இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0988



இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்

(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:988)

பொழிப்பு (மு வரதராசன்): சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது.
இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.

பரிமேலழகர் உரை: சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது.
(தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: ஒருவனுக்குச் சால்பென்னும் வலிமை உண்டாயின் அவருக்கு வறுமை இழிவன்று. சால்பின் வழி வாழ்வோருக்குச் செல்வத்தினால் யாதொன்றும் ஆகப் போவதில்லை. அதனால் 'இன்மை இளிவன்று' என்று கூறினார். சான்றாண்மையே நற்பண்புகளின் உறுதிப்பாடுதான். மேலும் சால்புக்குத் திண்மை என்று கூறிச் சால்பினை வலியுறுத்துகின்றார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் ஒருவற்கு இன்மை இளிவன்று.

பதவுரை: இன்மை-பொருளின்மை, வறுமை; ஒருவற்கு-ஒருவர்க்கு; இளிவன்று-இழிவு ஆகாது; சால்பு-நிறைகுணம்; என்னும்-என்கின்ற; திண்மை-வலிமை, உறுதி; உண்டு-உளது; ஆக-ஆகியிருக்க; பெறின்-அடைந்தால், நேர்ந்தால்.


இன்மை ஒருவற்கு இளிவன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்குப் பொருளின்மை இளிவாகாது.
பரிப்பெருமாள்: ஒருவனுக்குப் பொருளின்மை இளிவாகாது.
பரிதி: மிடி ஒருவர்க்குக் குற்றமன்று; அது முன்னை வினைப்பயன்;
காலிங்கர் ('ஒருவர்க்' பாடம்): ஒருவரை எளிமைப் படுத்துமது வறுமை: ஆயினும் அவ்வறுமையும் ஒருவர்க்கு இளிவரவு அன்று;
பரிமேலழகர்: ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது.

'ஒருவனுக்குப் பொருளின்மை இளிவாகாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமை ஒருவர்க்கு இழிவாகாது', 'அவருக்கு உண்டாகும் வறுமை இழிவாகாது', 'ஒருவனுக்கு தரித்திரம் இகழ்ச்சி தரக்கூடியதல்ல', 'ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது என்பது இப்பகுதியின் பொருள்.

சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சால்பாகிய நிலை உண்டாகப் பெறின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.
பரிப்பெருமாள்: சால்பாகிய நிலை உண்டாகப் பெறின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அமைவுயுடையர் ஆதல் பெறுதற்கரிதென்றது.
பரிதி: செல்வமாவது யாவரையும் வணங்குதலால் இன்சொல்லினால் கூடி நடப்பதாவது என்றவாறு.
காலிங்கர் ('ஒருவர்க்' பாடம்): தம்மாட்டுச் சால்பு என்று நூல்கள் எடுத்துரைக்கும் திட்பம் உளதாகப் பெறின் என்றவாறு.
பரிமேலழகர்: சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம். [தளராமை நாட்டுதலின் - மனம் தளராவாறு நிலைபெறச் செய்தலால்; தளராமை நாட்டுதலின் - சால்பு வறுமையால் மனம் தளராவாறு நிலைபெறச் செய்தலால்; நல்கூர்ந்த வழியும் -வறுமையுற்ற விடத்தும்]

'சால்பாகிய நிலை/திட்பம்/ வலி உண்டாகப் பெறின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சால்பாகிய உறுதி மாத்திரம் இருக்குமானால்', 'சால்பு (நிறைகுணம்) என்னும் உறுதிப்பாடு ஒருவர்க்கு வாய்க்குமானால்', 'சான்றாண்மை என்னும் வலிமை உடையவனாகிய', 'சால்பு என்று சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெறின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சான்றாண்மை என்னும் உறுதி இருக்குமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சான்றாண்மை என்னும் உறுதி இருக்குமானால் ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது என்பது பாடலின் பொருள்.
'இன்மை ஒருவற்கு இளிவன்று' என்பதன் பொருள் என்ன?

ஏழ்மையிலும் மேன்மை விடார் சான்றோர்.

சான்றாண்மை என்னும் சொல்லப்படும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவர்க்குப் பொருளின்மை இழிவான நிலைமையைத் தந்துவிடாது.
நற்குணங்களால் நிறைந்தவர் சான்றோர் எனப்படுகிறார். இக்குணநலங்கள் உடைமை காரணமாகத்தான் அவற்றைப் பெற்றவர்க்கு வறுமை காரணமாக இழிவு என்பது ஏற்படாது என்கிறது பாடல். செல்வம் ஆற்றல் நிறைந்தது. எந்த இடர்ப்பாடு நேர்ந்தாலும் அதை வென்று விடும் வலிமை கொண்டது. பொதுவாக பொருளில்லா நிலைக்கு எல்லோருமே அஞ்சுவர். வறுமை வந்துற்றபோது ஒருவர்க்கு தாழ்வு வந்துவிடுகிறது; நல்குரவால் இன்பவாழ்வு கிடைப்பதில்லை; விரும்பியதைப் பெற முடிவதில்லை; செறுநர் செறுக்கை எதிர்கொள்ள இயலாது. சமுதாயத்தில் மதிப்பு நீங்கிவிடுகிறது. மற்றவர்கள் ஏளனம் செய்யும் இழிவு நிலை உண்டாகும். மதிப்பற்ற வாழும் வாழ்க்கையால் மனம் குன்றிப் போய்விடும். எவரும் நம்மைத் தாழ்வாக எண்ணவோ பேசவோ கூடாது என்பது பொருள்செய்வதற்கான முதன்மையான காரணங்களில் ஒன்று. ஆனால் சால்புடையோர் வறுமையால் எத்தகைய இன்னல்கள் ஏற்பட்ட போதிலும் அக்குணங்களைத் திண்மையுடன் காத்துக்கொள்வாரானால் அவர் அடைந்த வறுமைநிலை அவர்க்கு இளிவு தராது என்கிறார் வள்ளுவர். இளிவு என்ற சொல் இழிவு என்ற பொருளில் தாழ்வு விளைவிப்பது என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஒருவர் சால்பில் உறுதியுடையவராக இருந்து விட்டாரேயானால் அவர் செல்வமில்லாநிலை எய்தினாலும் அவர் இகழ்ச்சிக்குரியவராக ஆக மாட்டார். சால்புடையோர் பொருளுக்காக ஏங்கி நிற்பவர்களல்லர். பொருளை ஒரு பொருட்டாகவும் மதிக்க மாட்டார்கள். தங்கள் சால்புகளால் அவர்கள் பெருமை பெற்றவர்களாதலால் வறுமை அவர்களை இகழ்வுக்குள்ளாக்க முடியாது. சான்றாண்மை அவர்க்கு வேண்டிய வலிமை தந்துவிடும். அவரது நற்குண நிறைவாலேயே உயர்வும் புகழும் குன்றாதிருப்பர்.

'இன்மை ஒருவற்கு இளிவன்று' என்பதன் பொருள் என்ன?

இன்மை என்ற சொல்லுக்கு பொருளின்மை, மிடி, வறுமை, தரித்திரம், நல்குரவு, பொருள் இல்லாத குறையாகிய வறுமை, இல்லாமை என்னும் வறுமை, பொருள் இல்லாத வறுமை நிலை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்' என்று முன்பு குறள் 54-இல் மகளிர்க்கு கற்புத்திண்மையின் பெருமை சொல்லப்பட்டது. இங்கு சால்பென்னும் திண்மைஉண்டாகப் பெறின் என சான்றோருறும் வறுமை அவர்க்கு இழிவைத் தருவதன்று எனச் சால்புத்திண்மையின் சிறப்பு கூறப்படுகிறது.
கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு (நடுவுநிலைமை 117 பொருள்: நடு நிலையாக அற வழியில் நின்றவனது தாழ்வை உலகம் கேடாகக் கருதாது) என்று நன்னெறியாளர் உற்ற கேட்டை உலகோர் தாழ்வாகக் கருதமாட்டார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளமையையும் இணைத்து எண்ணலாம்.
வறுமையுற்றபோது சான்றோர் வாடுவதில்லை. பொதுநலம் நாடித் தன்னலம் மறந்த சால்பே இவர்களுக்குத் திண்மை தருகின்றது. அதனால் வறுமை வந்தபோதும் அவர்கள் இழிவாக எதையும் எண்ணுவதில்லை. பண்பு நலங்களையே அவர்கள் செல்வமாகக் கருதுவர். வறுமையால் மனம் தளராவாறு சால்பு நிலைபெறச் செய்கிறது. சால்பு என்கிற மனவலிமை இருக்கும்போது பொருளில்லாமல் போவது ஒருவர்க்குத் தாழ்ச்சி ஆகாது.

'இன்மை ஒருவற்கு இளிவன்று' என்ற தொடர்க்கு பொருளில்லாமை ஒருவர்க்கு இழிவு ஆகாது என்பது பொருள்.

சான்றாண்மை என்னும் உறுதி இருக்குமானால் ஒருவர்க்குப் பொருளின்மை இழிவாகாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சான்றாண்மை உறுதிப்பாடுடையோர் வறுமையைப் பொருட்படுத்தார்.

பொழிப்பு

சான்றாண்மை என்னும் உறுதிப்பாடு ஒருவர்க்கு வாய்க்குமானால் வறுமை அவருக்கு இழிவாகாது.