இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0999நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்

(அதிகாரம்:பண்புடைமை குறள் எண்:999)

பொழிப்பு (மு வரதராசன்): பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

மணக்குடவர் உரை: ...........................................

பரிமேலழகர் உரை: நகல் வல்லர் அல்லார்க்கு - பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; மாயிரு ஞாலம் பகலும் இருட்பாற் பட்டன்று - மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம்.
(எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பிலார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: யாரோடும் சிரித்துப் பழகத் தெரியாதவர்க்கு இப்பேருலகம் பகற்காலத்தும் இருளாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்.

பதவுரை: நகல்-(உள்) மகிழ்தல், கூடி இருந்து நகுதல்; வல்லர்அல்லார்க்கு-தெரியாதவர்க்கு, திறனில்லாதார்க்கு, மாட்டாதார்க்கு; மா-பெரிய; இரு-பெரியதாகிய; ஞாலம்-உலகம்; பகலும்-பகற்பொழுதும்; பால்-இடத்தில், பகுப்பு, பிரிவு; பட்டன்று-கிடந்தது; இருள்-இருட்டு.


நகல்வல்லர் அல்லார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: எல்லாரோடும் கூடி இருந்து நகுதலைச் செய்யமாட்டாதார்க்கு;
பரிதி: தீவினைப் பயன் வந்தால் சிரித்து இதற்கெல்லாம் நான் கலங்கேன் என்று சொல்லமாட்டாதார்க்கு;
காலிங்கர்: யாவர் மாட்டும் கன்றிச் சேறல் மரபன்று என்று கருதி எஞ்ஞான்றும் இனிதொழுகுதல் மாட்டாதார் யாவர்; [கன்றி -சிவந்து]
பரிமேலழகர்: பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு; [உள்மகிழ்தல் மாட்டாதார்க்கு - மனமகிழ்ச்சி அடையாதவர்க்கு]

'எல்லாரோடும் கூடி இருந்து நகுதலைச் செய்யமாட்டாதார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறரோடு கலந்து பேசிச் சிரித்துப் பழக முடியாதவர்க்கு', '(பண்பின்மையால்) மகிழ்ச்சியுடன் வாழ முடியாதவர்களுக்கு', 'யாவரோடுங் கலந்து மகிழ்வடைய இயலாதவர்க்கு', 'நற்குணம் இல்லாததனால் பிறரோடு பழகி மனமகிழ முடியாதவர்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

யாரோடும் கலந்து மகிழ்வுடன் பழகத் தெரியாதவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: பெரிய உலகம் பகற்பொழுதும் இருளின் பாற்பட்டது என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே, இவனும் அறியான், அறிவிப்பாரும் இல்லை என்றவாறாயிற்று. இது, கலந்து ஒழுகாமையால் வரும் குற்றம் கூறிற்று.
பரிதி: பகலும் இருளாகத் தோன்றும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர் தமக்கு மிகவும் பெரிய உலகமானது பகலுங்கூட இருளின் பாற்பட்டது ஆம்;
காலிங்கர் குறிப்புரை: எனவே மக்கட்பண்பு இல்லாதவர்க்கு இவ்வுலக நீதி யாதும் தெரியாது இருண்டே கிடக்கும் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின்கண் கிடந்ததாம்.
பரிமேலழகர் குறிப்புரை: எல்லாரோடும் கலந்தறியப் பெறாமையின் பண்பிலார்க்கு உலகியல் தெரியாது என்பார், 'உலகம் இருளின்கண் பட்டது' என்றார். 'பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்.

'மிகவும் பெரிய ஞாலம் இருளில்லாத பகற்பொழுதினும் இருளின் பாற்பட்டது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இம்மிகப்பெரிய உலகம் பகற்பொழுதும் இருளிடத்துக் கிடந்ததாம்', 'இந்த மிகப் பெரிய உலகம் பகலும் பகலோடு சேர்ந்ததாக இருக்காது. இருட்டாகத்தான் இருக்கும்', 'இப்பெரிய பூமியானது பகற்காலத்திலும் இருளிற் கிடப்பதாகவே தோன்றும்', 'மிகவும் பெரிய உலகம் இருளில்லாத பகற்பொழுதிலும் இருளில் பொருந்தியதாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மிகவும் பெரிய இவ்வுலகம் பகற்பொழுதும் இருளிடத்துக் கிடந்ததாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நகல்வல்லர் அல்லார்க்கு மிகவும் பெரிய இவ்வுலகம் பகற்பொழுதும் இருளிடத்துக் கிடந்ததாம் என்பது பாடலின் பொருள்.
'நகல்வல்லர் அல்லார்' யார்?

நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவனுக்கு வெளிச்சமான உலகம் தெரியாது.

மற்றவர்களுடன் கலந்து மகிழ்வோடு பழகமுடியாதவர்க்கு மிகப் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதும் இருண்டு கிடப்பதாகும்.
கலந்து பழகும் பண்பில்லாதவர்கள் பகலிலும் இருளாய்க் கிடப்பர். இவர்கள் யாருடனும் மனம் திறந்து பேசமாட்டார்கள். தமக்குத்தாமே என ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு தனிமையிலேயே பொழுதைக் கழிக்க விரும்புவர். அவர்களுக்கு நண்பர்கள் இல்லை; சுற்றியுள்ளவர்கள் மேல் அக்கறை காட்டமாட்டார்கள். உலகியலை அதாவது பலரோடு கலந்து பழகுதலை இவர்கள் அறியார். பிறரோடு இயைந்து ஒழுகும் பண்பிலே வல்லவராயில்லாதவராதலால் உலகநடப்பை அவர்களுக்குத் தெரிவிப்பாரும் இல்லை. இவ்விதம் அவர்கள் உலகநடைமுறை வாழ்க்கைக்கு தகுதி அற்றவர்களாகின்றனர்.
கலந்து பழகும் பண்பு இல்லாதவர்கள் உலகின் வெளிச்சத்தைப் பார்க்கமாட்டாதவர்கள்.

மாந்தர் பழகும் முறையிலேதான் பண்புடைமை வெளிப்படும். ஒருவரைக் காணும்போது முகம் மலர்ந்து வணக்கம் சொல்லலாம்; நல்வாழ்த்துக் கூறலாம். ஒருவரை ஒருவர் பார்க்கநேரும்போது, நெருங்கும்போது மகிழ்ச்சியான உணர்வுகளை வெளிப்படுத்தலாம். மனிதர்களை மனிதர்களாக மதித்து கலந்து உரையாடவேண்டும். இவை பழகுமுறையின் அடிப்படைப் பண்புக்கூறுகள். இவ்விதம் கூடிப்பழகி மகிழத் தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.
உலகம் முழுவதும் எப்பொழுதுமே வெளிச்சமானதுதான். ஆனால் நகையாடி மகிழத் தெரியாதவர்க்கு அது எப்பொழுதும் இருட்டாகவே இருக்கும். பகல், இரவு என வேறுபாடின்றி எப்பொழுதுமே இருட்டிலே வாழ்பவர்கள் என்கிறார் வள்ளுவர். அவர்களுக்குப் பகலும் இருளாய் அறிவைமயக்கி நிற்கும். உள்மகிழ்ந்து வாழும் பண்பில்லாதவர்க்குப் பகற்பொழுதும் இருளிலேயே கிடந்ததாகும் என்று குறித்துக் காட்டுவதால் அவர்கள் உலகம்அறியாதவர்கள் என்பதாகிறது. அவர்கள் உலகியல் நடைமுறைகளைத் தெரிந்து பலரோடு கலந்து பேசி மகிழ்வதில்லை. முக மலர்ச்சி என்பதே அவர்களிடம் உண்டாவதில்லை. பிறருடன் கலந்து மகிழ்கின்றபோதுதான் உள்ளம் பண்புறும் என்பதை உணராதவராக இருப்பர். எவரைப் பார்த்தாலும் பகைவர்போல் பாராதது போல ஒதுங்கிப் போவதும் கடுகடுத்த முகத்துடன் உறுமி முறைத்துப் பார்த்தும் செல்வர். இத்தகையோருக்குக் கலந்து பழகும் பயனடையாமை காரணமாக உலகம் பகலிலும்கூட இருளாகப் போய்விடும். இருளில் கிடப்பவர்களால் எதைச் செய்ய முடியும்? எதைக் காணமுடியும்?' இருளில் உலாவுவார் போல் உலவுவதால், பகலும் அன்னார்க்கு இரவேயாகும். இருள் சூழ்ந்த உலகில் வாழ்வது போலவே அவர்கள் நடமாடுவர். அவர்கள் வாழ்வில் ஒளி இல்லை. அவர்களுக்கு இந்த உலகம் எஞ்ஞான்றும் பகல் இல்லாத இரவாகவே இருக்கும்.

பகலும்பாற் பட்டன்று இருள்:
இக்குறளின் இரண்டாவது அடியை 'பகலும் இருள் பால் பட்டன்று' என்று கூட்டி வாசித்தால் பகலிலும் இருளின் பாற்பட்டது அல்லது பகற்பொழுதிலும் இருளின்கண் கிடக்கும் என்ற பொருள் கிடைக்கும் .'பகலிலும் இருளின் கண் கிடந்ததாம்' எனப் பொருள் காண்பவர்கள் பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் முதலியோர். யாவருடனும் பழகி மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாதவர்களுக்கு உலகம் பகல்கூட இருட்டின்கண் கிடந்ததாம் என்பது இப்பகுதியின் பொருள்.
பரிமேலழகர் உரையில் ''பாழ்பட்டன்று இருள்' என்று பாடம் ஓதி, 'இருள் நீங்கிற்றன்று' என்று உரைப்பாரும் உளர்' என ஓர் குறிப்பு உள்ளது. 'பாழ்பட்டன்றிருள்' என்ற இப்பாடம் கொள்வார் யார் என்பது அறியக்கூடவில்லை. இது இருள் பாழ்பட்ட தன்று என்பதன் விகாரம்; இருள் பாழ்பட்டன்று-இருள் பாழ்பட்டதில்லை அதாவது (பகலிலும்) இருள் நீங்கிற்றில்லை என்பது பொருள் என்பர்.

'நகல்வல்லர் அல்லார்' யார்?

'நகல்வல்லர் அல்லார்' என்றதற்கு எல்லாரோடும் கூடி இருந்து நகுதலைச் செய்யமாட்டாதார், தீவினைப் பயன் வந்தால் சிரித்து இதற்கெல்லாம் நான் கலங்கேன் என்று சொல்லமாட்டாதார், யாவர் மாட்டும் கன்றிச் சேறல் மரபன்று என்று கருதி எஞ்ஞான்றும் இனிதொழுகுதல் மாட்டாதார், பண்பின்மையான் ஒருவரோடு கலந்து உள்மகிழ்தல் மாட்டாதார், நன்மையா யொருவனுடனே சினேகம் பண்ணி மகிழமாட்டாதவன், ஒருவரோடொருவர் கலந்து நகைத்து மகிழ்ந்து விளையாட வல்லரல்லார், பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர், உலகினருடன் சிரித்து மகிழ்ந்து கலந்து பழக மாட்டாதவர், ஒருவரோடொருவர் கலந்து பேசி நகைத்து மகிழ்ந்து வாழ்வதறியார், யாரோடும் சிரித்துப் பழகத் தெரியாதவர், பிறரோடு கலந்து பேசிச் சிரித்துப் பழக முடியாதவர், (பண்பின்மையால்) மகிழ்ச்சியுடன் வாழ முடியாதவர், பிறரொடு கலந்து மகிழும் திறமுடையவர் அல்லாதவர், யாவரோடுங் கலந்து மகிழ்வடைய இயலாதவர், நற்குணம் இல்லாததனால் பிறரோடு பழகி மனமகிழ முடியாதவர், பிறரோடு கலந்து மகிழ்வோடு பழகமுடியாதவர், எல்லாரோடும் சிரித்து மகிழத் தெரியாதவர், பண்பின்மையால் ஒருவரோடுங் கலந்துரையாடி மகிழுந் திறமில்லாதவர், இனிய குணங்களைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்த் தெரியாதவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'நகல் வல்லர் அல்லார்' என்பது பலருடன் நகைத்து மகிழ்ந்து பழகும் பண்பு இல்லாதவர் குறித்தது. மாந்தர் எந்தத் துறையில் இருந்தாலும் எந்நிலையில் வாழ்பவரானாலும் அவர்களுக்கு முகமலர்ச்சி மிகவிரும்பத்தக்கது. இத்தொடரைக் காலிங்கர் 'யாவர் மாட்டும் கன்றிச் சேறல் மரபன்று என்று கருதி எஞ்ஞான்றும் இனிதொழுகுதல் மாட்டாதார்' என விளக்குவார். இங்கு சொல்லப்பட்ட நகல் நகுதற் பொருட்டன்று நட்டல் ...... (நட்பு 784) போன்றவற்றுள் வந்துள்ள சிரிப்பு போன்றதன்று.
நகைச்சுவை அல்லது சிரித்து மகிழ்தல் என்பது மக்களாகப் பிறந்த அனைவருக்கும் இயல்பாகவே இருக்க வேண்டிய குணமே. ஆனால் சமுதாய மாந்தருடன் கூடி மகிழ்ச்சியாகப் பழகுவதற்குள்ள திறன் வேறு. அதைப் பயிற்சியால் வளர்த்துக்கொள்ளலாம். மக்கள் ஒருவரையொருவர் காணும்போது கொள்ளும் முகமலர்ச்சி, உரையாடும்போது காட்டும் புன்னகை ஆகிய சிறு பண்புகள் உலகியல் வாழ்க்கைக்கு மிகமிகத் தேவையானவை. ஒருவர் தாம் பழகுவர்களோடு மலர்ந்தமுகத்துடன் சிரித்துப் பேசவேண்டும். மற்றவர்கள் தம்மைப்பற்றி வேடிக்கையாக ஏதாவது பேசிச் சிரித்தாலும் முகஞ்சாய்த்துப் போகாமல் அதை நல்ல முறையில் எடுத்துக் கொள்ளத் தெரியவேண்டும். அவ்விதம் பொறுத்துக் கொள்வதற்கும் ஒரு வல்லமை வேண்டும். இப்பண்புகள் கொண்டவரையே நகல்வல்லார் என்கிறார் வள்ளுவர். அப்பண்புகள் அற்ற மனிதர் 'நகல்வல்லர் அல்லார்' ஆவர்.
இவர்கள் 'தாம் உண்டு; தமது வேலை உண்டு; சுற்றில் நடப்பது எதையும் நாம் கண்டுகொள்ளக்கூடாது, காதில் போட்டுக்கொள்ளக்கூடாது' என்ற மனப்பான்மையில் இருப்பர். 'அக்கம்பக்கத்தில் யார் குடியிருப்பவர் என்று தமக்குத் தெரியாது; அந்தப் பகுதியில் யாரையுமே தமக்குத் தெரியாது; தம்மைப் பற்றியும் ஊருக்குத் தெரியாது' என்று சொல்லிக்கொள்பர்கள் இவர்கள். இவ்விதம் சமுதாயத்திலிருந்து விலகி வாழ்பவர்க்கு நகைத்து மகிழ்ந்து வாழ்தல் என்பது முடியாதது. அவரால் உலக இயற்கையையும் உலக மாந்தரையும் புரிந்துகொள்ள முடியாது. அதனால் அவர்கள் இருட்டுலகில் வாழ்பவர்கள் என்கிறார் வள்ளுவர். பிறருடன் கலந்து மகிழவும் சிரிக்கவும் வல்லவர்க்கே உலகம் ஒளிமயமாக இருக்கும்.

'நகல் வல்லர் அல்லார்' என்பது பிறருடன் கூடிப் பழகும்போது நகைச்சுவையுணர்வு (sense of humour) கொண்டு மகிழ்ந்து வாழ்வதறியார் எனப்பொருள்படும்.

யாரோடும் கலந்து மகிழ்வுடன் பழகத் தெரியாதவர்க்கு மிகவும் பெரிய இவ்வுலகம் பகற்பொழுதும் இருளிடத்துக் கிடந்ததாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிறரோடு கலந்து பழகி மகிழும் பண்புடைமை இல்லாதவன் வாழ்வு இருளில் மூழ்கியதுதான்.

பொழிப்பு

யாரோடும் சிரித்து மகிழத் தெரியாதவர்க்கு இம்மிகப்பெரிய உலகம் பகற்காலத்தும் இருளாகும்.