இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1000



பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந்து அற்று

(அதிகாரம்:பண்புடைமை குறள் எண்:1000)

பொழிப்பு (மு வரதராசன்): பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

மணக்குடவர் உரை: ................................................................

பரிமேலழகர் உரை: பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற் போலும்.
('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பண்பற்றவன் எய்திய பெருஞ்செல்வம் அவனது குற்றத்தால் ஒருவனுக்கும் பயன்படாது கெடுதல் நல்ல பால், வைத்திருந்த கலத்தின் குற்றத்தால் திரிந்து கெட்டாற் போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம் தீமையால் திரிந்துஅற்று.

பதவுரை: பண்பு-பண்பு; இலான்-இல்லாதவன்; பெற்ற-அடைந்த; பெரும்-மிக்க; செல்வம்-பொருள்மிகுதி; நன்-நல்ல; பால்-பால்; கலம்-ஏனம், பாண்டம், பாத்திரம்; தீமையால்-கெடுதியால், குற்றத்தால்; திரிந்து-கெட்டுப்போதல்; அற்று-அத்தன்மைத்து.


பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: குணமில்லாதவன் பெற்ற பெரிய செல்வம்;
பரிதி: பண்பில்லாதான் செல்வம் கனம்பெறப் பெற்றாலும் கெடும்;
காலிங்கர்: உலகத்துப் பண்பு கேடன் ஆனவன் பெற்றதோர் பெருஞ் செல்வமானது எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம் அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; [அக்குற்றத்தால் - பண்பில்லாத குற்றத்தால்]

'குணமில்லாதவன் பெற்ற பெரிய செல்வம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீயவன் பெற்ற செல்வம்', 'பண்புடைமை (என்ற அளவளாவி மகிழும்) குணம் இல்லாதவனிடத்திலுள்ள பெருஞ் செல்வம்', 'பண்பில்லாதவன் நல்வினைப் பயனால் பெற்ற பெருஞ்செல்வம்', 'நற்பண்பு இல்லாதவன் அடைந்த பெரிய செல்வம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.

நன்பால் கலந்தீமை யால்திரிந்து அற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: நல்ல பால் கலத்தின் தீமையால் கெட்டாற்போலத் தனக்கும் பிறர்க்கும் இன்பம் பயவாது கெடும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, பகுத்துண்ணாமையால் வரும் குற்றம் கூறிற்று.
பரிதி ('கரந்தீமை' பாடம்): அது எப்படியென்னில் பலர் கையில் பொல்லாங்கினாலே பால் கெட்டாற்போல என்றவாறு.
காலிங்கர்: முந்நிரைப் பாலினும் நன்பால் ஆவது ஆன்பால் அன்றே; மற்று அதுதான் ஒரு கலத்தினது குற்றத்தினால் தன் உருபு திரிந்த அத்தன்மைத்து. [ஆன்பால்-பசுவின்பால்]
காலிங்கர் குறிப்புரை: எனவே இவன் ஈட்டிய பொருளும் யாதும் ஒரு நன்மை இன்றிக் கெட்டுவிடும் என்றாவாறு.
பரிமேலழகர்: நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற் போலும். [இன்சுவைத்து- இனிய சுவை உடையது]
பரிமேலழகர் குறிப்புரை: 'கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது. [ஒத்த தொழில் - அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாத கெடுதல் என்றொத்த தொழில். படைக்கும்- பொருளைச் சம்பாதிக்கும்; அதிகாரப் பொருண்மையும் - அதிகாரத்தினது பொருளும்; தோற்றுவாய் - தொடக்கம்]

'நல்ல பால் கலத்தின் தீமையால் கெட்டாற்போலத் தனக்கும் பிறர்க்கும் இன்பம் பயவாது கெடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி கொண்ட பாட வேறுபாட்டால் 'பலர் கையில் பொல்லாங்கினாலே பால் கெட்டாற்போல' எனப் பொருள் தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல பால் தீய பாத்திரத்தால் முரிந்தது போலாம்', 'நல்ல பால் (அதை வார்த்து வைத்திருக்கும்) பாத்திரத்திலுள்ள அசுத்தத்தால் கெட்டுப் போவதைப் போல் (யாருக்கும் பயன்படாது)', 'நல்ல ஆவின்பால் அது வைக்கப்பட்ட கலத்தின் கெடுதியால் கெட்டாற்போலும்', 'நல்ல பால் அது வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் குற்றத்தால் கெட்டுப் போனதை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நல்ல பால் அது வைக்கப்பட்ட கலத்தின் கெடுதியால் கெட்டுப் போனது போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல பால் அது வைக்கப்பட்ட கலந்தீமையால் கெட்டுப் போனது போலும் என்பது பாடலின் பொருள்.
'கலந்தீமையால்' என்றால் என்ன?

பண்பில்லாதவனிடம் செல்வம் குவிந்தால் தீங்குதானே விளைவிப்பான்?

நல்ல குணம்இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், நல்ல பால் அது இடப்பெற்ற கலத்தின் குற்றத்தால் திரிந்துபோவது போன்று, கெட்டுப்போகும்.
பால் பருகச் சுவையாய் இருப்பதுடன் உடலுக்கு நலம் தருவதுமாகும். உணவு, மருந்து போன்ற நன்மைகள் அளிக்கக் கூடியது. ஆனால், அந்தப்பாலை ஊற்றி வைத்திருக்கும் ஏனம் தூய்மையற்றதாக இருந்தால் பால் ஒருவருக்கும் பயன்படாமல் கெட்டுப் போகும். அதுபோல, பண்பில்லாதவனிடம் இருக்கின்ற பெரும் செல்வம் யாருக்கும் உதவாமல், சில சமயங்களில் தீமையான செயல்களுக்கு கூட பயன்படுத்தப்படும். அதனால், அப்பெரிய செல்வமும் பயன் இல்லாமல் போய்விடுகிறது. பண்பில்லாதவன் எனச் சொல்லப்பட்டதால் அவன் அடைந்த செல்வம் நல்லவழியில் வந்ததாகாது என்பது குறிப்பால் உணரப்படும். அச்செல்வத்தை நல்ல வழியில் செலவழிக்கமாட்டாமல் தீங்கு செய்யவே பயன்படுத்துவான்.

உலகியலில் நேர்வழியால் பொருளீட்டுதல் எளிதன்று. எனவே பண்புடையவன் செல்வம் சேர்த்தல் அரியது. மனச்சான்றைப் புதைத்து நடுநிலையற்ற வழிகளிலே பொருள் திரட்டுவோரே பலராக உள்ளனர். பொருளின் வரவும் செலவும் அறத்தின் பாற்பட்டு நிற்பதில்லை. அழுக்கு நெஞ்சம் கொண்டவனும் ஆக்கம் பெறுகின்றான்; நேர்மை வாழ்வு மேற்கொண்டவன் செல்வத்தில் தாழ்வுபடுகிறான். நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு (ஊழ் 375 பொருள்: ஊழால், செல்வத்தை ஆக்குவதற்கு நல்வழிகளிலும் செய்யப்படும் முயற்சிகள் தீயனவாய் பயனின்றிப் போகும்; தீயவையும் நல்லனவாய் செல்வத்தை ஆக்கும்) என்ற குறளில் பொருளின் பண்பற்ற இயற்கையை வள்ளுவரும் முன்பு கூறியுள்ளார்.
செல்வம் வலிமை பொருந்தியது. அறம் செய்தற்குக் கருவியாகவும் இன்பம் பெறுதற்கு ஊற்றாகவும் அமைவது. அச்செல்வம் நல்வழியில் வந்ததோ பண்பற்ற முறையில் கிடைத்ததோ எதுவாயினும், அச்செல்வம் குணக்கேடர்களிடம் சிக்குண்டுபோனால் அது நல்லவற்றிற்குப் பயன்படுவதில்லை என்பது உறுதி என்கிறது பாடல். இதை விளக்குவதற்குக் கலத்தின் தீமையால் திரிந்த பால் என்னும் உவமையை ஆள்கிறார் வள்ளுவர் இங்கு. நல்ல பால் பசித்தோர்க்கு நல்லது செய்யும்; திரிந்த பால் யாருக்கும் பயன்படாது தீங்கும் விளைக்கக் கூடியது. அதுபோல் பண்புள்ளவரிடம் உள்ள செல்வம் நன்மைகள் உண்டாக வழிவகுக்கும். பண்பற்றவன் பெறும் செல்வம் மற்றவரை வஞ்சிக்கவும், ஒறுக்கவும், தீய வழிகளிலே பயன்படும். தான்பெற்ற செல்வமனைத்தையும் வீணாய் அழிந்து ஒழிந்து போகுமாறு செய்வதையே அவன் தனது குணமாகக் கொண்டு செயல்படுவான். அன்பு, நல்ல குடும்பத்திற்குரிய குணங்கள், நன்மைபுரிதல், மகிழ்ச்சியோடு பழகல், பிறருக்கு உதவுதல், பகைவரிடமும் பண்போடு பழகுதல், நண்பு செய்யாமல் நன்மையற்றவற்றைச் செய்பவரிடமும் பண்பு பாராட்டுதல் போன்ற மனிதப் பண்புகள் கொண்டோரை பண்புடையவர் என்றும் அவை இல்லாதோரை பண்பற்றவன் என இவ்வதிகாரத்துப் பாடல்கள் கூறுகின்றன.
பெற்ற செல்வம் என்றதால் அவன் பொருள் ஈட்டும் திறனில்லாதவன் என்பதும் சொல்லப்பட்டது. மேலும் அச்செல்வம் வழிவழி வந்ததையும் ஆகூழால் உண்டானதையும் குறிக்கும்.

குறள் `நன்பால் திரிந்தற்று’ என்கிறது. இன்றும் பால் கெட்டுப்போனதைப் பற்றிச் சொல்லும்போது பால் திரிந்துவிட்டது என்றே நாம் சொல்கிறோம்.

'கலந்தீமையால்' என்றால் என்ன?

'கலந்தீமையால்' என்ற தொடர்க்குக் கலத்தின் தீமையால், பலர் கையில் பொல்லாங்கினாலே, கலத்தினது குற்றத்தினால். ஏற்ற கலத்தின் குற்றத்தால், காயாத பானையில் வார்த்தால், குணங் கெட்ட கலசத்திலிருந்த, கலத்தின் தீமையால், பெய்து வைத்த பாத்திரத்தின் குற்றத்தால், வைக்கப்பெற்ற பாத்திரத்தினால் கெட்டுப் போவது, தீய பாத்திரத்தால், வைத்திருந்த கலத்தின் குற்றத்தால், வார்த்து வைத்திருக்கும் பாத்திரத்திலுள்ள அசுத்தத்தால், ஏனத்தின் குற்றத்தால், வைக்கப்பட்ட கலத்தின் கெடுதியால், வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் குற்றத்தால், வைக்கப் பெற்ற கலத்தின் தீமையால், பாத்திரத்தின் குற்றத்தால், வார்த்த கலத்தின் குற்றத்தாற் களிம்பேறி, இருக்கும் பாத்திரத்தின் தன்மையால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

கலம் என்ற சொல்லுக்கு ஏனம் அல்லது பாத்திரம் என்பது பொருள். தீமை என்ற சொல் குற்றம் எனப் பொருள்படும். கலந்தீமை என்ற தொடர் கலத்தின் குற்றம் என்ற பொருளது. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வந்தகைத்து (அடக்கமுடைமை 125 பொருள்: பணிவாய் நடத்தல் யாவர்க்கும் நல்லதாம்; அவருள்ளும் பொருளுடையவர்கள் பணிதல் அவர்க்கு அதுவும் ஓர் செல்வம் ஆகும் தன்மையுடையது) என்ற குறளில் செல்வத் தகைத்து என்பது செல்வந்தகைத்து என மெலிந்து நின்றாற் போன்று, கலத்தீமை என்பது கலந்தீமை என மெலிந்து நின்றது.
கலந்தீமை என்றதற்குக் 'கரந்தீமை' எனப் பாடங்கொண்டார் பரிதி. இவர் உரை பலர் கைபட்ட குற்றம் என்ற பொருளில் உள்ளது. 'கைக் குற்றத்தால் கறந்தபாலும் முறியும்' என்பது முதுமொழி.
தூயதல்லாத கலத்தில் இடப்பட்ட பால் கெடும். தூய்மையான கலத்தில் பாலை வைத்துப் பாதுகாக்க வேண்டும். அவ்வாறு இல்லாது ஓர் அழுக்கான அல்லது களிம்பு நிறைந்த கலத்தில் பாலை இட்டோமானால் அந்தப் பால் தன்னுடைய இயல்புநிலை கெட்டுத்திரிந்து வீணாகிவிடும். பாலை ஏற்கும் கலன் எந்தத் தாதுப்பொருளில் செய்யப்பட்டது என்பதைப் பொருத்தும் கேடு உண்டாகும். செம்பின் கலத்தும், ஈயத் தகழியிலும் பால் வைத்தால் பால் நஞ்சாகும். இதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு. கவிராச பண்டிதர் 'நல்ல பாலைக் காயாத பானையில் வார்த்தால் அது கெட்டுப் போவது போலே' என் இக்குறளின் உவமையை விளக்குவார்.

'கலந்தீமை' என்ற தொடர் கலத்தின் குற்றம் எனப் பொருள்படும்.

பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம் நல்ல பால் அது வைக்கப்பட்ட கலத்தின் கெடுதியால் கெட்டுப் போனது போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பண்புடைமை இல்லாதவனது செல்வம் நற்செயல்களுக்குப் பயன்படாதுபோம்.

பொழிப்பு

பண்பற்றவன் எய்திய பெருஞ்செல்வம் நல்ல பால், வைத்திருந்த கலத்தின் குற்றத்தால் கெட்டாற் போலும்.