருத்தலால், ஒருவரால் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவரால் நச்சப்படாஅதவன் எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ.

பதவுரை: எச்சம்-எஞ்சி நிற்பது, ஒழிந்து நிற்பது; என்று-என்பதாக; என்-யாது?; எண்ணும்-நினைக்கும்; கொல், ஓ- (ஐயப் பொருளில் வந்தவை); ஒருவரால்-ஒருவராலும்; நச்சப்படாஅதவன்-விரும்பப்படாதவன்.


எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?
மணக்குடவர் குறிப்புரை: இது புகழில்லையா மென்றது.
பரிப்பெருமாள்: தனக்குப் பின்பு நிற்குமென்று யாதினை எண்ணுமோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புகழில்லையா மென்றது.
பரிதி: எச்சம் என்று எண்ணவும் வேண்டுமே;
காலிங்கர்: குலமும் உருபும் குணமும் ஒழுக்கமும் புதல்வரும் பொருளும் பூமியும் என்னும் எவ்வெச்சமும் இவனிடத்து இவை எல்லாம் உளவேனும் ஒன்றும் உளதென்று கருதார் உலகத்தோர் ஒரு பயன் இல்லாமையினான்;
காலிங்கர் குறிப்புரை: குலம் உருபு குணம் ஒழுக்கம் புதல்வர் பொருள் பூமி என்னும் எச்சத்தினுள்ளும் இவன்கண் உள்ளதாம் எச்சம் இது என்று என் எண்ணுங்கொல்லோ இவ்வுலகம்; எனவே யாதொன்றும் உளதாக எண்ணாது என்றவாறு.
பரிமேலழகர்: தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின், அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லை என்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.

'தனக்குப் பின்பு நிற்குமென்று யாதினை எண்ணுமோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் எச்சத்திற்கு உள்ள பொருள்களைத் தொகுத்துக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனக்குப் பின் என்று எதனைக் கருதுகிறான்?', 'தான் இறந்தால் தனக்குப்பின் எஞ்சி நிற்பதாக (புகழாக) எதனைக் கருதுவானோ?', 'தனக்குப் பின்னால் தன்னுடைய மிச்சமாக எதை எண்ணுவானோ தெரியவில்லை', 'தனக்குப்பின் எஞ்சியிருப்பது என்னவென்று நினைப்பானோ தெரியவில்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் காலத்திற்குப்பின் எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? என்பது இப்பகுதியின் பொருள்.

ஒருவரால் நச்சப் படாஅ தவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன்.
பரிப்பெருமாள்: ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன்.
பரிதி: ஒருவருக்கும் கொடாத பாவியை என்றவாறு.
காலிங்கர்: இங்ஙனம் யாவராலும் யாது ஒன்றும் நச்சப்படாதபனிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்.

'ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவராலும் விரும்பப்படாத கஞ்சன்', 'பிறர்க்கு உதவாமையால் யாராலும் விரும்பப்படாதவன்', '(யாருக்கும் எதையும் கொடுத்ததில்லை என்பதால்) ஒருவராலும் விரும்பப்படாத (புகழற்ற) உலோபி', 'இறுகப் பிடிப்பதால் ஒருவராலும் விரும்பப் படாதவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர்க்கு உதவாமையால் ஒருவராலும் விரும்பப்படாத செல்வந்தன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறர்க்கு உதவாமையால் ஒருவராலும் விரும்பப்படாத செல்வந்தன் தன் காலத்திற்குப்பின் எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? என்பது பாடலின் பொருள்.
'எச்சம்' குறிப்பது என்ன?

யாருக்கும் எதற்கும் உதவாத செல்வந்தனுக்கு நற்பெயர் ஏதும் மிஞ்சி நிற்பதில்லை.

ஒரு பொருளும் கொடுத்துதவாதலால் யாராலும் விரும்பப்படாதவன் இறந்ததன் பின்னர் அவனுக்குச் சொல்லிக்கொள்ளும்படி என்ன இருக்கப் போகிறது? ஒன்றுமிருக்காது.
'ஒருவரால் நச்சப்படாஅதவன்' என்று மட்டுமே இக்குறள் சொல்கிறது. யார் எதனால் நச்சப்படாதவன் என்பது கூறப்படவில்லை, அதிகாரம் நோக்கி இது, யாருக்கும் உதவ மனமில்லாதவனாக இருப்பதால் ஒருவராலும் விரும்பப்படாத பெரும்செல்வம் உடையவனைக் குறிக்கும் என்பது பெறப்பட்டது.
பலருக்குப் பயன்படுதலால் எல்லோராலும் நச்சப்படும் செல்வத்தின் தன்மையை ஊருணி நீர் நிறைந்தற்றே..., பயன்மரம்...... (ஒப்புரவுஅறிதல் 215, 216) என்ற குறட்பாக்களில் குறித்த வள்ளுவர் இங்கு ஒருவராலும் நச்சப்படாதவன் என எதிர்மறையால் குறிப்பிடுகின்றார். தன்னிடமுள்ள பொருளைப் பிறர்க்கு ஈந்து உதவினால் புகழ் உண்டாகும். ஆனால் அவன் செல்வத்தை இறுகப் பற்றிக்கொள்பவனாக இருக்கிறான். அதனால்தான் விரும்பப்படாதவனாக உள்ளான். எனவே அச்செல்வந்தனுக்கு எஞ்சி நிற்பதற்கான புகழ் இல்லை. இறந்த பிறகு தனது என்று ஒன்றை விட்டுவிட்டுச் செல்ல எல்லாரது மனமும் விரும்பும். ஈயான் எதை அவ்வாறு விட்டுச் செல்ல எண்ணுவானோ? என வள்ளுவர் இரங்குகிறார்.

'எண்ணுமோ' என்பதற்கு நச்சப்படாதவன் எண்ணுவனோ என்று மற்றவர்கள் கூற, காலிங்கர், 'உலகம் எண்ணுமோ' என்கிறார். உலகம் எண்ணுமோ என்பதைக் காட்டிலும் 'விரும்பப்படாதவன் தான் எண்ணுமோ' என்பது சிறந்தது.

'எச்சம்' குறிப்பது என்ன?

'எச்சம்' என்ற சொல்லுக்குத் தனக்குப் பின்பு நிற்பது, தனக்குப் பின்பு நிற்கும், குலமும் உருபும் குணமும் ஒழுக்கமும் புதல்வரும் பொருளும் பூமியும் என்னும் எவ்வெச்சமும், தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பது, தான் செத்துப்போனபிறகு ஈண்டு ஒழிந்து நிற்பது, செத்தால் நமக்கு ஒழிந்து வருவது, தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது, தான் இறந்தபின் இங்கு தன் எச்சமாக நிற்பது, தான் செத்த பிறகு, தன்னுடன் வருவது, தனக்குப் பின், தான் இறந்தால் தனக்குப்பின் எஞ்சி நிற்பதாக (புகழாக), தனக்குப் பின்னால் தன்னுடைய மிச்சம், தன் காலத்தின் பின்னே (பழியை அன்றி) எஞ்சி நிற்பது, தனக்குப்பின் எஞ்சியிருப்பது, தனக்குப் பின்னர் இங்கு ஒழிந்து நிற்பது, தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது, தனக்குப்பின் வாழ்ந்த அடையாளம், தனக்குப் பின் தன்னை மகிழ்ச்சியுடன் நினைப்பிக்குமாறு எஞ்சி நிற்பது, இறந்துபோகும்பொழுது தனக்கு மிகுதியாக வைத்திருப்பது என்றவாறு பொருள் உரைத்தனர்.

பொருள் பொதிந்த வாழ்வு நடத்தும் மாந்தர் வாழும்காலத்தில் தாம் மறைந்தபின் உலகம் தம்மைப் பற்றி என்ன எண்ணும் என்பதுபற்றி அவ்வப்போது நினைப்பர். 'குடும்பப்பெயர் கெடாமல் வாழ்ந்து மறைந்தான்', 'கடைசி வரை பண்பு மாறாமல் வாழ்க்கை நடத்தினான்', 'தன்னிடம் பழகியவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தான்' 'பொதுநலச் சேவைகளில் விருப்புடன் ஈடுபட்டுப் பொருளும்கொடுத்தான்' போன்றவாறு தன்னைபற்றிப் பேசவேண்டும் என்ற நோக்கில் வாழ்ந்து உயிர் நீப்பர் இவர்கள். இதைத்தான் 'எச்சம்என்று எண்ணும்' என்பதாக இக்குறள் கூறுகிறது. வாழ்வில் ஒருவர் புரியும் நற்செயல்களே, அவர் வாழ்வு முடிந்த பின்னும் பேரும் புகழும் தரும். செல்வமுடையவன் என்ற பேறு பெற்றால், பலருக்கும் நன்மைகள் செய்து புகழை விட்டுச்செல்ல எத்தனையோ வாய்ப்புகள் உண்டு. பெரும்செல்வம் சேர்த்தவன் தான் வாழும்போது ஊராரும் உலகோரும் 'நல்ல உள்ளம் படைத்தவன், கொடையாளி, தனது செல்வத்தைப் பலருக்குப் பயன்பட ஈந்தவன்' என்று சொல்லும்படி வாழ்ந்தானானால், அந்தப் புகழ் எச்சமாக அவன் இறந்தபின்பும் நிலைத்து நிற்கும்.

எச்சம் என்ற சொல் வழித்தோன்றல்கள் (112), எஞ்சி நிற்பது (114), மிகும் பொருள்- புகழ் (238, 456), ஒழிவுகள்- முடிவுறாத, அரைகுறையான (674), ஒழிந்தன (1012) எனப் பலவேறு பொருள்களில் குறளில் ஆளப்பட்டுள்ளது. இங்கு தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும் (நடுவுநிலைமை 114 பொருள்: நடுவுநிலைமை உடையவர், நேர்மையற்றவர் என்பது அவரவர் இறப்பிற்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் அல்லது பழியால் அறியப்படும்) என்பதிலுள்ளது போல் பொருள் தருகிறது.

'எச்சம்' என்ற சொல் நின்று நிலைக்கும் நன்மையான புகழ் எனப்பொருள்படும்.

பிறர்க்கு உதவாமையால் ஒருவராலும் விரும்பப்படாத செல்வந்தன் தன் காலத்திற்குப்பின் எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நன்றியில்செல்வம் அதை உடையவனுக்கு எந்த ஒரு அடையாளமும் தராது.

பொழிப்பு

பிறர்க்கு உதவாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன் தன் காலத்திற்குப்பின் எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுகிறான்?