இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1001வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

(அதிகாரம்:நன்றியில் செல்வம் குறள் எண்:1001)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நுகராமல் இறந்துபோனால் அவன் அந்தப் பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

மணக்குடவர் உரை: இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின் செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை.
இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது.

பரிமேலழகர் உரை: வாய்சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான் - தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; செத்தான் செயக்கிடந்தது இல் - உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான்.
('வைத்தான்' என்பது முற்றெச்சம், உண்ணுதல்: அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி. அதன்கண் அவனாற் செய்யக்கிடந்ததோர் உரிமையில்லையாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும், இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: வீடு நிறைந்த பெருஞ் செல்வத்தை ஒருவன் தேடி வைத்தாலும், தான் அதனை நுகராவிடின் அவன் செத்தவனே; அப் பொருள் கொண்டு அவன் செய்தற்குரியது யாதும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான், செத்தான் செயக்கிடந்தது இல்.

பதவுரை: வைத்தான்-(சேமித்து) வைத்தான்; வாய்-இடம், வாயில், வாய்ப்பு; சான்ற-நிறைந்துள்ள, நிரம்பிய; பெரும்-மிக்க; பொருள்-உடைமை; அஃது-அது; உண்ணான்-நுகராதவன்; செத்தான்-இறந்தவன்; செய-செய்ய; கிடந்தது-கூடியது; இல்-இல்லை.


வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின்;
பரிப்பெருமாள்: இடம் நிறைந்த பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின்;
பரிதி: அறஞ்செய்யான்; தான் உண்ணான்; புதைத்து வைத்து;
காலிங்கர்: வாய்ப்பு அமைந்த பெரும்பொருள் ஈட்டி வைத்தான் யாவன்; அவன் அதுகொண்டு அனுபவியானாகில்;
பரிமேலழகர்: தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; [மனையகலம் - வீட்டின் இடம்; ஈட்டி வைத்து -சேமித்து வைத்து]
பரிமேலழகர் குறிப்புரை: 'வைத்தான்' என்பது முற்றெச்சம், உண்ணுதல்: அதனான் ஐம்புலன்களையும் நுகர்தல். [ஐம்புலன்கள்- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தும்]

இடம் நிறைந்த/ வாய்ப்பு அமைந்த/தன் மனை அகலமெல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும்பொருளை ஈட்டிவைத்தானொருவன் அதனை நுகரானாயின் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இடமெல்லாம் பெரும்பொருளை ஈட்டிவைத்து உண்ணாது', 'இல்லத்தின் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதனை உண்டு மகிழாதவன்', 'மிகப் பெரிய செல்வம் உடையவனாக இருந்தும் (பிறருக்கும் கொடுக்காமல்) தானும் அனுபவிக்காமல்', 'தன் வீட்டு இடம் முழுவதும் நிறைதற்கு ஏதுவாய பெரும் பொருளை ஈட்டி வைத்தானாய் அதனைப் பயன்படுத்தாதவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இல்லத்தின் வாயில்வரை பெரும்பொருளை ஈட்டிவைத்து அதனை நுகராதவன் என்பது இப்பகுதியின் பொருள்.

செத்தான் செயக்கிடந்தது இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது.
பரிப்பெருமாள்: செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஈட்டினானாயினும் தானொருபயன் பெறானென்றது.
பரிதி: செத்தான்; அதில் என்ன பயன்? தான் உள்ளபோதே தன்மம்செய்து உண்ணக்கடவன் என்றவாறு.
காலிங்கர்: அவன் செத்தவனே என்பதனால் அவன் வேறு நடைப்பிணமே; என் எனின் பிணமும் தான் அறிந்து ஒன்று செய்யப்படுவது ஓர் செய்தி இல்லை; இவனும் அன்னன் ஆகலான் இவன் தன் குறிப்பினால் ஒரு செய்தி செயக்கிடந்தது இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வாய் சான்ற பெரும் பொருளை வைத்தானொருவன் அதனையுண்ணாது செத்த வழி. அதன்கண் அவனாற் செய்யக்கிடந்ததோர் உரிமையில்லையாகலான், வையாது பெற்றபொழுதே நுகர்க', என்று உரைப்பினும் அமையும், இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படலின்மை கூறப்பட்டது. [இதற்கு-இவ்வுரைக்கு]

'செத்தான்; அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர் பரிதி 'செத்தான்; அதில் என்ன பயன்? தான் உள்ளபோதே தன்மம்செய்து உண்ணக்கடவன்' என்றார். காலிங்கர் 'அவன் செத்தவனே என்பதனால் அவன் வேறு நடைப்பிணமே; என் எனின் பிணமும் தான் அறிந்து ஒன்று செய்யப்படுவது ஓர் செய்தி இல்லை' என்றார். பரிமேலழகர் 'உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான்' என்று பொருளுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செத்தவனுக்கு உரிமை யாதுமில்லை', 'உயிருடன் இருந்தாலும் செத்தான் ஆவான். ஏனெனில், அவனுக்கு அப்பொருளிடத்துச் செய்யக்கூடிய உரிமை ஒன்றுமில்லை ஆதலால்', 'செத்துப் போகிறவன், உலகத்தில் செய்தது ஒன்றுமில்லை (எனப்படுவதுதான் நன்றியில் செல்வம்)', 'அதனைக் கொண்டு செய்வது ஒன்றும் இன்மையின், செத்தவனாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செத்துப்போனால் அவனுக்கு அப்பொருளில் உரிமை ஒன்றும் இல்லையே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இல்லத்தின் வாயில்வரை பெரும்பொருளைக் குவித்துவைத்து அதனை நுகராதவன் செத்துப்போனால் அவனுக்கு அப்பொருளில் உரிமை ஒன்றும் இல்லையே என்பது பாடலின் பொருள்.
'செத்தான் செயக்கிடந்தது இல்' குறிப்பது என்ன?

இவ்வளவு பெரும் செல்வத்தை வைத்துக்கொண்டு உண்ணாமல் கொள்ளாமல் இருக்கிறாயே! நாளை நீ செத்துப்போனால் அச்செல்வத்தை கூடவே கொண்டுபோகப்போகிறாயா என்ன?

மனை முழுதும் நிறைய ஒருவன் பெரும்பொருளை சேர்த்து வைத்திருந்து, அதனைத் துய்க்காமல் இறந்து போவானானால் அந்தப் பொருளால் அவன் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை.
சேர்த்த பொருளைத் தான் ஒன்றும் நுகராமல் கட்டிக் காத்துக்கொண்டிருப்பவன் பற்றிய பாடல் இது. உண்ணாதும் உறங்காதும் பெரும்பொருள் ஈட்டியவன் தன்னைப் பேணிக்கொள்ளாமல் சேர்த்து வைத்ததைக் காப்பதில் மட்டும் குறியாக இருக்கிறான். தன்னைக் காத்துக்கொள்ளாது இகழ்பவனை பேதை என்றுதான் குறள் சொல்லும். இல்லம் முழுதும் நிறையப்பெற்ற பொருள் நுகர்வதற்கு இருந்தும், அவை குறைந்துபோய்விடுமே என்று அஞ்சி, தனக்கே ஊட்டிக் கொள்ள மறுப்பவன் உலகோர்க்கு என்ன செய்துவிடப் போகிறான்? அவன் இறந்தபின்னும் அப்பொருள் கொண்டு அவனால் ஏதும் செய்வானா? அவன் உரிமையோடு அந்தச் செல்வத்தைக் குறித்துச் செய்யக் கூடியது ஒன்றுமில்லை.

'உண்ணான்' என்றது ஐம்புலன்களையும் நுகரான் என்ற பொருளில் இங்கு உள்ளது.
செல்வத்தின் பயன், அது உடையானைப் பொறுத்து அமையும். பொருளீட்டல் என்பது உயிர்களின் நுகர்ச்சிப் பொருள்களைப் பெறுதற்கேயாம். உயிருடலொடு கூடிய வாழ்க்கையின் இயல்பு நுகர்தல், இன்புறுதல், இன்புறுத்தல் ஆகியன. பெரும்செல்வத்தைப் பெற்றவன் அதன் பயனைத் துய்க்காமல் இருப்பானாகில், அது யாருக்குத்தான் பயன்படப்போகிறது? பயனுடைய வாழ்க்கையே வாழ்க்கை. சமூகத்தில் பொருளீட்டம் இருக்க வேண்டும்; பொருள் துய்ப்பும் இருக்க வேண்டும்; பயனில் செல்வம் இருத்தலாகாது என்பது சொல்லப்படுகிறது. இவ்வாறு செல்வத்தின் துய்ப்பு நிலையை மறுக்கும் இயல்பை கடுமையாகச் சாடுகிறார் வள்ளுவர்.

'செத்தான் செயக்கிடந்தது இல்' குறிப்பது என்ன?

'செத்தான் செயக்கிடந்தது இல்' என்றதற்குச் செத்தான் அவன் பின்பு செய்யக்கிடந்தது யாது மில்லை, செத்தான் அதில் என்ன பயன்?, அவன் செத்தவனே என்பதனால் அவன் வேறு நடைப்பிணமே என் எனின் பிணமும் தான் அறிந்து ஒன்று செய்யப்படுவது ஓர் செய்தி இல்லை, உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக்கிடந்ததோர் உரிமை இன்மையான், பிராணனுடனே இருந்தாலும், செத்தவனோடொப்பான், இருந்துஞ் செத்தானாம் அவனால் செய்யக் கிடந்ததொரு உரிமையில் மாட்டாமையால் செத்தானாம், இறந்துபோனால் அவன் அந்தப் பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை, செத்துப் போனானாயின் பிறகு அச்செல்வத்தைப் பயன்படுத்தக்கூடிய எச்செயலும் அவனுக்கு இல்லை, செத்தான் என்றே கொள்ளுதல் வேண்டும் செல்வத்தின் பயனைத் துய்க்காமையினால் செத்தான் என்றார், செத்தவனுக்கு உரிமை யாதுமில்லை, உயிருடன் இருந்தாலும் செத்தான் ஆவான் ஏனெனில், அவனுக்கு அப்பொருளிடத்துச் செய்யக்கூடிய உரிமை ஒன்றுமில்லை ஆதலால், செத்துப் போகிறவன், உலகத்தில் செய்தது ஒன்றுமில்லை (எனப்படுவதுதான் நன்றியில் செல்வம்), உயிரோடு இருப்பினும் இறந்தவனே அப்பொருளால் செய்ய அமைந்த பயனுமில்லை, அவன் செத்தவனே அப் பொருள் கொண்டு அவன் செய்தற்குரியது யாதும் இல்லை, பயன்படுத்தாதவன் அதனைக் கொண்டு செய்வது ஒன்றும் இன்மையின் செத்தவனாவான், அனுபவிக்காமல் இறந்து போவானானால் அந்தப் பொருளால் அவனுக்குச் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை, செத்துப் போனால், அச் செல்வத்தால் யாது பயன்?, அந்தப் பொருளைப் பெற்றிருந்தும் வறியனாய் இழந்து இறந்தவனே ஆவான் ஏனென்றால் அவன் அப்பொருளால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்கு 'ஒருவன் பொருள் நிறையச் சேர்க்கிறான். ஆனால் தானும் நுகராமல் சாகிறான். செத்தவிடத்து அப்பொருள் கொண்டு அவன் என்ன செய்யமுடியும். ஒன்றுமில்லை' என்று ஒரு சாராரும் 'பெரும் பொருளைத் திரட்டியும், அதனை வாழ்க்கை நலத்திற்குப் பயன்படுத்தாது- உண்ணானாகிச் செத்தான்; அவன் வாழ்கின்றவனாயினும் செத்தவன் ஆவான்; அவன் செய்வது ஒன்றும் இல்லை' என இன்னொரு சாராரும் விளக்கம் தந்தனர். இவற்றுள் முன்னது சிறந்தது.

'செத்தான் செயக்கிடந்தது இல்' என்றதைச் 'செத்தான்; அவன் பின்பு செயக்கிடந்தது இல்லை' என வாசிக்கலாம்.

இல்லத்தின் வாயில்வரை பெரும்பொருளைக் குவித்துவைத்து அதனை நுகராதவன் செத்துப்போனால் அவனுக்கு அப்பொருளில் உரிமை ஒன்றும் இல்லையே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தான் துய்க்காது காக்கும்பொருளும் நன்றியில் செல்வமாம்.

பொழிப்பு

இல்லமெங்கும் பெரும்பொருளை ஈட்டிவைத்து உண்ணாது செத்துப்போனவனுக்கு அப்பொருளிடத்து உரிமை யாதுமில்லை