எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
(அதிகாரம்:பண்புடைமை
குறள் எண்:991)
பொழிப்பு (மு வரதராசன்): பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்திலும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளியது என்று கூறுவர்.
|
மணக்குடவர் உரை:
...................................
பரிமேலழகர் உரை:
யார் மாட்டும் எண்பதத்தால் - யாவர் மாட்டும் எளிய செவ்வியராதலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர்.
(குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார்.)
வ சுப மாணிக்கம் உரை:
பண்புடைமை என்ற நடத்தையை யாரிடத்தும் எளிதாகக் கலந்து பழகுவதால் எய்தலாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
யார்மாட்டும் எண்பதத்தால் பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிதென்ப.
பதவுரை: எண்-எளிய; பதத்தால்-செவ்வியால், செவ்வியராதலால், காட்சிக்கு எளியராதலால், அணுகக்கூடிய தன்மையால்; எய்தல்-பெறுதல்; எளிது-வருந்தாமல் கிட்டக்கூடியது; என்ப-என்று சொல்லுவர்; யார்மாட்டும்-எல்லாரிடத்தும்; பண்புடைமை-பண்புடைமை, பாடறிந்தொழுகுந்தன்மை உடைமை; என்னும்-என்கின்ற; வழக்கு-நன்னெறி.
|
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள் ('எண்பதத்தான்' பாடம்): எளிய காலத்தை எய்துதல் எளிது சொல்லுவர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எளிய காலம் ஆவது-எல்லாரும் தத்தம் குறை சொல்லுதற்கு எளிய செவ்வி. அஃது உடையார்க்குப் பண்பு உண்டாம் என்றது.
பரிதி: சரீரத்தை மாய்க்க வேண்டாம்; பொருட்சேதப்பட வேண்டாம்; பொறுமையையும் சொல்லினாலே தேடலாம்.
காலிங்கர் ('எண்பதத்தான்' 'எளிதுமன்' பாடங்கள்): போகச் சிறப்பினான் எண்ணத்தக்க சுவர்க்கபதத்தின்கண் சென்று எய்துதல் மிகவும் எளிது; [போகச் சிறப்பினான் - இன்பம் ஒன்றையே நுகரும் சிறப்பினான்; சுவர்க்க பதத்தின் - பின்னுலகம்]
பரிமேலழகர்: எளிய செவ்வியராதலால்; எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர்; [எளிய செவ்வியராதல் - காட்சிக் கெளியராதல்]
'எளிய செவ்வியராதலால்; எய்துதல் எளிது என்று சொல்லுவர் நூலோர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எளிய முறையில் பழகுவதால் பெறுதல் எளியது என்று நூலோர் கூறுவர்', மிருதுவான இரக்கமுள்ள குணத்தால் யாரும் சுலபமாகத் தம்மிடம் அணுகக் கூடியவராக இருப்பது என்று சொல்லப்படுகிறது', 'யாவர்க்கும் எளிதாகக்கண்டு உரையாடக்கூடிய நிலையிலிருப்பதால் அடைதல் கூடுமென்று அறிஞர் சொல்லுவர்', 'எவரும் எளிதில் பார்க்கக்கூடிய நிலையில் இருத்தலால் அடைதல் எளிது என்று சொல்லுவர் நூலோர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எளியமுறையில் கலந்து பழகுவதால் பெறுதல் எளியது என்று கூறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.
யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: யாவர் மாட்டும் பண்புடைமை என்று வழங்கப்படுகின்ற இதனை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பெரும்பான்மையும் அரசரை நோக்கிற்று. மேற்கூறிய வகையேயன்றி இதனாலும் பண்பு உண்டாம் என்று கூறப்பட்டது.
பரிதி: பண்புடைமை என்பது
காலிங்கர்: என்னை எனின், கீழ்ச் சொன்ன முறையானே தமக்கு இனியோரும் இன்னாதோரும் ஆகிய யார் மாட்டும் தனக்கு எடுத்த பண்புடைமை என்னும் இம்முறை முற்றிய இடத்து.
பரிமேலழகர்: யாவர் மாட்டும் அரிதாய பண்புடைமை என்னும் நன்னெறியினை.
பரிமேலழகர் குறிப்புரை: குணங்களால் நிறைந்து செவ்வி எளியரும் ஆயக்கால் பண்புடைமை தானே உளதாம் ஆகலின், 'எண்பதத்தால் எய்தல் எளிது' என்றும், அஃது உலகத்தையெல்லாம் வசீகரித்தற் பயத்ததாகலின், அதனைத் தொல்லோர் சென்ற நன்னெறி யாக்கியும், அதனை எளிதின் எய்துதற்கு இது நூலோர் ஓதிய உபாயம் என்பார், அவர் மேல் வைத்தும் கூறினார். [வசிகரித்தல் - தம்வயமாக்குதல்; அதனை - பண்புடைமையை]
'யாவர் மாட்டும் பண்புடைமை என்று வழங்கப்படுகின்றதனை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'யாவரிடத்திலும் பண்புடைமை என்னும் நல்ல நெறியினை', ''யாரிடத்திலும் பண்புடையவராக நடந்து கொள்ளும் குணம் எதுவென்றால்', 'எல்லாரிடத்தும் இனிய குணமுடையவனென்று வழங்கப் பெறுதல்', 'பண்புடைமை எனப்படும் நல்ல நெறியினை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எல்லாரிடத்தும் நற்குணமுடையவனென்று வழங்கப் பெறுதல் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எல்லாரிடத்தும் நற்குணமுடையவனென்று வழங்கப் பெறுதல் எண்பதத்தால் பெறுதல் எளியது என்று கூறுவர் என்பது பாடலின் பொருள்.
'எண்பதத்தால்' என்பதன் பொருள் என்ன?
|
யாவரிடத்தும் எளிமையாகப் பழகுவதுவே பண்புடமையாம்.
எவரும் எளிதாக அணுகக்கூடிய தன்மை உண்டானால் பண்புடைமை என்னும் நல்வழியை எளிதில் அடையலாம் என்பர்.
எண்பதத்தால் என்ற தொடர் எவரும் எளிதாகக் காணக்கூடியவராதல் என்ற பொருள் தருவது. காட்சிக்கு எளியராய் எவரிடமும் ஒத்த அன்பினராய்க் கலந்து ஒழுகும் தன்மையராய் ஒருவர் நடந்தால் அவர் பண்புடைமை என்னும் நன்னெறியில் உள்ளவர் என்பதாகும் என இக்குறள் கூறுகிறது.
சமுதாயத்தில் ஒருவரோடு ஒருவர் பழகத் தேவையானவற்றை அறிந்து பயின்று, பக்குவப்படுத்தி, படியச்செய்துத் தம் பண்புகளாக உடைமையாக்கிக் கொள்பவர் பண்புடையவர் எனப்படுவர். பிறர் இயல்பறிந்து, தம் நிலை வழுவாமல், அவர்தம் நிலையொடு ஒத்து ஒழுகிப் பழகுவது சிறந்த பண்பாகும்.
தம் நிலை வழுவாமல் என்பது தமது பெருமை, சான்றாண்மை முதலிய சிறப்பியல்புகள் பிறருடன் பழகுதற்குத் தடையாக அமையாமல் பார்ர்த்துக் கொள்வதை உணர்த்தும்.
மேலும் இப்பண்பாளர்கள் தம்மை நாடி வந்தோரை அகமகிழ்ந்து, முகமலர்ந்து வரவேற்று இன்சொல் கூறி, மதித்து, மாண்புடனும், அன்புடனும் அரவணைத்தொழுகுவர்.
எளிமையுடையவன் என்பதை அணுகுதற்கு எளியவனாகி அவர்கள் குறைகளைச் செவிமடுப்பவன் எனவும் கொள்வர்.
பழக்கத்தின் தொடர்ந்த நிலையே வழக்கம் ஆகும் என்பர்.
மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வருவது வழக்கம்-வழக்கு ஆகும்.
வழக்கு என்பது முன்பு நன்னெறி என்ற பொருளில் வழங்கியது. இப்பாடல் தவிர்த்து, அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. (அன்புடைமை 73 பொருள்: அரிய உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்பு அன்பின் கூட்டுறவால் உண்டான வாழ்வுநெறி) என்ற மற்றொரு குறளிலும் வழக்கு என்ற சொல் நெறி என்ற பொருளிலே ஆளப்பட்டது. இப்பண்புடைமைச் செய்யுளிலும் பரிமேலழகர் வழக்கு என்பதற்கு நன்னெறி என்றே பொருள் கூறியுள்ளார்.
|
'எண்பதத்தால்' என்பதன் பொருள் என்ன?
'எண்பதத்தால்' என்றதற்கு எளிய காலத்தை, சொல்லினாலே, எண்ணத்தக்க சுவர்க்கபதத்தின்கண், எளிய செவ்வியராதலால், எளியனாய் நன்மையுடையனாய் இருந்தால், எளிய செவ்வியுடன் இருப்பதால், எளிய செவ்வியராகப் பழகுவதன் மூலம், எளியராகப் பழகும் இயல்பு அமைந்துவிட்டால், எளிதாகக் கலந்து பழகுவதால், எளிய முறையில் பழகுவதால், மிருதுவான இரக்கமுள்ள குணத்தால், எளிதாகக் காண்பதற்கு உரியவராக விளங்குவதால், எளிதாகக்கண்டு உரையாடக்கூடிய நிலையிலிருப்பதால், எளிதில் பார்க்கக்கூடிய நிலையில் இருத்தலால், எளிதாகக் கண்டு உரையாடக் கூடிய தன்மையில் இருப்பதால், எளிமையாகவும் இனிமையாகவும் கலந்து பழகுவது, எளிய செவ்வியராயிருத்தலால், எளிமையாய்ப் பழகுவதால் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'எண்பதத்தால்' என்பது பரிமேலழகரும் அவரைப் பின்பற்றுவோரும் கொண்ட பாடம். 'எண்பதத்தான்' என்பது பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் கண்ட பாடம்.
'எண்பதம்' என்றதற்கு 'எளிய காலம் அல்லது செவ்வி' எனப்பொருள் கூறுவர் பரிப்பெருமாளும் பரிமேலழகரும். பரிதி சொல் எனப் பொருள் கொள்கிறார்.
'சுவர்க்க பதம்' என்பது காலிங்கர் தரும் பொருள். இக்குறட் சொல்லமைதிக்கு பரிதி, காலிங்கர் ஆகியோர் கூறும் பொருள் ஏற்றனவல்ல.
எண்பதத்தால் என்ற தொடர் எளிய செவ்வி உடையராய் என்ற பொருளில் எண்பதத்தான் ஓரா முறைசெய்யா..... எனச் செங்கோன்மை அதிகாரத்து 548ஆம் பாடலில் ஆளப்பட்டது. இங்கும் அப்பொருள் கொள்வதே தகுவது.
எனவே எண்பதம் என்பதற்கு எளிய செவ்வி எனக் கொண்ட பரிமேலழகர் பொருள் பொருத்தமானது.
'எண்பதத்தால்' என்ற தொடர் எளிதாகக்கண்டு அளவளாவக்கூடிய நிலையிலிருப்பதால் என்ற பொருள் தரும்.
|
எல்லாரிடத்தும் நற்குணமுடையவனென்று வழங்கப் பெறுதல் எளியமுறையில் கலந்து பழகுவதால் பெறுதல் எளியது என்று கூறுவர் என்பது இக்குறட்கருத்து.
யாவரிடமும் எளிமையாகப் பழகுவதே பண்புடைமை
யாரிடத்தும் எளிதாகக் கலந்து பழகுவதால் நற்குணமுடையவனென்று வழங்கப் பெறுதல் எளிது என்று கூறுவர்.
|