நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு
(அதிகாரம்:பண்புடைமை
குறள் எண்:995)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும்; பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்ல பண்புகள் உள்ளன.
|
மணக்குடவர் உரை:
----------------------------------------------------
பரிமேலழகர் உரை:
இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.
('பாடறிவார்' எனவே, அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.)
வ சுப மாணிக்கம் உரை:
நட்பிலும் இகழ்ச்சி பிடிக்காது; பண்பாளரிடம் பகைவரும் மதிக்கும் குணங்களே இருக்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது பாடறிவார் மாட்டு பகையுள்ளும் பண்புள.
பதவுரை: நகையுள்ளும்-விளையாட்டின் கண்ணும்; இன்னாது-இனிதன்று, தீது; இகழ்ச்சி-பழித்தல்; பகையுள்ளும்-பகைமையுள் வழியும்; பண்பு-பண்பு; உள-இருக்கின்றன; பாடு-பெருமை, துன்பம், உலகஒழுக்கம்; அறிவார்மாட்டு-அறிந்து நடப்பவர்கண்.
|
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: அறிவார்மாட்டு நகையாடுதலின் கண்ணும் இகழ்ச்சி தோற்றுமாயின் இன்னாது ஆம்; [தோற்றுமாயின் - உண்டாயின்]
பரிதி: ஒருவரை இகழ்ந்து பேசினால் பலரும் சிரிக்கப்படும்;
காலிங்கர்: தாம் சிலரோடு இளமைகொண்டு நகையாடும் இடத்தும் இகழ்ந்துரை கூறி நகையாடும் இகழ்ச்சிப்பாடு இன்னாது;
பரிமேலழகர்: தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; [தன்னை இகழ்தல்-பிறர்தன்னை இகழ்ந்து பேசல்]
'நகையாடுதலின் கண்ணும் இகழ்ச்சி தோற்றுமாயின் இன்னாது ஆம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'விளையாட்டிலும் ஒருவரை இகழ்ந்து பேசுதல் துன்பம் தரும்', 'ஆகையினால் விளையாட்டாகக்கூட, பிறரை இகழ்வது அவர்களுக்குத் துன்பமான செயல்', 'விளையாட்டிலுங்கூட ஒருவரை இகழ்தல் நல்லதன்று', 'விளையாட்டின் கண்ணும் இகழ்ச்சி இனியது ஆகாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
விளையாட்டிலும் நட்புக்கொண்டவரை இகழ்வது துன்பம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.
பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: பகை ஆகுமிடத்துப் பண்பு தோற்றுமாயின் பெருமை உளதாம் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே, அறியாதார்மாட்டு இவை இரண்டும் இல்லையாம் என்றவாறாயிற்று. இகழ்ச்சி என்றது பன்பின்மை. இஃது அறிவுடையார்மாட்டு ஒருதலையாகக் கொண்டு ஒழுக வேண்டும் என்றது.
பரிதி: பகைவருள்ளும் பண்புடைமையானார் பெருமையைப் பாராட்டும் உலகம்.
காலிங்கர்: அதுவுமின்றி இனி ஒருவரோடு பகை பூணுங்காலும் யாவர்மாட்டும் தாம் இனியராய் விடுதல் யாவர்மாட்டு உளதாவது எனின், தாம் செய்யத் தகுவதாகிய நெறிப்பாடு அறிந்து ஒழுகுவார்மாட்டே உளவாம் என்றவாறு.
பரிமேலழகர்: ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.
பரிமேலழகர் குறிப்புரை: 'பாடறிவார்' எனவே, அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார். [அவ்வின்னாமை - நகையுள்ளும் இகழ்ச்சி இன்னாதென்பதை; அது -இன்னாமை; இதற்கு - இக்குறளிற்கு; இரண்டு தொடரும் - இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது, பாடறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்புள என்னும் இரண்டு தொடரும்; இயையாமல் - பொருந்தாமல்] ]
'பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலக ஒழுக்கமறிந்து ஒழுகுவாரிடத்துப் பகையிடத்தும் நல்ல பண்புகள் உள்ளன', 'பிறருடைய துன்பங்களை அறியக்கூடிய பண்புடையார் பகைவர்களுக்கும் பண்புடையவர்களாகவே நடந்து கொள்வார்கள்', 'உலகியல்பு அறிந்த நல்லவரிடத்தே பகைமை இருந்தாலும் இனிய குணங்கள் விளங்கும்', 'பிறர் இயல்புகளை அறிந்து நடப்பவர்க்குப் பகைமை உள் வழியும் இனிய பண்புகளே உள' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிறர் இயல்புகளை அறிந்து நடப்பவர்க்குப் பகைமையிடத்தும் நல்லபண்புகளே உள என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
விளையாட்டிலும் நட்புக்கொண்டவரை ஒருவரை இகழ்வது துன்பம் தரும்; பாடறிவார் மாட்டு பகைமையிடத்தும் நல்லபண்புகளே உள என்பது பாடலின் பொருள்.
'பாடறிவார்' யார்?
|
பகைவரையும் மதித்து நடப்பர் பண்புடையார்.
விளையாட்டாக நண்பரை இகழ்தலும் நன்றன்று; பிறர் இயல்புகளை அறிந்து நடப்பவர் பகைவரிடமும் பண்புடனே நடந்துகொள்வர்.
நகையுள்ளும் என்ற தொடர் விளையாட்டாகப் பேசுமிடத்தும் அதாவது சிரிக்க வைப்பதற்காகப் பேசுமிடத்தும் எனப்பொருள்படும்.
பகையுள்ளும் என்ற தொடர்க்கு பகைமையுள்ள இடத்தும் என்பது பொருள். 'பகையுள்ளும் பண்புள' என்ற தொடர்க்குப் பகைமை இருந்தாலும் இனிய குணங்கள் விளங்கும் எனப் பொருள் கொள்வர். குணங்கள் என்பன பகைவரை மதிக்கும் குணங்களாம்.
நட்புள்ளவரிடத்தும், சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டுக்குக்கூட, இகழ்ந்து பேசுதல் துன்பமே தரும் என்று அறிந்த பண்பாளர்கள். பகையுள்ளவர்களையும் மதித்து ஒழுகுவர்; பகைவரிடம்கூட, தம் செறிவான பண்பு கெடாமல் அவர்களுக்குத் துன்பம் நேராதவகையில் நடந்து கொள்வர். பாடறிவார் எனச் சொல்லப்பட்டதால் இன்னாமையையும் அறிவார் என்பது பெறப்பட்டது.
பகையென்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று (பகைத்திறம் தெரிதல் 871 பொருள்: பகை என்று சொல்லப்படுகின்ற குணமற்றதனை விளையாட்டாகவும் யாரும் விரும்பத்தக்கது அல்ல) என்றவிடத்திலும் விளையாட்டுக்காகக் கூட பண்பில்லாத பகை வேண்டாம் என 'விளையாட்டாக' என்பது வந்தது.
பண்புடையோரின் இயல்பை விளக்கும் குறள் இது. விளையாட்டிலும் இகழ்ச்சி விரும்பத்தக்கதன்று. எது காரணமாகவும் பகைவரை இகழாது மதிப்பளித்து நடந்துகொள்வதே பண்புடைமை.
நெடுநாள் பழகிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் கூடி மகிழும்போது. குத்தலும் கேலியுமாகப் பேசுவர். அப்படி உரையாடும்போது சிலநேரங்களில் சிலரது இகழ்ச்சியானது எல்லைமீறிப் போய் பிறர் உள்ளத்தைக் காயப்படுத்திவிடும். சிரிப்புக்காட்டுவதற்காகப் பேசும் பேச்சுகள், அச்சூழலில் கலகலப்பை உண்டாக்கியது என்றாலும், அவை அங்குள்ளவர் உள்ளத்தையும் புண்படுத்திவிடும். அது இகழப்பட்டவரிடத்து பெரும் பாதிப்பை விளைவிக்கும். அவர் அதை வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், மனதுக்குள் துன்பப்பட்டுக்கொண்டுதான் இருப்பார். அதைத்தான் 'நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி' என்று கூறுகிறார் வள்ளுவர்.
பாடலின் பிற்பகுதி பகைவரைப் பற்றிச் சொல்லுவதால் முதல்பகுதி பகையில்லாத நண்பரையோ அல்லது உறவினரையோ சுட்டுவதாகக் கொள்ளலாம்.
பண்புள்ளோர் விளையாட்டுக்கும் பிறரை இகழமாட்டார்கள் என்பது கருத்தாகிறது.
அவரவர் இயல்பறிந்து நடப்பவர்களது பண்புகள் கூறப்பட்டன.
பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு (படைச்செருக்கு 773 பொருள்: பகைவர்மேல் கண்ணோடாது போர்புரிதலைப் பெரிய வீரம் என்று சொல்லுவர்; அவர்க்குத் துன்பம்வரின் உதவுதல் அவ்வீரத்தின் கூர்மையான தன்மையாகும்) என்ற பாடல் பகையிடத்து பண்புகாட்டுதலுக்கு ஓர் காட்டு.
தன்னனுபவங் கூறுவது போல 'தன்னையிகழ்தல் விளையாட்டினும் இன்னாதது; ஆதலாற் பிறர் பெருமைகளையறிந்து ஒழுகுபவனிடத்தும் பகைமையிருப்பினும் இன்னா உளவாகா. இனிய பண்புகளே உளவாம்' என்பது பரிமேலழகர் உரை. தண்டபாணி தேசிகர் 'தன்னையிகழ்தல் ஒருவனுக்கு விளையாட்டிலும் துன்பம் தருவது. ஆதலால் பிறர் பெருமையுணர்வார் பகைவரிடத்தும் பண்பே பாரட்டுவர்' என்றார். பிறருடைய பெருமையை அறிவார்க்கு ஒருவன் நட்பாயிருந்து விளையாட்டாக இகழின் துன்பந்தரும், பகையாயிருந்தும் பண்பாவன உரைப்பின் இன்பந்தரும் என்றபடியும் ஓர் உரை உள்ளது.
|
'பாடறிவார்' யார்?
'பாடறிவார்' என்ற தொடர்க்கு நெறிப்பாடு அறிந்து ஒழுகுவார், பிறர் பாடு அறிந்தொழுகுவார், பிறருடைய குணங்களை அறிந்து நடக்கிறவர்கள், பிறர் குணமறிந்து ஒழுகுவார், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவர், அவரவர் பண்பறிந்து பழகுகின்றவர்கள், உலக ஒழுக்கமறிந்து ஒழுகுவார், பிறருடைய துன்பங்களை அறியக்கூடியவர், பிறர் உள்ளம் உணர்ந்து நடப்பவர், உலகியல்பு அறிந்த நல்லவர், பிறர் இயல்புகளை அறிந்து நடப்பவர், உலக இயல்பை அறிந்து நடப்பவர், பிறர் இயல்பறிந்து நடப்பவர்கள், பாடறிந்தொழுகுவார், பிறர் கஷ்டம் அறிபவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
‘பாடு’ என்ற சொல்லுக்கு நெறிப்பாடு, பெருமை, துன்பம், பண்பு, பண்பாட்டு உயர்வு எனப் பலவாறு பொருள் கூறியுள்ளனர்.
பாடறிவார் என்பதற்கு நெறிப்பாடு அறிந்து ஒழுகுவார் என உரைத்தார் காலிங்கர்.
பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் (கலித்தொகை 133: 8 பொருள்: பண்பு எனப்படுவது எல்லாரியல்புகளுமறிந்து ஒத்தொழுகுதல்) என்று சொல்லும் கலித்தொகை. இதிலுள்ள ‘பாடறிதல்’ என்பதற்குநச்சினார்க்கினியர் உலக ஒழுக்க மறிதல் எனப் பொருளுரைத்துள்ளார். ‘பாடறிந் தொழுகும் பண்பி னாரே (புறநானூறு. 197 : 14 பொருள்: செய்யும் முறைமையை யறிந்து நடக்கும் குணத்தினையுடையோர்) என்று புறநானூறும் பாடறிதல் பற்றிக் குறிப்பிட்டது.
பாடறிந்து ஒழுகல் என்பது பிறர் பண்புகளையும் அறிந்து அவற்றுக்குத் தக நடத்தலைக் குறிப்பது. உலக வழக்கை அறிந்து அதற்கேற்ப நடத்தலும் பாடறிதலாம். பாடறிந்து ஒழுகத் தெரியாதலாலேயே பெரும்பாலான பகை உண்டாகிறது. பகைத்திறம் அறிய முற்படுவோர் பகையின் பண்பிலாத இத்தன்மையை நன்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
இக்குறளில் பாடறிவார் என்ற தொடர் பண்புடையார் பாடறிந்து ஒழுகுவார், பகையுள்ளவிடத்தும் பண்பாகவே நடப்பர் அதாவது பகைவரிடத்தும் இகழ்ந்து பேசமாட்டார் என்பதைச் சொல்வதாக உள்ளது.
பரிமேலழகர் ''பாடறிவார்' எனவே, அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து' என விளக்கவுரையில் கூறினார்.
'பாடறிவார்' என்றது அவரவர் இயல்பறிந்து ஒழுகுபவர் அல்லது பிறருடைய குணங்களை அறிந்து நடக்கிறவர்கள் எனப் பொருள்படும்.
|
விளையாட்டிலும் நட்புக்கொண்டவரை இகழ்வது துன்பம் தரும்; பிறர் இயல்புகளை அறிந்து நடப்பவர்க்குப் பகைமையிடத்தும் நல்லபண்புகளே உள என்பது இக்குறட்கருத்து.
புறவேற்றுமை இருந்தாலும் பண்புடைமை காத்தல் வேண்டும்.
விளையாட்டாகக்கூட நட்பாளரை இகழ்ந்து பேசுதல் துன்பம் தரும்; பிறர் இயல்புகளை அறிந்து ஒழுகுவாரிடத்துப் பகையிடத்தும் நல்ல பண்புகள் உள்ளன
|