இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1003ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1003)

பொழிப்பு (மு வரதராசன்): சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்குப் பாரமே ஆகும்.

மணக்குடவர் உரை: பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர், தாம் பிறந்த நிலத்துக்குப் பாரமாவர்.
இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது.

பரிமேலழகர் உரை: ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம் - யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை - நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே.
(இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை.)

வ சுப மாணிக்கம் உரை: ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக்கொண்டு புகழ்விட்ட ஆடவர் பூமிக்குப் பாரம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை.

பதவுரை: ஈட்டம்-ஈட்டல், பொருள் தேடுதல், குவியல், ஈட்டுவோம், சேர்த்து வைத்தல்; இவறி-விரும்பி; இசை-புகழ்; வேண்டா-விரும்பாத; ஆடவர்-மக்கள்; தோற்றம்-பிறப்பு; நிலக்கு-நிலவுலகிற்கு, பூமிக்கு; பொறை-சுமை, பாரம்.


ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர் தோற்றம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர்;
பரிப்பெருமாள்: பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர் பிறத்தல்;
பரிதி: கீர்த்தியும் தானமும் கிருபையும் இல்லாதவர்;
காலிங்கர்: இங்ஙனம் பொருள் ஈட்டம் காரணமாக உலோபித்துப் புண்ணியதானம் புகழினை விரும்பாத மக்கட் பெரும்பாவியரானவர் இவ்விடத்து வந்து உதிக்கின்றது எல்லாம்;
பரிமேலழகர்: யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு;
பரிமேலழகர் குறிப்புரை: பிறப்பு என்றது அதற்கு உரிய உடம்பினை. [அதற்குரிய -பிறப்புக்குரிய]

'பொருளீட்டுதலை விரும்பிப் புகழை விரும்பாத மாந்தர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் சேர்த்து வைத்தலையே விரும்பி அதன் பயனாகிய புகழை விரும்பாத மக்களது பிறப்பு', 'பணத்தைச் சேர்த்து வைப்பதில் மிகுந்த ஆசை கொண்டு அதைச் செலவு செய்து புகழைத் தேடிக் கொள்ளாத மனிதர்கள்', 'தேடிய பொருளைச் செலவழியாது இறுகப்பிடித்து ஈகையால் வரும் புகழை வேண்டாத மனிதர் பிறந்திருந்தால்', 'சேர்த்து வைத்தல் ஒன்றையே கருதி பிறர்க்கு ஈவதனால் வரும் புகழை விரும்பாத ஆடவரின் பிறப்பு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள் தேடுவதையே விரும்பி ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக்கொண்டு புகழை வேண்டாத மாந்தரின் பிறவி வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

நிலக்குப் பொறை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் பிறந்த நிலத்துக்குப் பாரமாவர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது.
பரிப்பெருமாள்: நிலத்துக்குப் பாரமாகும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இத்தன்மையார் பிறப்பதினும் பிறவாமை நன்று என்றது.
பரிதி: நிலத்திற்குப் பாரம் என்றவாறு.
காலிங்கர்: இப்பூமிக்கு ஒரு பாரமாம் இத்துணை என்றவாறு.
பரிமேலழகர்: நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே.
பரிமேலழகர் குறிப்புரை: இசை, இருமைக்கும் உறுதியாய அறமாகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார்.

'நிலத்துக்குப் பாரமாகும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'ஈட்டல் துன்பத்தையும், காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மைபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார்' எனக் கூடுதல் விளக்கம் தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலத்திற்குச் சுமையாகும்', 'பிறப்பது வெறும் பூமி பாரம்தான்', 'பூமிக்குப் பாரமே', 'நிலத்திற்குப் பாரமாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நிலத்திற்குச் சுமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள் தேடுவதையே விரும்பி புகழை வேண்டாத மாந்தரின் பிறவி வாழ்க்கை நிலத்திற்குச் சுமையாகும் என்பது பாடலின் பொருள்.
'ஈட்டம்' என்றால் என்ன?

ஈட்டிய செல்வச் சுமையை ஈந்து குறைக்கலாமே!

மேன்மேலும் பொருளைத் தேடிச் சேர்த்து வைப்பதிலே விருப்பங் கொண்டு பிறர்க்கு உதவுவதால் வரும் புகழை விரும்பாத மக்களது வாழ்வு, இந்நிலவுலகத்துக்கு ஒரு சுமை ஆகும்.
பொருள் சேர்ப்பதற்காக மட்டுமே தான் பிறப்பெடுத்தது போன்று ஒருவன் அல்லும் பகலும் பொருள் பொருள் என்று ஓடியாடித் தேடி அலைந்து பெரும்பொருள் திரட்டுகிறான். அப்பொருளின் மேல் தீராத விருப்பங் கொண்டு அது தன்னைவிட்டு நீங்காதிருக்க வேண்டுமெனவே இறுகப் பற்றிக்கொண்டிருக்கின்றான். தேடிய பொருள் வெளியே செல்லாதவாறு காக்கவும் படாத பாடு படுகிறான். அணித்தார், உறவினர், நண்பர், ஊரார் எனப் பலரும் அவனிடம் உதவி நாடி வருகிறார்கள். அவர்கள் யாருக்குமே எந்த உதவியும் செய்ய விருப்பமில்லாதிருக்கிறான் அவன். பெற்ற பொருளை அறத்தொடு பயன்படுத்த வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. பிறர்நலம் பேணும் கடமை தனக்கு இருப்பதாக அவன் எண்ணுவதே இல்லை. பிறர்க்குக் கொடுத்து மகிழ்வுறுத்தலின் மூலம் வரும் புகழை வேண்டாதவனாயிருக்கிறான். அத்தகையவனின் பிறப்பு இப்பூமிக்குச் சுமை தவிர வேறொன்றுமில்லை என்கிறார் வள்ளுவர்.

உலகில் மிகையாகப் பொருளீட்டுபவர்கள் அப்பொருளால் ஈத்துவந்து புகழ் நாட வேண்டிய எண்ணமில்லாவிடில் அவர்கள் இப்பூமிக்குப் 'பாரம்' என்று என்று வள்ளுவர் இங்குக். கடுமையாகக் கூறுகின்றார். அவர் கூற்றுப்படி அவர்கள் உலகில் வாழ்வதற்கே உரிமையில்லாதவர்கள் ஆகின்றார்கள்.
'இவறி' என்பதற்கு 'விரும்பி' என்ற பொருள் உண்டானாலும் இங்கு விருப்பத்தின் மிகுதியாலான இறுகப்பற்றுதல் என்ற பொருளே பொருந்தும்.
'இசை வேண்டா ஆடவர்' எனக் குறித்தது வாழ்வில் தேட வேண்டிய புகழினை விரும்பாதவன் என்பதைச் சொல்வதற்காக. பொருட்செல்வம் ஈட்டுவது உலகத்து ஆடவர் மேற்றாய் வருவது என்பதினும் உலகத்து மக்கள் மேல் வருவது எனக் கொள்ளல் நன்று.
'நிலக்குப் பொறை' என்றதால் பொருளை இறுக்கிவைத்துக் கொண்டவன் உயிரோடு இருக்கும்வரை அது அவனால் அடைக்கப்பட்டு யாருக்கும் பயனில்லாததாக இருப்பதால் அவன் இவ்வுலகில் வாழ்வதே வீண் என்பது புலனாயிற்று.
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (புகழ் 239 பொருள்: புகழ் இல்லாத உடலைத் தாங்கிய பூமி, பழியற்ற வள ஆதாரங்களில் குறைவுபடும்) என்னும் குறளையும் இணைத்து எண்ணலாம்.

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை (புறங்கூறாமை 189 பொருள்: யாரும் இல்லாதவாறு பார்த்து ஒருவரைப் பற்றி இகழ்ந்துரைப்பானது உடல் சுமையை அறம் கருதி இவ்வுலகம் சுமக்கின்றது போலும்) எனப் புறங்கூறுபவரையும், கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை (வெருவந்த செய்யாமை 570 பொருள்: கடுங்கோல் ஆட்சி அறிவில்லாதாரை ஈர்க்கும்; பூமிக்குச் சுமையாவது அதுவன்றி வேறொன்று இல்லை) எனக் கொடுங்கோலாட்சியையும், கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை (கண்ணோட்டம் 572 பொருள்: உலக இயக்கம் கண்ணோட்டத்தில் நிகழ்கிறது; அப்பண்பு இல்லாதார் உள்ளமை நிலத்திற்குச் சுமையாகும்) எனக் கண்ணோட்டம் இல்லாதவர்களையும், சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை (சான்றாண்மை 990 பொருள்: சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் பெரிய பூமியும் சுமையைத் தாங்க இயலாது போம்) எனப் பண்பு நலன்களிலிருந்து வழுவிய சான்றோர்களையும் உலகத்திற்குச் சுமை எனப் பிற இடங்களில் குறள் கூறும்.

'ஒவ்வொரு குறளிலும் ஏழு சீர் உண்டு. இது யாப்பிலக்கணத்தில் குறள் வெண்பாவிற்கு வரையறுத்த இலக்கணவிதி. இந்தப்பாட்டில் ஆறாவது சீர்-நிலக்கு என்பதைக் கூர்ந்து கவனித்தால் அது குழந்தைபேசும் மழலை போல் தோன்றும். குறளில் அது ஒரு செய்யுள் விகாரம். அழகிய குறள் இலக்கணத்துக்கு இடையூறு வராமல் காப்பதற்கு நிலத்துக்கு என்ற மூவசைச் சொல்லை வள்ளுவர் துணிந்து தவிர்த்தார்' என்று 'நிலக்கு' என்ற சொல் ஆளப்பட்டதற்கு விளக்கம் தருவார் கருவை பழனிசாமி.

'ஈட்டம்' என்றால் என்ன?

'ஈட்டம்' என்ற சொல்லுக்குப் பொருளீட்டுதல், பொருள் ஈட்டம், யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று பொருளினது ஈட்டல், 'யாம் வெகுவாகப் பொருள் தேட வேண்டு' மென்று நினைத்துப் பொருள் தேடிவைத்தல், பொருள் தேடுதல், சேர்த்து வைப்பது, பிறரினும் கூடுதலாகச் செல்வத்தை ஈட்ட வேண்டுமென்று அதனை ஈட்டுதல், பொருள் சேர்ப்பது, ஈட்டிய பொருள், பொருள் சேர்த்து வைத்தல், பணத்தைச் சேர்த்து வைப்பது, பொருள் தேடுவது, தேடிய பொருளைச் செலவழியாதிருத்தல், சேர்த்து வைத்தல் ஒன்றையே கருதுதல், பொருளைச் சேர்த்து வைப்பது, பிறரொடு போட்டியிட்டுப் பெரும்பொரு ளீட்டுவது, பொருளைச் சேகரித்துப் பயன்படுத்தாது என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஈட்டம் என்ற சொல்லுக்கு நேர்பொருள் ஈட்டுதல் அதாவது பொருளீட்டுதல் என்பது. இதற்கு மற்றவரினும் தான் பெரும் பொருள் ஈட்டுதும் எனப் பொருளினது ஈட்டல் என்றவாறு பொருளுரைத்தார் பரிமேலழகர். சி இலக்குவனார் 'சேர்த்து வைத்தல் ஒன்றையே கருதி' என உரை செய்தார். ஈட்டம் என்பதற்குப் பொருளைத் திரட்டுதல் என்றும் பொருள் கூறினர்.
ஈட்டம் என்னும் சொல் பொருளொன்றினையே விரும்புதல் என்னும் செல்வரின் கீழான நோக்கத்தினைத் தெரிவிப்பதாக உள்ளது. தனக்குப் புகழ் தரும் நல்ல செயல்களைச் செய்ய, தான் சேமித்த செல்வத்தைப் பயன்படுத்தாமல், மேலும் மேலும் செல்வம் சேர்ப்பதே, தன் குறிக்கோளாக வாழுபவர் பற்றியது இப்பாடல். இச்சொல் பொருளீட்டிச் சேர்த்து வைப்பதைக் குறிப்பது.

'ஈட்டம்' என்ற சொல் ஈட்டுதல் ஒன்றையே குறியாகக்கொள்ளல் என்ற பொருள் தரும்.

பொருள் தேடுவதையே விரும்பி புகழை வேண்டாத மாந்தரின் பிறவி வாழ்க்கை நிலத்திற்குச் சுமையாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொருள் மட்டுமே போதும்; புகழ் வேண்டாம் என்பவனது ஈட்டம் நன்றியில்செல்வம்.

பொழிப்பு

பொருள் சேர்த்து வைத்தலையே விரும்பி புகழை விரும்பாத மக்களது பிறப்பு நிலத்திற்குச் சுமையாகும்.