இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0993



உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு

(அதிகாரம்:பண்புடைமை குறள் எண்:993)

பொழிப்பு (மு வரதராசன்): உடம்பால் ஒத்திருத்தல் மக்களோடு ஒப்புமை அன்று; பொருந்தத்தக்க பண்பால் ஒத்திருத்தலே கொள்ளத்தக்க ஒப்புமையாகும்.

மணக்குடவர் உரை: .............................................

பரிமேலழகர் உரை: உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்று - செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பு ஒத்தல் - இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல்.
(வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று, வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: உறுப்புக்களினால் ஒத்திருத்தல் மட்டும் மக்களோடு ஒத்திருத்தற்கு உரியதன்று; மக்கட்குரிய நிறைந்த பண்புகளாலும் ஒத்திருத்தலே உண்மையான ஒப்புமையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்; ஒப்பதாம் ஒப்பு வெறுத்தக்க பண்பொத்தல்.

பதவுரை: உறுப்பு-உடம்பு; ஒத்தல்-ஒத்திருப்பது, -நிகர்த்தல்; மக்கள்-மக்கள்; ஒப்பு-ஒத்திருப்பது, நிகர்த்தல், பொருந்துதல்; அன்று-இல்லை; 'ஆல்' அசைநிலை; வெறுத்தக்க-செறியத்தக்க, நிலையான. நிறைந்த, நெருங்கத்தக்க; பண்பொத்தல்-பண்பு நிகர்த்தல்; ஒப்பதாம்-பொருந்துவதாம்; ஒப்பு- ஒப்பு, நிகர்த்தல், பொருந்துதல்.


உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: மக்கள் ஒப்பாவது உறுப்பு ஒத்தலன்று;
பரிதி: மெய் வாய் கண் மூக்குச் செவி உண்டு. உறுப்பினால் குறைவில்லை என்பது நன்றல்ல;
காலிங்கர்: கை கால் கண் மூக்குச் செவி முதலிய உறுப்பு ஒத்தல் மக்கள் ஆதற்கு ஒப்பு அன்று;
பரிமேலழகர்: செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று;
பரிமேலழகர் குறிப்புரை: வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று.

'மக்கள் ஒப்பாவது உறுப்பு ஒத்தலன்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகமொப்பு ஒருகுடி மக்கள் ஒப்பாகாது', 'உடலுறுப்புகளால் ஒத்தல் மக்கள் ஒப்பாகாது', 'நல்ல குடியிற் பிறந்த மக்கள் (அந்த நல்ல குடியிற் பிறந்தவர்கள் என்பதற்கு அடையாளம்) தம்முடைய தாய் தந்தையர் அல்லது முன்னோர்களுடைய உருவம், நிறம், அங்கங்கள் முதலியவற்றில் ஒத்திருத்தல் சரியான ஒப்பல்ல', 'மனிதர்கள் ஒத்திருப்பதென்பது உறுப்பால் ஒத்திருப்பதன்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உறுப்புக்களால் ஒத்திருப்பது மக்கள் ஒப்புஆகாது என்பது இப்பகுதியின் பொருள்.

வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: செறியத்தக்க குணங்களை ஒத்தல்; அதனை ஒப்பதே ஒப்பாவது என்றவாறு. [செறியத்தக்க- நெருங்கத்தக்க]
பரிப்பெருமாள் குறிப்புரை: செறியத்தக்க குணங்கள் உள ஆதலின் செறியத்தக்க குணம் என்றார். பண்பு இல்லாதார் மக்களல்லர் என்றது.
பரிதி: மக்கட் பண்பு உள்ளதே நன்று என்றவாறு.
காலிங்கர்: மற்று யாதோ ஒப்பு எனின் ஒருவர்க்குப் பெருமை பொருள் எனத்தக்க பண்பு ஒத்தல்; யாது மற்று அது, அகத்து உறுப்பாகிய நெறிக்குறிப்பு அன்றே; மற்று அதனைச் சிலரோடு சிலர் ஒப்பதே ஒப்பாவது என்றவாறு. [அகத்து உறுப்பாகிய நெறிக்குறிப்பு - அன்பு முதலிய அகத்துறுப்புக்கள்]
பரிமேலழகர்: இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல்.
பரிமேலழகர் குறிப்புரை: வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.

'செறியத்தக்க குணங்களை ஒப்பதே ஒப்பாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிறைந்த குணவொப்பு ஒப்பாகும்', 'செறியத்தக்க பண்பால் ஒத்தலே பொருந்திய ஒப்பாகும்', 'சரியான ஒப்பு எதுவென்றால் அம்முன்னோர்களிடம் நிறைந்திருந்த செல்வமாகிய 'பண்புடைமை' என்ற குணத்தில் ஒத்திருப்பதேயாகும்', 'நெருங்கி அளவளாவுதற்குரிய பண்பினால் ஒத்திருப்பதே ஒப்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நிறைந்த பண்பால் ஒத்திருத்தலே ஒப்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறுப்புக்களால் ஒத்திருப்பது மக்கள்ஒப்பு ஆகாது; நிறைந்த பண்பால் ஒத்திருத்தலே ஒப்பாகும் என்பது பாடலின் பொருள்.
'மக்களொப்பு' குறிப்பது என்ன?

குணமே மனிதனாகக் காட்டும்.

உறுப்புக்களால் ஒத்திருப்பதால் மட்டும் ஒருவன் மனிதனுக்கு ஒப்பாக மாட்டான்: மக்கட்பண்பால் நிறைந்து ஒத்திருப்பதே பொருந்திய ஒப்புமையாம்.
முகத்தோற்றம், கைகள், கால்கள், உடலமைப்பு இவற்றைக் கொண்டு ஒருவர் மாந்தர் என அறிகிறோம். ஆனால் இதுபோன்று உறுப்புக்களின் ஒற்றுமை இருப்பதால் மட்டுமே ஒருவர் மனிதர் ஆகமாட்டார் என வள்ளுவர் சொல்கின்றார். ஒருவன் பண்பு நிறைந்தவனா எனப் பார்க்கச் சொல்கிறார். அதாவது மனிதன் என்றால் மக்கட் பண்பு நிறைந்தவனாய் இருப்பது என்கிறார் அவர். இது நற்குணங்கள் பல காணப்பட்டால்தான் ஒருவன் மனிதனாவான் என்பதைச் சொல்வது. வேறுவகையில் சொல்வதானால் உறுப்புகள் மக்களுக்கு ஒப்பாக இருத்தல் ஒப்புமையாகாது. பண்புகளால் நிறைந்தவன் என்ற ஒப்பு கூறுவதே மனிதப் பிறப்பொப்புமை காண்பதாம். பண்புடைமை என்பது மக்கட்பண்பு. மக்கட்பண்பு உடையார் மட்டுமே மக்கட்பிறப்பினர். மக்கட்பண்பு என்பது எவரும் எளிதாக அணுகக்கூடிய தன்மை, அன்புடைமை, நல்லியல்புகள் அமைந்த குடும்பத்திற்கேற்ற குணங்களுடையனாதல் ஆகிய மூன்றுமே உடையதாக இருப்பது என இந்த அதிகாரத்து முதல் இரண்டு குறள்களில் பண்புடைமைக்கு இலக்கணம் கூறும்போது சொல்லப்பட்டது.
'வெறுத்தக்க பண்பு' என்ற தொடர் செறியத்தக்க குணங்கள் எனப்பொருள்படும். இது நற்குணங்கள் நிறைந்திருப்பதைக் குறிக்கும்.

பிறப்பால் மனிதராய், உறுப்புகளால் மக்கள் போல்வார் எல்லாரையும் மக்கள் எனக் கொள்ளவேண்டாம் என வள்ளுவர் துணிகிறார். மக்கள் யாவருக்கும் உறுப்புகளாலாய ஒப்பு கிடைத்து விடுகிறது. ஒரு மனிதனுக்கும் மற்றொருவனுக்கும் உறுப்புகளில் வேறுபாடு இல்லை. அவ்வாறு உடம்பால், உறுப்புகளால், உருவால் மனிதர்களைப் போன்றிருந்தாலும் அவர்களை மனிதர்களோடு ஒப்பாக வைக்கமுடியாது; உறுப்பு அமைப்பால் ஒத்திருப்பதாலேயே ஒருவர் மனிதராகி விடுவதில்லை. மக்களுள் சிலர் மரக்கட்டை போல் நிற்கின்றார்கள்; வேறுசிலர் புழுக்கள்போல் ஊர்ந்து செல்கின்றனர். பலர் ஆந்தைகள்போல் திரிகின்றனர். இன்னும் சிலர் விலங்குகளாய் மாறிப் பாய்கின்றனர். பலர் ஒத்தது அறியாமல் அலைகின்றனர். ஒருசிலரே பண்பட்ட மக்களாய் குணம் நிறைந்து கலந்து பழகி வாழ்கின்றார்கள். இதனையே மக்களுக்கு உரிய உறுப்புக்கள் அமைந்திருப்பதைக் கண்டு மக்கள் என்று கருதவேண்டாம் என்று இக்குறள்வழி வள்ளுவர் கூறுகிறார். பொருந்துவதாகிய ஒப்புமை எது என்றால் மக்கட் பிறப்பிற்கு உரிய பண்பால் ஒத்திருப்பதே ஆகும் என்கிறார். ஒருவரது குணங்கள் திண்ணிய, வலிமையான, செறிவான பண்புடையாரோடு ஒத்திருந்தால் அவர் மனிதரென்று ஒப்புக்கொள்ள முடியும். அதாவது மனிதர்க்குள்ள ஒற்றுமை காணும்போது அவரவர்களுக்கு உள்ள பண்பைக் கொண்டு ஒப்புமை காணவேண்டும்.

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார் மரம் மக்கள் ஆதலே வேறு (ஊக்கமுடைமை 600 பொருள்: ஒருவற்கு வலிமையாவது ஊக்கமிகுதியே; அது இல்லாதவர் மரங்களாவார். வடிவால் மக்களாய் இருப்பதே மரங்களிலிருந்து வேறுபட்ட தன்மையாகும்) என்ற குறட்பாவை இங்கு இணைத்து நோக்கலாம்.

ஒப்பு என்னும் சொல் இக்குறளில் மும்முறை அமைந்துள்ள நடைத்திறம் இன்புறத்தக்கதாய் உள்ளது.

'மக்களொப்பு' குறிப்பது பொருள் என்ன?

'மக்களொப்பு' என்றதற்கு மக்கள் ஒப்பு, மக்கள் ஆதற்கு ஒப்பு, நன்மக்களோடு ஒப்பு, பெரியவர்களுடனே சரி, பண்புடை மக்களோடு ஒத்தல், மக்களோடு ஒப்புமை, மக்களை ஒத்தவர், மக்களுடன் ஒப்பாதல், ஒருகுடி மக்கள் ஒப்பு, மக்கள் ஒப்பு, தம்முடைய தாய் தந்தையர் அல்லது முன்னோர்களுடைய உருவம், நிறம், அங்கங்கள் முதலியவற்றில் ஒத்திருத்தல், மக்களொடு ஒத்தது, மனிதர்கள் ஒத்திருப்பது, மக்களோடு ஒத்திருத்தற்கு, மக்கள் எனப்படுதற்குரிய ஒப்புமை, ஒருவன் மனிதனாவது, நன்மக்களை ஒக்கும் ஒப்பு, மக்கள் ஒரு சமமானவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மனிதராகத் தோற்றம் தரும் எல்லோரையும் மக்கள் என ஒப்புக்கொள்ளலாமா? கூடாது என்கிறார் வள்ளுவர். பின் எப்படி மக்கள் எனக் கண்டறிவது? செறிந்த குணங்கள் ஒத்திருத்தலாயே ஒருவன் நன்மகனாக முடியும். நிறைந்த பண்புகளைக் கொண்டு ஒழுகுவாரோடு ஒப்பியே, அவ்வாறே ஒழுகுபவரை மனிதர் என்று ஒப்புக்கொள்ளமுடியும் என்கிறார் அவர்.

வ சுப மாணிக்கம் 'முகமொப்பு ஒருகுடி மக்கள் ஒப்பாகாது; நிறைந்த குணவொப்பு ஒப்பாகும்' என உரை தந்தார். நாமக்கல் இராமலிங்கம் 'நல்ல குடியிற் பிறந்த மக்கள் தம் முன்னோர்களின் அங்க அடையாளங்களில் உருவம், நிறம் முதலியவற்றில் ஒத்திருப்பது சரியான ஒப்பல்ல. சரியான ஒப்பு எதுவென்றால், தம் முன்னோர்களுடைய செல்வம் ஆகிய பண்புடைமை என்ற குணத்தில் ஒத்திருப்பதேயாகும்' என இக்குறளுக்கு உரை வரைந்தார். இவர்கள் ஒரு குடும்பத்தில் பிறந்த மக்களுள் உறுப்புகள்/குணம் ஒப்புமை காண்பது பற்றிப் பேசுகின்றனர்.

மக்களொப்பு என்பது நல்ல பண்புகள் நிறைந்திருப்போரை ஒத்திருத்தலாம்.

மக்களொப்பு மக்கள் என்ற உருவ அமைப்பில் ஒத்திருத்தல் அன்று; நிறைந்த பண்பால் ஒத்திருத்தலே ஒப்பாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அடர்ந்த பண்புடைமை ஒருவரை மனிதராக்கும்.

பொழிப்பு

உறுப்புகள் ஒத்திருத்தல் மக்களொப்பு அல்ல; நிறைந்த பண்புகளால் மனித ஒற்றுமை நோக்கப்படும்.