இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0997



அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கள்பண்பு இல்லா தவர்.

(அதிகாரம்:பண்புடைமை குறள் எண்:997)

பொழிப்பு (மு வரதராசன்): மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவராயினும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

மணக்குடவர் உரை: ...................................................................................

பரிமேலழகர் உரை: மக்கட்பண்பு இல்லாதவர் - நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர்; அரம் போலும் கூர்மையரேனும் - அரத்தின் கூர்மை போலும் கூர்மையை உடையரேயாயினும்; மரம் போல்வர் - ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர்.
(அரம் - ஆகுபெயர். ஓர் அறிவு - ஊற்றினை யறிதல். உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது, ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட் பண்பு இன்மையின், அதுதானும் இல்லை என்பதாயிற்று.

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அரத்தைப்போலக் கூரிய அறிவுடையராய் இருந்தாலும், மனிதத்தன்மை இல்லாதவர்கள் தனி நின்ற மரத்தோடு ஒப்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மக்கள்பண்பு இல்லாதவர் அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர்.

பதவுரை: அரம்-அராவுங் கருவி, அராவுங் கருவியின் கூர்மை; போலும்-ஒத்திருக்கின்ற; கூர்மையரேனும்-நுட்பமதியுடையவராயினும்; மரம்-மரம்; போல்வர்-ஒத்திருப்பர்; மக்கள்பண்பு-மக்களுக்கு இருக்கவேண்டிய நல்ல குணம். மனிதத் தன்மை; இல்லாதவர்-இலாதவர்.


அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: அரத்தை ஒத்த கூர்மையை உடையராயினும் மரத்தை ஒப்பர்;
பரிதி: கல்வியின் கூர்மை அரம்போல ஆனாலும் மரம் போல்வர்;
காலிங்கர்: அரம்போலும் யாதானும் ஒரு பொருளை வகுத்து உள்புக்கு அறியும் அறிவின் கூர்மையை உடையராயினும் யாதும் அறியாத திண்ணிய உருவினதாகிய மரம் அனையர்;
பரிமேலழகர்: அரத்தின் கூர்மை போலும் கூர்மையை உடையரேயாயினும் ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர். [ஓர் அறிவிற்றாய-ஓர் அறிவினை உடையதாகிய]
பரிமேலழகர் குறிப்புரை: அரம் - ஆகுபெயர். ஓர் அறிவு - ஊற்றினை யறிதல். [அரம் என்னும் பொருட்பெயர் அதன் பண்பாகிய கூர்மையை உடையது ஆதலால் பொருளாகுபெயர்; ஊற்றினை அறிதல்- தொடு உணர்ச்சி-தொட்டறிதல்]

'அரத்தின் கூர்மை போலும் கூர்மையை உடையரேயாயினும் மரத்தினை ஒப்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'ஓர் அறிவிற்றாய மரத்தினை ஒப்பர்' என 'ஓர் அறிவிற்றாய' என்பதனைக் கூட்டி உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரம்போன்ற கூரிய அறிஞராயினும் மரம் போல்வர்', 'அரத்தின் கூர்மை போன்ற கூர்த்த அறிவுடையராயினும் ஓரறிவுடைய மரத்தை ஒப்பர்', 'அரத்தைப் போலக் கூரிய அறிவுடையவர்களாக இருந்தாலும், அவர்கள் (பிறர் துன்பங்களை) உணர (முடியாத) மரத்துக்கே சமானமானவர்கள்', 'அறிவில் அரம் போன்ற கூர்மையை உடையரேனும் மரத்திற்கு ஒப்பாவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அரம் போன்று கூர்த்த அறிவுடையராயினும் மரத்தை ஒப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

மக்கள்பண்பு இல்லா தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: மக்கட்பண்பு இல்லாத மாந்தர் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: அரம்போலும் தனக்குள்ள கூர்மை பிறர்மாட்டு மடியாமையும் தான் பிறரைக் கூரியர் ஆக்குதலும் ஆம். இஃது உணர்வுடையார் ஆயினும் உணர்வில்லாத மரத்தை ஒப்பார் என்றது; என்னை, உணர்வால் பயன் இன்மையின்.
பரிதி: மக்கட் பண்புடையரல்லாதவர் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் மக்கள் வடிவினராய் வைத்தும் அம்மக்கட் பண்பாகிய மரபு இல்லாதவர்கள் என்றவாறு.
பரிமேலழகர்: நன்மக்கட்கே உரிய பண்பில்லாதவர்.
பரிமேலழகர் குறிப்புரை: உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருள்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது, ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாய மக்கட் பண்பு இன்மையின், அதுதானும் இல்லை என்பதாயிற்று. [அரத்தின் கூர்மை, மரம் என்னும் உவமானம் ஆகிய இரண்டு; முன்னது- அரத்தின் கூர்மை; மடிவு-மடங்குதல்; மடிவித்தல்- கெடச் செய்தல்; ஏனையது - மரம் என்பது]

'மக்கட்பண்பு இல்லாத மாந்தர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சமுதாயப் பண்பில்லாதவர்', 'நன்மக்களுக்குரிய பண்பு இல்லாதவர்', 'மனிதராகப் பிறந்தவருள் பண்புக்குணமே இல்லாதவர்கள்', 'நன்மக்கட்குரிய பண்பு இல்லாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மக்கட்குரிய பண்பில்லாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மக்கட்குரிய பண்பில்லாதவர் அரம் போன்று கூர்த்த அறிவுடையராயினும் மரம்போல்வர் என்பது பாடலின் பொருள்.
'மரம்போல்வர்' குறிப்பது என்ன?

மிக்குஅறிவுடையாரும் பாடறிந்து ஒழுகுதல் நன்று.

ஒருவர் அரம் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும் அவரிடம் மக்கட்பண்பு இல்லாதிருந்தால் அவர் மரம் போன்றவர்.
'அரம்போலும் கூர்மையர்' என்ற தொடர் கூர்மையான அறிவுடையாரைக் குறித்தது. அறிவுடையராக இருந்தாலும் நல்ல பண்புகள் இல்லாவிட்டால் அவர் உணர்ச்சியில்லாத வெறுங்கட்டை போன்றவரே என்கிறது பாடல். 'அறிவுடையார் எல்லாம் உடையார்' என்று கூறிய வள்ளுவரே, அரம் போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் என இங்குச் சொல்கிறார். அறிவுமட்டுமன்றி பண்பும் வாய்க்கப் பெற்ற மாந்தரே உலகம் வேண்டுவது என்பது வள்ளுவர் கருத்து. பண்புக்கு முதன்மைச் சிறப்பும் அறிவுக்கு அதற்கு அடுத்த நிலையையும் தருகிறார் அவர். அறிவுடைச் செயலை உயர்ந்தேத்தும் அவர் இங்கு பண்பற்ற அறிவை இகழ்கிறார். அறிவுக்கும் பண்புக்கும் நேர்முகமான தொடர்பு ஏதும் இல்லை. அறிவுடையவன் தன் ஒழுகுமுறையால் சிறுமை உடையனாய் இருப்பதும் கல்லாதவன் குணத்தில் மிகவும் மேம்பட்டுத் திகழ்வதும் உலகில் அரியகாட்சிகள் அன்று.
மக்கட்பண்பு என்பது என்ன? ஒருவர் தம்மொடு பழகுவார் எக்கொள்கை கொண்டவராயிருந்தாலும், எந்தவித நிலையில் இருந்தாலும், இனம், சமயம், மொழி என்னவாக இருந்தாலும் அவை அனைத்தையும் மனத்துள் கொள்ளாமல், அவர்களும் மனிதர்தாம் என்ற ஒரே எண்ணம் மேற்பட, அனைவரோடு மனங் கலந்து அளவளாவல் வேண்டும். அப்பண்பே மக்கட்பண்பு. மனிதன் மனிதனை நன்கு மதிக்கும் ஒழுக்கத்துக்கு 'மக்கட் பண்பு' என்று பெயரிடுகிறார் வள்ளுவர். வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வுகளையும் எல்லா நிலையிலும் இடைவிடாது நினைக்கும் மாந்தர்க்கு வேண்டுவது மக்கட்பண்பு என்கிறார் அவர்.
கீழ்க்கண்ட நிகழ்வைப் பண்புக்குக் காட்டாக வ சுப மாணிக்கம் கூறுகின்றார்: 'முன்னர் அண்ணாமலைப் பலகலைக்கழகத்து ஒரு தமிழ்ப் பெருங்கூட்டம் கூடிற்று. அதன் தலைவர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் பல்கலைப் புலவர் கா சுப்பிரமணியார் அவர்கள். அற்றைச் சொற்பொழிவாளர் பெரியார் ஈ வே ரா அவர்கள். முறைப்படி இறைத் தமிழ் வணக்கம் பாடப்பட்டது. பாடுங்காலை தலைவரும் ஆயிரம் பேர் முழுமிய அவையினரும் எழுந்து நின்றனர். கடவுட் கொள்கையில் நம்பிக்கையற்ற ஈ வே ரா அவர்களும் ஒப்ப எழுந்து நின்றனர் காண். தம் எழுந்து நிற்பால் தம்மைக் கடவுட்கோளுக்கு மாறியவராக அவை எண்ணி விடுமோ? என்று மயங்கினாரல்லர். இறை வணக்கத்துக்கு எழும் கருத்திலரேனும், எழுந்து நிற்கும் மக்களவைக் கண் தன்னொருவன் இருப்பு நாகரிகமன்று என்று உட்கொண்டார். கொள்கை வெறியற்று ஒழுங்குப் பற்றினராய், மக்களொடு நின்று, அவரெல்லாம் அமர்ந்தபோது அமர்ந்தார். இப்பெருமகன் செயல் மக்கட்பண்புக்கு ஒரு காட்டு.'

கற்றாரிடையே குணம் சிறிதும் பொருந்தாது குற்றம் பல செய்து வருகின்றவர்களைப் பார்க்கிறோம். கற்பதனாலேயே பண்பு வந்துவிடாது. கூர்மை கை வரப்பெறலாம்; குணம் கூடிவரும் என்று கூறுவதற்கில்லை. கற்றவர்கள் அனைவரும் பண்பாளர்கள் ஆவதில்லை; அவர்கள் கற்றதற்குத் தகுந்தாற் போல நிற்பவர்கள் என எண்ண இயலாது. அறிவுக் கூர்ப்பு மிக்கிருப்பவர்களில் சிலர் மாந்த நேயம் அறவே இல்லாது இருப்பர். அவர்களைப் பற்றியது இக்குறள். உயிர்ச்சூழல் சிதையாதிருக்க வேண்டுமானால் மக்கட் பண்புடையவராக அனைவரும் இருத்தல் வேண்டும். மக்களை மக்களாக மதிக்கும் பண்பு வேண்டும். 'மதியுடைமை மக்கட்குச் சிறப்புரிமையன்று; மாக்களும் மதி நுட்பமுடையனவே. மக்களும் மாக்களும் தம்முள் மதி அளவால் மாறுபடுவதன்றி, தன்மை அல்லது பண்பால் அவருள் வேறுபாடு காணற்கில்லை. ......மதிநுட்பம் பல உயிரினத்தின் பொது உடைமை; அதனாலது தனிச் சிறப்பாம். மக்கட் பண்பாகாது' என்பார் சோமசுந்தர பாரதியார். மாந்தப் பண்புடையராக வாழ்வதே மாந்தர்க்குரிய இயல்பான வாழ்க்கை. மக்கட்பண்பு உடையவராக வாழாமற் போனால் பல தீமைகட்கு ஆளாகநேரிடுகின்றது. நாம் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றிக்கொண்டு செல்வ வளத்தோடு வாழ்ந்தாலும், தொழில்நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்திக்கொண்டு சிக்கலில்லாத வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும், இது மாந்தர்க் குரிய வாழ்க்கை ஆகாது. ஏனெனில் இது தன்னலம் சார்ந்த வாழ்க்கை. உலகியல் வாழ்க்கையோடும், அதனைச் செழுமைப் படுத்திக் கொள்வதோடும், நமது நுகர்ச்சித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு நின்று விடாமல், அதற்கு அப்பால் சென்று மாந்தப் பண்போடும், அன்போடும் வாழும் பொழுதுதான் வாழ்க்கை மேன்மையும் பொருள்பட அமைவதாகவும் இருக்கும்.

அரம்போலும் கூர்மையர்:
குறளில் ....அடுமுரண் தேய்க்கும் அரம் (567..வலிமையை அறுக்கும் அரமாகும்), அரம்பொருத பொன்போலத் தேயும்......(888.....அரத்தினால் ராவப்பட்ட இரும்பு போல வலியழியும்) ஆகிய இரண்டிடங்களில் 'அரம்' என்ற சொல் வந்துள்ளது. இவை அரம் என்பது இரும்பு போன்ற தாதுப் பொருளை அராவும் அரத்தினையே குறிக்கின்றன. பழம் இலக்கியங்களில் அரம் என்பது வாள்அரத்தை உணர்த்தும் மரபுகளும் உண்டு. காலிங்கர் உரை 'அரம் யாதானும் ஒரு பொருளை வகுத்து உள்புக்கு அரிவது போல, மதி யாதானும் ஒரு பொருளைப் பகுத்து உள்புக்கு ஆய்ந்து அறியும்' என்கிறது. இது வாளரத்தை மனதிற்கொண்டே சொல்லப்பட்டது. 'வள்ளுவர், தேய்க்கும் அரம், வாளரம் ஆகிய இவ்விரண்டு பொருள்களையும் கருத இடம் அளிப்பார் போல 'அரம்போலும் கூரியரேனும்' எனக் கட்புலனுக்கு மிக நுண்ணியதாகப் புலனாகும் அரக் கூர்மையை அறிவுக்காட்சிக்கு மட்டும் புலனாகும் மதிக்கூர்மைக்கு ஒப்புரைக்கக் கருதியவர் இங்ஙனம் கூறினார் எனக் கருதல் தகும்' என்பார் தண்டபாணி தேசிகர்.
இவ்வுவமை கூறும் செய்தி என்ன? அரம்போலும் கூர்மையர் என்ற உவமையைத் தண்டபாணி தேசிகர் 'நன்மக்கட்குரிய பண்பில்லாதவர்கள் அரம் போன்று கூர்மையான அறிவுடையவர்களாயினும், மரத்தினைப்போல் கூர்மையின்றி மழுங்குவர்' என விளக்கினார். கவிராச பண்டிதர் 'அரமானது தன்னுடனே சேர்ந்தவற்றைப் பொடியாக்குவது போலே, கூர்மையான புத்தி இருந்தாலும் தயை இல்லாத பேர் தங்களைச் சேர்ந்தவர்களைக் கெடுப்பர்' என விளக்கம் தந்தார். மு கோவிந்தசாமி 'அறிவியலை மட்டும் வளர்த்தல் நாகரிக மாகாது. அதனுடன் மனிதத்தையும் வளர்க்க வேண்டும். அவ்வெறும் அறிவு தான் தேயாது பிறரைத் தேய்க்கவே உதவும். அவ்வரமே அராவிய வாளால் அறுபடுவர். அறிவே அழிக்குமென்பது பண்பில்லாத விஞ்ஞான அறிவு மனிதவினத்திற்கே அழிவென்பது' எனப் பொருளுரை தந்தார். பரிப்பெருமாள் அரம்போலும் தனக்குள்ள கூர்மை பிறர்மாட்டு மடியாமையும் தான் பிறரைக் கூரியர் ஆக்குதலும் ஆம். இஃது உணர்வுடையார் ஆயினும் உணர்வில்லாத மரத்தை ஒப்பார் என்றது; என்னை, உணர்வால் பயன் இன்மையின்' எனக் குறிப்புரையில் கூறுகின்றார். கா சுப்பிரமணியம் பிள்ளை உரை 'அரத்தைப்போலக் கூரிய அறிவுடையராய் இருந்தாலும், மனிதத்தன்மை இல்லாதவர்கள் தனி நின்ற மரத்தோடு ஒப்பர்' என்கிறது. மற்றவர்கள் 'அரம்போலக் கூர்மதியாளரேனும் மனிதருக்குரிய பண்பில்லாதவர் மரக்கட்டைக்குச் சமானமே', 'இக்குறளிலே மனித்தன்மை யற்றவர்களை மரத்திற்கு ஒப்பிட்டார் வள்ளுவர்' 'ஈரமில்லா மரத்துக்கே சமமாகிவிடுவான்' என்றவாறு உரை செய்தனர்.
அறிவுடைமையானது இயற்கை அறிவும் கல்வி கேள்விகளிலான செயற்கை அறிவும் சேர்ந்தது. மூன்றாவதாக உலக அறிவு எனச் சொல்லப்படும் அறிவு ஒன்றுள்ளது. உலக அறிவு என்பது உலகியல்புக்கேற்ப நடப்பதைக் குறிப்பது. அதுவே மக்கட்பண்பு எனப்படுவதுமாம். உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு (425), எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (426) ஆகிய குறட்பாக்கள் கூறும் உலகத்தோடு உறையும் அறிவே மக்கட்பண்பாக வலியுறுத்தப்படுகின்றமை தெளிவு. பண்பில்லையாயின் உலகத்தோடொட்ட வாழுதல்/ உலகத்தோடு அவ்வதுறைவது/ இயலா. மனிதர்தம் ஆளுமை அறிவுடைமைகளால் அமைவது எனினும், அவற்றை நிறைவு செய்வது பண்புடைமையாகும். ஏனைய இருந்தும் பண்பு இல்லையேல், அவர்கள் 'மரம்' எனவே மதிக்கப்படுவர்.

'மரம்போல்வர்' குறிப்பது என்ன?

அரம் போல் கூர்மையான அறிவுடையவர்களாக இருப்பினும் மக்கட் பண்பில்லாதவர்கள் மரம்போல் கருதப்படுவர் என்கிறது இக்குறள். அறிவுடையவர்களை 'ஓரறிவிற்றாய மரத்'துக்கு ஒப்பிட்டதாகப் பரிமேலழகர் கூறுகிறார். 'மக்கட்குரிய ஆறறிவுஇல்லாத உயிரினங்கள் ஓரறிவு முதல் ஐயறிவு ஈறாக ஐவகைப் பட்டிருத்தலின் மக்கட்பண்பிலாரை ஒப்புரைத்தல் பொருத்தமாகத் தோன்றவில்லை' என மறுப்பார் தேவநேயப் பாவாணர். 'வள்ளுவர் 'அன்பு; நாண், உரம் முதலான பண்பிலாரை மரம் போல்வர்' எனப் பல விடங்களில் கூறுவர். பண்பிலார் மக்கள் போன்றிருந்தும் பயன்படாமை கருதி மரம் போல்வர் என்றதன்றி 'ஓரறிவுடைய மரம் எனல்' வேண்டா விதப்பாகலாம்' எனப் பாவாணர் உரையை நேர்செய்வார் தண்டபாணி தேசிகர். வள்ளுவர் மரபு பயன்படு மக்களுக்கும் பயன்படா மக்களுக்கும் ஏற்ற வகையில் மரத்தை ஒப்பித்தலை அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று (அன்புடைமை 78 பொருள்: உள்ளத்தில் அன்பு இல்லாமல் இல்லறவாழ்வு நடாத்துதல் வலிய நிலத்தில் நிற்கின்ற வற்றல் மரம் தளிர்த்தாற் போலும்), பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின் (ஒப்புரவறிதல் 216 பொருள்: பிறர்க்கு உதவும் நன்மையுடையான் இடத்து செல்வம் உண்டாகுமானால், பயன் தரும் மரம் ஊர் நடுவில் பழுத்துள்ளது போன்றது ஆகும்), உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃதுஇல்லார் மரம் மக்கள் ஆதலே வேறு (ஊக்கமுடைமை 600 பொருள்: ஒருவற்கு வலிமையாவது ஊக்கமிகுதியே; அது இல்லாதவர் மரங்களாவார். வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களிலிருந்து வேறுபட்ட தன்மையாகும்), முதலான குறட்பாக்களில் காணலாம் எனவும் அவர் விளக்குவார்.

மரம் என்று சொல்லப்பட்டது இங்கு இகழ்ச்சிப் பொருளிலா வந்துள்ளது? மரத்தின் சிறப்பை அறிந்திராதவரல்லர் வள்ளுவர்.
மரங்களால் பெரும் பயன் உண்டு. அவையே மழை தருகின்றன, உயிர்கள் மகிழத் குளிர்நிழல் தருகிறது. உயிரியக்கத்துக்குத் தேவையான காற்றைத் தருகிறது; காய்களை, கனிகளைத் தருகிறது; காய், கொட்டை, இலை, பட்டை, வேர், சாறு என்று நோய் நீக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. குறிப்பிட்ட மரத்தில் ஏதோ ஒரு தெய்வம் குடி இருப்பதாகக் கருதி, மரங்களையும்கூட ஆங்காங்கே மக்கள் வணங்குவது உண்டு. மிகப்பழமையான மரங்கள் வெட்டப்பட்டன எனச் செய்திகள் வரும்போது நமக்கு நெஞ்சு பதறுகிறது. இத்துணை பெருமை பொருந்திய மரத்தை வள்ளுவரா இகழ்ந்து பேசுவார்? நல்லவர்களையும் உயர்ந்த குணங்களுடைய செல்வர்களையும் ஒப்பிடும்போது மரத்துக்கு அடை தந்து 'பயன் மரம்' என்றும் 'மருந்து மரம்' என்றும் குறள் உயர்த்தியே கூறியுள்ளது. மக்கட் பண்பு இல்லாதவர் 'மரம் போல்வர்' என்றுதான் சொல்லப்பட்டது. மரம் போன்றவர் என்றாரே யொழிய 'அவர் மரமே' என்று கூறிவிடவில்லை. 'மரம் போல்வர்' என்று உரைக்கும்போது கடுமை குறைந்தே காணப்படுவதால் அதை மரக்கட்டை போல்வர் அதாவது உணர்ச்சியில்லாதவர் என்ற கருத்தைச் சொல்வதாகக் கொள்ளவேண்டும். எனவே இக்குறளில் மரம் இகழப்படவில்லை.

'மரம்போல்வர்' என்றது அரம்போல் கூர்அறிவார் ஆயினும், மனிதம் இல்லார் மரக்கட்டை போல்வார் என்பதைச் சொல்வது.

சமுதாயப் பண்பில்லாதவர் அரம் போன்று கூர்த்த அறிவுடையராயினும் மரத்தை ஒப்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பண்புடைமை இல்லா மாந்தர் உணர்வற்ற கட்டைகளே.

பொழிப்பு

சமுதாயப் பண்பில்லாதவர் அரம்போன்ற கூரிய அறிவுடையராயினும் மரத்தை ஒப்பர்.