இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1002பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

(அதிகாரம்:நன்றியில்செல்வம் குறள் எண்:1002)

பொழிப்பு (மு வரதராசன்): பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கும் ஒன்றும் கொடுக்காமல் இறுகப் பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

மணக்குடவர் உரை: பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபஞ் செய்கின்ற மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம்.
இது தீக்கதியுள் உய்க்குமென்றது.

பரிமேலழகர் உரை: பொருளான் எல்லாம் ஆம் என்று - பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான் - பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம் - ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம்.
(இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.)

சி இலக்குவனார் உரை: பொருளால் எல்லாம் உண்டாகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடாது சேர்த்து வைக்கும் மயக்க அறிவினால் பிறப்பு மாட்சிமையில்லாது போய்விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருளான் எல்லாம் ஆம் என்று ஈயாது இவறும் மருளான் மாணாப் பிறப்பு ஆம்.

பதவுரை: பொருளான்-பொருளினாலே; எல்லாம் ஆம்-அனைத்தும் ஆகும்; என்று-என்பதாக; ஈயாது-கொடுக்காமல்; இவறும்-பற்றுள்ளஞ் செய்யும்; மருளான்-மயக்கத்தால்; ஆம்-ஆகும்; மாணா-நிறைதலில்லாத; பிறப்பு-தோற்றம்.


பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது உலோபஞ் செய்கின்ற;
பரிப்பெருமாள்: பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாமென்று ஈயாதே உலோபுகின்ற;
பரிதி: பொருளினாலே தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் எல்லாம்; இதன்றியில் ஈயாத குணத்தினாலே;
காலிங்கர்: நாம் படைத்த பொருளானே உள ஆம் நமக்கு எல்லா நன்மையும் என்று இங்ஙனம் கருதிப் பிறர்க்கு ஈயாது உலோபிக்கும்;
பரிமேலழகர்: பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்றறிந்து அதனை ஈட்டி, பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும்; [அதனை-அப்பொருளை]

'பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாமென்று பிறர்க்கு யாதொன்றும் ஈயாது பற்றுள்ளம் செய்யும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாம் பொருளால் ஆகும் என்று கொடாது இறுக்கிய', 'பொருளினால் எல்லாம் உண்டாகும் என்று எண்ணி அதனை ஈட்டிப் பிறர்க்குக் கொடுக்காமல் பொருளில் பற்றுள்ளம் கொண்டொழுகும்', 'பணமிருந்தால் போதும் என்று அதை எதற்காகவும் யாரிடத்தும் கொடுக்காமல் இறுக்கி வைத்துக் கொண்டு உலோபம் செய்கின்ற', 'பொருளினாலே எல்லாஞ் செய்தல் கூடும் என்று நினைத்து ஈகையில்லாது அதன்கட் பற்றுவைக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருளினாலே எல்லாஞ் செய்தல் இயலும் என்று எண்ணி யாருக்கும் கொடுக்காமல் இறுக்கி வைத்துக் கொண்டிருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

மருளானாம் மாணாப் பிறப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது தீக்கதியுள் உய்க்குமென்றது.
பரிப்பெருமாள்: மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தீக்கதியுள் உய்க்குமென்றது.
பரிதி: பிறப்பு உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மதி மருட்சியானே உளதாம் மாட்சி இல்லாத பிறப்பு; காலிங்கர் குறிப்புரை: எனவே இதனான் நரக யோனியும் திருக்கும் பிறவும் ஆகிய கடையான பிறப்பு உளதாம், இவர் ஈட்டிய பொருள் வெறும் பாவப் படைப்பு ஆகலான். [நரகயோனி- நரகத்தில் பிறத்தல்; திருக்கும்-மாறுபாடு]
பரிமேலழகர்: மயக்கத்தாலே ஒருவனுக்கு நிறைதலில்லாத பேய்ப்பிறப்பு உண்டாம். [நிறைதலில்லாத - மனநிறைவில்லாத, மன அமைதி இல்லாத]
பரிமேலழகர் குறிப்புரை: இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன் உண்டாய அறிவு பின் மயங்குதலின், 'மருள்' என்றும், பொருளுண்டாயிருக்கப் பிறர் பசி கண்டிருந்த தீவினைபற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்து வருந்தும் பிறப்பு உளதாம் என்றும் கூறினார்.

'மயக்கத்தினாலே மாட்சிமையில்லாத பிறப்பு உண்டாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'பேய்ப்பிறப்பு உண்டாம்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேதைக்கு இழிபிறப்பு உண்டாகும்', 'மயக்க அறிவினால் அருவனுக்குக் கூன், குருடு, செவிடு முதலிய சிறப்பில்லாத பிறப்புக்கள் உண்டாகும். (மாணாப்பிறப்பு-பேய்ப்பிறப்பு எனினும் ஆம்.)', 'புத்தி கெட்டவன் மனிதருக்குள் சிறப்பற்ற பிறவியானவன்', 'மயக்கத்தினாலே சிறப்பில்லாத பிறப்பு உளதாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மயக்கத்தினாலே வாழ்க்கை மாட்சிமையில்லாது போய்விடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருளானாம் எல்லாம் என்று எண்ணி யாருக்கும் கொடுக்காமல் இறுக்கி வைத்துக் கொண்டிருக்கும் மயக்கத்தினாலே வாழ்க்கை மாட்சிமையில்லாது போய்விடும் என்பது பாடலின் பொருள்.
'பொருளானாம் எல்லாம்' குறிப்பது என்ன?

கைப்பொருள் எல்லாம் செய்யவல்லது என்று அதை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்காதே.

பொருளாலே எல்லாம் முடியக்கூடும் என்று எண்ணி அதனை எவருக்கும் கொடாமல் இறுகப்பற்றிக்கொள்ளும் மயக்கத்தினால் வாழ்வு சிறப்பற்றுப் போய்விடும்.
எல்லாம் பொருளால் செய்யமுடியும்; எனவே செல்வத்தை வெளியில்விடாமல் தம்கட்டுக்குள் வைத்துவிட்டால் மட்டும் போதும் என்று ஒருவர்க்கும் உதவாமல் சேர்த்துவைப்பவர் பற்றிய பாடல் இது. பொருள் எல்லாம் செய்யவல்லது; அதை நழுவவிட்டால் வலியிழந்து போவோம் என எண்ணி அதனைக் கெட்டியாகப் பற்றிக்கொள்வதை மயக்கம் என அழைக்கிறார் வள்ளுவர். இவ்வதிகாரத்து மற்ற பாடல்கள் போல இதுவும் பெருஞ்செல்வம் பற்றியதுவே. பெரும்பொருள் சேர்த்தவர்களில் சிலர் தாம் வைத்துள்ள பொருளினாலேதான் தனக்கு எல்லாமே; அப்பொருளால் தான் எதையும் செய்யமுடியும். எனவே அதை எந்த வழியிலும் குறையவிடக்கூடாது என எண்ணி யாருக்கும் தெரியாதவாறு மறைவிடத்தில் வைப்பர். அதைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்துதவ மனமில்லாமல் பூட்டியே வைத்திருப்பர். இத்தகைய மாந்தர் வாழ்க்கை சிறப்புறாமலே முடிவுறும்.

இக்குறளில் காணப்படும் ஈற்றடியை மாறாமல் கொண்ட மற்றொரு பாடல்: பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு (மெய்யுணர்தல் 351 பொருள்: பொருள்கள் அல்லாதனவற்றை பொருள்கள் என்று அறியும் மயக்கத்தினால் உளதாம் மாட்சிமையற்ற வாழ்க்கை) என்பது. முன்பு மெய்யுணர்தல் பெறாத மருளானாம் மாணாப் பிறப்புபற்றிச் சொல்லப்பட்டது. இங்கு பொருள்பயன் அறியாத மருளானாம் மாணாப் பிறப்பு பேசப்படுகிறது.
நிறைந்த பொருள் பெற்றவனிடம் இருக்கும் பொருள் அவன் புகழ் பெறுதற்குத் துணையாதல் வேண்டும். பொருளுடையவனுக்கு அப்புகழ் இயல்பாக வருகின்ற வழி ‘ஈகை’ என்பதனாலாகும். ஈகை என்பது வேண்டி வருவோர்க்கு மனமுவந்து பொருள் கொடுப்பதாம். பொருள் படைத்தவர்கள் மற்றவர்கட்கு உளமாற உதவி செய்து வாழ வேண்டும். செல்வத்தை பெருமளவில் சேர்த்து வைத்துக் கொண்டு எவர்க்கும் ஈயாதவனாக வாழ்வதால் இழிபிறவி என்னும் பெயர்தான் கிடைக்கும் என்கிறார் வள்ளுவர்

மாணாப் பிறப்பு என்பதற்கு மாட்சிமை யில்லாத பிறப்பு (தீக்கதி), பேய்ப் பிறப்பு, நரக யோனியும் திருக்கும் பிறவும் ஆகிய கடையான பிறப்பு, அமைதி இல்லாத வாழ்க்கை, மக்களுள் இகழத்தக்க பிறவி, தனக்குப் பிறக்கும் குழந்தைக்கும் தீதாய்விடும், சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும், கூனும் குறளும் ஊமுஞ் செவிடும், மாவும் மருளும் என்னும் எண்பேரெச்சமும் அவியுமாம், பெருமையில்லா மாறாத துயர் பிறக்க வழி பிறக்கும் எனப் பலவாறாக உரையாளர்கள் பொருள் கூறினர்.
இக்குறளிலுள்ள பிறப்பு என்ற சொல்லுக்கு இனிவரும் பிறப்பு எனப் பொருள் கொள்ளாமல் அது இப்பிறப்பு குறித்ததாகக் கொள்வதே சிறப்பு. அது பிறத்தல்-வாழ்தல்-மறைதல் இவற்றைச் சொல்வது. மாணாப்பிறப்பு என்பது இகழத்தக்க வாழ்க்கை எனப்பொருள்படும்.
மருள் என்பது மயக்கம் என்ற பொருள் தருவது. பிறர்க்கு ஈதலால் செல்வம் குறைந்து ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுவோம் எனக் கருதும் மயக்க உணர்வு பற்றியது.

'பொருளானாம் எல்லாம்' குறிப்பது என்ன?

'பொருளானாம் எல்லாம்' என்றதற்குப் பொருளினாலே யெல்லாச்சிறப்பும் எய்தலாம், பொருளினாலே தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் எல்லாம், நாம் படைத்த பொருளானே உள ஆம் நமக்கு எல்லா நன்மையும், பொருளொன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம், பொருளொன்றுண்டானால் அதாலே எல்லாம் உண்டு, பொருளால் எல்லாம் ஆகும், பொருட்செல்வம் ஒன்று இருந்தால் எல்லா நலன்களும் அதனால் உண்டாம், கைப்பொருளால் எல்லாம் ஆம், எல்லாம் பொருளால் ஆகும், பணமிருந்தால் போதும், விரும்பும் எல்லாமும் பொருளால் ஆகும், பொருளினாலே எல்லாஞ் செய்தல் கூடும், பொருளால் எல்லாம் உண்டாகும், பொருளாலே எல்லாம் முடியக்கூடும், எல்லாவற்றையும் பொருளால் செய்யமுடியும், செல்வமொன்று மட்டுமிருந்தால் அதனால் எல்லாக் கருமமும் ஆகும், பொருளினால்தான் எல்லாப் பெருமைகளும் உண்டு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பொருள் ஆற்றல் படைத்தது. அதனைப் பெற்றவன் உலகத்தில் எதையும் செய்துமுடிக்கமுடியும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை இவையனைத்தும் உண்மைதாம். எனவே பொருள் தேடுதல் வேண்டும். பொருள் ஈட்ட நாட்டமில்லாமல் எப்படியேனும் இருந்திடுவோம் என்று நினைப்பவர்களுக்கு இவ்வுலகில் வாழ இடமில்லை. 'பணம் பத்தும் செய்யும்', ‘எல்லாம் பணத்தினாலேதான்’ என்று நாம் வழக்கில் சொல்வதெல்லாம் செல்வத்தினுடைய சிறப்பினை உணர்த்துவதற்குத்தான். ஆனால் அப்படிச் சொல்லிக்கொண்டே யாருக்கும் ஏதும் உதவாமல் வாழ்வு நடத்தும் செல்வரை வள்ளுவர் மிகவும் கடிகிறார்.
செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. ஆயினும் பொருளுடைமையினாலேயே எல்லாம் ஆகிவிடாது. அது பொருளைப் பயன்படுத்தும் வகையினாலேயே அமையும். ஒருவன் சேர்த்த பெரும்பொருள் அவனது தனி முயற்சியால் மட்டும் வந்துவிடாது; பலரது சேர்க்கையினாலும் மற்றவர்களுக்குக் கிட்டாத வாய்ப்புக்களாலும் வந்ததுதான் அது என்ற எண்ணம் அவன் சிந்தையில் உறைக்கவேண்டும். அப்பொழுதுதான் அவன் ஈட்டிய செல்வம் பலருக்கும் பயன்பட வேண்டும் என்கின்ற கடமையுணர்ச்சி கொள்வான்.

பொருளை ஈட்டுபவர் கையில் பொருள் புழங்கத் தொடங்கியவுடன் பொருளின் பயனைவிடப் பொருளுக்கே முதன்மையான இடத்தைக் கொடுத்து- மற்றவர்களுக்குக் கொடுத்துதவாமல்- பொருளைப் பற்றிக்கொண்டு பாதுகாக்கத் தொடங்கி விடுகின்றனர். பொருளே முடிவன்று; அறம், இன்பம் என்கிற முடிவுகளை அடைவதற்குரிய கருவியே பொருள் என்பதை மறந்துவிடுகின்றனர் அவர்கள். இவ்வுலகில் பிறந்து வாழ்வதே பொருளினைச் சேர்த்து, அதை அடைகாப்பதுபோல் காப்பாற்றிப் பின் அந்நிலையிலேயே மாண்டுபோவதற்கே என்று இருப்பவனே 'பொருளானாம் எல்லாம்' என்னும் மனநிலை கொண்டவன். பொருள் ஒரு வெறும் கருவி, இலக்கல்ல என்பதை அறியாமல் எல்லாமே பொருளால்தான் இயலும் என்ற தவறான கருத்தில், அதனை ஈட்டி வைத்து மற்றவர்களுக்குப் பயன்படும் முறையில் தாராது, அப்பொருளைப் பதுக்கி வைக்கும் இயல்பு, ஒரு மயக்கநிலை ஆகும். எல்லாம் பொருளால்தான் ஆகும் என்பது இன்னொரு வகை மருள்.
வாழ்வியலுக்குத் துணையாகும் பொருளை வாழ்க்கையின் முடிந்த குறிக்கோளாகக் கொள்ளுதல் தவறு என்பது சொல்லப்பட்டது. திரண்ட செல்வத்தை ஒருவன் சேர்ப்பது முறையேயானாலும் அப்பொருளைப் பிறர் எவர்க்கும் பயன் தராத வகையில் பூட்டிவைப்பது முறையன்று. பொருளால் எல்லாம் ஆகும் என்று, அதனை எவர்க்கும் ஈயாது காத்தல் தவறு. அவ்விதம் நடந்துகொண்டால் அது மாண்பற்ற வாழ்வாகவே முடியும்.

பொருளினாலே எல்லாஞ் செய்தல் இயலும் என்று எண்ணி யாருக்கும் கொடுக்காமல் இறுக்கி வைத்துக் கொண்டிருக்கும் மயக்கத்தினாலே வாழ்க்கை மாட்சிமையில்லாது போய்விடும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஈட்டியதை எவர்க்கும் ஈயாமல் புதைத்துவிட்டால் அது நன்றியில்செல்வம்.

பொழிப்பு

பொருளினாலே எல்லாம் செய்தல் இயலும் என்று எண்ணி கொடாது இறுக்கி வைத்துக் கொண்டிருக்கும் மயக்க அறிவினால் பிறப்பு மாட்சிமையில்லாது போய்விடும்