இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0996பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்

(அதிகாரம்:பண்பு உடைமை குறள் எண்:996)

பொழிப்பு (மு வரதராசன்): பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது; அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்துபோகும்.மணக்குடவர் உரை: ........................................................................................

பரிமேலழகர் உரை: பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு - பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; இன்றேல் அது மண்புக்கு மாய்வது - ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம்.
('பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர். மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பண்புடையார் இருப்பதால் உலகம் இருக்கிறது. இல்லாவிடின் மண்ணாகிப் போயிருக்குமே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பண்பு உடையார்ப் பட்டு உலகம் உண்டு; அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்.

பதவுரை: பண்புடையார்- பண்புடையவர்கள்; பட்டு-அமைந்து, பொருந்தி இருத்தலால்; உண்டு-உளது; உலகம்-உலகம்,உலகியல்; அது-அஃது; இன்றேல்-இல்லாவிடில்; மண்-மண்; புக்கு-புகுந்து; மாய்வது-அழிவது; மன்-ஒழியிசை(சொல்லாதொழிந்த சொற்களால் பொருளை இசைப்பது), நிலை.


பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: பண்புடையாரைத் தோற்றி உலகமாகியபலவகை உயிரும் உண்டாயிற்று;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பண்புடையார் பிறத்தலானே உலக நடை தப்பாமல் வருகின்றது என்றது.
பரிதி: பண்புடைமையாலே உலகம் என்றும், பெரியோர் என்றும் பெயராயிற்று;
காலிங்கர்: மக்கட்பண்புண்டாகிய மரபுடையாளரைப் பெற்று உண்டாயிற்று; [மரபுடையாளர் - வழிவழி வரும் தொடர்புடையாளர்]
பரிமேலழகர்: பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது; [உலகியல் - உலக ஒழுக்கம்]
பரிமேலழகர் குறிப்புரை: 'பட' என்பது திரிந்து நின்றது. உலகம் - ஆகுபெயர். [உலகு என்னும் இடப்பெயர் உலகில் நிகழும் ஒழுக்கத்தை உணர்த்துதலால் இடவாகு பெயராம்]

'பண்புடையாரைத் தோற்றி உலகமாகிய பலவகை உயிரும் உண்டாயிற்று' என்று பரிப்பெருமாளும் 'மக்கட்பண்புண்டாகிய மரபுடையாளரைப் பெற்று உண்டாயிற்று' என்று காலிங்கரும் ''பண்புடைமையாலே உலகம்' என்று பரிதியும் 'பண்புடையார் கண்ணே படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை பகன்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பண்புடையாரைப் பொருந்தி இருத்தலால்தான் உலகம் இயங்கி வருகிறது', 'பண்புடைய மனிதர்களைப் பெற்றிருப்பதனால்தான் உலகத்தில் நல்வாழ்வு நடைபெற்று வருகின்றது', 'உலகமானது பண்புடையார் ஒழுக்கத்தோடு பொருந்தி நிலைபெறுகின்றது', 'நற்குணம் உடையவர்கள் வாழ்தலால் உலகம் உண்டு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பண்புடையவர்கள் இருப்பதால் உலகம் இருக்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.

அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: அத்தோற்றம் இல்லையானால் அவ்வுயிர்கள் எல்லாம் மண்ணின்கண் புக்கு மாய்வது நிலை என்றவாறு.
பரிதி: அது இல்லையாகில் மண்ணில் மாய்வது நன்று என்றவாறு.
காலிங்கர்: ஒழுக்கம் என்று மறைநூலும் பிறவும் வகுத்துரைக்கின்ற அனைத்தொழுக்கத்திற்கும் காரணமாகிய அம்மக்கட் பண்பு என்பது ஈண்டு இல்லையாயின், பிறந்தார் யாவரும் பெரும்பாவிகளே ஆனார்; ஆதலால் அந்தப் பூமிக்கும் பெரும்பாரமேயாகும்; இதனைத் தாங்கமாட்டாது என்றவாறு.
பரிமேலழகர்: ஆண்டுப் படுதலில்லையாயின், அது மண்ணின்கண் புக்கு மாய்ந்து போவதாம். [ஆண்டுப்படுதல்-உலகியல் பண்புடையாரிடத்தே பொருந்துதல்]
பரிமேலழகர் குறிப்புரை: மற்றைப் பண்பில்லார் சார்பன்மையின், ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாயுமது வேண்டாவாயிற்று என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. இவை நான்கு பாட்டானும் அதனையுடையாரது உயர்ச்சி கூறப்பட்டது. [சார்புமின்றி - ஆதாரமுமில்லாமல்; அதனை- பண்பினை]

பரிப்பெருமாள் 'பண்புள்ளவர்கள் தோற்றம் இல்லையானால் உலக உயிர்கள் எல்லாம் மண்ணின்கண் புக்கு மாய்வது நிலை' என்றும் 'அம்மக்கட் பண்பு என்பது ஈண்டு இல்லையாயின், பிறந்தார் யாவரும் பெரும்பாவிகளே ஆனார்; ஆதலால் அந்தப் பூமிக்கும் பெரும்பாரமேயாகும்; இதனைத் தாங்கமாட்டாது' என்று காலிங்கரும் பரிதி 'பண்புடைமை இல்லையாகில் உலகம் மண்ணில் மாய்வது நன்று என்றும் பரிமேலழகர் 'பண்பற்றவர்களால் உலகம் ஓர் சார்புமின்றி மண்ணின்கண் புக்கு மாய்ந்து போகும்' என்றும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர்கள் இருத்தல் இல்லை என்றால் உலகம் மண்ணில் புகுந்து மாய்ந்தொழியும்', 'இல்லாவிட்டால் அந்த நல்வாழ்வு எனப்படுவது மண்ணில் புதைந்து மறைந்து போவதாம்', 'அஃதில்லையாயின் அது மண்ணிற் புகுந்து மாய்ந்து ஒழியும்', 'இல்லையேல் மண்ணுள் மறைந்து அழிந்துவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது இல்லாவிடின் மண்ணுள் மறைந்து அழிந்துவிடுமே என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
பண்புடையவர்கள் இருப்பதால் உலகம் இருக்கிறது; அது இல்லாவிடின் மண்ணுள் மறைந்து அழிந்துவிடுமே என்பது பாடலின் பொருள்.
'பட்டுண்டு உலகம்' குறிப்பது என்ன?

பண்புகள் இன்றேல் உலகியலும் அழிந்துபோம்.

பண்புடையவர்கள் இருப்பதனாலேயே இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் இல்லாவிட்டாடல் இது மண்ணோடு மண்ணாகப் போவது உறுதி.
உலகம் இயங்கிக் கொண்டிருப்பதே பண்புடையவர்கள் இருப்பதால்தான் என்கிறது பாடல். பண்பு உள்ளவர்கள் பண்புடையார் எனப்படுவர். பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல் (கலித்தொகை 133 பொருள்: எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல்) எனவரும் சங்கப்பாடல்வரி பண்புக்கு விளக்கம் தருகிறது. இச்செய்யுள் பண்புஎன்பது ஒருவர் தாம் கலந்து பழகுபவர்களது இயல்பறிந்து அவ்வியல்புக்கேற்ப ஒழுகும் தன்மையாகும் என்கிறது.
மனிதராய்ப் பிறந்தோர் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி பண்புடன் வாழ்தல் வேண்டும். இது தனிமனித வாழ்விலும் சமுதாய வாழ்விலும் மேம்பாடான நல்லிணக்கத்தை உருவாக்கும். பண்புடையாரிடத்தே உலகம் படுதலால் உலகியல் எப்போதும் உளதாவதாய் வந்து கொண்டிருக்கின்றது. பண்பு பாராட்டாமல் உலகோர் இருந்தால் உயிரின் இயல்பாகிய தன்னைப் பேணிக்கொள்ளுதல் என்ற உணர்வால் உந்தப்பட்டு ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு, உலகியல் மண்ணிலே மறைந்து புழுதியாகிப் போய்விடும்.
இக்கருத்தை முந்தைய அதிகாரத்தில் கூறப்பட்ட சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை (சான்றாண்மை 990 பொருள்: சான்றோர்கள் தம் சான்றாண்மைக் குணங்களில் குறைந்தால் பெரிய பூமியும் சுமையைத் தாங்க இயலாது போம்) என்னும் குறளோடும் இணைத்து நோக்கலாம்.

உலகத்தோடு ஒத்துப் பொருந்தி வாழும் பண்புகளால் மனித உறவுகள் பலப்படுத்தப்பட்டு, மண்ணும் பாதுகாக்கப்படும் என்ற உண்மையை புறநானூற்றுப் பாடல் ஒன்றும் கூறியது. பண்புடைமைக்கு சங்ககால விளக்கமாகக் காட்டப்படும் அப்பாடல்:
உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதுஆயினும், 'இனிது' எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,
புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,
உலகுடன் பெறினும், கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகி,
தமக்கு என முயலா நோன் தாள்,
பிறர்க்கு என முயலுநர் உண்மையானே
(புறநானூறு 182 பொருள்: இந்திரர்க்குரிய அமிழ்தம் கிடைப்பினும் தனியே உண்ணாதவரும் யாரோடும் வெறுப்பின்றியும் சோர்வுமின்றியும் பிறர்க்கு வரும் துன்பத்திற்கு அஞ்சிப் புகழ் தரும் செயலின் பொருட்டு உயிரையும் கொடுக்க விழைபவராய் உலக முழுவதையும் பெறினும் பழிதரும் செயலைச் செய்யாதவர்களாய்த் தமக்கென முயலாது எப்பொழுதும் பிறர்க்கென முயல்வோர் சிலர் இருப்பதனாலேயே உலகம் நிலை பெற்றிருக்கிறது). இப்பாடலிலுள்ள 'உண்டாலம்ம இவ்வுலகம்' என்ற பகுதியை மனத்திற்கொண்டு, அறிவிலாரும் தீமை செய்வாரும் கலந்திருக்கும் இவ்வுலகம் எப்படி நிலைக்கிறது என்று எண்ணிப் பார்த்து உயிர்களிடையே உள்ள பண்புகளே உலகைக் காக்கிறது என வள்ளுவர் துணிபுகொள்கிறார். பண்புடைமைக்கும் உலகம் இயங்குவதற்கும் உள்ள தொடர்பு பற்றி ஔவையாரும் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை- அதாவது மழை பெய்து உலகம் இயங்கி வருவது நல்லவர்கள் இருப்பதால்தான் என்றார். ஔவையார் நல்லார் என்று குறிப்பிடுவது பண்புடையாரையே.

தன்னலம், பொறாமை, போட்டி, சினம், வஞ்சம், பழி வாங்கும் உணர்ச்சிகள், இன, மத, மொழி, நிற வேறுபாடுகள் எல்லாம் நிறைந்த இந்த உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது? எது இந்த உலகை கட்டிக் காக்கிறது? இக்கேள்விகளுக்கு வள்ளுவர் விடை தேட முயன்று பண்புடையவர்கள் இருப்பதால்தான் உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது என்கிற முடிவு காண்கிறார்.
மாந்தரெல்லாம், இணைந்து ஒன்றிக் கூட்டுறவாகச் சமுதாய வாழ்வை விரும்பும் தன்மையுடையவராவர். நல்லவர்களும் தீயவர்களும் கலந்து வாழும் இயல்புடையதாய் உலகியல் உள்ளது. ஒத்ததறியார் ஒத்திசைந்து வாழ முடியாதவராவர். பாடறிந்தொழுகும் பண்பு இல்லாதவரிடம் ஒப்புரவுஅறம் தோன்றுவதில்லை; அதனால் அவரிடை கூட்டுறவும் நிலைபெறாது. அச்சூழலில் பண்புடையோர் இல்லாவிட்டால் தன்னைப் பேணிக்கொள்ளுதல் என்ற உணர்வால் உந்தப்பட்டுப் போட்டியாலும் பொறாமையாலும் தம்முள் மோதியே உலகமக்கள் அழிந்துவிடுவர். நற்பண்புடையோரது ஒழுக்கம் மேல்வரிச்சட்டமாகி பிறரையும் நல்வழிப்படுத்திச் சமுதாய ஒழுங்கை நிலைக்கச்செய்கிறது. ஒருவர் தம்தேவைகளை நிறைவேற்றி உலகியல் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளும் அதே வேளையில் அது அவர் பிறரோடு கலந்து ஒழுகும், பண்போடு வாழும், வாழ்வாகவும் இருக்க வேண்டும். பண்பாவது சமுதாயத்தில் வாழ்பவர்களின் இயல்பறிந்து அவ்வியல்புக்கேற்ப வாழும் தன்மையாகும். அத்தகைய பண்புடையவர்களாலேயே உலகம் அமைவுடன் திகழ்கிறது. இத்தகு பண்பாளர்கள் சிலராகவே இருந்தாலும் அவர்களைச் சார்பாகக் கொண்டே இவ்வுலகம் உளதாய் இருக்கிறது. அவர்களும் இல்லாதுபோனால், உலகம் சார்ந்து நிற்க ஏதுமின்றி, மண்ணோடு மண்ணாகி மடிந்து அழிவுறும்.
குறளில் பலவிடங்களில் அறிவுக்கு முதன்மையிடம் தரும் வள்ளுவர் அறிவுடையார் பட்டுண்டு உலகம் என்று கூறாமல் பண்புடையார் பட்டுண்டு உலகம் என்றுதான் சொல்கிறார் என்பது அறியத்தக்கது.

‘உலகம்’ என்பதற்கு உலகியல், உலகமாகிய பலவகை உயிர், பெரியோர், ஒழுக்கம் எனப் பலவாறாகப் பொருள் கூறினர். ‘உலகம்’ என்பதற்கு உலகியல் எனப்பொருள் கூறி அதற்கு 'உலகியல்பாவது-மானம், குலம், ஈகை, ஒப்புரவு, நட்பு முதலாயின பல நன்மைகள் என்க; இவை பண்புடையாரிடத்திருத்தலால் உலகத்திலும் நடக்கின்றது' எனப் பழைய உரை ஒன்று விளக்கம் தருகிறது. உலகம் என்பதற்கு உலகியல் அதாவது உலகஒழுக்கம்/உலகநடைமுறை என்ற பொருள் சிறக்கும்.
இக்குறளிலுள்ள ‘மன்’ என்பதனை ஒழியிசைப் பொருள் தரும் இடைச் சொல்லாகப் பரிமேலழகர் கொள்கிறார். ஆனால் பரிப்பெருமாள் நிலை எனப் பெயர்ச் சொல்லாகக் கொண்டார். இவற்றுள் 'ஒழியிசைப் பொருள்' என்பதே பொருத்தம்.

'பட்டுண்டு உலகம்' குறிப்பது என்ன?

'பட்டுண்டு உலகம்' என்றதற்குத் தோற்றி உலகமாகிய பலவகை உயிரும் உண்டாயிற்று, உலகம் என்றும் பெரியோர் என்றும் பெயராயிற்று, பெற்று உண்டாயிற்று ஒழுக்கம், படுதலால் உலகியல் எஞ்ஞான்றும் உண்டாய் வாரா நின்றது, உண்டாகிற படியினாலே உலக இயற்கை எந்நாளும் உண்டாய் வருகிறது, உலகியல்பு உண்டாயிருத்தலால் எஞ்ஞான்றும் உலகியல்பு நடந்து வருகின்றது, இடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, பொருந்தி இருத்தலால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது, உலகியல்பும் உலக இயக்கமும் உண்டு, இருப்பதால் உலகம் இருக்கிறது, பொருந்தி இருத்தலால்தான் உலகம் இயங்கி வருகிறது, பெற்றிருப்பதனால்தான் உலகத்தில் நல்வாழ்வு நடைபெற்று வருகின்றது, உலக நடைமுறை பொருந்தி இருப்பதால் அது தடைப்படாமல் நிகழ்கின்றது, ஒழுக்கத்தோடு பொருந்தி நிலைபெறுகின்றது உலகமானது, வாழ்தலால் உலகம் உண்டு, படுதலால் உலக நடப்பு இடையறாது தொடர்ந்து வருகின்றது, நல்ல செயல் அளவுக்கு ஏற்ப உலக மக்கள் பயன்பட்டு வாழ்வார்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பண்பு உணர்வார் இருப்பதால் உலகம் இருக்கிறது என்பது குறளின் முதல்பகுதியின் பொருள். 'யார்மாட்டும் பண்புடைமை' மக்களியல் வழக்காதலால், அப்பண்புடையார்ப் பட்டுண்டுலகம் எனக் குறள் கூறுகின்றது. பட்டுண்டு என்பதற்குக் காலிங்கர் 'பண்புடையாரைப் பெற்றதால்' எனவும் பரிப்பெருமாள் 'பண்புடையாரைத் தோற்றி' எனவும் உரை செய்கின்றனர். அதற்குப் பரிமேலழகர் 'பண்புடையார் கண்ணே படுதலால் அதாவது சார்தலால் உலகியல் இடையறாது வருகின்றது என்று உரை வகுக்கிறார். மேலும் இவர் 'பட' என்பது திரிந்து பட்டு என நின்றது என்ற குறிப்பும் தருகிறார். இப்பகுதிக்கான காலிங்கர் உரை 'மக்கட்பண்புண்டாகிய மரபுடையாளரைப் பெற்று உண்டாயிற்று ஒழுக்கம்' அதாவது பண்புடையாரைப் பெற்றதால் உண்டாயிற்று மக்கட் பண்பு என்பது. இதுவே இயைபுடையதாக உள்ளது.

'பட்டுண்டு உலகம்' என்ற தொடர் (பண்புடையாரைப்) பெற்றிருப்பதால் இவ்வுலகம் உளதாயிருக்கின்றது என்ற பொருள் தரும்,

பண்புடையவர்கள் இருப்பதால் உலகம் இருக்கிறது; அது இல்லாவிடின் மண்ணுள் மறைந்து அழிந்துவிடுமே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பண்புடைமையே உலகம் நிலைபெற்றிருக்கச் செய்கிறது.

பொழிப்பு

பண்புடையாரைச் சார்ந்தே உலகம் அமைகிறது. அந்த அமைதி இல்லாவிடின் அது மண்ணாய்ப் போய்விடும்.