இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0998நண்பாற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை

(அதிகாரம்:பண்புடைமை குறள் எண்:998)

பொழிப்பு (மு வரதராசன்): நட்புக் கொள்ள முடியாதவராய்த் தீயவை செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

மணக்குடவர் உரை: ....................................................

பரிமேலழகர் உரை: நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம்.
(நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)

தமிழண்ணல் உரை: நட்புடன் கலந்து பழகாதவராய்த் தம்மிடம் நன்மை பயவாதவற்றையே செய்கின்றவர்களிடத்திலும் பண்புடன் நடந்துகொள்வதுதான் ஒருவருக்குச் சிறப்பு; அங்ஙனம் நடவாவிடின் அது பண்புடைமைக்கு இழுக்காகிவிடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நண்பாற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை.

பதவுரை: நண்பு-தோழமை; ஆற்றார்-மாட்டார்; ஆகி-ஆய்; நயம்-விருப்பம், ஈரம், அருள், நன்மை, அன்பு, இனிமை; இல-இல்லாதவைகளை; செய்வார்க்கும்-செய்பவர்க்கும்; பண்பு-பண்பு; ஆற்றார்-ஒழுகாதவர்; ஆதல்-ஆகுதல்; கடை-இழிபு.


நண்பாற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: நண்பு செய்யமாட்டாராய் விருப்பம் இல்லாதவற்றைச் செய்வார்க்கும்;
பரிதி: சிநேகமற்றுப் பொல்லாப்பே செய்தாராயினும்;
காலிங்கர்: உலகத்து மக்கட் பண்பு உடையோர் தம்மொடு நட்புச் செய்தற்கு ஒல்லாருமாகி ஒழுக்கக் கேடே செய்து ஒழுகுவார்க்கும்; [ஒல்லாருமாகி - பொருந்தாதவராகி]
பரிமேலழகர்: தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்;
பரிமேலழகர் குறிப்புரை: நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. [ஈரம் - அன்பு]

'நண்பு செய்யமாட்டாராய் விருப்பம் இல்லாதவற்றைச் செய்வார்க்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நட்புக் கொள்ளாமல் தீமை செய்வாரிடத்தும்', 'தம்மொடும் நட்பினைச் செய்யாமல் பகைமையால் அன்பற்ற செயல்களைச் செய்பவரிடத்தும்', 'தம்முடன் நட்பு செய்யாதவர்களாகித் தமக்குத் துன்பம் செய்கிறவர்களுக்கும் கூட', 'தம்மோடு நட்புக்கொள்ளாது முறை யல்லாதவற்றைச் செய்தொழுகுவாரிடத்தும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நட்பு கொள்ளமாட்டாராய் விருப்பம் இல்லாதவற்றைச் செய்வாரிடத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

பண்பாற்றார் ஆதல் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: குணமாயின செய்யாராதல் குணமுடையார்க்கு இழிவு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: குணம் செய்யாமை இன்னா செய்தல் ஆம். ஆதலால் பிறர் வருத்தத்திற்குப் பரியாமையால் வரும் குற்றம் கூறிற்று. [பரியாமையால் - இரங்காமையால்]
பரிதி: அவர்களுக்கு நல்லதே செய்யாதான் கடைசி என்றவாறு.
காலிங்கர்: தாம் தமக்கியல்பாகிய மரபினைச் செய்யாராதல் சாலக்கடை; காலிங்கர் குறிப்புரை: எனவே 'ஈண்டும் தம் பண்பினர் ஆதலே தலை என்பது' பொருள் ஆயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம்.
பரிமேலழகர் குறிப்புரை: அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார். [அவர் தன்மையர் ஆவர் - நயமில செய்வாரின் இயல்பினர் ஆவர்]

'தாம் பண்புடையராய் ஒழுகாமை இழுக்காம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பண்பொடு பழகாமை இழிவாகும்', 'தாம் பண்புடையாராய் ஒழுகாதிருத்தல் அறிவுடையார்க்கு இழிந்ததாம்', 'பண்புடையவர்கள் இரக்கம் காட்டாமல் இருப்பதில்லை', 'பண்புடையராய் அறிஞர் ஒழுகாவிடின், அஃது அவர்க்கு ஒரு குறையே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பண்பொடு பழகாமை இழுக்காகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நட்பு கொள்ளமாட்டாராய் விருப்பம் இல்லாதவற்றைச் செய்வாரிடத்தும் பண்பொடு பழகாமை இழுக்காகும் என்பது பாடலின் பொருள்.
'நயம்இல செய்வார்' யார்?

நயம் இல்லாதவற்றை நீயும் செய்தால் எவ்விதம் நீ மேல் ஆவாய்?

நட்புக்கொள்ளாதாராயும் நம் விருப்பத்திற்கு எதிராக நடப்பவரிடத்தும், பண்புடையவராக ஒழுகாவிட்டால் பண்புடைமைக்கு இழுக்காகிவிடும்.
நாம் ஒருவரிடம் நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறோம். அதை எப்பொழுதும் புறக்கணித்துக் கொண்டே இருக்கிறார் அவர். மேலும் அவர் நமக்கு விருப்பமில்லாத தீயவற்றையே செய்து சீண்டவும் செய்கிறார். நாம் என்ன செய்ய வேண்டும். அப்பொழுதும் பண்புடனே அவரிடம் நடந்து கொள் என்கிறார் வள்ளுவர். அப்படி இல்லாவிடில் உன் குணத்துக்குத்தான் இழுக்கு எனவும் சொல்கிறார்.
நட்புச் செய்யாது பகைமையே செய்பவர்களிடத்தும் பண்பாடறிந்து நடந்துகொள்ள வலியுறுத்துகிறது குறள். பண்பாளர்கள், நண்பர்களாக இல்லாமல் தீங்கு செய்து வாழும் மற்றவர்களிடத்திலும் நற்குணம் மாறாமல் நடப்பார்கள். அங்ஙனம் வாழ இயலாவிட்டால் அது அவரது பண்புடைமைக்கு இழுக்காகவே கருதப்படும். நட்பின்மையைவிடப் பண்பின்மை தாழ்வானது என்பது செய்தி.
'பாடறிந்தொழுகும் பண்பாளர்' என்றும் நன்மையே செய்வர் ஆகலின், அவரிடம் அனைவரும் நட்புச் செலுத்தக்கடமைப்பட்டவர்கள்; நயமில செய்யக்கூடாதவர்கள், அங்ஙனம் இருந்தும் அவர்கண்படாத சிலர் நண்பு செய்யாராதலைக் கண்டு நண்பிலராகி என்னாது நண்பாற்றாராகி என்ற நயம் ஓர்ந்துணர்தற்குரியது (தண்டபாணி தேசிகர்).

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல். (இன்னா செய்யாமை 314 பொருள்: தமக்குத் தீமை செய்தாரைத் தண்டித்தல் தீங்கு செய்தவர்கள் தாமாகவே வெட்கப்படும்படி அவர்களுக்கு நல்ல நன்மை செய்துவிடுவது), இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு (சான்றாண்மை 987 பொருள்: தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிமையானவற்றைச் செய்யாவிட்டால் சான்றாண்மைக் குணத்திற்கு என்ன பொருளாம்?) ஆகிய குறட்பாக்களின் கருத்துச் சாயல் இப்பாடலில் உள்ளது.

'நயம்இல செய்வார்' யார்?

'நயம்இல செய்வார்' என்ற தொடர்க்கு விருப்பம் இல்லாதவற்றைச் செய்வார், பொல்லாப்பே செய்தார், ஒழுக்கக் கேடே செய்து ஒழுகுவார், பொல்லாங்கு செய்கிறவர், பகை செய்வார், தீயவை செய்கின்றவர், தம்மிடம் நன்மை பயவாதவற்றையே செய்கின்றவர், பகைமை செய் தொழுகுவார், தீமை செய்வார், பகைமையால் அன்பற்ற செயல்களைச் செய்பவர், தமக்குத் துன்பம் செய்கிறவர், தீமையே செய்கின்றவர், முறை யல்லாதவற்றைச் செய்தொழுகுவார், பகைமையைச் செய்து ஒழுகுவார், நன்மை அல்லாத செயல்களையே செய்யும் பகைவர், தமக்கு நன்மை தராத செயல்கள் புரிபவர், தமக்குத் தீமையே செய் தொழுகுவார், அன்பு செலுத்தாமல் தீமையே செய்து ஒழுகுவார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தண்டபாணி தேசிகர் 'வள்ளுவனார், 'நன்னயம்' -நல்ல உதவி' என்ற பொருளினும் 'நூல் நயம்' 'நூலின் கண் தோன்றும் இன்பம்'; 'நகலானாம் நன்னயம்' - நல்ல நீதி' என்ற பொருள்களில் ஆளுவர். இவையனைத்தும் இணைத்து எண்ணும்போது 'நயம்-இனிமை' என்ற பண்புப் பொருளதாயிருந்து பின்னர் இங்ஙனம் வருதல் காணப்பெறும். ஆதலால் பொல்லாப்பு, ஒழுக்கக்கேடு, தீமை போன்றவற்றைக் குறித்த ஒரு பொருளாகக் கருதாது அனைத்தும் அடங்க இனிமையல்லாத எனல் ஏற்புடையதாகும்' என்பார்.
நயமில என்பதற்கு விருப்பமில்லாத செயல்கள் என்ற பொருள் பொருத்தம். இனிமையற்றவற்றைச் செய்பவரிடமும் பண்புடைமை காட்டி உன்னை மேன்மைப்படுத்திக்கொள். அப்படி நடந்துகொள்ளாவிடில், அவர்க்கும் உனக்கும் என்ன வேற்றுமை இருக்கப்போகிறது? என்பதைச் சொல்ல வந்த பாடலிது.

'நயமில செய்வார்' என்பதற்கு விரும்பத்தகாதன செய்பவர் என்பது பொருள்.

நட்பு கொள்ளமாட்டாராய் விருப்பம் இல்லாதவற்றைச் செய்வாரிடத்தும் பண்பொடு பழகாமை இழுக்காகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பகைமை தோன்றப் பழகுவாரிடத்தும் பண்புடைமையோடு நடப்பர் மேலானவர்.

பொழிப்பு

நட்புக் கொள்ளாதாராய், விருப்பம் இல்லாதவற்றைச் செய்வாரிடத்தும் பண்பொடு பழகாமை இழுக்காகும்